ஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்… கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்!
ஓய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைக்கும் என்கிற ஒரே காரணத்துக்காக அரசு வேலைகளைத் தேடிப்போனது அந்தக் காலம். இன்றைக்கு அரசு வேலைகளில்கூட பென்ஷன் இல்லை என்றாகிவிட்டது. என்.பி.எஸ் எனப்படும் புதிய பென்ஷன் திட்டத்தில் நாமாகச் சேர்ந்து, நமது ஓய்வுக் காலத்துக்கான பென்ஷன் தொகையைச் சேர்த்தால் மட்டுமே உண்டு.
தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் குறைந்த அளவே பி.எஃப் தொகை பிடிக்கப்படுவதால், அவர்களின் ஓய்வுக் காலத்தில் மிகவும் குறைந்த அளவே பென்ஷன் தொகையைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.
பொதுவாக, ஒருவரின் சம்பளத்தில், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (Basic & Dearness Allowance) சேர்ந்த தொகையில் 12% பி.எஃப் பிடிப்பது வழக்கம்.
பி.எஃப் கணக்கில் சட்டப்படியான கட்டாயத் தொகையை மட்டும் நிறுவனம் பிடிப்பதாக வைத்துக்கொள்வோம். பி.எஃப் பிடிப்பதற்கான அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி உச்சவரம்பு ரூ.15,000ஆக தற்போது உள்ளது. இந்தத் தொகைக்கு 12% அதாவது, ரூ.1,800 பி.எஃப் ஆக பணியாளர் சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனமும் தரும். இதில் 8.33% அதாவது, ரூ.1,250 குடும்ப ஒய்வூதியக் கணக்கிலும், 3.67% அதாவது, ரூ.550 உறுப்பினர் பி.எஃப் கணக்கிலும் சேரும்.
இப்படியில்லாமல், பணியாளரின் பி.எஃப் கணக்கில் அதிக தொகை சேர வேண்டும் என நினைக்கும் நிறுவனம், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி இணைந்த முழுத் தொகையில் 12% பி.எஃப் ஆக பிடிக்கும். அதே தொகையை நிறுவனமும் பி.எஃப் ஆக வழங்கும். உதாரணத்துக்கு, ஒருவரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி ரூ.30,000 என வைத்துக்கொள்வோம். இதில் 12% அதாவது, ரூ.3,600 பி.எஃப் ஆகப் பிடிக்கப்படும். இதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்தும். நிறுவனம் செலுத்தும் ரூ.3,600-ல் ரூ.1,250 (கட்டாய பி.எஃப்-ல் நிறுவனத்தின் பங்களிப்பான ரூ.1,800-ல் 8.33%) குடும்ப ஓய்வுதியத் திட்டக் கணக்கிலும் ரூ.2,350 பணியாளர் பி.எஃப் கணக்கிலும் சேரும்.
குடும்ப பென்ஷன் கணக்கில் சேரும் தொகையைப் பொறுத்தவரையில், சம்பளத்தில் எவ்வளவு பி.எஃப் பிடித்தாலும் மாதம் ரூ.1,250-தான் செலுத்தப்படும். அந்த வகையில், பென்ஷன் என்பது ஒரே சேவை ஆண்டுகள் மற்றும் ஒரே அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி கொண்டுள்ள கட்டாய பி.எஃப் பிடிக்கப்படுபவருக்கும், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% பி.எஃப் பிடிக்கப்படுபவருக்கும் 58 வயதில் ஓய்வு பெறும்போது ஒரே பென்ஷன் தொகைதான் கிடைக்கும்.
2014, செப்டம்பர் 1-ம் தேதிக்குப்பிறகு முதன்முதலாகப் பணியில் சேர்ந்தவருக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.15,000-க்கு மேல் இருந்தால், அவர் குடும்ப ஒய்வூதியம் பெறத் தகுதி பெறமாட்டார். இவருக்குக் கட்டாய பி.எஃப் ரூ.1,800, நிறுவனம் அதன் பங்காகத் தரும் ரூ.1,800 இரண்டும் உறுப்பினரின் பி.எஃப் கணக்கில் சேர்ந்துவிடும். இவருக்குப் பணி ஓய்வின்போது பி.எஃப் குடும்ப பென்ஷன் கிடைக்காது.
கட்டாய பி.எஃப் மட்டும் பிடித்தல், குடும்ப ஊதியம் இல்லாத நிலையில் பல பணியாளர்கள் ஓய்வு பெறும்போது 12% பி.எஃப் பிடிக்கப்பட்டவர்களைவிட குறைவான பி.எஃப் தொகையைப் பெறுவார்கள்.
இந்த நிலையில், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களின் ஓய்வுக்காலத்தில் பெறும் தொகையை அதிகரிக்க வழி இருக்கிறதா என சென்னை ராயப்பேட்டையில் உள்ள பி.எஃப் மண்டல அலுவலகத்தில் உதவி பி.எஃப் கமிஷனராக இருக்கும் ஆர்.கணேஷிடம் கேட்டோம். நம் கேள்விக்கு விரிவான பதிலைத் தந்தார் அவர்.
‘‘சம்பளத்தில் குறைவாக பி.எஃப் பிடிக்கப்படுவர்கள், சில விஷயங்களை மேற்கொள்வதன் மூலம் வளமான மற்றும் நிம்மதியான பணி ஓய்வினைப் பெற முடியும். பணியாளர் விருப்ப பி.எஃப் (VPF – Voluntary Provident Fund) மூலம் தன் பி.எஃப் கணக்கில் அதிகமான தொகையைச் சேர்க்க முடியும். வி.பி.எஃப் மூலம் சிறிய தொகையைக்கூட பி.எஃப் கணக்கில் சேர்க்க முடியும். உதாரணத்துக்கு, ஒருவரின் சம்பளத்தில் கட்டாய பி.எஃப் ரூ.1,800 பிடிக்கப்படுகிறது என்றால், இதே அளவு தொகையை நிறுவனமும் (குடும்ப பென்ஷனுக்குத் தகுதி இல்லாத நிலையில்) அவரின் கணக்கில் செலுத்தும்.
இந்த நிலையில், வி.பி.எஃப் ஆக மாதம் ரூ.200-கூட பிடிக்கச் சொல்லலாம். பிடித்தங்கள் போக உள்ள முழுச் சம்பளத்தையும் கூட வி.பி.எஃப் ஆக பிடிக்கச் சொல்லலாம். சம்பளத்துக்கு வெளியே இருந்து பணத்தைக் கொண்டுவந்து பி.எஃப் கணக்கில் செலுத்தமுடியாது. மற்றபடி, முழுச் சம்பளத்தையும் பி.எஃப் கணக்கில் சேர்க்க முடியும்.
வி.பி.எஃப் கணக்கில் பிடிக்கும் தொகையை ஆண்டுக்கு ஒருமுறை கூட்டவோ, குறைக்கவோ அனுமதி உண்டு. வி.பி.எஃப் பிடிக்க, வேலை பார்க்கும் நிறுவனத்தின் காசாளரிடம் தகவல் சொல்லிவிட்டாலோ, எழுத்துமூலம் எழுதிக் கொடுத்து விட்டாலோ போதும். வி.பி.எஃப் திட்டத்தின் மூலம் கூடுதல் தொகையைப் பிடிப்பதில் பல நன்மை இருக்கிறது’’ என்றவர், அந்த நன்மைகளைப் பட்டியலிட்டார்.
‘‘பி.எஃப், வி.பி.எஃப் முதலீட்டுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளதால், அது 100% பாதுகாப்பு உள்ளது. மேலும், இதற்கு தற்போது 8.55% வட்டி வழங்கப்படுகிறது. இது வங்கி எஃப்டி மற்றும் பாண்ட் வருமானத்தைவிட அதிகம். அடுத்து, பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீட்டுக்கு 80-சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி யாண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை கிடைக்கும். பி.எஃப் முதலீட்டில் வட்டிக்கு வட்டி வழங்கப்படுவதால், பணம் வேகமாகப் பெருகுகிறது. வங்கி ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து வரிச் சலுகை பெற்றாலும், அதன்மூலம் கிடைக்கும் வட்டிக்கு ஆண்டுதோறும் வரி கட்ட வேண்டும். பி.எஃப்-ல் அப்படி இல்லை. வட்டி வருமானத்துக்கு வரி கிடையாது.
பி.எஃப்-ல் கட்டும்போதும் வரிச் சலுகை, முதலீட்டுப் பெருக்கத்துக்கும் வரிச் சலுகை, ஓய்வுக்காலத்தில் திரும்ப எடுக்கும்போதும் வரிச் சலுகை கிடைக்கிறது. மனை, வீடு வாங்க பி.எஃப் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை அடைக்க பி.எஃப் தொகையை உபயோகித்துக்கொள்ளலாம். மிக முக்கியமாக, இந்த பிஎஃப் தொகையை எந்தக் கடனுக்கும் இணையாக இணைக்க முடியாது.
2014, செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு முதன் முதலாகப் பணியில் சேர்பவருக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.15,000-க்குக்கீழ் இருந்தால் அவர் குடும்ப ஒய்வூதியம் பெறத் தகுதி பெறுவார். இவருக்குக் கட்டாய பி.எஃப் ரூ.1,800 சம்பளத்தில் பிடிக்கப் படும். மற்றும் நிறுவனம் அதன் பங்காக ரூ.1,800 செலுத்தும். நிறுவனம் செலுத்தும் தொகையில் ரூ.1,250 குடும்ப ஓய்வூதியக் கணக்குக்கும், ரூ.550 உறுப்பினரின் பி.எஃப் கணக்குக்குச் செல்லும். இந்தக் குடும்ப ஓய்வூதியம், பணி ஓய்வுக்குப்பிறகு பணியாளரின் மரணம் வரைக்கும் வழங்கப்படும். அதன்பிறகு அவரின் துணைவருக்கு (கணவர்/மனைவி) வழங்கப்படும்.
பொதுவாக, 20 பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு பி.எஃப் கட்டாயம் பிடிக்க வேண்டும். இதற்குக் குறைவாகப் பணியாளர்கள் இருக்கும்பட்சத்தில், நிறுவனம் மற்றும் பணியாளர்கள் சம்மதிக்கும்பட்சத்தில் பி.எஃப் பிடிக்க அனுமதிக்கப்படும்.
58 வயதுக்குப்பிறகு பணி நீடிப்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் அதாவது, 60 வயது வரை பணிபுரிந்தால் சம்பளத்தில் நிறுவனம் பி.எஃப் பிடிக்கலாம். இப்படிச் செய்வதால் பணியாளர் கணக்கில் அதிக பி.எஃப் தொகை சேரும். மேலும், அவர் பி.எஃப் பென்ஷனுக்குத் தகுதி பெறும் பட்சத்தில் கூடுதல் பென்ஷனும் கிடைக்கும்.
58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு பி.எஃப் பணத்தை 36 மாதங்கள் வரை எடுக்காமல் இருந்தால் பி.எஃப்-க்கு உரிய வட்டி அளிக்கப்படும். இதற்கு மேற்பட்ட காலத்துக்கு வட்டி அளிக்கப் படாது. அதேநேரத்தில், அந்த வட்டி வருமானத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு அடிப்படை வரம்புக்கு உட்பட்டு வரி விதிக்கப் படும். எஃப்டி-யில் போடுவதைவிட பி.எஃப்-ல் வைத்திருப்பது கூடுதல் வட்டி வருமானத்துக்கு வழி வகுக்கும்.
ஓய்வுக்காலத்தில் கூடுதல் தொகையைப் பெறும் வழியைச் சொல்லிவிட்டோம். இனி, செயல்பட வேண்டியது நீங்கள்தான்!
குடும்ப பென்ஷன்… எப்படிக் கணக்கிடப்படுகிறது?
குடும்ப பென்ஷன் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பது குறித்து விளக்கமாகச் சொன்னார் பிஎஃப் உதவி கமிஷனர் ஆர்.கணேஷ்.
‘‘ஓர் ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.15,000 என்கிற கணக்கில் குடும்ப ஓய்வூதியக் கணக்குக்கு மாதம் ரூ.1,250 பிடிக்கப்பட்டுவரும் பணியாளர் களுக்காக மத்திய அரசு நிர்வாகக் கட்டணம் 1.16% கட்டி வருகிறது. 1-9-2014-க்குப்பிறகு பணியில் சேர்ந்த பணியாளர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி (Basic and Dearness allowance) சேர்ந்து ரூ.15,000-க்குமேல் இருக்கும்பட்சத்தில் குடும்ப பென்ஷனுக்குத் தகுதியில்லை. இதுபோன்றவர்கள் வி.பி.எஃப் முதலீடு மூலம் இறுதியாகக் கிடைக்கும் பி.எஃப் தொகையை அதிகரித்துக்கொள்ள முடியும்.
பி.எஃப் பிடிப்பதற்கான உச்சவரம்பு 5,000 ரூபாயாக இருந்தபோது, குடும்ப பென்ஷனுக்காக ரூ.417 பிடிக்கப்பட்டது. அதன்பிறகு 1-6-2000-ல் பி.எஃப் பிடிப்பதற்கான உச்சவரம்பு சம்பளம் 6,500 ரூபாயாக உயர்த்தப்பட்டு, குடும்ப பென்ஷனுக்காக ரூ.541 பிடிக்கப்பட்டது. அதன்பிறகு
1-9-2014 முதல், பி.எஃப் பிடிப்பதற்கான உச்சவரம்பு சம்பளம் 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, குடும்ப பென்ஷனுக்காக ரூ.1,250 பிடிக்கப்படுகிறது. ஒருவர் 2000-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே வேலை பார்த்து வருகிறார் எனில், அவருக்குக் கடைசி 60 மாதங்களுக்குரிய சராசரி சம்பளம் (தற்போதைய நிலையில் ரூ.15,000) கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்கு பென்ஷன் கணக்கிடப்படும். குறைந்தது 10 ஆண்டுகள் குடும்ப பென்ஷன் கணக்கில் பணம் பிடிக்கப்பட்டிருந்தால்தான், பென்ஷன் கிடைக்கும்.
இன்னொரு நிபந்தனையும் இருக்கிறது. பணியாளரின் வயது 50-க்கு மேல் இருக்க வேண்டும். ஒருவருக்கு 20 ஆண்டுகளுக்கு பென்ஷன் தொகை பிடிக்கப் பட்டிருந்து, அவருக்கு 58 வயதாகியிருந்தால், அதிகப் படியாக 2 ஆண்டுகள் பென்ஷன் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படும். பென்ஷன் கணக்கிட ஒரு பார்முலா இருக்கிறது.
மாத குடும்ப பென்ஷன் = (பென்ஷன் கணக்கிடுவதற்கான சம்பளம் * பணிபுரிந்த ஆண்டுகள்) / 70
இதனை உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.
ஒருவர் 19 ஆண்டுகள் பணி புரிந்து 58 வயதில் 2017 செப்டம்பரில் ஓய்வு பெறுகிறார் எனக்கொள்வோம். கடைசி 60 மாதங்களில் இவரின் பென்ஷன் கணக்கிடுவதற்கான சராசரி சம்பளம் 24 மாதங்கள் ரூ.6,500 ஆகவும், மீதி 36 மாதங்கள் ரூ.15,000 ஆகவும் உள்ளது. இந்த நிலையில், இவருக்குக் கிடைக்கும் மாத குடும்ப பென்ஷன் = (9942.89 *19)/70 = 2699
இவர் பென்ஷனை 58 வயதில் பெறுவதற்குப் பதிலாக 59-வது வயதில் ஓராண்டு கழித்துப் பெற்றால், 4% அதிகரிக்கப்பட்டு, ரூ.2,807 கிடைக்கும். இரண்டு ஆண்டுகள் கழித்து 60 வயதில் பெறுகிறார் என்றால் பென்ஷன் தொகை 8% அதிகரிக்கப்பட்டு, பென்ஷன் ரூ.2,915 கிடைக்கும்.
இன்னொருவர் 21 ஆண்டுகள் பணிபுரிந்து 58 வயதில் 2019 செப்டம்பர் மாதத்துக்குப்பிறகு ஓய்வு பெறுகிறார் என வைத்துக்கொண்டால், அவரது சேவைக் காலம் 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் கூடுதலாக 2 ஆண்டுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 23 ஆண்டுகளுக்கு பென்ஷன் கணக்கிடப்படும். கடைசி 60 மாதங்களில் இவரின் பென்ஷன் கணக்கிடுவதற்கான சராசரி சம்பளம் ரூ.15,000. (15,000
*23)/70 = 4,930. இவர் பென்ஷனை 58 வயதில் பெறுவதற்குப் பதிலாக 59 வயதில் பெறுகிறார் என்றால் பென்ஷன் தொகை 4% அதிகரிக்கப்பட்டு ரூ.5127-ஆகக் கிடைக்கும். இதுவே இரண்டு ஆண்டுகள் பென்ஷன் வாங்காமல், 60-வது வயதில் பெறுகிறார் என்றால், 8% கூடுதலாக அதாவது, ரூ.5,325 கிடைக்கும்” என்றார் கணேஷ்.
நன்றி : நாணயம் விகடன் - 16.09.2018