disalbe Right click

Friday, July 5, 2019

ஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது

ஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… 
இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்!
கடந்த சில வருடங்களாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது Stalking. காதலின் பேரில் பெண்களை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டுவது, காதலிக்க மறுத்த பெண்களின்மீது அமிலம் வீசுவது, பொது இடங்களில் ஆயுதங்கள் மூலம் வன்முறையைப் பிரயோகிப்பது என கடந்த காலத்தில் நடந்த ஸ்டாக்கிங் தொடர்பான குற்றங்கள், இந்த தேசத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். இன்டர்நெட்டின் வளர்ச்சியால் கடந்த சில வருடங்களாக #CyberStalking-ம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவருகிறது
இதிலிருந்து நம் பிள்ளைகளைக் காப்பது எப்படி?
வழக்கம்போல அன்றைக்கும் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஷீலா. திடீரென ஒரு மெசேஜ் வருகிறது; அதுவும் அறிமுகமற்ற ஒரு நபரிடமிருந்து. தயக்கத்துடன் இன்பாக்ஸ் திறக்கிறார். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்த மெசேஜில் வந்தது அவரின் நிர்வாணப் படம். அது தன்னுடையதல்ல என்றும், வெறுமனே கணினியில் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பதும் ஷீலாவுக்கு நன்றாகவே தெரியும். அவரின் குழப்பமெல்லாம், ‘யார் இதை அனுப்பியது, எதற்காக இவர் எனக்கு அனுப்புகிறார்?’ என்பதே
25 Beautiful Rural Ind...
அடுத்த சில நிமிடங்களில் அதற்கும் விடை கிடைக்கிறது. அதை அனுப்பிய நபரே மேற்கொண்டு பேசுகிறார். “நான் சொல்வதையெல்லாம் நீ கேட்கவில்லையென்றால், இந்தப் படத்தை ஃபேஸ்புக்கில் பரப்பிவிடுவேன்என மிரட்டுகிறார். 17 வயதில் இப்படி ஒரு விஷயம் நடந்தால் அந்தப் பெண்ணின் மனம் எந்த அளவுக்குப் பதறும்ஷீலாவுக்கும் அப்படித்தான் இருந்தது. ஃபேஸ்புக்கில் அந்த நபரை பிளாக் செய்யலாமா, ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை டிஆக்டிவேட் செய்துவிடலாமா என்றெல்லாம் உள்ளுக்குள் சிந்தனைகள் ஓடுகின்றன. தாமதிக்காமல் இந்த விஷயத்தையெல்லாம் தன் அப்பாவிடமும் விவரிக்கிறார்
விபரீதம் புரிந்த அவர், உடனடியாக விவகாரத்தை காவல்துறையிடம் கொண்டுசெல்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் காவல் நிலையத்துக்கு புகார் செல்கிறது. ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, ஷீலாவின் மீதே பழி சுமத்துகிறார் காவல்துறை அதிகாரி.
உங்களை யார் சொந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யச் சொன்னது? அதையெல்லாம் உடனே டெலிட் செய்யுங்கள். பிள்ளைகளுக்கு அதிகமான சுதந்திரம் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்!” என்பது அன்றைக்கு அவர் கொடுத்த எக்ஸ்ட்ரா அட்வைஸ். சரி, இங்குதான் இப்படியென சைபர் கிரைமுக்குச் சென்றால், ‘இதுகுறித்து நாங்கள் துப்புதுலக்கவே 25 நாள்கள் ஆகும்எனச் சொல்லிவிட்டார்கள். இப்படி ஒவ்வோர் இடத்திலும் பாதிக்கப்படுகிறார் ஷீலா. இதையடுத்து, இந்த விவகாரத்தை சமூக வலைதளத்தில் விரிவாகப் பதிவுசெய்கிறார், ஷீலாவின் சகோதரி. விஷயம் வைரலாகவே, உடனே மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் உதவ முன்வருகிறது. இது கதை அல்ல. இங்கு குறிப்பிட்டிருக்கும் பெண்ணின் பெயரைத் தவிர மற்ற அனைத்து சம்பவங்களுமே உண்மை.

சேலத்தில், ஒரு பெண்ணின் படத்தை ஆபாசமாகச் சித்திரித்து வெளியிட்டு, இறுதியில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகத்தையே அதிரச்செய்தது. அந்தப் புகாரில், தமிழக காவல்துறை நடந்துகொண்ட விதமும் அனைவரும் அறிந்ததே
இதேபோல் யாரோ முகம் தெரியாதவர்களால், பெண்கள் இணையத்தில் மிரட்டப்பட்ட எத்தனையோ சம்பவங்களை இங்கே உதாரணமாகக் கூறமுடியும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை பெண்களை நேரடியாகத் தொந்தரவு செய்தவர்கள், இன்று இணையத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு மறைமுகமாக மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், ஆண்டுதோறும்ஸ்டாக்கிங்தொடர்பான புகார்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. உதாரணமாக, 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை மட்டும் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட ஸ்டாக்கிங் தொடர்பான வழக்குகள் 18,097. (2014 – 4,699 / 2015 – 6,266 / 2016 – 7,132 / Source: Ministry of Home Affairs). இதில் விசாரணை பெற்று தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம், நம்முடைய விசாரணை மற்றும் சட்ட அமைப்பில் உள்ள குறைகள்தான்.
தொடரும் சட்ட சிக்கல்கள்
2013-ம் ஆண்டு வரைக்கும் இந்தியாவில்ஸ்டாக்கிங்என்ற வார்த்தைக்கு சட்ட வடிவமே கிடையாது. அது சட்டத்தில் இடம்பெற்றதே பெரிய கதை. ஆரம்பத்தில், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில், ஸ்டாக்கிங் தொடர்பான எந்தவொரு விஷயமும் இடம்பெறவில்லை
மாறாக, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கும் வகையிலான பிரிவு 354 மற்றும் பிரிவு 509 ஆகியவை மட்டுமே இருந்தன. அதன்பிறகு, 2000-ம் ஆண்டு உருவான இந்தியத் தகவல்தொழில்நுட்ப சட்டத்திலும் ஸ்டாக்கிங் தொடர்பான அம்சங்கள் ஏதுமில்லை. பதிலாக, இணையம் மூலம் தகவல்களைத் திருடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, ஆபாசத் தகவல்களை அனுப்புவது, தனிநபர் அந்தரங்கத்தைப் படம்பிடிப்பது போன்ற விவரங்கள் மட்டுமே இடம்பெற்றன

2013-க்கு முன்னர்வரை ஸ்டாக்கிங் தொடர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 354, 509, இந்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டம் 66E, 67 போன்ற பிரிவுகளில்தான் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. பின்னர், ஸ்டாக்கிங் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, 2013-ல்தான் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, ‘ஸ்டாக்கிங்முதன்முதலாக, பிரிவு 354D-யின் கீழ் குற்றமாக அறிவிக்கப்பட்டது.
இப்போது வரை இருக்கும் நடைமுறை இதுதான். ஆனால், இதிலும் சிக்கல் என்னவெனில், இந்தப் பிரிவு 354D என்பது ஜாமீனில் வரக்கூடிய பிரிவு. இதுவும்ஸ்டாக்கிங்தொடர்பாகப் புகார் அளிப்பதற்கு பெரும் சிக்கலாகத் தொடர்கிறது. எனவே, ஸ்டாக்கிங்கில் ஈடுபடுபவர்கள், ஜாமீனில் வெளிவரமுடியாதபடி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. ஆனால் மத்திய அரசு, இதுவரைக்கும் செவிசாய்க்கவில்லை. இதனை வலியுறுத்துவதற்காக, 2018-ம் ஆண்டு அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு, சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. அதில் இந்த ஜாமீன் விஷயம் தாண்டி மேலும் சில விஷயங்களையும் குறிப்பிட்டிருந்தது டெல்லி அரசு
அதில் முக்கியமானவை இரண்டு.
முதலாவது, இதுவரை சட்டத்தில் பெண்களுக்கெதிரான ஸ்டாக்கிங் குற்றங்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கும்படி இருக்கிறது; அதில் ஆண்களையும் திருநங்கைகளையும் சேர்க்க வேண்டும். இரண்டாவது, சட்டத்தில் இணையம்மூலம் நடக்கும் ஸ்டாக்கிங் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழியில்லை. அதற்கும் சேர்த்து திருத்தம் செய்ய வேண்டும். இப்படியாக, சைபர் ஸ்டாக்கிங்கிற்கு எதிராகவும் தெளிவாகக் குரல் கொடுத்திருக்கிறது டெல்லி அரசு. சரி, சட்டத்தில் இவ்வளவு சிக்கல்கள் இருப்பதெல்லாம் இருக்கட்டும். ஸ்டாக்கிங்கை பெற்றோர்கள் எப்படிக் கையாள்கின்றனர்… 
Image result for eve teasing
இந்த ஸ்டாக்கிங்கை எப்படிப் புரிந்துகொள்வது?
ஒரு பெண்ணின் விருப்பமின்றி ஓர் ஆண் அவரைத் தொடர்ந்து பின்தொடர்வதோ அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ, அவரை எதற்கேனும் கட்டாயப்படுத்துவதோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்ச்சியாக அவருக்குத் தொல்லைகொடுப்பதோ சட்டப்படி குற்றமாகும். இந்தச் செயல்கள்தான் ஸ்டாக்கிங் எனப்படுகிறது. சட்டத்தின் வார்த்தைகளைவிடவும், நேரடி உதாரணங்கள்மூலம் சொன்னால் இன்னும் எளிதாகப் புரியும்
உதாரணமாக ஓர் ஆண், ஒரு பெண்ணிடம் தன்னைக் காதலிக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தினால், பணம் கேட்டு மிரட்டினால், அதற்காகத் தொடர்ந்து மிரட்டல் விடுத்தால், செல்லும் இடமெல்லாம் நின்று பிரச்னை செய்தால், வெவ்வேறு வழிகளில் உளவுபார்த்தால், அதெல்லாம் ஸ்டாக்கிங்தான்.
Image result for eve teasing
இதுவே, ஃபேஸ்புக் மூலம் அந்தப் பெண்ணின் விருப்பமின்றி அவரோடு தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால், பேசச்சொல்லி கட்டாயப்படுத்தினால், அந்தப் பெண்ணின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து மிரட்டினால், ஆபாசமாகத் திட்டினால், போலி அக்கவுன்ட்டுகள் மூலம் தொந்தரவு செய்தால், அவையெல்லாம் ஸ்டாக்கிங்கின் கீழ்வரும். இந்த ஃபேஸ்புக் ஒரு சிறு உதாரணம்தான்
இன்றைய தொழில்நுட்ப உலகில், ஒருவருக்கு சைபர் ஸ்டாக்கிங் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்த ஸ்டாக்கிங் குற்றங்களில் இருக்கும் பெரிய பிரச்னை, முதலில் அதன் ஆபத்தை உணராமல் இருப்பது. பலரது வீடுகளிலும் இதுபோல இணையம் மூலம், போன் மூலம் தொந்தரவு வந்தால், அவற்றை அலட்சியமாகக் கடந்துவிடுவதும் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும்தான் குற்றவாளிகளுக்கு சாதகமாகிறது. அடுத்தது, இந்தக் குற்றங்களைப் புரிந்துகொள்ளும் தன்மை.
குடும்பத்தில் ஒரு பெண், ஸ்டாக்கிங் தொடர்பாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பெற்றோர்களிடமும் சொன்னால், அவர்களிடமிருந்து ஆறுதலுக்குப் பதில், அரவணைப்புக்குப் பதில் ஏமாற்றமே கிடைக்கிறது. குற்றம் சாட்டும் பெண்கள் மீதே பெற்றோர் குற்றம் சாட்டும் சிக்கலும் இருக்கிறது
குறிப்பாக, பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள், பல இடங்களில் இதனால் கல்வியை இடைநிறுத்தம் செய்யும் அவலமும் நிகழ்கிறது. அந்தப் பெற்றோர் சொந்த மகளையே குறைசொல்லாமல், அவர்களோடு உதவிக்கு நின்றால், அதன் விளைவே வேறுமாதிரி இருக்கும். இதற்கடுத்த பிரச்னை, காவல்துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஸ்டாக்கிங் குறித்த புகார்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் செய்வது
சேலம் மாணவி சம்பவத்தில் இதுதானே நடந்தது
இப்படி அரசிடமும் பெற்றோரிடமும் என இரண்டு தரப்பிலும் சிக்கல்கள் இருக்கின்றன. இதில் ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்யவேண்டும்?

இந்த ஸ்டாக்கிங் பிரச்னை, இன்று பெண்களுக்கு மட்டுமில்லை. ஆண்களுக்குமே இருக்கிறது. ஆனால், அது எவ்வளவு என்பதற்கான சரியான புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை. இதுவே பெண்களுக்கு எதிரான ஸ்டாக்கிங் குற்றம் எனும்போது, ஆண்களே அதற்குக் காரணமாக இருக்கின்றனர். எனவே, இங்கே ஸ்டாக்கிங்கை எப்படிக் கையாள்வது என்ற பயிற்சி பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல; எதெல்லாம் ஸ்டாக்கிங், எதையெல்லாம் செய்யக்கூடாது எனத் தெரிந்துகொள்வதற்கான பயிற்சி ஆண் பிள்ளைகளுக்கும் தேவைப்படுகிறது
அவர்கள்தானே நாளைய சமுதாயத்தில் இங்கே நடமாடப்போகிறார்கள்?!
ஸ்மார்ட்போனும் இணையமும் தவிர்க்கவே முடியாத இந்தக் காலகட்டத்தில், நம்மிடம் இருக்கும் ஒரே வழி, அவற்றை சரியாகப் புரிந்துகொள்வதுதான். எனவே, இணையத்தின் அத்தனை சிக்கல்களையும் அவர்களிடம் உரிய நேரத்தில் சொல்லி வளர்ப்பதுதான், அதிலிருந்து வரும் பிரச்னைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள தீர்வாக இருக்கும். இதற்காக, தனியாகவெல்லாம் பாடம் எடுக்க வேண்டாம். இணையக் குற்றங்கள் தொடர்பான செய்திகள் வரும்போதெல்லாம், அவைகுறித்து பிள்ளைகளிடம் அவ்வப்போது உரையாடினாலே போதும்
இதெல்லாம் குற்றங்கள், எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள் போன்றவற்றைப் புரிந்துகொள்வர். அதுபோன்ற சம்பவங்கள் தங்கள் வாழ்வில் நடக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே கற்றுக்கொள்வர். அடுத்தது, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் இடைவெளி. என்ன பிரச்னை வந்தாலும் நம் பெற்றோர்கள் நம்மோடு இருப்பார்கள், நமக்காகத்தான் பேசுவார்கள் என்ற நம்பிக்கை பிள்ளைகளிடம் வரவேண்டும்
அப்போதுதான், அவர்களுக்கு பிரச்னைகள் வரும்போது தைரியமாக அவர்கள் உங்களிடம் அதை எடுத்துவருவார்கள். கூடி ஆலோசித்து தீர்வுகாண முடியும். ஸ்டாக்கிங் போன்ற தொல்லைகளின்போது குடும்பம் அளிக்கும் ஆதரவுதான், அவர்களுக்கான அருமருந்து. அதை எந்தச் சூழ்நிலையிலும் மறந்துவிட வேண்டாம்.
அடுத்தது, சட்டரீதியாகக் கையாள்வது. உங்களின் பிள்ளைகள் யாரேனும் சைபர் ஸ்டாக்கிங்கால் பாதிக்கப்படுகிறார் எனில், தயங்காமல் காவல்துறையிடம் எடுத்துச்செல்லுங்கள். இதற்காக காவல்நிலையம்கூட செல்ல வேண்டாம். தகுந்த ஆதாரங்களுடன் இணையம் மூலமாக, சைபர் கிரைமில் புகார் பதிவு செய்துவிடலாம். அந்தப் புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீங்கள் கருதினால், தேசிய மகளிர் ஆணையத்திடமும் புகார் அளிக்கலாம். எனவே, உங்கள் பிள்ளைகள் என்றேனும், இப்படிப்பட்ட பிரச்னையை எதிர்கொள்ள நேர்ந்தால், அந்த அன்பையும் அரவணைப்பையும் மட்டும் அளிக்காமல் இருந்துவிடாதீர்கள்!
*******************************************நன்றி : விகடன் செய்திகள் - 03.07.2019 

Thursday, July 4, 2019

அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்

அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
தமிழக அரசு மருத்துவ பணியில் பணிபுரியும் மருத்துவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் பணிபுரியும் இயக்குநரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையிடம் அனுமதி (No Objection Certificate) பெற்றுதான் வெளிநாடு செல்ல வேண்டும்.
அவ்வாறு NOC பெறுவதற்கான படிவங்களின் தொகுப்பு இந்த லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது.
.படிவங்கள் அனைத்தும் zip பைலாக உள்ளதால், லேப்டாப் உதவியுடன் Google Drive-ல் இருந்து download செய்து கொள்ளவும்.
குறிப்பு : இந்த படிவங்களை தேவைக்கேற்ப சற்று மாற்றியமைத்து, மற்ற துறையில் பணிபுரியும் பணியாளர்களும் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

நன்றி : முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Leenus LeoEdwards 

Tuesday, July 2, 2019

போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள்

போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள்
நமது நாட்டில் நடப்பதற்கே சிரமமான தெருக்களில் கூட பல கோவில்கள் திடீரென உருவாக்கப் பட்டிருக்கும். கோவில்தானே என்று யாரும் அதனை கண்டு கொள்வதில்லை. முதலில் சின்னதாக ஒரு சிலை வைப்பார்கள். பின்பு மேடை கட்டுவார்கள். அதன் பிறகு சுற்றுப் பிரகாரம், கோபுரம் என்று வெகு வேகமாக அந்த இடம் ஆக்கிரமிக்கப்படும். ஏதோ ஒரு காரணத்தினால் ஈர்க்கப்பட்டு மக்களும் வழிபாட்டிற்காக அங்கு செல்வார்கள். இதற்கென்று விழாக் கமிட்டியார், தர்மகர்த்தா தேர்ந்தெடுக்கப்பட்டு தலைக்கட்டு வரி, நன்கொடை வசூல் என்று அந்தப் பகுதியே அமர்க்களப்படும். 
அதிகாரிகள் தலையிடுவதில்லை
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று புகார் அளித்தாலும், பக்தி காரணமாக அதிகாரிகள் அதனை அகற்ற பயந்து, புகார் மனுக்களை கண்டு கொள்வதில்லை. இதனை நாம் பல இடங்களில் பார்த்துவிட்டு என்ன செய்வது? என்றே தெரியாமல் அதனை கடந்து தினசரி சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், இதனை அகற்ற ஒரு வழியை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது தெரியுமா?
உச்சநீதிமன்ற தீர்ப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் இப்படி ஒரு வழிபாட்டு ஸ்தலத்தை அகற்ற சிக்கல் வந்தது. உள்ளூரில் ஆரம்பித்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த சிக்கலான பிரச்சனைக்குரிய வழக்கு மதிப்பிற்குரிய நீதிபதிகள் சுதிர் அகர்வால் மற்றும் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அழுத்தமான தீர்ப்பு ஒன்றை அவர்கள் வழங்கினர். அதன்படி 
⧭  போக்குவரத்துக்கு தடையாக உள்ள எந்த ஒரு வழிபாட்டு ஸ்தலமும் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு கட்டப்பட்டிருந்தால்,  அவை அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
⧭  அரசாங்கத்துக்குச் சொந்தமான காலி இடங்கள், சிறிய தெருக்கள்,  நெடுஞ்சாலைகள்,   பாதைகள்,  போன்ற எந்த ஒரு இடத்திலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள எந்த ஒரு கோவிலையும் கட்ட சட்டம் அனுமதிக்கக்கூடாது.
⧭  அவ்வாறு கட்டப்பட்டிருந்தால், அதனை ஆறுமாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
⧭  இது பற்றிய விபரங்களை மாவட்ட ஆணையர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள், மாநில தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.
⧭  இந்த தீர்ப்பு வந்த (10.06.2016) நாள் முதல் ஏதாவது கோவில் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நடந்தால், அதற்கு அந்த மாவட்டத்தை சேர்ந்த துணை ஆட்சியர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுமே முழுப்பொறுப்பு ஆவார்கள்.
⧭  கோவில் கட்டியவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து, கிரிமினல் குற்றம் செய்ததற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வழக்கு எண்: Supreme Court of India, Lavkush vs State of UP, 2016, Decided on 10.06.2016
****************************************** நன்றி : லாயர்ஸ் லைன், செப், 2016 

Thursday, June 27, 2019

உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற....


உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற....
உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முதலில் துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல் நடவடிக்கையாக, அதற்கு உரிய அரசு அலுவலகத்தில் எழுத்து மூலமாக புகார் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அகற்றிவிட வேண்டும். சகித்துக் கொள்ளக்கூடாது. அதிகமாக ஆக்கிரமிப்பு செய்ய அனுமதித்தால் அதனை அகற்ற அதிக சக்தியை செலவழிக்க நேரிடும்.

புகார் அளிப்பதற்கு முன்னர் என்ன செய்ய வேண்டும்?
புகார் அளிப்பதற்கு முன்பாக தங்களுடைய தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியின் வரைபடத்தை வைத்து அந்த தெருவின் அகலம் ஏற்கனவே எவ்வளவு இருந்தது என்பதை அறிந்து கொண்டால் புகாரை தெளிவாக எழுத முடியும். கிராமப்புறமாக இருந்தால் இதற்கான பகுதி வரைபடத்தை (FMB SKETCH) கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதைக்கொண்டு தங்களுடைய தெருவின் உண்மையான அகலம் எவ்வளவு என்பதை அறிந்து அதற்கேற்ப உங்களது புகார் மனுவைத் நீங்கள் தயாரிக்கலாம்.

யாரிடத்தில் புகார் அளிக்க வேண்டும்?
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்டதாக இருந்தால் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பேரூராட்சி அல்லது நகராட்சியாக இருந்தால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி அலுவலகத்திலுள்ள நகரமைப்புப் பிரிவிலும் எழுத்து மூலமாக உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வேண்டும். நேரில் சென்று கொடுப்பதைவிட பதிவுத்தபால் மூலமாக புகாரை அனுப்புவது நல்லது. அதன் மூலம் புகார் அளித்ததற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கும்.
மாநகராட்சிப் பகுதியாக இருந்தால்..?
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் அந்தப் பகுதியைச் சேர்ந்த வார்டு எந்த மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து, அந்த மண்டல அலுவலகத்திலுள்ள உதவி ஆணையர் அல்லது உதவி நகரமைப்பு அலுவலர் அவர்களிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கலாம். அதில் ஏதும் நடவடிக்கை இல்லாதபட்சத்தில் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் புகார் தெரிவிக்கலாம். எங்குமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கலாம். அங்கு புகார் பெறப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்குவார்கள்.
நீதிமன்றத்திற்கு எப்போது செல்ல வேண்டும்?
அரசு அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையுமே இல்லையென்றால் மட்டுமே நீதிமன்றம் செல்ல வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நீதிமன்றம் செல்லக்கூடாது. அரசு அதிகாரிகளிடம்  புகார் அளித்ததற்கான அனைத்து ஆதாரங்களுடன் உயர்நீதி மன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யலாம்.
Image result for poclain machine job doing
பொதுநல வழக்குகளை தனிநபர் தாக்கல் செய்யலாமா?
செலவு, பாதுகாப்பு மற்றும் வழக்கை வலுப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக. ஆக்கிரமிப்பு சார்ந்த பொதுநல மனுக்களை நீதிமன்றத்தில்  தனிநபராகத் தாக்கல் செய்வதைவிட, ஏதேனும் ஓர் அமைப்பு சார்ந்தோ, குடியிருப்போர் சங்கங்கள் சார்ந்தோ தாக்கல் செய்வது நல்லது.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 27.06.2019 

Monday, June 24, 2019

பொதுத்தொல்லைகள் - என்ன செய்ய வேண்டும்?

பொதுத்தொல்லைகள் - என்ன செய்ய வேண்டும்?
இன்றைய சூழ்நிலையில் நாம் ரோட்டில் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ பலவித தொல்லைகளை அனுபவித்துக் கொண்டேதான் செல்ல வேண்டியதிருக்கிறது.  ஆனால், இதைப் பற்றி புலம்பிக் கொண்டே செல்கிறோமே தவிர இதற்கு யார் பொறுப்பு? இதற்கு பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் புகார் அளிக்க வேண்டும்? என்பது குறித்து பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு இல்லை. அதனை தீர்க்கவே இதனை எழுதுகின்றேன்.
நாள்தோறும் என்னென்ன பொதுத் தொல்லைகளை அனுபவிக்கிறோம்?
⧭ சாலையின் நடுவே தோண்டப்பட்டு சரியாக மூடாமல் இருக்கும் குழிகள்
⧭ ரோட்டில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக்கழிவுகள்
⧭ ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கட்டிட பொருட்கள்
⧭ திருவிழாக் காலங்களில் ஒலிபெருக்கிகளை சத்தமாக வைப்பது
⧭ வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் ரோட்டில் செல்வோருக்கு இடைஞ்சல் தருவது
⧭ சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவது
⧭ தங்கள் வாகனங்களை ரோட்டில் ஓரத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைப்பது.
⧭ சாலை ஓரங்களிலேயே மல, ஜலம் கழிப்பது
⧭ சாலைகளில் சாக்கடைத் தண்ணீர் தேங்கி கிடப்பது 
⧭ சாலை ஓரங்களிலேயே குப்பைகளை கொட்டுவது
⧭ பொது இடங்களில் புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது
⧭ சாலை ஓரங்களில் கழிவுகளை எரிப்பது
⧭ சாலைகளில் கால்நடைகளை விட்டு வைப்பது 
அருகிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வரும் கழிவுகள், சப்தங்கள் 
யார் யார் புகார் அளிக்கலாம்?
மேற்கண்ட தொல்லைகளை  ஆங்கிலத்தில் Public Nuisance என்று குறிப்பிடுகிறார்கள். இவற்றை தடுக்க சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91ன் கீழும், இந்திய தண்டணைச் சட்டம்  268 முதல்  294 வரையில் உள்ள பிரிவுகள் கீழும், குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 133ன் கீழும் யார் வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம்.
சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91
சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91ன்படி மேற்கண்ட குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், மேலும் சிலரை நம்முடன் சேர்த்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதனை நடத்தி நாம் சந்திக்கின்ற தொல்லைகளை தடுக்க தடை உத்தரவு வாங்கலாம். இது கொஞ்சம் சிரமமானது மட்டுமல்ல, காஸ்ட்லியானதும் கூட. இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?
குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 133
மேற்கண்ட குற்றங்களை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குற்ற விசாரணை முறைச் சட்டத்தினை (பிரிவு 133) பயன்படுத்தினால் நமக்கு அலைச்சலில்லை, செலவு அதிகமில்லை. மிக எளிதானது. 
என்ன செய்ய வேண்டும்?
நாம் பொது இடங்களில் சந்திக்கின்ற இடையூறுகளைப் பற்றி ஒரு புகாராக எழுதி, நாம் குடியிருக்கும் பகுதிக்குரிய  வருவாய் கோட்ட அலுவலர்  (Revenue Divisional Officer) அவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும். அல்லது சப் கலெக்டர் எனப்படும் கோட்டாட்சியர் அவர்களுக்கும் அந்தப் புகாரை அனுப்பலாம். புகாரின் தலைப்பிலேயே, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 133ன் கீழ் புகார்மனு என்று எழுதிவிட்டு அதற்குப் பிறகு அனுப்புனர் என்பதை எழுதுங்கள். 
புகார் அனுப்பியதும் என்ன நடக்கும்?
உங்கள் புகார் கிடைக்கப் பெற்றதும் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, புகாரில் உண்மை இருந்தால்  அந்த தொந்தரவுகளை அகற்ற உடனே உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். இந்த உத்தரவுகளில் சிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது விசேஷச் செய்தி ஆகும். இந்த உத்தரவின் கீழ் அந்த தொந்தரவு தருபவர்கள் அதனை அகற்ற அல்லது நிறுத்த மறுத்தால் இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 188ன் கீழ் தண்டணைக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
என்ன தண்டணை கிடைக்கும்?
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 133ன் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட்டு பிறப்பிக்கப் படுகின்ற உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரிசெய்ய மறுத்தால், அந்த குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒரு மாதம் சிறைத் தண்டணை மற்றும் ரூபாய் 200/- அபராதமும் அல்லது ஆறு மாதம் சிறைத் தண்டணை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதிக்கப்படும் 
காவல் துறையில் புகார் அளிக்கலாமா?
பொதுத் தொல்லைகளால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்கள் இந்திய தண்டணைச் சட்டம்  268  முதல் 294 வரையில் உள்ள பிரிவுகள் கீழ் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 25.06.2019