ப்ரைவேட்
கம்ளைண்ட் (கிரிமினல்)
நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்படும் தனிநபர் புகாரில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 ன் கீழ் குற்றவியல் நடுவர் தாமாக முன்வந்து ஒரு விசாரணையை நடத்தலாம் அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன்படி அந்தப் புகாரின் மீது புலன்விசாரணை நடத்தும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு, அந்த புகாரினை காவல்துறைக்கு அனுப்பி வைக்கலாம். இந்த இரண்டு நடைமுறைகளில் ஏதேனும் ஒரு நடைமுறையை தேர்வு செய்வது குற்றவியல் நடுவரின் விருப்பத்திற்கு
உட்பட்டதாகும்.
- குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் புலனாய்வு என்கிற வார்த்தைக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும் காவல்துறையினர் ஒரு வழக்கில் ஆதாரங்களை சேகரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- எனவே பிடியாணை வேண்டா குற்றம் குறித்து ஒரு புகார் அளிக்கப்படுமேயானால் அந்த புகாரின் அடிப்படையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154
ன் கீழ் FIR பதிவு செய்ய வேண்டியது
புலனாய்வு அதிகாரியின் கடமையாகும்.
- ஒரு குற்றவியல் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன் கீழ் ஒரு உத்தரவினை
பிறப்பித்திருந்தால் காவல்துறையினர் அந்த உத்தரவின் பேரில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன் கீழ் வழக்கு பதிவு செய்வதைத்
தவிர வேறு வழியில்லை. காவல்துறையினர் புகாரை பதிவு செய்ய முடியாது என்று மறுக்க முடியாது.
முதல் தகவல் அறிக்கை பதிவு
FIR பதிவு செய்வது என்பது வெவ்வேறு சூழ்நிலைகளில் நடைபெறும் ஒன்றாகும். நிகழ்நிலை புகார்தாரர்
அளிக்கும் புகாரின் மீது பதிவு செய்யப்படுவது
ஒரு முறையாகும். குற்றவியல் நடுவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன் கீழ் அளிக்கும் உத்தரவின்படி அல்லது உயர்நீதிமன்றம்
இந்திய அரசியலமைப்பு
சட்டம் கட்டளை 226 ன்படி அளிக்கும் உத்தரவின்படி
பதிவு செய்வது மற்றொரு வகையாகும். இந்த இரண்டு முறைகளை தவிர புலன்விசாரணை அதிகாரிக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் புகார் எதுவும் தரப்படாவிட்டாலும் அவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
நேரிடையாக FIR பதிவு செய்யலாம்.
குற்றவியல் நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம்
பிரிவு 156(3) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்,
காவல்துறை கண்காணிப்பாளருக்கு குற்றவியல் நடைமுறைச்
சட்டம் பிரிவு
154(3) ன் கீழ்
வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணையானதாகும்.
- ஒரு பிடியாணை வேண்டா குற்றம் குறித்து ஒரு புகார் அளிக்கப்பட்டால் அதன்மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154(1)
ன்படி FIR
ஐ
காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும்.
- அவ்வாறு FIR
பதிவு செய்ய தவறும் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டால் தனக்கு கீழுள்ள ஒரு காவல்துறை அதிகாரியை FIR பதிவு செய்யும்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154(3) ன்படி உத்தரவிடலாம்.
- அதேபோல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட ஒரு புகாரின் மீது அந்த காவல்நிலைய அதிகாரி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154
ன்படி ஒரு வழக்கு பதிவு செய்ய தவறும் போது ஒரு குற்றவியல் நடுவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன்படி FIR
ஐ
பதிவு செய்யும்படி ஒரு உத்தரவை பிறப்பிக்கலாம்.
- ஆனால் காவல்துறையினர் விருப்பம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் அல்லது விருப்பப்பட்டால் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்டு ஒரு உத்தரவை குற்றவியல் நடுவர் பிறப்பிக்க முடியாது.
- பிடியாணை வேண்டா குற்றங்களில் முதலில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன் கீழ் FIR பதிவு செய்யப்பட வேண்டும்.
- அதன்பிறகு தான் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 173 ன் கீழ் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்.
- குற்றவியல் வழக்குகளில் அதுவும் குறிப்பாக பிடியாணை வேண்டா குற்றங்களில் ஒரு வழக்கின் பிறப்பு மற்றும் இறப்பு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154
ல் தொடங்கி பிரிவு 173 ல் முடிவடைகிறது.
- அதன்பிறகு தான் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அந்த வழக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 190 ன்படி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
- குற்றவியல் நீதிபரிபாலன முறையில் காவல்துறையினரால் செய்யப்படும் குற்றவியல் வழக்கு விசாரணையில் ஒவ்வொரு நிலையையும் கண்காணித்து அதனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அதிகாரத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டம் குற்றவியல் நடுவர்களுக்கு வழங்கியுள்ளது.
- FIR நகலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 161 ன் கீழ் பதிவு செய்யப்பட்ட
வாக்குமூலங்களை சமர்பிப்பது, வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை தாமதமின்றி நீதிமன்றத்தில் ஒப்படைப்பது உட்பட அனைத்து செயல்களும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் அமைந்துள்ளது.
- காவல்துறையினரின் செயல்பாடுகள் மற்றும் பொய் வழக்கை புனைதல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கத்தில் இந்த கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
- காவல்துறையினரை யாராவது கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுப்பாடுகள் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன் கீழ் குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் கட்டளைகளை காவல்துறையினர்
நிறைவேற்றுகிறார்களா? , கீழ்படிந்து
நடந்து கொள்கிறார்களா?,
நடைமுறைப்படுத்துகிறார்களா? என்பதை குற்றவியல் நடுவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 16950/2014, DT -
17.10.2014 S. Jeya Kumar Vs D. Baskaran and others 2014-2-LW-CRL-613