disalbe Right click

Saturday, April 18, 2020

இளம் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி எழுதிய கடிதம்

 
இளம் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி எழுதிய கடிதம்
சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த். வெங்கடேஷ் இளம் வக்கீல்களுக்கு எமுதும் கடிதம் ஒவ்வோரு வக்கீல்களும் படிக்க வேண்டிய அற்புத கடிதம்
இளம் வழக்கறிஞர்களுக்கிடையே சிறந்த வாதிடுதலுக்கான பண்புகளும் திறனும் மறைந்துகொண்டு வருவதை ஒரு நீதிபதியாக பார்த்து வருகிறேன். இந்நிலை, மூத்த, அனுபவம் பெற்ற வழக்கறிஞர்களின் வழிகாட்டுதலையும், அவர்களிடம் குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து, அவர்களின் பண்புகளையும், அனுபவத்தின் விளைவாய் அவர்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் பக்குவத்தையும், கூர்மையான கவனிப்பின் வாயிலாக பெறாமல், வழக்கறிஞராக பதிவு செய்த உடன் தங்கள் சுயேச்சையான சட்ட பயிற்சியை (Independent Law Practice) இளம் வழக்கறிஞர்கள் தொடங்கிவிடுவதால் ஏற்படும் விளைவு என்பதனை என் அனுபவத்தின் அடிப்படையில் உறுதி செய்கிறேன்
அவ்வாறான நிலை மாற்றப்பட வேண்டும் என்னும் எண்ணத்தின் அடிப்படையில் “Advocacy- The Success Mantra” என்னும் தலைப்பில் ஆங்கிலக் கட்டுரை ஒன்றினை சில நாட்களுக்கு முன்பு பதிப்பித்தேன். அக்கட்டுரை சக நீதிபதிகளிடமிருந்து மட்டுமல்லாமல், நாடெங்கும் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களிடமிருந்து எதிர்பாராத அளவில் வரவேற்பை சந்தித்தது. இக்கட்டுரை தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு இளம் வழக்கரிஞரையும் சென்றடைய வேண்டும் என்று நான் நினைத்தபடியால், இக்கட்டுரை தமிழில் மொழி பெயர்க்கப்படவேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் விளைவாகவேவாதிடுதல் (வழக்காடுதல், வாதாடுதல்) – வெற்றி மந்திரம்என்னும் தலைப்பில் கீழ்வரும் கட்டுரை அமைந்துள்ளது
இக்கட்டுறையை மொழிபெயர்க்கும் பணியில் எனக்கு உறுதுணையாக இருந்த, என்னிடம் பணியிடை பயிற்சி மேற்கொண்டிருக்கும் (Intern) சட்டம் பயிலும் மாணவி செல்வி. கோ.சு. சிம்ஹாஞ்சனா, செல்வன் .திருமாறன், M.A., M.Phil., (Ph.D) ̅ (Tamil) மற்றும் மொழிபெயர்ப்பியல் அறிஞர்கள் ஆகியோருக்கு எனது பாராட்டுகளை பதிவு செய்ய விரும்புகிறென். இக்கட்டுரை தமிழகம் எங்கும் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு உபயோகமாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
பிரபலமான வழக்குகள்”…. 
பிரபலமடையச் செய்யும் வழக்குகள்”, 
கம்பீரமான வாதங்கள்”, 
சமூகத்தை திரும்பிப் பார்க்கச் செய்யும் தீர்ப்புகள்”, 
சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை, நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்னும் பொறுப்புணர்வு, திறமை, ஆர்வம், பாரம்பரியம், தற்செயல்- இப்படி அடுக்கிக் கொண்டே சொல்லக்கூடிய எக்காரணத்தின் அடிப்படையிலும், ஒருவர் நீதித்துறையை தேர்ந்தெடுக்கக்கூடும்
அவ்வாறு தேர்ந்தெடுத்து, சட்டப் படிப்பில் பட்டம் பெற்றுவிட்டு, வழக்கறிஞராக பதிவு செய்து, நீதித்துறையின் அடையாளமாக- உருவமைப்பாக நிற்கும் நீதிமன்றங்களின் சுவர்களுக்குள் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொரு இளம் வழக்கறிஞரையும் ஆட்கொள்ளும் உணர்வுகள்- இவ்வமைப்புமுறையின் மீது உள்ள பிரம்மிப்பும், அதன் புதிரான வசீகரத்தன்மையும், ஒரு வித திகைப்பும், பயமும், அளவிடமுடியாத பெருமையும், இத்துறையில் சாதனைகள் பல செய்ய வேண்டும் என்னும் தூண்டுதலும், சில சமயங்களில் கண்களை கட்டி காட்டில் விட்டாற்போல் இருப்பதும் என்றால் அது மிகையாகாது.
தங்கள் கனவுகளுடன், ஆற்றல்- அறிவு, சமூக அக்கறை- இவற்றின் சின்னமாக இத்துறையில் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொரு இளம் வழக்கறிஞரும் இவ்வமைப்பின் வருங்காலமாகவும், நீதியை நிலைநிறுத்தும் தூண்களாகவும் விளங்க உள்ளார்கள் என்பதை உணர்தல் இன்றி அமையாதது. அதனை எண்ணத்தில் கொண்டபடியால் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
வாதிடுதல் ஒரு கலை
அதை எந்தப் புத்தகத்திலிருந்தும் கற்பிக்கவோ கற்றுக்கொள்ளவோ முடியாது. கூர்மையான கவனிப்பின் வாயிலாக மட்டுமே இளம் வழக்கறிஞர்கள் இந்தக் கலையை வளர்த்துக் கொள்ள இயலும். புதிதாகப் பதிவுசெய்யும் வழக்கறிஞர் ஒருவர், மூத்த வழக்கறிஞர் ஒருவரின் சட்ட அலுவலறையில் இணைந்து, அவரது வழிகாட்டலின் மற்றும் பயிற்சியின் கீழ், குருகுலத்தில் வாழ்வது போன்ற ஓர் அமைப்பு ஒரு காலகட்டத்தில் இன்றியமையாததாக இருந்து வந்தது. இளநிலை வழக்கறிஞராகச் சேரும் ஒருவர், சிறந்த வாதிடும் திறன்களையும் அதற்கான பண்புகளையும், வளர்த்துக் கொள்ளும் சூழலை அவ்வலுவலகம் ஏற்படுத்தும். இளம் வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தின் முன் ஆஜராகும்போது, அவர் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து அவரது மரபு கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். மூத்த வழக்கறிஞரும், அவரது ஆலோசனையின் பேரில் ஏனைய பல மூத்த அறிஞர்களும், நீதிமன்றங்களில் வாதிடுவதை உன்னிப்பாகக் கவனிப்பதன் வாயிலாக, வாதிடுதலுக்கான திறன்களை இளம் வழக்கறிஞர் பெறுகிறார். இந்த அனுபவமும், ஒரு இளம் வழக்கறிஞரின் தனிப்பட்ட திறனும் இணையும்பொருட்டு, ஒரு பக்குவப்பட்ட வழக்கறிஞர் உருவாகிறார். இத்தகைய திறனை, அனுபவத்தால் மட்டுமே பெற முடியும் என்பதாலேயே, அதை அடைவதற்கு நீண்ட காலம் ஆகின்றது.
வாதிடுதல், முயன்று பெற வேண்டிய ஒரு திறனாக (acquired skill) இருக்கும் போது, இதைக் குறித்து ஏன் விவாதிக்க வேண்டும், எழுத வேண்டும்?” என்பது அடுத்த கேள்வியாக எழக்கூடும். மூத்த வழக்கறிஞர்களுக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஒரு ஆசானுக்கும்சீடனுக்கும் இணையாக இருந்த உறவுநிலை மெல்ல மெல்ல அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், இக்கட்டுறைக்கான தேவை தற்போது எழுந்துள்ளது. இன்று, சட்டப் பயிற்சி (Law Practice) மாறுபட்ட ஒரு வடிவை எடுத்து வருகிறது. இளைய வழக்கறிஞர்கள் சட்ட நிறுவனங்களில் (Law Firms) சேர்ந்து, நேரடியாக அவர்களின் பயிற்சியைத் தொடங்கும் காலம் வந்துவிட்டது. சிலர், முதல் நாளிலிருந்து, தாமாகவே பயிற்சியைத் தொடங்கலாம் என்றும் நினைக்கின்றனர்
பார் கவுன்சில் இந்நிலையைப் பரிசீலித்து, இளம் வழக்கறிஞர்கள் அவர்களின் தனிப்பட்ட பயிற்சியைத் தொடங்குவதற்கான முன் நிபந்தனையாக, ஏதேனும் மூத்த வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில், இளநிலை வழக்கறிஞராக/ உதவியாளராக, குறிப்பிட்ட காலம் பயிற்சி அல்லது அனுபவம் பெற்றிருப்பது அவசியமென அறிவிக்க வேண்டும்
இளம் வழக்கறிஞர்கள் பயிற்சி பெறுவதற்கான இத்தகைய அமைப்பு மெல்ல மறைந்துகொண்டே வருவதால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களின் மனதில், இத்தகைய வழிவகை குறித்து ஊக்குவிப்பது தேவையாக இருக்கிறது.
புத்திசாலிகளாகவும், கூரிய அறிவுடையவர்களாகவும் உள்ள இளம் வழக்கறிஞர்கள், வாதிடுதலில் திறமையற்று இருப்பதை ஒரு நீதிபதியாக நான் தினமும் நீதிமன்றத்தில் கண்டு வருகிறேன்
அவர்களில் பலர், சட்டம் மற்றும் பேச்சுத்திறன் குறித்த குறுகிய புத்தக அறிவைக் கொண்டு, சுயேச்சையான சட்டப் பயிற்சியைத் (Independent Law Practice) தொடங்கி, நீதிமன்றங்களில் வாதிடலாம், அதுவே மிகப் போதுமானது என அவர்கள் எண்ணுகிறார்கள் போலும். நீதிபதியாகவே இருப்பினும் அவர்களின் முன்னிலையில் அமர்ந்திருப்பவரும், ஒருமனிதன்தான் என்னும் அடிப்படை உண்மையை அவர்கள் கவனிக்கத் தவறுகின்றனர் என்பது புலனாகிறது. எனவேதான், COVID-19 வழங்கியுள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தி, “வாதிடுதல்குறித்த எனது கருத்துகளை எழுதலாம் என்று நினைத்தேன்
இம்முயற்சியால், இளம் வழக்கறிஞர் ஒருவர் பயனடைந்தாலும், என்னுடைய முயற்சிக்கான பலனை அடைந்துவிட்டதாக நான் கருதுவேன்.
ஒருமுறை ப்ரூஸ் லீயிடம் குங்ஃபு கலையை விவரிக்கும்படி கேட்டபோது, “இது சண்டையில்லாமல் சண்டையிடும் ஒரு கலை(“It is an art of fighting without fighting”) என்றார். அதைப் போல, “வாதிடுதல் என்பது வாதம் செய்யாமல் வாதிடும் ஒரு கலை(“Advocacy is an art of arguing without arguing”).ஜெரேமி ஹட்சின்சனின் வழக்கு வரலாறுகள்(Jeremy Hutchinson’s Case Histories) என்ற தலைப்பில் தாமஸ் கிராண்ட் என்பவர், குயின்ஸ் கவுன்ஸில் ஜெரேமி ஹட்சின்சன் குறித்து எழுதிய ஒரு புத்தகத்தில், இரண்டு பத்திகளில் வாதிடுதல் என்னும் கலை குறித்து மிகத் தெளிவாக இவ்வாறு எழுதுகிறார்:
வாதிடுதல் என்பது தன்வசப்படுத்துகிற மற்றும் கவரும் வகையிலான (persuasive and attractive) ஒரு பேச்சுக்கலை. இப்போது மாணவர்கள் பல மணிநேரவழக்கறிஞர் பயிற்சியில் (advocacy training) கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்ஸ் ஆஃப் கோர்ட்டின் (Inns of Court) மீதமுள்ள முக்கிய பங்கு இதுவாக மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துதல் (upholding integrity), நீதிமன்றத்தை நோக்கி இருக்கவேண்டிய கடமை உணர்வு (duty to court), தயாரித்தலின் அதீத முக்கியத்துவம் (preparation), சட்டம் மற்றும் தரவுகள் (facts) மீது வல்லமை பெறுதல் என அனைத்தையும் கற்பிக்க முடியும். ஆனால், லார்ட் பிர்கெட் (Lord Birkett) ஒருமுறை சுட்டிக்காட்டியதைப் போல, குறிப்பாளர் ஜான் ஆப்ரே (diarist John Aubrey), லார்ட் சேன்ஸிலர் பேக்கன் (Lord Chancellor Bacon) குறித்துப் பேசும்போது: ‘It was the fear of all who heard him that he would make an end’ என்னும் குறிப்பினையோ அல்லது பிட் தி யங்கர் (Pitt the Younger), சார்லஸ் ஜேம்ஸ் ஃபாக்ஸ் (Charles James Fox) பெரும் பெருமைக்குரியவர்என்ற கருத்தின் மீது ஆச்சரிய வெளிப்பாட்டை வழங்கியதற்கான பதிலாக, ‘Ah! But you have never been under the word of the magician’ என்று உதிர்த்த நெற்றியடி வாசகத்தையோ ஒருவர் எவ்வாறு கற்பிக்க முடியும். வாதிடுதல் என்னும் கலை அங்குதான் புதைந்திருக்கிறது.
உரையாடலாக இருந்தாலும், அரங்கத்தில் பேசுவதாக இருந்தாலும், வாதிடுதலின் சாரம், எதிரே அமர்ந்திருப்பவரிடம் அது ஏற்படுத்தும் உடனடித் தாக்கமே ஆகும். சொற்களும் அவை குறிக்கவிருக்கும் பொருளும் அரையளவு முக்கியத்துவமே பெறுகின்றன. ஒரு திறமையற்ற வழக்கறிஞரின் வாயிலிருந்து வரும் ஆற்றல்மிகு சொற்கள் வாயிலேயே மடிந்து போகின்றன. ஆனால், ஒரு சிறந்த வழக்கறிஞரோ, ஒரு சலவைப் பட்டியலைக் (Laundry List) கொண்டும்கூட மிகப்பெரிய மாயாஜாலத்தை அரங்கேற்றிவிடுவார்.”
சிறந்த வாதங்களை உருவாக்கும் பண்புகள் யாவை? பின்வரும் பத்திகளில் அவற்றைச் சுருக்கமாகக் சொல்லுகிறேன்.
வாதிடுவது என்பது வாக்குவாதத்தில் ஈடுபடுவது அல்ல. அத்தகைய மனநிலை, வாதிடுதல் என்னும் கலையிலிருந்து வெகு தொலைவானது. ஒரு நீதிபதி, ஒரு வழக்கறிஞரின் முகத்தையும் அவரது பெயரையும் அவரது குரலையும் சைகைகளையும் மறந்துவிட்டு, வழக்கை வென்ற, அடையாளமிடப்படாத அந்த ஒருவரிடமிருந்து வந்த வாதங்களை மட்டுமே இன்னும் நினைவில் வைத்திருந்தால், அவரே ஒரு சிறந்த வழக்கறிஞர்.
நீதிமன்றத்தில் காணப்படுவது, ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதில் 1/10 பகுதி மட்டுமே. நீதிமன்றத்தில் நிகழ்வனவெல்லாம் ஒரு வழக்கின் இறுதி பகுதி மட்டுமே. மீதமுள்ள 9/10 பகுதிப் பணியில், தரவுகளை ஒருங்கிணைத்தல், பொருத்தமான சட்டத்தை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்துதல், எதிர்வாதிகளிடமிருந்து என்னனென்ன வாதங்களை சந்திக்கக்கூடும் என்று முன்கூட்டியே கணிப்பது, அது தொடர்பாக நீதிமன்றம் எழுப்பக்கூடிய ஐயங்களையும், கேள்விகளையும் கணிப்பது போன்ற வெவ்வேறு கடமைகள் ஒரு வழக்கறிஞருக்கு உள்ளன
வழக்கறிதல் (Lawyering) மற்றும் வாதிடுதல் (Advocacy) என்னும் இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை. வழக்கறிதல் என்பது தரவுகளைச் சேகரிப்பது, சட்டத்தைத் தேடுவது போன்ற வேலைகளை உள்ளடக்கியது. அதை நீதிமன்றத்தின் முன் எவ்வாறு எடுத்துரைப்பது என்பதில் தான் வாதிடுதல் வெளிப்படுகிறது. வழக்கறிதல் முடியும் இடத்தில்தான் வாதிடுதல் தொடங்குகிறது. சிறப்பான பேச்சுத்திறன், ஒரு வழக்கறிஞரது திறமையின் ஒரு பகுதி மட்டுமே. தனது அறிவுஜீவித்தனத்தை வெளிக்காட்டுவது, அசாதாரணமான மற்றும் புத்திசாலித்தனமான, ஆனால் தேவையற்ற கருத்துகளால் நீதிமன்றத்தின் சுமையைக் கூட்டுவது போன்ற வகுப்பறைத் தந்திரங்களை நீதிமன்றத்தில் கடைப்பிடிக்கும் ஒருவர், சிறந்த சட்ட வல்லுனராக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு மோசமான உளவியலாளர். எனவே அவர் ஒரு திறனற்ற வழக்கறிஞர் என்றே கொள்ள வேண்டும்
உண்மையில், வாதிடுதல் பலதரப்பட்ட திறன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வாதத்திற்கான உரையைத் தயாரித்தல் (drafting a pleading), ஆய்வுசெய்தல் (research), தர்க்கரீதியாகச் சிந்தித்தல் (logical thinking), சிக்கலைத் தீர்த்தல் (problem solving), சாட்சிகளையும் சான்றுகளையும் முன்வைப்பது (leading evidence), குறுக்கு விசாரணை செய்தல் (cross-examination), இறுதியாக வளமான வாதங்களை கட்டமைத்தல் ஆகிய பணிகளிலிருந்து வாதிடுதல் தொடங்குகிறது
இவை ஒவ்வொன்றும் வாதிடுதல் என்னும் பணிக்கான மிக முக்கியக் கூறுகள். வழக்கிற்கான முறையான அடித்தளத்தை அமைக்காமல், வெறும் இனிமையான இடாம்பீகமான பேச்சு மற்றும் புறவாதங்கள் மட்டும், வழக்காடுபவரின் (client/litigant) வழக்கை ஒரு நீதிபதி முன் எடுத்துரைக்க உதவாது. நல்ல வரைவு எழுதும் (drafting) திறன், சிந்தனை ஓட்டத்தைச் சீர்படுத்த உதவும். சிந்தனை ஓட்டத்தை நெறிப்படுத்திய பின்னர், நீதிமன்றத்தின் முன் ஒழுங்குமுறையில், நம் கருத்திற்கு இணக்கமான முறையிலும், அதை முன்வைக்க முடியும். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்பதால், பொதுவாக, வரைவுத் திறன் இல்லாத ஒரு நபருக்கு வாதிடும் திறனும் வசப்படுவதில்லை
அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, சிந்தனைத் தெளிவு ஏற்படுகிறது. அல்லாமல், சட்டப் பட்டங்களிலிருந்தோ சட்டப் புத்தகங்களிலிருந்தோ அது தாமாக ஏற்படாது. தொடர்ச்சியான கடின உழைப்பால் அதைப் பெற வேண்டுமே அன்றி யாதொரு குறுக்கு வழியிலும் அதைப் வசப்படுத்த முயல்வது சாத்தியமாகாது. . பல வழக்குகளில், சான்றாவணம் வழக்கறிஞரால் தயாரிக்கப்பட்டது எனவும், அதில் என்ன இருக்கிறது எனத் தெரியாது எனவும் சாட்சியாளர்கள் கூறுவதுண்டு. அதை தவிர்க்க, வாதங்கள் (pleadings) மற்றும் சான்றுறுதி ஆவணங்கள் (proof affidavits) எப்போதும் வழக்காடுபவர் மற்றும் சாட்சியாளர்களின் முன்னிலையிலேயே தயாரிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களில் அவர்கள் தெரிவிக்க விளையும் கருத்துகளுடன், இந்த ஆவணங்கள் ஒத்துப்போக வேண்டுமென்பதால், அவர்கள் இல்லாத போது அவற்றைத் தயாரிப்பது முறையாகாது. 
வழக்கறிஞர்களே, ஒரு நீதிபதிக்கு எண்ணங்களையும் யோசனைகளையும் விற்பனை செய்பவர்கள் எனக் கூறலாம். நீதிபதியும் ஒரு மனிதரே. எனவே, நல்ல வாதிடும் திறனில் உளவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறந்த வாதம் என்பது பெரும்பாலும் கணிப்புத்திறனையே பக்கபலமாகக் கொண்டு விளங்கும் ஒன்று. மறுதரப்பிலிருந்து எவ்வாரான வாதங்கள் வரும் அல்லது / மற்றும் நீதிபதியிடமிருந்து எவ்வாறான கேள்விகளும் ஐயங்களும் வரும் என்று கணிப்பது எப்போதும் முக்கியம். பதிலை அறியாமலிருத்தல் அல்லது திணறிக் கொண்டிருத்தலை யாரும் கண்டறியாத வகையில் பேணுவது எப்போதும் நல்லது
வாதிடும் கலையில் உடல்மொழி முக்கிய பங்கு வகுக்கிறது. ஒருவரது உடல் மொழி, நீதிபதியின் மனதில் தாக்கத்தை உறுதியாக ஏற்படுத்தும். குறிப்பாக, இருதரப்பின் சாட்சிகளும், சட்டப்படியான நிலையும் சமமான நிலையில் உள்ள வழக்குகளில் இதன் விளைவு நிச்சயமாக வெளிப்படும்
ஒரு நல்ல வழக்கறிஞர், அவர் கூறிய சில வாக்கியங்கள் அவருக்கு எதிராகவே திரும்பும்போது நிலை தடுமாறுவது இல்லை. சத்தமாகப் பேசுவது ஆற்றல் என்பதன் அறிகுறி அல்ல, அதைப்போல, வாதத்தின் இடையில் திடீர் வன்முறை உண்மையான துணிவின் அடையாளமும் அல்ல
வழக்கறிஞர் தன்னிலையை இழக்கும் நேர்வில், அவர் கட்சிக்காரர் அந்த வழக்கை இழப்பார் என்பதே நிதர்சனம். எளிய சிந்தனை மற்றும் எளிய உடல்மொழி, சிறந்த வழக்கறிஞரை உருவாக்குவதில் நீண்ட தூரம் செல்லும் பண்புகளாகும். விஷயம் எவ்வளவு சிக்கலானது என்றாலும், அதை எளிய முறையில் ஒரு நீதிபதி முன் வைக்கும் கலையை வழக்கறிஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு எளிமையாகச் சொல்லப்படுகிறதோ, அவ்வளவு எளிதாக, அச்செய்தி நீதிபதியை அடைகிறது. சக வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் நம்பிக்கையைப் பெறுவது சிறந்த வழக்கறிஞருக்கான ஓர் அடையாளமாகும். நீதிபதிகளிடமிருந்து வருகின்ற, ஒரு சங்கடமான கேள்வியிலிருந்து தப்பிச் செல்வதற்காக, உண்மைகளைத் திருகி, நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் அல்லது நீதிமன்றத்தை அச்சுறுத்தும் ஒரு வழக்கறிஞர், நீதிபதியின் மனதில் அவறைப்பற்றிய தாழ்ந்த அடையாளத்தையே பதியச் செய்வார்
அது அவர் மற்றொரு சமயத்தில் ஒரு உண்மையான வழக்குடன் நீதிமன்றத்திற்கு வரும்போது, அவர்மீது ஏற்பட்டிருக்கும் தாழ்மையான கருத்து, அவ்வழக்கையும் சேர்த்து பாதிக்கும். அனைத்திற்கும் மேல், நீதிபதியும் ஒரு மனிதரே
நீதிபதின் நம்பிக்கையைப் பெறுவதன் விளைவாக, வழக்கின் ஆவணங்களைக் கூட குறிப்பிடாமல் அவ்வழக்கறிஞருக்கு ஆதரவாக அவர் செயல்படுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். வழக்கறிஞர்கள் இத்தகைய பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். வழக்கறிஞர்கள் நேர்மையின் அடையாளமாக மாற வேண்டும்
நீதிமன்றத்தில் நல்ல பெயரைப் பெற்றிருப்பது வழக்கறிஞரின் வெற்றிக்கு மட்டுமல்ல, சில சமயங்களில் வழக்கின் வெற்றிக்கும் வழிவகுக்கும். நீதிபதிகள் வழக்கறிஞர்களைப் பற்றியும் அவர்கள் எவ்வளவு நம்பகமானவர்கள் என்பதையும் பேசிக்கொள்வது வழக்கமே. எனவே, நல்ல பெயரோ அல்லது கெட்ட பெயரோ, நீதிபதிகளுக்கிடையே மிக வேகமாகப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாதிடுதலில் பல்வேறு கட்டங்கள் மற்றும் பல்வேறு நிலைகள் உள்ளன. தொடக்கத்தில், ஒருவர் தரவுகளிலும், சட்டம் குறித்த அறிவிலும் வல்லமையுடையவராக இருக்க வேண்டும். பின்னர், ஒரு மூத்த வழக்கறிஞராக, தரவுகள் மற்றும் ஆவணங்களிலிருந்து விலகி, நீதிமன்றத்தில் எவ்வாறு வழக்கை எடுத்துரைப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிந்தனைத்திறனை கூர்மையாக பயன்படுத்துதல் இன்றியமையாதது. எழுத்து வடிவிலான வாதங்கள் (written submissions) மற்றும் நாட்கள் மற்றும் நிகழ்வுகளின் பட்டியல் (dates and events) தயாரிப்பதை வழக்கமான நடைமுறையாக்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் மேற்கோள் காட்டப்படாத அல்லது வாதிடப்படாத யாதொரு தரவு அல்லது சட்டத்தை, எழுதிச் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களில் ஒருபோதும் இணக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, வழக்கறிஞரைப் பற்றி மிகவும் தவறான எண்ணத்தைத் ஏற்படுத்தும். நீதிபதிகள் தீர்வு செய்ய வேண்டிய ஏராளமான வழக்குகள் குவிந்திருக்கும் இன்றைய சூழலில், இத்தகைய செயல், நடைமுறையாக்கப்படவேண்டும். நாட்கள் மற்றும் நிகழ்வுகள் மற்றும் எழுத்து வடிவிலான ஆவணங்களை செரிவாக வழங்குவதால், நீதிபதி, வழக்கின் தீர்ப்பில் தனது கவனத்தைச் செலுத்துவதற்கு அதிக நேரம் கிடைக்கிறது. தரவுகளைப் புரிந்துகொள்வதிலேயே அவரது ஆற்றலை வீண் செய்யவேண்டியது இல்லை.
நீதிமன்றத்தில் கூர்மையாகக் கவனிப்பதன் வாயிலாக மட்டுமே வாதிடுதல் என்னும் கலையை வளர்த்துக் கொள்ள முடியும். எவ்வாறு வாதிட வேண்டும், எவ்வாறு வாதிடக் கூடாது, எப்போது பேச்சை நிறுத்த வேண்டும், ஒரு மூத்த வழக்கறிஞர் வெவ்வேறு நீதிபதிகளின் முன் வழக்கை எவ்வாறு கையாள்கிறார், என இவை அனைத்தும் புத்தகங்களில் படிக்கப்படுவதில்லை. இவற்றை அவதானிப்பதன் வாயிலாக மட்டுமே கற்றுக் கொள்ளப்படுகின்றன. மூத்த வழக்கறிஞர்களும், எப்போதும் தன்னை இளைய வழக்கறிஞர்கள் கவனிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இளைய வழக்கறிஞர்களிடம், தகாத பண்புகளைத் தூண்டுவதற்கு அவர்கள் காரணமாக இருக்கக்கூடாது என்பதிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். சிறப்பான வாதங்கள், இறுதியில், சட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. நீதித்துறை என்னும் அமைப்பிற்கு அவை மாபெரும் ஆற்றலை அளிக்கின்றன.
 நன்றிதமிழ்நாடு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ம பெ ரொ ராபின்  அவர்களது முகநூல் பக்கத்தில் இருந்து 18.04.2020 அன்று எடுக்கப்பட்டது. 

Friday, April 17, 2020

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்' பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில் இல்லை. எனவே அந்த சட்டம் பற்றி நான் படித்து தெரிந்துகொண்ட சங்கதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மூத்த குடிமக்கள் கவனத்திற்கு.....
இந்த சட்டத்தின்படி வழக்கறிஞரை அணுக வேண்டியதிருக்குமோ?, நீதிமன்றம் செல்ல வேண்டியதிருக்குமோ?, செலவு எவ்வளவு ஆகுமோ? நமக்கு ஒன்றுமே தெரியாதே!. என்று மூத்த குடிமக்கள் கலங்க வேண்டியதில்லை. நன்றாக மனு எழுத தெரிந்திருந்தால் போதுமானது.
நீதி வழங்கும் அதிகாரம்
நீங்கள் வசித்து வருகின்ற பகுதியின் மாவட்ட ஆட்சியரே இதற்கு நீதிபதி ஆவார்.; அந்த மாவட்டத்தின் வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சமூக நல அதிகாரி, வட்டாட்சியர், ஆகியோர்கள் இந்த சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவதற்கான முக்கிய அதிகாரிகள் ஆவார்கள்.
இந்த சட்டத்தின் கீழ் புகார்களை அளிக்க விரும்புபவர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக குறைகளைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு யாரும் பரிந்துரை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதே போல யாருடைய சான்றொப்பமும் தேவையில்லை.
மனுதாரர்கள் தங்களுக்கு பராமரிப்புக்குண்டான தொகை தேவை என்று விண்ணப்பித்தால் போதும். அந்தப் புகாரின் மேல் விசாரணைக்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரியே தெரிவிப்பார்.
நன்கு மனு எழுதத் தெரிந்தவர்கள் மூலம் விண்ணப்பிப்பது நல்லது.
பொதுவாக மூத்த குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் இந்த சட்டப்படி தங்களுடைய வாழ்க்கைக்கான பராமரிப்புக்கான தொகையைத்தான் கோருகின்றனர். அதிகப்படியான தேவைகளை அவர்கள் யாருமே வேண்டுவதில்லை.
யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?.
குறை தீர்க்கும் நாளில், மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனுவை அளித்தால் போதுமானது. அவர் அதனை மாவட்ட சமூக நல அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். மாவட்ட சமூக நல அதிகாரி  அதனை பரிசீலணை செய்து சப் கலெக்டர் எனப்படுகின்ற வருவாய் கோட்ட அதிகாரிக்கு அனுப்புவார். அவர் முதலில் மூத்த குடிமக்களை அழைத்து விசாரிப்பார். பிறகு பிரதிவாதிகளை அழைத்து விசாரிப்பார். அவரே நீதியும் வழங்கலாம்; சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. சில நேரங்களில் அதனை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவார். "பிரதிவாதியை விசாரணைக்கு அழைத்தும் வராவிட்டால் "எக்ஸ்பார்ட்டி' தீர்ப்பு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. .
சட்டம் என்ன சொல்கிறது?
தனது கணவரின் இறப்புக்குப் பிறகு கணவரின் சொத்தில் பங்கு உண்டு என்று கோரும் ஒரு மருமகள் தனது மாமியாரையும் வைத்து பராமரிக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் மருமகளால் மாமியார் பராமரிக்கப்படாவிட்டால் இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்..
பெற்றோர்களுக்கு ஓய்வூதியம் இல்லாவிட்டாலும், மாதச் சம்பளம் வாங்குகின்ற மகன் அல்லது மகன்கள் அவர்களை . வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டாலும் இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்..
நிலம், வீடு மற்றும் தோட்டம் போன்ற அசையாச்சொத்துகள் இருந்தாலும் ஓய்வூதியம் வாங்கினாலும் அவற்றையெல்லாம் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பெற்றோரை அல்லது மூத்த வயதினரான குடும்ப உறவினரை பட்டினிபோட்டு தவிக்கவிடுகின்ற "வாரிசுகள்' யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்...
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று பட்டினி போட்டு வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து மனதளவிலும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்தாலும் அவர்கள் மீதும் இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்...
தமிழக அரசு மேற்கண்ட விதிகளை உருவாக்கியுள்ளது. பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டப்படி இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.04.2020 

Sunday, April 12, 2020

தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளை பயன்படுத்தாத தகவல் ஆணையம்

தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளை பயன்படுத்தாத 
தகவல் ஆணையம்
தகவல் ஆணையத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் கதை
  • கடந்த மாதம் தமிழ்நாடு தகவல் ஆணையம் வழங்கிய ஒரு தீர்ப்பை காண நேர்ந்தது.  
  • அதில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், சேத்துபட் ஊராட்சியைச் சேர்ந்த திரு ரிஸ்வான் அகமத்துல்லா என்ற மனுதாரர்  தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 6(1)ன் கீழ் ஆறு தகவல்களை செய்யாறு நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் அவர்களிடம் முறைப்படி கேட்கிறார்.
  • தகவல்கள் வழங்கப்படுகிறது. 
  • மனுதாரருக்கு பொதுத் தகவல் அலுவலர்  அவர்கள் வழங்கிய தகவல்கள் திருப்தி அளிக்காத காரணத்தால் முதல் மேல்முறையீடு செய்கிறார்.
  • மீண்டும் தகவல்கள் வழங்கப்படுகிறது. 
  • ஆனால், ஐந்து தகவல்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 
  • இதனால் மனுதாரர் இரண்டாம் மேல்முறையீட்டை தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கிறார். 
  • ஆணையர் அவர்கள் விசாரணை நடத்தி பதினைந்து நாட்களுக்குள் தகவல் வழங்க உத்தரவிடுகிறார். 
  • தகவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டும் அந்த ஒரு தகவலை பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் அந்த குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் வழங்காமல், மிகவும் காலதாமதமாக ஐம்பது நாட்கள் கழித்து வழங்குகிறார். 
  • ஆகையால், பொதுத்தகவல்  அலுவலர்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் மீண்டும் தகவல் ஆணையத்திடம் முறையீடுகிறார். 
  • விசாரனை மீண்டும் நடக்கிறது. 
  • ஆனால், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் தகவல் ஆணையம் எடுக்கவில்லை வழக்கை முடித்து வைக்கிறார்கள்

  • இந்த வழக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரைமுறைகள் கனம் தகவல் ஆணையர் அவர்களால் பின்பற்றப்படவே இல்லை. 
  • மனுதாரருக்கு 15 நாட்களுக்குள் தகவலை வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது. 
  • அதுவும் ஒரே ஒரு தகவல்தான். அதையும் கூட பொது தகவல் அலுவலர் அவர்கள் ஐம்பது நாட்களுக்குப் பிறகே வழங்குகிறார். 
  • மனுதாரர் புகார் அளித்தும், தகவல் ஆணையத்தின் ஆணையை மதிக்காத பொது தகவல் அலுவலருக்கு தண்டணை ஏதும் வழங்கப்படவில்லை. 
  • இந்த விசாரணைக்கு மனுதாரர் நேரில் சென்னைக்கு அவரது சொந்த செலவில் வரவழைக்கப்பட்டிருக்கிறார். 
  • ஒப்புக்கு ஒரு விசாரணை நடத்தி வழக்கை முடித்து வைக்கிறார்கள். 
  • இன்னும் சொல்லப்போனால், தனது ஆணையை பொது தகவல் அலுவலர் அவர்கள் மதிக்காதது  பற்றி தகவல் ஆணையர் கனம் தமிழ்குமார் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. 
  • இப்படி ஒரு சட்டம்! இதற்கு ஒரு ஆணையம்! 
  • இவர்களுக்கு மாதம் இரண்டேகால் லட்ச ரூபாய் சம்பளம்!
  • மக்களது வரிப்பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கும் இந்த நாடு எப்படி உருப்படும்?
தீர்ப்புகளின் நகல்களை டவுண்லோடு செய்ய கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
,
************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 13.04.2020 

Friday, April 10, 2020

முத்திரைத்தாள் விற்பனையாளரின் தகுதிகள்

முத்திரைத்தாள் விற்பனையாளரின் தகுதிகள்
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
இன்று முகநூலில் ஒரு நண்பர் முத்திரைத்தாள் விற்பனையாளராக என்ன செய்ய வேண்டும்? என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். எனக்கு அதுபற்றி தெரியவில்லை. அதனால் கூகுள் இணையதளத்தில் அதுபற்றிய தகவல்களை திரட்டி இந்த பதிவை நான் உங்களுக்கு தந்துள்ளேன்.
பதிவுத்துறை
முத்திரைத்தாள் விற்பனையாளர்களை பதிவுத்துறையே தேர்ந்தெடுக்கின்றது. இவர்களுக்கான தேவைகள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தின் விளம்பரப்பலகையில் பதிவுத்துறையினர் விளம்பரம் செய்வார்கள். அதனைப் பார்த்து நீங்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 
முத்திரை சட்ட விதி 25 (1) (சி)
முத்திரை சட்ட விதி 25 (1) (சி)ன்படி முத்திரைத்தாள் விற்பனையாளருக்கான தகுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.
  1. எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்ச வயது 18 ஆகியிருக்க வேண்டும்.
  3. முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழ்
  4. தாசில்தார் வழங்கிய இருப்பிடச்சான்று.
  5. மருத்துவர் வழங்கிய உடல்தகுதி, கண்பார்வை சான்றிதழ்கள்
  6. தாசில்தாரிடம் பெற்ற சொத்து மீதான செல்வநிலைச் (Solvency) சான்றிதழ் 
  7. பிணையமாக காட்டப்படுகின்ற சொத்து மீதான வில்லங்க சான்றிதழ்
முன்னாள் ராணுவத்தினர், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர், விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால், அந்த முன்னுரிமையைப் பெற, அதற்குரிய சான்றிதழை தாசில்தாரிடம் இருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைத்திருக்க வேண்டும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 11.04.2020