**இறப்புச் சான்றிதழ் **
நமது நாட்டில் வசிக்கும் ஒருவர் இறந்து விட்டதாக அரசாங்கம் அளிக்கும் சான்றிதழ்களில் ஒன்று இறப்புச் சான்றிதழ் ஆகும்.
அந்த இறப்புச் சான்றிதழ் மூலமாகவே இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் மற்றும் இறந்தவர் உடைமைகளைப் பெறமுடியும்.
மாநகராட்சிகளில் இதனைப் பெறுவதற்கென்று தனியாக இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பெறுவதற்கு முதலில் இறந்தவர் வசித்து வந்த பகுதியில் உள்ள ஊராட்சி/நகராட்சி அலுவலகத்தில், பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் அவர் இறந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். ஒருவர், அவர் வசித்து வந்த முகவரியில் இயற்கையான முறையில் இறந்தால் மட்டுமே இந்த முறையில் பதிவு செய்ய முடியும்.
விபத்து மூலம் இறந்து விட்டால்...?
ஒருவர் விபத்து மூலமாக இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்றிதழை அவர் இறந்த பகுதியில் உள்ள நகராட்சியில்தான் பெற வேண்டும். அதனை பெறுவதற்கு அந்நகராட்சி அலுவலகத்தில் அவரது பிணப்பரிசோதனை சான்றிதழ் (போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்) நகலையும் கட்டாயம் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
இது போன்ற நிகழ்வுகளில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கிடைத்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இறப்பை பதிவு செய்து கொள்ளலாம்.
**மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்தால் ...? **
இறந்தவரின் பெயர், வயது போன்ற தகவல்களை அதற்குரிய ஆவணங்களுடன் சிகிச்சை பெற்ற அந்த மருத்துவமனையில் தெரிவித்து, அதன்பிறகு சில சம்பிரதாய நடவடிக்கைகளுக்குப் பிறகு நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் பெறலாம்.
எனது உடன்பிறந்த சகோதரியின் கணவர் ஹார்ட் அட்டாக் காரணமாக மருத்துவமனையில் இறந்துவிட்டார். அவருக்கு இறப்புச் சான்றிதழ் பெற வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் அந்த மருத்துவமனையில் இருந்து சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்திற்கு இறப்பு நடந்தவுடன் தகவல் அனுப்பிவிடுவார்கள்.
ஆனால், அதற்கு இறந்தவர் பற்றிய முழுத் தகவல்களையும் நாம் ஆதார பூர்வமாக முதலிலேயே அவர்களிடம் நாம் அளித்திருக்க வேண்டும்.
இறப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்பதால், நம்மில் எவராலும் அதனை அந்த இக்கட்டான நேரத்தில் முழுமையாக செய்ய முடிவதில்லை.
எங்கள் நிலையும் அதுதான். அதனால், மூன்றாம் நாள் விசேசம் முடிந்த பிறகு நான்காம் நாளில், நான் அந்த மருத்துவமனைக்குச் சென்றேன்.
முன்னேற்பாடாக, இறந்தவரின் போட்டோ, அவரது ஆதார் அட்டை அசல், மற்றும் நகலை கையுடன் எடுத்துச் சென்றிருந்தேன். அவை மிகவும் அவசியம்.
அந்த மருத்துவமனை மிகப் பெரியது. இதற்கென்றே ஒரு பிரிவை அந்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்.
நான் அங்கு சென்றவுடன் ஆதார் அட்டையின் நகலையும், அசலையும், போட்டோவையும் பெற்றுக் கொண்டு ஒப்பிட்டு பார்த்துவிட்டு, ஒரு படிவத்தில் அவற்றை குறித்துக் கொண்டு ஆதார் அட்டை அசலை மட்டும் என்னிடம் திருப்பி அளித்துவிட்டனர்.
மூன்று நாட்கள் கழித்து நகராட்சி அலுவலகம் சென்று அங்குள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரை சந்திக்குமாறு அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
நான் நான்கு நாட்கள் கழித்து அங்கு சென்று பிறப்பு - இறப்பு பதிவாளரை சந்தித்தேன்.
அவர் ஒரு விண்ணப்பத்தினை கொடுத்து, அதில் இரண்டு ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி அதனை நிரப்பித் தருமாறு கூறினார்.
அதில் இறந்தவரது பெயர், வயது, வீட்டு முகவரி, அவரது தந்தை மற்றும் மனைவியின் பெயர் ஆகியவையுடன் ஆதார் எண்ணும் கேட்கப்பட்டிருந்தது.
அதனை இறந்தவரின் ஆதார் அட்டையில் உள்ளவாறு மிகச்சரியாக பிழையில்லாமல் நிரப்பி இரண்டு ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டிக் கொடுத்தேன்.
**பெயர்களில் எழுத்துப்பிழை இல்லாமல் மிக கவனமாக நிரப்ப வேண்டும். இல்லையென்றால் அதற்கென்று தனியாக நாம் பல அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதிருக்கும். **
எத்தனை அசல் சான்றிதழ்கள் வேண்டுமென்று அவர் என்னிடம் கேட்டார்.
நான் நான்கு வேண்டும் என்றேன்.
அவர் அங்குள்ள சலான் ஒன்றை நிரப்பி அதனை அந்த விண்ணப்பத்துடன் இணைத்து நகராட்சி கவுண்டரில் ரூ.400/- பணம் கட்டி வரச் சொன்னார்.
அதனை கட்டிவிட்டு வந்தேன்.
அதனை வாங்கி சரிபார்த்த அவர் என்னை நான்கு நாட்கள் கழித்து மீண்டும் வரச்சொன்னார்.
வேலைப்பளு காரணமாக நான் ஒரு வாரம் கழித்து சென்றேன். சான்றிதழ்கள் தயாராக இருந்தது.
பணம் கட்டியதற்கான சலானை பெற்றுக் கொண்டு அந்த சான்றிதழ்களை எனக்கு அவர் அளித்தார்.
பெயர் பிழையில்லாமல் இருக்கின்றதா? என்பதை சரிபார்த்துக் கொண்டேன். அவற்றை எனது சகோதரி வீட்டில் அளித்தேன்.
,,,,,,,அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.05.2021