disalbe Right click

Tuesday, April 28, 2015

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-3



வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி-3
**********************************************************************************************

8) கடவுச் சீட்டில் விசா பதிவாகும் முறை:


நம்மை தேர்வு செய்த நிறுவனம், வேலை வாய்ப்பு நிறுவனம் நிர்வாகிகளிடமும் நமக்குரிய விசாவை கொடுத்து இருப்பார்கள். தொழில் விசாவில் இரு வகை உண்டு.

1) தனி விசா (INDIVIDUAL VISA)

2) கூட்டு விசா (GROUP VISA)

உதாரணமாக மின்-பணியாளர் பத்து பேர் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்பட்டால் ஒரே விசாவில் பத்து பேருக்கும் சேர்த்து இருக்கும்.

பத்து மின்-பணியாளர் தேர்வு செய்தவுடன், பத்து பேரின் கடவுச் சீட்டு, புகைப்படம், சான்றிதழ் இவற்றுடன் குரூப் விசாவையும் சேர்த்து, எந்த நாட்டிற்குச் செல்கிறோமோ, அந்நாட்டின் தூதரக அலுவலகம் உள்ள மும்பை, சென்னை, புதுதில்லி - இவற்றில் ஒரு இடத்தில் கொடுத்து கடவுச் சீட்டில் பதிவு செய்வார்கள்.

கடவுச் சீட்டில், விசா பதிவு செய்த நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் நாம் வெளிநாடு சென்றுவிடவேண்டும்.

விசா தயாரானவுடன் வேலை வாய்ப்பு நிறுவனம் நம்மை தொடர்பு கொண்டு வெளிநாடு செல்ல நம்மை அழைப்பார்கள்.

பிறகு விமான பயணச் சீட்டையும், புறப்படும் தேதியையும் உறுதி செய்வார்கள்.

அந்த நாளையும் நமக்குத் தெரியப்படுத்தி, முதல் நாளே சென்னை வந்து கடவுச்சீட்டையும். விமானப் பயணச் சீட்டையும் நம்மிடம் கொடுப்பார்கள்.

(9) எந்த விமான நிலயைத்தில் இறங்கவேண்டும்? யார் அழைத்துச் செல்வது: 

மறக்காமல் தங்களுடைய பணிக்கான தொகையையும் பெற்றுக் கொண்டுதான் மேற்கண்டவை நமக்கு கிடைக்கும்.

இங்கு முக்கியமாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அது வேலை வாய்ப்பு நிறுவனம் வாங்கும் தொகை (SERVICE CHARGE) பற்றியது. 

ஒருசில நிறுவனங்களை விட, மற்ற நிறுவனங்கள் வாங்கும் தொகை மிக அதிகம்.

இந்த விசயத்தில் அரசு தலையிட்டு, நிறுவனங்கள் வாங்கும் தொகையை முறைப்படுத்த வேண்டும்.

இதில் அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வாங்கும் தொகையைப் பின்பற்றலாம்.

விமான நிலையத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் வெளிநாடு செல்லும் நாளும் வந்து விட்டது. பன்னாட்டு விமான நிலையத்திற்கு, விமான பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும், விமான புறப்பாடு நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாக (REPORTING TIME) சென்று தகவல் கொடுக்க வேண்டும்.

அப்போது தான் நீங்கள் பயணம் செல்வது உறுதி செய்யப்படும்.

(10) இமிக்ரேஷன் பகுதியில் உங்கள் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் கொடுத்தவுடன், உங்களின் கடவுச்சீட்டு சரி பார்க்கப்பட்டு (IMMIGRATION CLEARANCE), உங்களுக்கு BOARDING PASS தருவார்கள்.

அத்துடன் இமிக்ரேசன் விண்ணப்பம் கொடுத்து பூர்த்தி செய்யவேண்டும் என்பார்கள்.

உங்களால் விண்ணப்பத்தை நிரப்ப முடியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கொடுத்து நிரப்ப வேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை விமான ஊர்திக்குள் உள்ளே செல்லும்போது விமான ஊழியர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

விமான இருக்கையில் அமர்ந்தவுடன் பாதுகாப்பு பட்டையை அணிந்து கொள்ளவேண்டும்.

விமானத்தில் உங்களுக்குத் தேவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை வாங்கிச் சாப்பிடலாம்.

இப்போது நாம் எந்த இடத்தில் பறந்து கொண்டு உள்ளோம் என்ற விவரம் நம் முன் உள்ள திரையில் காணலாம்.

நாம் சேருமிடம் வந்துவிட்டோ ம்.

விமானத்தில் இருந்து இறங்கியவுடன், வரிசையாக நின்று, இமிக்ரேசன் முடித்து, நமது கடவுச் சீட்டில் அந்நாட்டில் வந்து சேர்ந்ததற்கான முத்திரை குத்தப்பட்டு நம்மிடம் தருவார்கள்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டீர்கள்.

உங்களுக்காக நீங்கள் பணி செய்யப்போகும் நிறுவனம் அனுப்பிய பிரதிநிதி கையில் நிறுவனப் பெயர் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் காத்திருப்பார்.

(11) அந்த  நிறுவனத்தின் பிரதிநிதி வரவில்லை! என்றால்? 

இங்கு ஒருமுறை எனக்கு நேர்ந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வளைகுடா நாடுகளில் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை விடுமுறை நாட்கள்.

நான் சவூதி அரேபியா சென்று இறங்கியது வெள்ளிக்கிழமை மாலை 7 மணி. அன்று விடுமுறை என்பதால் என்னை அழைத்துச் செல்லும் நபர் விமான நிலையத்திற்கு வரவில்லை.

தொலைபேசியில் தொடர்பு கொண்டால் பதில் இல்லை. என்ன செய்வது?

விமான நிலையத்தின் வெளியே சுற்றும் முற்றும் பார்த்தேன். மொழி வேறு தெரியாது.

அப்போது நான்கு தமிழ் அன்பர்கள் வாடகை வண்டியை அணுகி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று என் நிலையை விளக்கினேன்.

அன்பர் ஒருவர், 'அதற்கென்ன இன்று இரவு எங்கள் அறையில் தங்கி விட்டு, காலையில் நீங்கள் செல்லும் இடத்திற்கு வண்டி பிடித்து அனுப்புகிறோம்' - என்றார்.

அப்போது தான் எனக்கு தெம்பு வந்தது.

இரவு சாப்பாடு கொடுத்து, காலை வாடகை வண்டி பிடித்து, நான் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பினார்கள்.

(12) நண்பர்களுக்கு என் நன்றி!

இதைப் போல் உங்களுக்கு ஒரு நிலைமை என்றால், மேற்கண்டபடி நீங்களும் சமாளிக்க வேண்டியது தான்!

நீங்கள் பணியில் சேர்ந்தவுடன், அங்கும் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு உங்களை அனுப்புவார்கள். அந்த மருத்துவச் சான்றிதழ், நிறுவன கடிதம், கடவுச் சீட்டு இவற்றை இணைத்து 'WORK PERMIT' - பெற அனுப்புவார்கள்.

'WORK PERMIT' - கிடைத்தவுடன் அதில் எத்தனை வருடத்திற்கு அனுமதி உள்ளதோ அதுவரை அந்நாட்டில் பணிபுரியலாம்.

நிறுவனம், தேவைப்பட்டால் மறுபடியும் 'work permit'- ஐ புதுப்பித்துக் கொள்ளும்.

நீங்கள் எங்கு வெளியே சென்றாலும், கண்டிப்பாக உங்கள் வசம் 'WORK PERMIT' வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொன்று, மீண்டும் ஒரு பணி ஒப்பந்தம் கொடுத்து கையொப்பம் இடச் செய்வார்கள்.

ஏற்கனவே, நீங்கள் நேர்முகத் தேர்வு முடிந்தவுடன் பேசிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அடங்களி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருப்பீர்கள்.

அதனுடைய நகலை மறக்காமல் கைவசம் வைத்திருந்து, பணியில் சேர்ந்தவுடன் கொடுக்கும் ஒப்பந்த பத்திரத்துடன் சோதித்து பார்த்து ஏதாவது வேறுபாடு உள்ளதா என பார்க்க வேண்டும்.


(13)  பேசிய சம்பளத்திற்கு குறைவாக இரண்டாவது ஒப்பந்தத்தில் இருந்தால்?

ஒப்பந்தம் சரி செய்தால் ஒழிய, நீங்கள் கையொப்பம் இடக்கூடாது.

இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

நீங்கள் பணியில் சேர்ந்தவுடன் உங்கள் பெயர், அப்பா பெயர், இந்திய விலாசம், தற்போதைய நிறுவனத்தின் விலாசம், வேலையின் பெயர், கடவுச் சீட்டு எண், கடவுச் சீட்டின் நகல் ஆகியவற்றை மெயில் மூலமாகவோ அல்லது தொலை நகல் மூலமோ இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்திய தூதரகத்தின் விலாசத்தை இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்களைப் பற்றிய குறிப்புகளை தூதரகத்தில் பதிவு செய்து கொள்வார்கள். நீங்கள் பணிபுரியும் நாட்டில் எந்த பிரச்சினை என்றாலும் இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

உங்கள் கடவுச் சீட்டை புதுப்பிக்க மற்றும் விசா பற்றிய சந்தேகங்களும் நிவரத்தி செய்வார்கள். உங்களுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தூதரகங்கள் மூலம் முகாம் நடத்துவார்கள்.
                                                                                                                              -இன்னும் இருக்கிறது-

நன்றி : திரு முத்துரத்தினம் அவர்களுக்கு

வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-2


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்? பகுதி 2
*************************************************************************************************

(4)  இதனால் என்னென்ன கிடைக்கும்?

மேலும் தேர்வின்போது, நாம் ஒத்துக்கொண்ட மாதச் சம்பளம் மற்றும் வேறு சலுகைகளும் சரியாகக் கிடைக்கும்.



ஏனெனில், தேர்வு முடிந்தவுடன் இங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு கையொப்பம் இட்டு, அதன் பிரதி ஒன்றும் நமக்கு கிடைக்கும்.



ஆனால் சில வேலை வாய்ப்பு நிறுவனங்களில் இங்கு ஒரு ஒப்பந்தமும், வெளிநாடு சென்றபின் ஒரு ஒப்பந்தமும் கொடுத்து கையொப்பம் இடும்படி வற்புறுத்தப்படுவார்கள்.



கடன் வாங்கியோ, காட்டை, வீட்டை விற்று வெளிநாடு செல்பவர்களுக்கு, வேறு வழியில்லாமல் வெளிநாட்டு நிறுவனம் வற்புறுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும்படி நேரிடுகிறது.



தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் மேற்கண்ட பிரச்சினை கிடையாது.



ஏதாவது பிரச்சினை என்றாலும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சரி செய்து விடலாம்.



வெளிநாடுகளில் படித்தவர்களுக்கு மட்டும் தான் பணிவாய்ப்பு என நினைக்கக்கூடாது.



அனைத்து வகை தொழிலாளிகளுக்கும் வேலை வாய்ப்பு உண்டு. குறிப்பாக உதவியாளர், மேசன், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன் என தொழிற் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் என்ஜீனியந, டாக்டர், பேராசிரியர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உண்டு.  குறைந்தது இரண்டு வருட பயிற்சி அவசியம்.




(5) வெளிநாட்டு நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?



நாம் ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் பயிற்சி நம்மிடம் உள்ளதா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.



அடுத்து விளம்பரம் கொடுத்த வேலை வாய்ப்பு நிறுவனம் நம்பத் தகுந்ததாக மற்றும் பதிவு எண் கொடுக்கப்பட்டுள்ளதா? என பார்க்கவேண்டும்.



இவை இரண்டும் திருப்தியாக இருந்தால், எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என கவனித்து, அந்த வெளிநாட்டு நிறுவனத்தைப் பற்றி அறிய, 'www.வெளிநாட்டு நிறுவனத்தின் பெயர்.com' - என்ற இணையதள முகவரியில் சென்றால், கம்பெனியின் அனைத்து விவரங்களும் நமக்குத் தெளிவாகிவிடும்.



மேலும், அந்நிறுவனத்தைப் பற்றி அறிய வேண்டுமானால், அந்த நாட்டில் உள்ள நமது வெளிநாட்டு தூதரகத்தை (INDIAN EMBASSY) தொடர்பு கொண்டு விசாரித்து தெரிந்து கொள்ளலாம் (E-MAIL).



மேற்கொண்ட அனைத்தும் நமக்கு திருப்தி அளித்தால் மட்டுமே நாம் அந்நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவேண்டும்.



இல்லையெனில் அடுத்த நல்ல நிறுவனத்திற்காக காத்திருக்கவேண்டும்.




(6) நேர்முகத் தேர்வின்போது கவனிக்க வேண்டியவை:



1) ஆள்பாதி. ஆடை பாதி என்பது போல் முதலில் நாம் மற்றவர் கவரும் வகையில் உடை அணியவேண்டும்.



2) இரண்டாவது நாம் எந்த பணிக்குத் தேர்வுக்கு செல்கிறோமோ அதில் முழு அளவு திறன் படைத்தவராக இருக்கவேண்டும்.



3) மூன்றாவது, நம் கையில் இருக்கும் பணிச் சான்றிதழில் என்னவெல்லாம் நமக்குத் தெரியும் என குறிப்பிட்டு உள்ளோமோ அதில் தெளிவாக இருக்கவேண்டும்.



குறிப்பாக எனக்கு இந்த எந்திரத்தில் இயக்குதலும் பேணுதலும் (OPERATION AND MAINTENANCE) முழுமையாகத் தெரியும்! என்று  குறிப்பிட்டிருந்தால், அந்த எந்திரத்தின் முழு செயல்பாடு நமக்கு அறிந்து கொள்ளுதல் வேண்டும்.



இதைவிட்டு நமக்கு இது தெரியும், அது தெரியும் என குறிப்பிட்டு, மேலோட்டமாக நுனிப்புல் மேய்த்திருந்தால் தேர்வின் முதல் சுற்றிலேயே நாம் தோல்வி அடைய நேரிடும்.



4) நான்காவது, நமக்கு சிறிதளவாவது  ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்காவது பதில் அளிக்கவேண்டும்.



சரி, நாம் தேர்வில் வெற்றி பெற்று விட்டோம். அடுத்தது என்ன?




(7) மருத்துவச் சான்றிதழ் பெறும் முறை:



தேர்வில் வெற்றி பெற்றவுடன், நமது கடவுச் சீட்டை வேலை வாய்ப்பு நிறுவனம் பெற்றுக் கொண்டு, நமக்கு மருத்துவச் சான்றிதழ் பெற அந்நிறுவனம் வழி செய்யும்.



அதாவது, நாம் எந்த நாட்டுக்குச் செல்லப் போகிறோமோ அந்நாட்டின் அனுமதி பெற்ற மருத்துவர்கள் இங்கு உள்ளார்கள். அவர்களிடம் சென்று, வேலை வாய்ப்பு நிறுவனம் கொடுத்த கடிதத்தை காண்பித்து, மருத்துவ பரிசோதனைக்கு தயாராகி விட வேண்டும். மருத்துவ சோதனைக்கு அந்த மருத்துவர்கள் குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்வார்கள் (சுமார் ரூ.1000).



எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை இவை அனைத்தும் முடிந்த பிறகு, கடைசியாக தலைமை மருத்துவர் நம் உடல் பகுதி முழுதும் ஏதாவது குறை உள்ளதா என பரிசோதித்து பார்ப்பார்.



பிறகு, மருத்துவ பரிசோதனைச் சான்றிதழில் (FIT) -தகுதி- என முத்திரை குத்தப்பட்டு, வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு மறுநாள் சென்றுவிடும்.



நிறுவனத்திலிருந்து உங்களுக்கு தபால் அல்லது தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துவிடும்.



இனி, நீங்கள் விமானத்தில் பயணம் செய்வது பற்றி கனவு காணலாம்.



அதற்கு முன் உங்கள் கடவுச் சீட்டில் 'விசா' என்ற 'பணி அனுமதி' (WORK PERMIT) எவ்வாறு பதிவாகிறது என பார்ப்போம்.


                                                                                                       -இன்னும் இருக்கிறது-
நன்றி : திரு முத்துரத்தினம் அவர்களுக்கு


வெளிநாட்டில் வேலை பார்க்க, பகுதி-1


வெளிநாட்டில் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************
நாம் தினமும் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒரு செய்தியை அடிக்கடி காணலாம்.

"வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி"



"மலேசியாவில் தொழிலாளர்கள் தவிப்பு"

"சவூதி அரேபியாவில் பல மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தமிழர்கள் அவதி"

இதுபோன்ற  செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஏமாந்தவர்கள் உள்ளவரை, ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.

ஏமாறாமல் இருக்க  என்ன வழி?

இதற்கு விடை காண என்னால் முயன்றவரை, என் அனுபவத்தில் இருந்து சில வழிகளை சொல்லி உள்ளேன்.
அதுமட்டுமல்லாமல் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு எடுப்பது முதல் நமது பணி ஒப்பந்தம் முடிந்து இந்தியா வருவதுவரை என்ன செய்ய வேண்டும் என இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கும், ஏற்கனவே வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும் சில வழிமுறைகளும் கூறி உள்ளேன்.
சுமார் பன்னிரண்டு வருடங்களாக, ஐந்து முறை தேர்வில் வெற்றி பெற்று, சவூதி அரேபியாவில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரும் நான், எவ்வாறு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று, முறையாக மற்றவர்களிடம் ஏமாறாமல் பொருள் ஈட்டுவது பற்றி இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் காணலாம்.

(1) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறும் வழி:

முன்பு எல்லாம் கடவுச்சீட்டு பெற சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சென்று பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.
தற்போது மாவட்டந்தோறும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெற தனியாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கடவுச்சீட்டு அலுவலகம் சென்று பதிவு செய்தால், ஒன்று அல்லது இரண்டு மாதத்தில். காவல் துறை விசாரிப்புக்குப் பிறகு, கடவுச்சீட்டு நம் வீடு தேடி வந்துவிடும்.

அலுவலகம் செல்லும் போது நாம் மறக்காமல் எடுத்துச் செல்லவேண்டியவை;

1) ரூ.1,000-க்கான காசோலை
2) குடும்ப அடையாள அட்டை
3) பத்து பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
4) கல்விச் சான்றிதழ்

நாம் பதிவு செய்த பிறகு, நமக்கு ஒரு அடையாள எண் தருவார்கள்.
அந்த அடையாள எண் மூலம் இணையத்தின் மூலம் நம் கடவுச்சீட்டின் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது, மற்றும் நமக்கு கடவுச்சீட்டு எப்போது கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
தற்சமயம் கோவையிலும் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(2) இணையதளத்தில் செல்லும் வழிமுறை:
முதலில் www.tn.nic.in என்ற இணைய தளத்தில் நுழைந்து, ரீஜினல் பாஸ்போர்ட் ஆபீஸ் என்ற வலையின் மூலம், 'know your passport status' - மூலம் நமது அடையாள எண், பதிவு செய்த மாதம் வருடத்தை பதிவு செய்தால், நம் கடவுச் சீட்டின் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது என அறியலாம்.
கடவுச் சீட்டு நம் கைக்கு கிடைத்தவுடன் நாம் வெளிநாடு செல்ல தயாராகி விட்டோ ம்.
அடுத்த நாம் தெரிய வேண்டியது, எந்த வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்லலாம் என்பது.
தினசரிகளில் "வெளிநாடு பணிகளுக்கு ஆட்கள் தேவை" - என்ற விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி காணலாம்.
முக்கியமாக நாம் அந்த விளம்பரத்தில் கவனிக்க வேண்டியது, அந்த அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அரசாங்கத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டதா, பதிவு எண் உள்ளதா என அறிய வேண்டும்.
முறையாக பதிவு செய்யாத நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டால், நாம் உழைத்து சேர்த்த பணம் அவ்வளவுதான்.
இதற்கும் நமது அரசாங்கம் வழி செய்துள்ளது.
சென்னையில் 'அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நமது தமிழக அரசின் கீழ் இயங்கி வருகிறது.

(3) அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்.

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் 
எண்: 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை,
வீட்டுவசதி வாரிய வளாகம் முதல்தளம்
 எல் பி ரோடு, அடையாறு, 
சென்னை - 600 020.

தொலைபேசி எண்கள்
044- 244 64268  & 044- 24464269

இணைய தள முகவரி
www.tn.gov.in     
    www.southindia.com
மேற்கண்ட இணைய தள முகவரியிலும் தற்போதைய நேர்முகத் தேர்வு பற்றிய தகவல்களைப் பெறலாம்.

அரசு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய கடவுச்சீட்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஐந்து மற்றும் கல்வித் சான்றிதழ், பணிச் சான்றிதழ் வேண்டும்.

நமது தொழிற்சார்ந்த வேலைகளுக்குத் தகுந்தவாறு பதிவுக் கட்டணம் வசூல் செய்வார்கள்.

இந்நிறுவனம் மூலம் மூன்று முறை நமக்கு நேர்முகத் தேர்வுக்கு உதவி செய்வார்கள்.

நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று தகுதி பெற்றுவிட்டால், மருத்துவ சோதனை முடித்து வெளிநாடு செல்ல தயாராகி விடலாம்.

இதற்கு முறையான, சரியான கட்டணம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். கட்டணத்திற்கான ரசீதும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு சமயம் நம்மால் குறிப்பிட்ட நேரத்தில் வெளிநாடு செல்ல முடியாமல் நேரிட்டாலோ அல்லது நம்மை தேர்வு செய்த வெளிநாட்டு நிறுவனம்  யாதொரு காரணத்தாலோ நம்மை அழைக்க முடியாமல் போனாலோ நாம் கட்டிய கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

                                                                                                                                    - இன்னும் இருக்கிறது-

நன்றி :திரு முத்துரத்தினம் அவர்களுக்கு