disalbe Right click

Thursday, February 4, 2016

பட்டாடைகளை பாதுகாக்க


பட்டாடைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?


ஒரிஜினல் பட்டு - எப்படிக் கண்டுபிடிப்பது?

தீபாவளிக்குப் பட்டுப் புடவை வேண்டும் என்பது, பெண்கள் பலரின் விருப்பம். இப்படி ஆண்டுக்கு ஒரு பட்டாக எடுத்து பீரோவில் அடுக்கினால் மட்டும் போதாது... பல ஆயிரங்கள் செலவழித்து வாங்கும் அதை முறையாகப் பராமரிப்பதும் அவசியம். பட்டு தொடர்பான நம் சந்தேகங்களுக்குப் பதில் தருகிறார், ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவக்குமார்...

``அப்படி என்னதான் ஸ்பெஷல் பட்டில்?’’

``ஒரிஜினல் நூல், பட்டுப்பூச்சியின் கூட்டில் இருந்து எடுக்கப்படுவது. இதில், அழகூட்டுவதற்காக, தங்கம் மற்றும் வெள்ளி இழைகளை (ஜரி) இழைத்துக் கைத்தறியில் நெய்வார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் அழகு குறையாமல் பளபளப்பாக இருக்கும். பட்டுக்குத் தீட்டில்லை, எல்லா சமயங்களிலும் கட்டலாம் என்பது நம்பிக்கை.’’

``ஒரிஜினல் பட்டை எப்படிக் கண்டுபிடிப்பது?’’

``ஆர்ட் சில்க், டெஸ்டட் சில்க் (Tested silk), பிளண்டட் சில்க் என பட்டில் ஏகப்பட்ட கலப்பட வகைகள் பெருகியுள்ள இந்தச் சூழலில், தூய்மையான பட்டைக் கண்டறிவது சிரமம்தான். பட்டில் அனுபவம் உள்ள பயனாளர்களுக்கும், பட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்குமே அது கை வரும். மற்றவர்கள் எப்படித்தான் கண்டறிவது என்றால், ஒரு வழி இருக்கிறது.

ஒரு நூலை மட்டும் தனியாக எடுத்து நெருப்பில் காட்டும்போது, தலை
முடியை நெருப்பில் காட்டினால் வருவதுபோன்ற ஒரு வாசனை வந்தால் அது ஒரிஜினல். மேலும் அந்த நூல் மிச்சமில்லாமல் எரிந்துபோகும். அதுவே அந்த நூல் எரியும்போது பிளாஸ்டிக் வாசனை வந்து நெகிழும் தன்மையுடன் இருந்தால் அது கலப்படம். அதிக விலையில் அல்லது அதிக எண்ணிக்கையில் பட்டுப்புடவை வாங்கும்போது, தேவைப்பட்டால் ‘லேப்’புக்கு அனுப்பியும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.’’

``ஒரிஜினல் பட்டு எந்த விலையில் இருந்து கிடைக்கும்?’’

``3,000 ரூபாயில் இருந்து 2,00,000 ரூபாய் வரை இருக்கிறது. சிறிது அல்லது பாதி மட்டும் ஒரிஜினல் பட்டு நூல் சேர்ப்பது போன்ற பட்டுகளும் மார்க்கெட்டில் உள்ளன. அதற்கு ஏற்ப விலை மாறுபடும்.’’

``பட்டுப்புடவை பாதுகாப்பு எப்படி?’’

``அணிந்த பின், அப்படியே மடித்து வைக்கக் கூடாது. அதில் படிந்திருக்கும் வியர்வை பட்டைப் பாழாக்கும். பிளவுஸ், புடவை இரண்டையும் நிழலில் நன்கு விரித்து உலரவிட வேண்டும். 

உலர்ந்த பின்னும் மடித்தோ, அயர்ன் செய்தோ வைக்கக் கூடாது. அடுத்த பயன்பாடு வரை அதிக நாட்கள் புடவை மடிப்பிலேயே இருப்பதால், அந்த மடிப்புகளில் எல்லாம் பட்டு நூல் சேதமடைந்துவிடும்.

புடவையின் அகலத்துக்கும் சற்று அதிக நீளமான `வுடன் ஸ்டிக்’கில் (திரைச்சீலைகளுக்குப் பயன்படுத்துவது போன்றது) முதலில் வெள்ளை காட்டன் துணியை ரோல் செய்து கொள்ளவும். பிறகு, பட்டுப்புடவையை அதில் ரோல் செய்யவும். முடித்த பின், மீண்டும் இரண்டு சுற்றுக்கு வெள்ளை காட்டன் துணியினை ரோல் செய்து முடிக்கவும். இந்த ரோலை அப்படியே அலமாரியில் வைத்துக்கொள்ளவும்.

இதனால் மடிப்புப் பிரச்னை தவிர்க்கப்பட்டு, புடவை பாதுகாக்கப்படும்.

பட்டுப்புடவைகளை எக்காரணம் கொண்டும் தண்ணீரில் அலசக்கூடாது.

தரமான டிரைவாஷ் கடைகளில் கொடுத்தே வாங்க வேண்டும்.

டிரைவாஷ் எனும்போது, சிலர் பள்ளு, பார்டர், உடல் பகுதிகளைத் தனித்தனியாக வாஷ் செய்யாமல் ஒன்றாக வாஷ் செய்யும்போது, உடல் பகுதியிலுள்ள நிறம் பார்டரிலோ, பார்டரின் நிறம் உடலிலோ கலந்துவிடலாம்.

சிலர் டிரைவாஷ் செய்யாமல் நன்றாக அயர்ன் மட்டும் செய்துவிட்டு டிரைவாஷ் செய்துவிட்டதாகச் சொல்லிவிடுவார்கள்... எச்சரிக்கை!

பட்டுப்புடவையில் கறை படிந்துவிட்டால்,

சோப்பு, ஷாம்பு, ஸ்டெயின் ரிமூவர் போன்ற கெமிக்கல்கள் பயன்படுத்தக் கூடாது. பூந்திக்கொட்டை பயன்படுத்தலாம். புடவையின் நூலுக்கோ நிறத்துக்கோ எந்தத் தீங்கும் நேராது.''

``பட்டுப்புடவைகளில் சாயம் போகுமா?’’

``நிச்சயமாக! துவைப்பது, அலசுவது போன்றவற்றால் நாளாக ஆக தானாக நிறம் மங்கும். பொதுவாக பட்டில் மிகவும் அடர்த்தியான சிவப்பு, பச்சை போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கலாம். லைட் பிங்க், லைட் கிரீன் போன்ற மெல்லிய நிறங்கள் ஓ.கே!’’

``பட்டு வேஷ்டிகளைப் பற்றி?’’

``பட்டு வேஷ்டிகளை துவைக்கும்போது முறுக்கிப் பிழியக்கூடாது. சோப்புத் தூளில் ஊறவைத்து பின்பு, கைகளால் அழுக்குப் பகுதிகளில் சுத்தம் செய்தபிறகு, அலசலாம். பட்டுப்புடவைகளைப் போன்றே பட்டு வேஷ்டிகளையும் ரோல் ஸ்டிக்கில் சுற்றி வைக்கலாம். உங்கள் திருமணத்துக்குக் கட்டிய பின், உங்கள் பையன் திருமணத்தின் போதும் எடுத்துக்கட்டினால் அதே மெருகுடன் இருக்கும்!’’

நன்றி : அவள் விகடன் - 17.11. 2015

JEE தேர்வில் வெற்றி பெற


JEE தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

1. JEE நுழைவுத் தேர்வு:
இது மெயின் பேப்பர்-I, மெயின் பேப்பர்-II என இரு பிரிவுகளாக நடத்தப்படும். பேப்பர்-I தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் 60%க்கும், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் 40%க்கும் வெயிட்டேஜ் பார்க்கப்பட்டு, தரவரிசையின் அடிப்படையில் நாட்டில் உள்ள 30 NIT கல்லூரிகள், 18 IIT கல்லூரிகள், 18 GFTI கல்லூரிகளிலும் இடம் கிடைக்கப்பெறுவார்கள். தவிர, மத்திய அரசின் கீழ் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் B.E., B.Tech பிரிவுகளில் சேரும் வாய்ப்பும் கிட்டும்.
2. JEE அட்வான்ஸ்:

டாப் ரேங்க் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், அட்வான்ஸ் எனப்படும் இரண்டாம் கட்டத் தேர்வு எழுதலாம். மெயின் பேப்பர்-I எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் மத்திய அரசால் வகுக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தர வரிசையில் முதல் ஒன்றரை லட்சம் இடங்களுக்குள் வரும் மாணவர்கள் மட்டுமே அட்வான்ஸ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வு முடிவின் தரவரிசைப் பட்டியலில் வரும் பதினெட்டாயிரம் மாணவர்களில், முதல் பத்தாயிரம் பேர் IIT, ISM Dhanbad கல்வி நிறுவனங்களிலும், அடுத்து வரும் எட்டாயிரம் மாணவர்கள் IIST, RGIPT, IISTC, ஆறு IISER கல்வி நிறுவனங்களிலும், சேர்க்கை பெற முடியும்.
3. JEE மெயின் பேப்பர்-II: 

இதில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர், NIT-ல் உள்ள ஆர்க்கிடெக்சர் பிரிவு மற்றும் எல்லா மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் B.Arch, B.Planning பிரிவுகளில் சேர்க்கை பெற முடியும்.
4. கொஸ்டின் பேப்பர்:

மெயின் பேப்பர் I, அட்வான்ஸ் பேப்பர்-I, அட்வான்ஸ் பேப்பர்-II இந்தத்தேர்வுகளுக்கெல்லாம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களே சிலபஸ். மெயின் பேப்பர்-II எழுதுபவர்களுக்கு கணிதம், ஆர்க்கிடெக்சர், ஆப்டிட்யூட், படம் வரைதல் தொடர்பான மூன்று மணி நேரத் தேர்வு நடைபெறும்.
எல்லாப் பிரிவு தேர்வுகளுக்கும் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
5. விண்ணப்பம்: 

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே, அந்தக் கல்வியாண்டின் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதத்துக்குள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
6. இணைக்க வேண்டியவை: 
விண்ணப்பத்துடன் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து இணைக்க வேண்டியவை...
* மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட சாதிச்சான்று
* 10-ம் வகுப்புத் தேர்ச்சி மதிப்பெண் பட்டியல்
* வெள்ளை நிறப் பின்னணி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
* கறுப்பு நிற மையில் மாணவரின் கையொப்பம்
* மாணவரின் கைரேகை
* மாற்றுத்திறனாளிகள், சிறப்புப் பிரிவினருக்குரிய சான்று.
7. தேர்வு முறை: 

மெயின் பேப்பர்-I தேர்வு, ஆன்லைனிலேயே எழுதலாம். ஏப்ரல்/மே மாதங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் ஏதேனும் மூன்று தேதிகளில் தேர்வு நடைபெறும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மெயின்-II மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள், தேர்வு மையத்தில்தான் எழுத வேண்டும்.
8. போனஸ் வாய்ப்புகள்: 

JEE தேர்வு எழுத, மாணவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு முடித்தவுடன் ஒரு வாய்ப்பும், 12-ம் வகுப்பு முடித்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், அட்வான்ஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு 12-ம் வகுப்பு முடித்த வருடம், அதற்கு அடுத்த வருடம் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.
9. தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் கவனத்துக்கு: 

வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு மெயின் பேப்பர் I-ஐ விட, பேப்பர்-II எளிமையாக இருக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதை மனதில் வைக்கவும்.
10. எப்போதில் இருந்து படிக்க வேண்டும்: 

சிலர் 6-ம் வகுப்பில் இருந்தே தயாராக வேண்டும் என்பார்கள். உண்மையில் தேர்வு முறை மற்றும் மதிப்பெண் வழங்கும் முறையானது ஒவ்வோர் ஆண்டும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், அது பயனற்றது. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களைப் புரிந்து படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம்.
11. கவனிக்க:
மாணவர்கள் எந்த மாநிலத்தில் மேல்நிலைக் கல்வி கற்கிறார்களோ, அந்த மாநிலத்தில் மட்டுமே JEE தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
12. மேலும் விவரங்களுக்கு... 

www.jeemain.nic.in
,
www.indiacollegefinder.org
,
www.jeeadv.iitk.ac.in
என்ற இணையதள முகவரிகளைப் பார்வையிடலாம்.
சு.சூர்யா கோமதி
நன்றி அவள்விகடன் - 17.11.2015

Saturday, January 30, 2016

கிரடிட் கார்டு வாங்கும்முன் கவனிக்க வேண்டியவை


கிரடிட் கார்டு வாங்கும்முன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் என்ன?

கிரெடிட் கார்டு என்பது நம் உடனடி பணத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள உதவும். ஆனால், அதில் கடன் வாங்கி அதைச் சரியாகத் திரும்பச் செலுத்த முடியாமல் போனால், அந்தக் கடன் தலைவலியாக மாறிவிடும். எனவே, கிரெடிட் கார்டு வாங்குவதற்குமுன் சில விஷயங்களைக் கவனித்தாலே இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
1.ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு!
புதிதாக ஒரு கிரெடிட் கார்டு கிடைக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வதற்கு பலருக்கும் மனம் வருவதே இல்லை. அதிலும் அந்த கிரெடிட் கார்டு இலவசமாக, அதாவது சேர்ப்புக் கட்டணமோ அல்லது ஆண்டு பராமரிப்புக் கட்டணமோ இல்லாமல் கிடைக்கும்போது பலரும் வேண்டாம் என்று சொல்வதே இல்லை. இப்படி சேரும் பல கிரெடிட் கார்டுகளினால் நமக்கு பிரச்னைகளே உருவாகும்.
உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருக்கும்போது நீங்கள் வைத்திருக்கும் சில கார்டுகளுக்கான மாதாந்திர கட்டணத்தைக் கட்டாமலே போவதற்கு வாய்ப்புண்டு. இப்படிக் கட்டாமல் விடப்படும் கடன் தொகைக்கு நீங்கள் மிக அதிகமான வட்டியைச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் உங்கள் கடனை திரும்பச் செலுத்தும் மதிப்பெண் குறையும். எனவே, கார்டு வாங்குவதற்குமுன் புது கிரெடிட் கார்டு தேவையா என்பதை யோசித்து முடிவெடுப்பது நல்லது.

2. புதிய கார்டில் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்!
புதிதாக கிரெடிட் கார்டு வாங்க நீங்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், பழைய கார்டில் உள்ள நிலுவைத் தொகையை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா என்பதைப் பாருங்கள். இப்படி டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ளும் வசதிக்கு கூடுதலாகக் கட்டணம் உள்ளதா என்பதைக் கவனிப்பது முக்கியம். சில வங்கிகள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்வதற்கு 30-90 நாட்களுக்கு வட்டி வசூலிப்பதில்லை.
ஆனால் சில வங்கிகள் 1.5% - 2.5% வரை வட்டி வசூலிக்கின்றன. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். எனவே, புதிதாக கிரெடிட் கார்டு வாங்கும்முன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு வட்டி கிடையாதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

3. ஆண்டுக் கட்டணம் இல்லை என்னும் உத்தரவாதம்!
புதிதாக கிரெடிட் கார்டு வாங்கும்போது ஆண்டுக் கட்டணம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் அதற்குரிய ஆண்டுக் கட்டணத்தை சில வங்கிகள் வசூலித்துவிடும். சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஆண்டுக் கட்டணம் இல்லை என்று கூறும். ஆனால், அந்த வசதி குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும்தான் பொருந்தும். ஆயுள் முழுக்க எந்த கட்டணமும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் தவறுதான்.
எனவே, கட்டணம் தொடர்பான நிபந்தனைகளை உன்னிப்பாகப் படியுங்கள். பொதுவாக, குறிப்பிட்ட காலம் வரையில்தான் அல்லது குறிப்பிட்ட தொகை அளவுக்கு கார்டினை உபயோகப்படுத்து பவர்களுக்கு மட்டுமே இந்தக் கட்டணங்கள் இல்லாமல் இருக்கும். புதிய கார்டு ஒன்றை வாங்குவதற்குமுன் இந்த ஆண்டு கட்டண விவகாரத்தை முழுமையாக அறிந்துகொள்வது நல்லது.

4. நிதி சார்ந்த கட்டணங்கள்!
கடன் தொகை முழுவதையும் செலுத்த முடியாத நேரங்களில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது வழக்கம். மீதமுள்ள தொகைக்கு கிரெடிட் கார்டு நிறுவனம் வட்டி போட்டு வசூலிக்கும். இந்த வட்டி விகிதமானது மாதத்துக்கு 2-3 சதவிகிதமும், அதுவே வருடத்துக்கு 24-36 சதவிகிதமாகவும் இருக்கும்.
சில வங்கிகள் பில் செய்யப்பட்ட மொத்த தொகைக்கும் கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, புதிய கார்டு வாங்கும்போது கடனுக்கான வட்டி எந்த நிறுவனத்தில் குறைவாக இருக்கிறது என்பதைப் பார்ப்பது மிகமிக அவசியமாகும்.

5. வட்டி இல்லாத காலகட்டம்!
பெரும்பாலான கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வட்டி இல்லாத காலத்தை 45-55 நாட்களாக வைத்திருக்கும். இந்தக் காலத்தில் செலுத்தப்படாத தொகைக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது. கிரேஸ் பிரீயட் என்பது பொதுவாக பில்லிங் தேதியிலிருந்து ஆரம்பித்து, பில்லிங் தேதி முடிவடைந்தபிறகும் 15-25 நாட்களுக்கு இருக்கும். பில்லிங் காலகட்டம் ஆரம்பிக்கும் தேதிக்கு அருகாமையில் செய்யப்படும் செலவுகளுக்கு அதிக நாட்கள் கிரெடிட் இருக்கும்.
அதுவே பில்லிங் முடியும் தருவாய்க்கான தேதிக்கு அருகில் இருக்கும்போது கிரெடிட் காலம் குறைவாக இருக்கும். எனவே, புதிய கிரெடிட் கார்டை தேர்வு செய்யும்போது வட்டி இல்லாத காலகட்டம் அதிகமாக உள்ள கார்டை தேர்வு செய்வது நல்லது.

6. கோ பிராண்டட் கார்டு!
ஒரே பிராண்டட் கார்டினை வாங்குவதைவிட, நீங்கள் வாங்கும் புதிய கார்டு இன்னொரு பிராண்டினாலும் (Co-branded) அங்கீகரிக்கப் பட்டதாக இருப்பது நல்லது. இதன் மூலம் அதிகம் சுற்றுலா செல்பவர்கள், ஷாப்பிங் செய்கிறவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வட்டி இல்லாத காலத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தவிர, ரிவார்ட் பாயின்ட் மற்றும் கேஷ் பேக் ஆஃபர் போன்றவற்றைக் கொண்டு இனிமேல் செய்யவிருக்கும் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப உங்கள் கிரெடிட் கார்டு கோ பிராண்டட் கார்டாக இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.
7. கான்டக்ட்லெஸ் கார்டு!
வழக்கமாக ஸ்வைப் செய்யும் கார்டுகளைவிட கான்டக்ட்லெஸ் கார்டுகளை (Contactless) தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த கார்டினை பயன்படுத்த ஸ்வைப் மெஷினில் தேய்க்க தேவையில்லை. இந்த கார்டினை டர்மினலுக்கு அருகே கொண்டு வந்தாலே போதும், கார்டில் உள்ள சிப் மற்றும் ஆர்எஃப் ஆன்டனா மூலம் கார்டின் தகவல்கள் பெறப்பட்டு பணம் எடுக்கப்படும். இந்த கார்டினை பயன்படுத்தும் போது அதிக பாதுகாப்பு கிடைக்கும். அதாவது, உங்களின் கார்டை மூன்றாவது நபரிடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. ஷாப்பிங் செய்யும்போது கார்டு உங்களின் கையிலேயே இருக்கும்.
8. டெபிட் கார்டுடன் சேர்ந்த கிரெடிட் கார்டு!
இதுவும் ஒருவகையான கிரெடிட் கார்டுதான். அதாவது, உங்களின் டெபிட் கார்டில் ஓவர்டிராஃப்ட் எடுத்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய கார்டு ஆகும். இந்த கார்டு உங்களின் சேமிப்பு கணக்குடன் சேர்க்கப்பட்டிருக்கும்.
உங்களுடைய கிரெடிட் லிமிட் எவ்வளவு என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்டிருக்கும். இதனால் தேவை இல்லாமல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைத் தனித்தனியாக வாங்க வேண்டிய தேவை இருக்காது.

9. ஆட் ஆன் கார்டு!
கிரெடிட் கார்டு வாங்கும்போது சில நிறுவனங்கள் ஆட் ஆன் கார்டை (Add-on Card) கணவன்/மனைவிக்கு இலவசமாக வழங்கும்.
சில நேரங்களில் ஆட் ஆன் கார்டு கேட்காமலேயே அனுப்பப்பட்டு விடும். ஆட் ஆன் கார்டில் வாங்கப்படும் கடன், முதல் கார்டு வாங்குபவரின் பெயரில் பதிவாகும். இதில் உள்ள ஒரே கூடுதல் வசதி அதிக கிரெடிட் லிமிட். எனவே, கிரெடிட் கார்டு வாங்கும்போதே ஆட் ஆன் கார்டு வேண்டுமா என்பதை முடிவு செய்வது நல்லது.

10. சிறப்பாகச் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம்!
அனைத்து கிரெடிட் கார்டு நிறுவனங்களும் வாடிக்கையா ளர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக சேவை மையம் வைத்துள்ளது. ஆனால், எல்லா வாடிக்கையாளர் மையமும் அவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதில்லை.
எனவே, கார்டு வாங்குவதற்கு முன் வாடிக்கையாளர் சேவை மையம் குறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
வாடிக்கையாளர் சேவை மையம் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களின் கார்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான நேரத்தில் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு சொல்லும் நிறுவனத்தில் கார்டை வாங்கினாலே பாதிப் பிரச்னை தீரும்.
தொகுப்பு: இரா.ரூபாவதி.  அதில் ஷெட்டி, சி.இ.ஓ, பேங்க் பஜார் டாட்காம்.
நன்றி : நாணயம் விகடன் - 31.05.2015

வங்கி நடைமுறைகள்


வங்கியில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றுகிறார்கள்?

முறைகேடான பணப் பரிமாற்றங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பணம் செலுத்துபவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாகப் பல வழிகாட்டு விதிமுறைகளை வங்கிகளுக்கு வகுத்துத் தந்துள்ளது.
அதன் மூலம் பின்பற்றப்படும் நடைமுறைகள் நிதி மோசடிகளைத் தடுக்கவும், முறைகேடான பணப் பரிமாற்றங்களைமற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறியவும், பெரும் தொகைகள் பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும் பயன்படும்.
நோ யுவர் கஸ்டமர் எனப்படும் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளும் நடைமுறை (கேஒய்சி) வங்கிகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிகள் கணக்கைத் துவங்கும் ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்தைப் பற்றியவிவரங்களைப் பெற முடியும். ஏன் இந்த நடைமுறை வங்கிகளில் பின்பற்றப் படுகிறது..?.
இந்த நடைமுறைகள் முக்கியமாகப் பின்வரும்காரணங்களுக்காக வங்கிகளால் பின்பற்றப்படுகிறது:
1. வாடிக்கையாளரைச் சரியான முறையில் அடையாளம் காணுதல்
2. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க.
3. வங்கிகள் தங்கள் புதிய வாடிக்கையாளரின் அடையாளங்களைச் சட்டப்படி உறுதிப்படுத்தத் தேவையான அனைத்துவிவரங்களையும் வாடிக்கையாளர்கள் அளிக்கும் விவரங்களின் அடிப்படையிலேயே பெற்றுக் கொள்ளும்.
4. வாடிக்கையாளர்களின் விவரங்கள், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்படும்.
5. எனினும் அவ்வாறான ஆவணங்கள் இல்லாத நிலையில், மற்ற வாடிக்கையாளர்கள் அல்லது வங்கிக்கு அறிமுகம் உள்ளஒரு நபர் கொடுக்கும் விவரங்களின் அடிப்படையில் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
பணப் பரிமாற்றங்களுக்கான வரம்பு மற்றும் கண்காணிப்பு விவரங்கள் பின்வருமாறு:
1. வங்கிகள் ஒரு வாடிக்கையாளர் கேட்கும் ரூபாய் ஐம்பதாயிரம் மற்றும் அதற்கும் அதிகமான தொகைக்கான பயணக்காசோலை (ட்ராவலர்ஸ் செக்),  
வரவோலை (டிமான்ட் டராஃப்ட்), அஞ்சல் பணப் பரிமாற்றம் (மெயில் ட்ரான்ஸ்ஃபர்) மற்றும்
தொலைவு அஞ்சல் பரிமாற்றம் (டெலிகிராபிக் ட்ரான்ஸ்ஃபர்) ஆகிய விண்ணப்பங்களுக்கு 
அவருடைய வங்கிக் கணக்கில்நேரடியாகப் பற்று வைப்பதன் மூலமோ அல்லது 
காசோலைகள் மூலமோ மட்டுமே பணம் பெற இயலும். 
பணம் கட்டிமேற்சொன்ன வசதிகளைப் பெற இயலாது.
2. மேலும் மேற்கூறிய சேவைகளைப் பெற விரும்புவோர் அந்தத் தொகை ரூபாய் பத்தாயிரத்திற்கும் அதிகமாகஇருக்குமானால் தங்களுடைய நிரந்தரக் கணக்கு எண்ணைக் (பான் நம்பர்) குறிப்பிட வேண்டியது அவசியம்.
3. ரூபாய் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தொகையுள்ள பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர் விவரம் (கேஒய்சி)அனைத்து தகவல்களையும் தந்துவிடும் என்பதாலும் அது நேரடியாகக் கணக்கிலிருந்து பெறப்படும் என்பதாலும் இந்தப்பான் எண்ணை குறிப்பிடப் படவேண்டிய வரம்பு ஐம்பதாயிரம் ரூயாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
4. ஆர்பிஐ-யின் வழிமுறைகள்படி வங்கிகள் பத்து லட்சம் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ள வைப்பு, பணக்கடன்அல்லது இருப்பை மீறியக் கடன் (ஓவர் டிராஃப்ட்) பரிவர்த்தனைகளை வங்கிகள் கண்காணிக்க வேண்டும். இவற்றைப்பற்றிய விவரங்கள் ஒரு தனிப் பதிவேட்டில் குறிப்பிடப் படவேண்டும்.
5. வங்கிகளின் கிளைகள் பத்து லட்சம் அல்லது அதற்கும் அதிகம் மதிப்புள்ள பணம் செலுத்துகை மற்றும் பணமெடுப்புஉள்ளிட்ட பரிவர்த்தனைகளையும் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளையும் முழு விவரங்களுடன் தங்களுடையகட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
நீங்கள் கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத வேறொரு கிளையில் பெரிய தொகையை உங்கள் கணக்கில் செலுத்த வங்கிமற்றும் செலுத்தப்படும் தொகையைப் கட்டணம் வசூலிக்கப்படும். சில வங்கிகள் இவ்வாறு வேறு கிளைகளில் அதிகப்பணம் எடுப்பதற்கும் கூடக் கட்டணம் வசூலிக்கின்றன.
நன்றி : திரு ஸ்ரீனிவாசன்
குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் = 16.01.2016

Friday, January 29, 2016

கிரடிட் கார்டை ரத்து செய்யும் முன்


கிரடிட் கார்டை ரத்து செய்யும் முன் என்ன செய்ய வேண்டும்?


பெரும்பாலானோர் இன்னைக்கு ஒரு கிரெடிட் கார்டுக்கும் அதிகமாகத்தான் வச்சிருக்காங்க.
ஒன்னு யாராவது சேல்ஸ்மேன் ஆசைகாட்டி உங்கத் தலைல அதக்கட்டிட்டு போயிருபாரு.
இல்லன்னா அதுல கிடைக்கிற ரிவார்ட் பாயின்டுகளுக்கு நீங்க பலிகடா ஆகியிருப்பீங்க.
திடீர்னு ஒருத்தர் அவரிடம் 5 கார்டு இருக்கறத உணருகிறார். பிரச்சனை என்னன்னா, அதுல சிலத ஒப்படைக்க நினைக்குறாரு. இங்கதான் பிரச்சனையே ஆரம்பமாகுது.

சிபில் ரேட்டிங் குறையும்

உங்கக் கிரெடிட் கார்டை கேன்சல் பண்ணப் போறீங்களா..? அப்போ உங்க சிபில் ரேட்டிங் குறையலாம்..!

குத்துமதிப்பா நீங்க ஒரு 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கமுடியும்னு வச்சுகுங்க. இந்த கிரெடிட் கார்டுல சிலத ரத்து செஞ்சா உங்களுடைய கடன் வாங்கும் அளவு குறைஞ்சு போவதுடன் உங்களுடைய சிபில் எனப்படும் கடன்பெறும் திறன் மதிப்பீட்டுப் புள்ளிகளும் குறையும்.

உங்கக் கிரெடிட் கார்டை கேன்சல் பண்ணப் போறீங்களா..? அப்போ உங்க சிபில் ரேட்டிங் குறையலாம்..!
கிரெடிட் கார்டை ரத்து செய்தல் 

உங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்வதற்கு முன் ஓரிரு முறை யோசிப்பது நல்லது. ஒருவேளை நீங்க சிலத ரத்து செய்யனும்னு முடிவு செஞ்சுட்டா அதற்கென்று இருக்கிற சில வழிமுறைகளை அவசியம் பின்பற்றனும்.
முதலில் கார்டை கொடுத்த வங்கியிடம் தெரிவித்து அதில் தானியங்கி கட்டணம் செலுத்தும் (இசிஎஸ்) அறிவுறுத்தல்கள் செயல்பாட்டில் உள்ளனவா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.
ரத்து செய்ய விரும்புகிற கார்டின் பெயரில் எந்தவித நிலுவைத் தொகையும் இல்லாமல் அனைத்தையும் நீங்கள் செலுத்தி விட்டீர்களா என்பதையும் உறுதிசெய்யவேண்டும்.
ஒரு கிரெடிட் கார்டினை ரத்து செய்ய உகந்த வழி வங்கிக்கு நேரடியாகச் சென்று அதை செய்வதுதான்.
உதாரணமாக இந்தஸ் இந்த் வங்கியின் கார்டை நீங்கள் வைத்திருந்தால் அந்த வங்கியின் கிளைக்குச் சென்று அதனை எளிதில் செய்துவிட முடியும்.
வங்கியிடமிருந்து கார்டை ரத்து செய்ததற்கான சான்று ஒன்றையும் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
இதை சுலபமாகச் செய்ய கார்டை ரத்து செய்ய உங்கள் விருப்பத்தை கடிதமாக எழுதி வங்கியிடம் கொடுத்து ரத்து செய்ததற்கான அத்தாட்சியாக அந்த கடிதத்தில் முத்திரையப் பெற்றுக் கொள்ளவும்.
நீங்கள் ரத்து செய்ய விரும்பியபின் சில மாதங்களுக்கு முன்பாகவே அந்த கார்டின் பயன்பாட்டை நிறுத்திவிடுங்கள்.
அந்த வங்கியின் தொலைபேசி இணைப்பில் தொடர்புகொண்டு நீங்கள் ரத்து செய்ய விரும்புவதை தெரிவித்துவிடவேண்டும் என்பதையும் மறந்துவிடவேண்டாம்.
மேலும் கார்டிர்கான வருடாந்திரக் கட்டணத்தை வங்கி விதிக்கும் சற்று முன்பே அதனை ரத்து செய்துவிடுவது நல்லது.
இல்லையென்றால் அதையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு விஷயம்,
கார்டிர்கான செட்டில்மென்ட் அல்லது இறுதி நடைமுறைகள். அதனை நீங்கள் நெட் பாங்கிங் மூலம் செய்வதால் அதற்குண்டான வரவை அண்றே பெற்றுவிடலாம்.
என்ன எல்லாம் புரிஞ்சுகிட்டீங்களா?

நன்றி : திரு ஸ்ரீனிவாசன்
குட்ரிட்டன்ஸ் » தமிழ் » பர்சனல் பைனான்ஸ் 16.01.2016

உயில் எழுதும் முன்


உயில் எழுதும் முன் என்ன செய்ய வேண்டும்?

வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஓடி, வியர்வைச் சிந்தி சம்பாதித்த சொத்துக்களை உயில் எழுதி வைப்பது சுலபம்தான். ஆனால் இவ்வளவு நாள் நீங்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை உங்களது விருப்பம் போல் பிறருக்குச் சரியான வகையில் கொண்டு சேர்ப்பதைத் திட்டமிடுவது அவசியம் மட்டும் அல்லாமல் முக்கியமானவை கூட.
இதை நீங்கள் சரியாகச் செய்ய, சரியான வழிகாட்டுதல்கள் இதோ..
சாட்சிக் கையெழுத்து 
சாட்சிக் கையெழுத்துப்போடுபவர் பயனாளியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் உயில் எழுதும்போது அதில் பயனாளியாக உள்ள ஒருவரைச் சாட்சியாகச் சேர்க்காதீர்கள். அது நிச்சயமாகக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. மேலும் அந்த உயிலில் சேர்க்கப்படாத சிலர் அதனை எதிர்ப்பதற்கு நல்ல ஒரு வாய்ப்பாக அது அமையும்.
உயிலில் எழுதியிருப்பதை நடைமுறைப்படுத்த யாரை நியமிப்பது? உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு நெருக்கமாக உள்ள ஒருவரை உயிலை நடைமுறைப்படுத்துபவராக நியமிக்கலாம். அவர் உங்கள் துணைவராகவோ அல்லது உங்கள் குழந்தையாகவோ உங்கள் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். நடைமுறைப்படுத்துபவர் உயிலில் கூறப்பட்டுள்ளவாறு அதனை நிறைவேற்றுவார். அவரைச் செலவுகளையும் பொறுப்புகளையும் மேற்கொள்பவராகவும் உயிலில் நீங்கள் குறிப்பிடலாம்.

உயிலை எங்கு வைத்துப் பாதுகாப்பது? 
உங்கள் வங்கி லாக்கர் போன்ற நீங்கள் மட்டுமே திறக்கக்கூடிய இடங்களில் உயிலை வைப்பதைத் தவிருங்கள். இருவர் இணைந்து உபயோகிக்கும் லாக்கரையும் தவிருங்கள். இருவர் இணைந்து நடத்தும் லாக்கர்கள் நம்பத்தகுந்தவை அல்ல. பெரும்பாலானவர்கள் தங்கள் வழக்கறிஞரிடம் உயிலைக் கொடுத்து அவர்களுடைய அலுவலகத்தில் பத்திரப்படுத்தி வைக்கின்றனர்.

உயிலில் எப்போது எத்தனை முறை திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்?சூழ்நிலைகள் மாறக்கூடியவை என்பதால் உங்கள் உயிலையும் அவ்வப்போது மாற்ற வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக உங்கள் சொத்து உங்கள் மனைவிக்குப் போகவேண்டியிருந்து ஆனால் உங்கள் மனைவி உங்களுக்கு முன் இறந்துவிட்டால் அதில் திருத்தம் தேவையிருக்கும். எனவே இது போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் அவ்வப்போது உயிலை நீங்கள் திருத்த நேரிடும்.
நம்பகமானவர் 
உங்கள் உயில் எங்கு இருக்கிறது என்பதை உங்களுக்கு நம்பகமானவர்களிடம் தெரிவியுங்கள். உதாரணமாக நீங்கள் உங்கள் உயிலை வழக்கறிஞரிடம் கொடுத்து அவருக்கு நீங்கள் இறந்து போனது பற்றித் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றால் உங்களுடைய அனைத்துச் சொந்தங்களும் உயிலைத் தேட படாத பாடு படவேண்டியிருக்கும்.
நீங்கள் இறந்த பிறகு அதைத் தேட முடியாத ஒரு சூழ்நிலையை நீங்கள் நினைத்துப்பார்த்தால் அது ஒரு நரகமாக இருக்கும். உங்களுக்கு நம்பகமானவர்களிடம் உங்கள் உயில் எங்கே இருக்கிறந்து என்பதைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

உணர்வுப்பூர்வமான விஷயம் 
உங்களுக்கு உணர்வுப்பூர்வமான விஷயம் ஏதாவது இருந்தால் அதனை உயிலில் குறிப்பிடுங்கள். அதற்கான ஒரு சிறப்பான ஒதுக்கீட்டையும் உயிலில் தெரிவிக்கலாம். நெடிய பாரம்பரியமும் கலை நயமும் நிறைந்த குடும்ப நகைகள் என்று எதாவது இருந்தால் அதனைக் குறிப்பிட்ட யாருக்காவது நீங்கள் கொடுக்க நினைத்தால் அதனை உயிலில் தனியாகக் குறிப்பிடலாம்.

உயிலில் கையெழுத்துப் போடா மறந்துடாதீங்க 
ஒவ்வொரு முறையும் உயிலில் மாற்றங்கள் தேவையிருக்கும். அவ்வப்போது அந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் கையெழுத்திட மறக்க நேரிடலாம். எனவே கடைசியாகச் செய்ததை நீங்கள் கையெழுத்திட மறந்து விடாதீர்கள். இந்த மேலே குறிப்பிட்ட விவரங்கள் மிகவும் உயில் எழுதும்போது முக்கியமானவை. இதை நீங்கள் உயில் எழுதும்போது நினைவு படுத்திக்கொள்ள உதவும்.
நன்றி : திரு பிரசன்னா -குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 15.09.2015

தொலைந்து போன மொபைல் , லேப்டாப்


தொலைந்து போன மொபைல் , லேப்டாப் – ட்ராக் செய்ய வழிகள்!

நீங்கள் எவ்வளவு அதிகமாக மொபைல், லேப்டாப் –ஐ பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமாக டேட்டாக்களை இழந்திருப்பீர்கள் அவை தொலைந்தால் !! இப்பொழுதே சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இதற்கு ஒரு தீர்வு காணலாம்!!

மொபைல் :

கூகுள் செட்டிங்க்ஸ் – டிவைஸ் மேனேஜர் ( ஆண்ட்ராய்டு ) :

                  இதற்கு நீங்கள் உங்களின் தொலைந்து போன மொபைலில் டிவைஸ் மேனேஜர் ஆப் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் மொபைலில் உள்ள “ கூகுள் செட்டிங்க்ஸிற்குள் ” செல்லுங்கள் ( பொதுவாக நீங்கள் பயன்படுத்தும் “செட்டிங்க்ஸ்” அல்ல இது ).

                உள்ளே செக்யூரிட்டி ஆப்ஷன்ஸில் நுழைந்து ‘டிவைஸ் மேனேஜர்’ என்பதின் கீழ் “Remotely locate this device” மற்றும் “Allow remote lock and erase” ஆகியவற்றை டிக் செய்து கொள்ளுங்கள். மேலும் இதே கூகுள் செட்டிங்க்ஸிற்குள் உள்ள “லொகேஷன்” ஆப்ஷனில் உள்ள கூகுள் லொகேஷன் ஹிஸ்டரிக்குள் உள்ள “லொகேஷன் ஹிஸ்டரி” ஆப்ஷனை டிக் செய்து கொள்ளுங்கள்.

                இனிமேல் உங்களது மொபைலை கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உள்ளன.

1. உங்கள் மொபைல் “சுவிட்ச் ஆன்” ஆகியிருந்து,  ட்ராக் செய்யும் வகையில் சிக்னலும் இருந்தால் வேறொரு நபரின் மொபைலில் டிவைஸ் மேனேஜர் ஆப் இன்ஸ்டால் செய்து,  android.com/devicemanager என்ற லிங்க்கினுள்ளே உங்களது கூகுள் அக்கவுண்ட்டை சைன் செய்தால்,  உடனே கூகுள் மேப்பில் உங்களது மொபைலின் இருப்பிடம் காட்டப்படும்.

2. உங்கள் மொபைல் “சுவிட்ச் ஆப்” ஆகியிருந்தால் லொகேஷன் ஹிஸ்டரிக்குள் சென்று,  கடைசியாக உங்கள் மொபைல் ரிப்போர்ட் செய்யப்பட்ட இடத்தை அறியலாம். இதனை google.com/settings/accounthistory க்குள் சென்று ப்ளேசெஸ் யூ கோ (Places you go ) என்பதை தட்டி மேனேஜ் ஹிஸ்டரியை கிளிக்கினால் காணலாம். இவ்வாறு செய்தால் நீங்கள் குறிப்பிடும் நேரத்திற்குள் உங்களின் மொபைல் எங்கெல்லாம் டிடெக்ட் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.



ஃபைன்ட்  மை ஐ போன் ( ஐ போன் ) :

தொலைந்து போன ஆப்பிள் சாதனத்தை இதன் மூலம் கண்டுபிடிக்கலாம். ஆனால் அதற்காக முன்னாலேயே இந்த செட் அப் உங்கள் சாதனத்தில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். செட்டிங்க்ஸை க்ளிக் செய்து உள்ளே ஐ க்ளவுட் ( I cloud ) சென்று,  ஃபைன்ட்  மை ஐ போன்-ஐயும்,  சென்ட் லாஸ்ட் லொகேஷன் ( Send Last Location ) -ஐயும் க்ளிக் செய்யுங்கள். பிறகு செட்டிங்க்ஸ் – பிரைவசி க்குள் சென்று லொகேஷன் சர்வீசஸை க்ளிக் செய்யவும்.


இனிமேல் உங்களது மொபைலை கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உள்ளன.

1. மற்றொரு ஆப்பிள் சாதனத்தில் இலவசமான ஃபைன்ட்  மை ஐ போன் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்.

2. உங்கள் டெஸ்க்டாப்பில் Icloud.com சென்று ஃபைன்ட்  மை ஐ போன் கொடுத்தால் உங்கள் ஆப்பிள் சாதனத்தின் இருப்பிடம் தெரிந்து விடும்.

                  மேலும் இதன் மூலம் உங்கள் மொபைலின் கன்டென்ட்களை அழிக்கவும், அலாரம் அடிக்கவும் , லாக்கும் செய்யலாம்.
 
ஃபைன்ட்  மை போன் (விண்டோஸ் போன்) 

விண்டோஸ் போனில் ஆப்ஸ் லிஸ்ட்டிற்குள் சென்று செட்டிங்க்ஸில் நுழையவும். அங்குள்ள பிரைவசி பிரிவிற்குள் சென்று லொகேஷன் மற்றும் ஃபைன்ட்  மை போன்  ஆகியவற்றை டிக் செய்யவும். பிறகு ஃபைன்ட்  மை போன் ஆப்ஷன் உள்ளே சென்று “Save my phone’s location periodically and before the battery runs out to make it easier  to find “ ஆப்ஷனை  டிக் செய்யவும்.

இதன் பிறகு உங்களது விண்டோஸ் அக்கவுன்டிற்குள் சென்று,  ஃபைன்ட்  மை போன் பிரிவிற்குள் செல்லுங்கள். உங்களின் மொபைல் கடைசியாக ரிப்போர்ட் செய்யப்பட்ட லொகேஷன் உங்களுக்கு மேப்பில் காட்டப்படும். மேலும் இதன் மூலம் உங்கள் மொபைலின் கன்டென்ட்களை அழிக்கவும், அலாரம் அடிக்கவும் , லாக்கும் செய்யலாம்.
லேப்டாப்:

பிரே:

பிரே என்னும் இந்த இலவசமான ஆப்பின் செயல்பாடுகள் முற்றிலும் டிவைஸ் மேனேஜர் போலவே. இதனை மொபைலிற்கும் பயன்படுத்தலாம். பின்வருவது இதன் சில செயல்பாடுகள்.

மிக சத்தமான அலாரம் வைத்துக்கொள்ளலாம்.

லேப்டாப் பிறரது கைக்கு போனால் உங்கள் மொபைலிற்கு கஸ்டமைஸ்டு மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம்.

லேப்டாப்பை லொகேட், லாக் செய்து கொள்ளலாம். கன்டென்ட்களை அழித்துக்கொள்ளலாம்.                 
 
இதனை இன்ஸ்டால் செய்யாமலேயே உங்கள் லேப்டாப்பை கண்டுபிடிக்குமாறு  செட் செய்து கொள்ள முடியும்.

மேற்குறித்த முறைகளில் ஏதேனும் ஒன்றில் உங்களது மொபைலை நீங்கள் மீண்டும் கண்டுபிடித்துவிட்டால் அந்தந்த நிறுவனங்களுக்கு அதனை தெரிவித்துவிடுவது நல்லது !!!

-  ஸ்ரீ.தனஞ்ஜெயன்
(மாணவர் பத்திரிகையாளர்)
விகடன் செய்திகள் - 01.11.2016

Wednesday, January 27, 2016

வருமான வரி நோட்டீஸ் வந்தால்


வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
- ஜெ.சரவணன் 
இன்னும் இரண்டு மாதங்களில் 2015 - 16-ம் நிதி ஆண்டு நிறைவடைந்துவிடும். மார்ச் 31-ம் தேதிக்குள் எல்லோரும் தங்கள் வருவாய் கணக்கை வருமான வரித் துறைக்கு சமர்ப்பிக்க தயாராக வேண்டும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் நமக்கெல்லாம் வருமானமாவது வரியாவது என்று சும்மா இருந்துகொண்டிருப்போம். அப்போதுதான் வருமான வரித் துறையிடமிருந்து திடீர் நோட்டீஸ் வரும்.
நோட்டீஸை பார்த்ததும் நமக்கே தெரியாமல் இவ்வளவு வருமானம் நம் கணக்கில் எப்படி வந்தது, எங்கே நாம் தவறு செய்தோம், அச்சச்சோ அபராதம், சிறை தண்டனை இதெல்லாம் இருக்குமோ? என்று பயந்து பதற ஆரம்பித்துவிடுவோம். ஆனால், நாம் செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் சரியாகச் செய்தாலே இது போன்ற நோட்டீஸ் பிரச்னைகளில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும். 
வருமான வரித் துறையிலிருந்து இதுபோன்ற நோட்டீஸ்கள் வரும் சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும், எதற்காகவெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்படும், இது போன்ற நோட்டீஸ்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகளை சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் எஸ்.சதீஷ்குமாரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 
“நோட்டீஸ் வந்ததும் முதலில் அலட்சியப் படுத்தாமல் அதை முழுமையாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள பெயர், பான் எண் போன்ற விவரங்கள் உங்களுடையது தானா என்பதைத் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். 
பொதுவாக, இதுபோன்ற விவகாரங்களை வருமான வரித்துறையைச் சார்ந்த உளவு மற்றும் குற்றப் புலனாய்வு இயக்குநரகம்தான் கையாண்டு வருகிறது. வரி செலுத்துவோர், வரி செலுத்தாதவர் என்ற பாரபட்சமில்லாமல் அதிக மதிப்பில் பணம் மற்றும் சொத்துப் பரிவர்த்தனை செய்யும் அனைவரின் வருமானம் குறித்த விவரங்களும் இந்தத் துறையிடம் இருக்கும். நமக்கே தெரியாத நம்முடைய முதலீடு, சேமிப்பு போன்றவை மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களும் அந்தத் துறையிடம் இருக்கும். அதனால் வரியிலிருந்து தப்பிக்க முடியாது. 
எதற்கெல்லாம் நோட்டீஸ் வரும்?
வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ள ஒருவர் தன்னுடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டாலும், வரி செலுத்த வேண்டிய மதிப்பில் உள்ள வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருந்தாலும் நோட்டீஸ் அனுப்பப்படும். கட்ட வேண்டிய வருமான வரிக்கான வட்டியும் செலுத்துவதுடன் கட்டாயம் அபராதத்தையும் கட்ட வேண்டியிருக்கும். நீங்கள் பெறும் வருமானத்துக்கு வரி பிடிக்கப்பட்டு இருந்தாலும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் நோட்டீஸ் அனுப்பப்படும். 
அதேபோல் கீழே தரப்பட்டுள்ள அதிக மதிப்பிலான பணம் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளை நாம் கணக்கில் காட்டா விட்டாலும் நோட்டீஸ் அனுப்பப்படும். 
* ரூ.30 லட்சத்துக்கும் மேல் நிலமோ, வீடோ வாங்கினாலும் விற்றாலும் 
* சேமிப்புக் கணக்கில் வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பரிவர்த்தனை இருந்தால்
*  ஒரே நாளில் ரூ.50,000-க்கும் அதிகமாக அடிக்கடி டெபாசிட் செய்தால்
* வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்குக் கட்டணம் கட்டியிருந்தால்
* நிரந்தர இருப்பு வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமானால் 
* மியூச்சுவல் ஃபண்ட், ஈக்விட்டி பங்குகள் போன்றவை வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமானால் 
அதேபோல், வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றாலும், ஆடம்பரமாக திருமணம் செய்தாலும், ஏன் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றாலும், இன்னும் சில காரணங்களுக்காகவும் நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது. 
நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஊழியராக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் வருமானத்துக்கான வரிப் பிடித்தம் செய்யப்படும். ஆனால், உங்களுடைய நிறுவனத் தரப்பில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய தவறியிருந்தால் உங்களுக்கு நோட்டீஸ் வரும். 
மேலும், ரூ.50 லட்சத்துக்கும் மேலாக இடமோ, வீடோ வாங்கும்போது, இந்திய குடிமக்களுக்கு 1 சதவிகிதமும், என்ஆர்ஐ-களுக்கு 20 சதவிகிதமும் வரிப் பிடித்தம் செய்யப்படும். விற்றவர் தனது வருவாய்க் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், இருவருக்குமே வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும். 
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், நிறுவனங்களின் கடன் பத்திரங்கள், கூட்டுறவு கடன் சங்கம் போன்றவற்றில் வைத்துள்ள முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டி முதற்கொண்டு அனைத்து விவரங்களும் வருமான வரித் துறையிடம் இருக்கும்.
மேலும், ரூ.50,000-க்கும் மேலாக உணவகம் மற்றும் விடுதிகளிலோ, விமானத்திலோ செலவழித்தால், அதற்கு பான் எண் குறிப்பிட வேண்டும். ரூ.2 லட்சம் ரொக்கமாகக் கொடுத்து ஆபரணங்கள் வாங்கினாலும் பான் எண் அவசியம்.  
பொதுவாக, மக்கள் தங்களின் வருமான வரியைக் குறைப்பதற்காக தங்களின் வருவாயைத் தெரிந்தோ, தெரியாமலோ குறைத்துக் காட்டிவிடுகிறார்கள். ஆனால், அவர்களின் சேமிப்புக் கணக்கு, நிரந்தர வைப்புக் கணக்கு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், பங்குகளில் செய்துள்ள முதலீடு மற்றும் அசையாத சொத்துக்கள் என அனைத்து விவரங்களும் வருமான வரித் துறைக்குச் சென்றுவிடும். நாம் வங்கியில் வைத்துள்ள இருப்புக்குக் கிடைக்கும் வட்டியும் வருமானக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வருமான வரித் துறை, தானாகவே வரி செலுத்துவோரின் விவரங்கள் அப்டேட் ஆகும் வகையில் நன்கு மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் மூலம் விவரங்களையெல்லாம் பராமரித்து வருகிறது. அதனால் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமான வருமானம் வரும் ஒவ்வொருவரின் தகவல்களும் அதில் புதுப்பிக்கப்படும். 
வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கும், தவறாக தாக்கல் செய்தவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். ஒவ்வொரு நிதி ஆண்டு க்கான நோட்டீஸ்களும் இரண்டு நிதி ஆண்டு களுக்குப்பின் அனுப்பப்படும். 
குறிப்பிட்ட நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால், 90% வரை அபராதம் உண்டு. வரி ஏய்ப்பு தொகை மிக அதிகமாக இருந்தால், சிறை தண்டனையும் உண்டு.

நோட்டீஸ் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா?
நம்முடைய வருமான வரிக் கணக்கை சரியாக தாக்கல் செய்திருந்தால், நோட்டீஸ் வர வாய்ப்பில்லை. அப்படி நோட்டீஸ் வந்தால், நீங்கள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கையும், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமான வரிக் கணக்கையும் ஒப்பிட்டு பாருங்கள். நோட்டீஸில் கூடுதலாக குறிப்பிட்டுள்ள வருமானத்துக்கு நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தால் கவலைப்பட தேவையில்லை. 
ஆனால், நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்துக்கும் நம்மிடம் பதில் இருக்க வேண்டும். அதாவது, நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள தாக்கல் செய்யப்படாத வருமானத்தை, நாம் ஏற்கெனவே வருமான வரித் தாக்கலில் குறிப்பிட்டிருந்தால், அதற்கான ஆவணத்தின் நகல், தாக்கல் செய்த தேதி, தாக்கல் செய்ததற்கான ஆதாரச் சான்று எண் ஆகியவற்றை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட நபர் நேராக போக வேண்டும் என்று அவசியமில்லை. தபாலிலும் அனுப்பலாம். அதனால் நாம் தாக்கல் செய்த ஆவணங்களைச் சில ஆண்டுகளுக்கு பத்திரமாக வைத்திருப்பது நல்லது.
வரிக் கணக்குக்கான மதிப்பீட்டு நிதி ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரையில் வருமான வரி அதிகாரிகள் கேள்விகள் எழுப்பக் கூடும். அந்த வகையில் ஒருவர் 7 ஆண்டுகள் வரைக்கும் வருமானம் மற்றும் வரிச் சலுகை முதலீட்டுக்கான ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. 
அதேசமயம், சில நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் சில வருமானத்தை நீங்கள் குறிப்பிட தவறியிருக்கக் கூடும். நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமானத்தை நீங்கள் குறிப்பிடாமல் இருந்திருந்தால், அதனை உடனடியாக தாக்கல் செய்து, பின்னர் அந்த ஆவணங்களை வருமான வரித்துறைக்கு அனுப்ப வேண்டும். 
இதுவரை வருமான வரிக் கணக்கு தாக்கல் என்றால் என்னவென்றே தெரியாத, புதிய நபருக்கு நோட்டீஸ் வருகிறது என்றால், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமானத்துக்கு வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 
அந்தச் சமயத்தில் அனைத்து வருமான விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், அவர் வாங்கிய அல்லது விற்ற சொத்துக்களின் விவரங்கள், தன்னுடைய பான் எண் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவு செய்து, பின்னர் பதிவு செய்ததும் வரும் 26ஏஎஸ் என்ற ஆவணத்தை நகல் எடுத்து நம்முடைய அனைத்து வருமான விவரங்களையும் ஒளிவுமறைவு இல்லாமல் குறிப்பிட்டு வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். பிறகு நாம் செலுத்த வேண்டிய வருமான வரியை, அதற்கான அபராதத்தையும் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்” என்று கூறி முடித்தார்.
இவர் சொல்வதிலிருந்து, நாம் நம்முடைய வருமானத்தில் எவற்றுக்கெல்லாம் வரி செலுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 
மேலும், அவற்றை மறைக்காமல் குறிப்பிட்டு, சரியான நேரத்தில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் இதுபோன்ற நோட்டீஸ்கள் வருவதைத் தவிர்க்க முடியும். 

நன்றி : விகடன் ஃபைனான்ஸ் ஸ்லெஷல் - 23.01.2016