disalbe Right click

Monday, February 22, 2016

பெயர்மாற்றம் செய்ய


பெயர்மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?



தமிழ்ப்பெயர் விருப்பம், நாகரிகம், நியூமராலஜி போன்ற காரணங்களால் பெற்றோர் வைத்த பெயரை, அரசு முறைப்படி மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கான வழிகாட்டல்கள் இங்கே...
விண்ணப்பம்
பெயர் மாற்றம் செய்ய, எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநரகத்தால் (stationery and printing department) வழங்கப்படும் பெயர் மாற்றுப் படிவம் அல்லது அத்துறையின் ஆன்லைன் முகவரியில் பதிவிறக்கம் செய்யப்படும் பெயர் மாற்றுப் படிவத்தைப் பூர்த்திசெய்து, சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, சுயசான்றொப்பமிட்டு, உரிய தகவல்களுடன் (பெயர் மாற்றத்துக்கு உரிய காரணங்களுடன்) விண்ணப்பிக்க வேண்டும். நகல் எடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தமிழ்நாட்டில் பெயரை மாற்றம் செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக அல்லது தமிழ்நாட்டில் நிரந்தர முகவரி உடையவராக இருக்க வேண்டும்.
இணைக்க வேண்டியவை
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் வசிப்பவர் எனில் பழைய பெயருக்கு உரிய ஆதாரமாக, பிறப்புச் சான்றிதழ்/கல்விச் சான்றிதழ்/சாதிச் சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். முகவரிச் சான்றாக, குடும்ப அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/பாஸ்போர்ட்டின் நகலில் சுயசான்றிட்டு இணைக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் பிறந்தவர் எனில் மேலே கூறிய சான்றுகளுடன் வட்டாசியரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றினையும் இணைக்க வேண்டும். பிறப்பு மற்றும் கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் அரசு மருத்துவரிடம் வயதினை நிரூபிக்க உரிய சான்று பெற்று விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பெயர் மாற்றத்துக்குக் காரணம், தூயதமிழில் பெயர் சூட்டிக்கொள்ள என்றால், அதற்குக் கட்டணமாக ரூபாய் 50+15 (அஞ்சல் + அரசிதழ் கட்டணம்) பெறப்படுகிறது. வேறு எந்தக் காரணத்துக்காகப் பெயர் மாற்றம் செய்தாலும் ரூபாய் 415 செலுத்த வேண்டும்.                 திருநங்கைகளுக்கு முற்றிலும் இலவசம்.
தத்தெடுக்கும் குழந்தைக்கு...
குழந்தையைத் தத்தெடுப்பவர்கள் அக்குழந்தையின் பெயரை மாற்றம் செய்ய விரும்பினால் தத்தெடுப் பவர்களே விண்ணப்பிக்க முடியும். தத்தெடுப்பை உறுதிசெய்யும் சான்றிதழ் மற்றும் இணைக்க வேண் டிய ஆவணங்களையும் இணைத்து, உரிய கட்டணம் செலுத்தவேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை
பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குநரகத்தில் காலை 10.00 மணிமுதல் 1.00 மணிவரையும், மதியம் 2.00 மணிமுதல் 3.00 மணிவரையும் நேரில் செலுத்தலாம். இயலாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரைவோலை எடுத்து அனுப்பலாம். போஸ்டல் ஆர்டர், மணி ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
முகவரி:
உதவி இயக்குநர் (பப்ளிகேஷன்)
எழுதுபொருள் இயக்குநரகம்
சென்னை-2
வயது அடிப்படையிலான விதிகள்
பொதுவாக விண்ணப்பத்தில் பெயர் மாற்றுபவர் மட்டுமே கையொப்பமிட வேண்டும். ஆனால், விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக இருந்தால், விண்ணப்பதாரரின் பெற்றோர் கையொப்பமிடலாம். பெற்றோர்கள் இல்லாதபட்சத்தில் பாதுகாப்பாளர் கையொப்பமிடலாம். ஆனால், அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான சான்றினை வழங்க வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயதைக் கடந்தவராக இருந்தால் பதிவு பெற்ற மருத்துவரிடம் `லைஃப் சடிஃபிகேட்’டின் (life certificate) அசலைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
திருமணம், விவகாரத்துக்குப் பின் செய்யும் பெயர் மாற்றம்
பெண்கள் திருமணத்துக்குப் பின் கணவரின் பெயரை தங்கள் பெயருடன் இணைக்க விரும்பினால் படிவம் 2-ஐ பூர்த்தி செய்து திருமணச்சான்றிதழுடன் இணைத்து உரிய கட்டணத்தைத் செலுத்த வேண்டும். இதேபோல, விவாகரத்தான பின் பெயர் மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் விவாகரத்துச் சான்றிதழை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
மதமாற்றத்தினால் பெயர் மாற்றம்
மதமாற்றத்தினால் பெயர் மாற்றம் செய்பவர்கள், மதமாற்று பெயர் மாற்றத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து மதம் மாறியதற்கான சான்றிதழின் அசல், பழைய பெயருக்கு ஆதரமாக பிறப்புப் சான்று/கல்விச் சான்று மற்றும் முகவரிச்சான்று இணைத்து, உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
காத்திருப்பு நேரம்
நேரில் விண்ணப்பிப்பவர் களுக்குக் காத்திருப்புக் காலம், ஒரு வாரம்; தபாலில் விண்ணப்பிப்பவர் களுக்கு 15 நாட்கள்.
நிபந்தனைகள்
பெயர் மாற்றம் செய்ய உரிய காரணம் இருக்கவேண்டும்.
விண்ணப்பத்தில் தரப்படும் முகவரியில் கதவு எண், பின்கோடு எண் போன்றவற்றை தவறில்லாமல் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பதாரர் எந்த ஊரில் வசித்தாலும் அவர் பிறந்த ஊரினையே விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும்.
விண்ணப்பதாரர் தான் மாற்றம் செய்யும் பழைய பெயரினைப் பிழையில்லாமல் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பதாரர் தன்னுடைய பழைய பெயரில் கையொப்பமிட வேண்டும்.
பழைய பெயர் மற்றும் புதிய பெயரினை இணைத்து அரசிதழில் (கெஜட்டில்) பிரசுரம் செய்யப்படமாட்டாது உதாரணமாக பழனி என்கிற கார்த்தி என்றில்லாமல், கார்த்தி என்று மட்டுமே இருக்கும்.
கெஜட்டில் புதிய பெயர் பிரசுரம் செய்யப்பட்ட பின் அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை ஆறு மாத காலத்துக்குள் சரிசெய்துகொள்ள வேண்டும். அதற்குப் பின் பிழைகளைத் திருத்தம் செய்யக்கோரும் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது.
பெயர் மாற்றத்துக்கான சான்று
பெயர் மாற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு, அந்தப் புதுப்பெயர் கெஜட்டில் வெளியிடப்பட்ட 5 நாட்கள் கழித்து, அதன் 5 நகல்கள் வழங்கப்படும். கூடுதல் பிரதிகள் தேவைப்படின் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தபால் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் உரிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு அனுப்பப்படும் தபால், ஒருவேளை தபால் துறையால் திருப்பி அனுப்பப்பட்டால் (முகவரி தவறு போன்ற காரணத்தால்), விண்ணப்பதாரர் 6 மாதத்துக்குள் நேரில்வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலதிகத் தகவல்களுக்கு...
www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம். 
044-28544413, 044 - 28544412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
சு.சூர்யா கோமதி
நன்றி :அவள்விகடன்- 07.02.2016

Sunday, February 21, 2016

குறைப்பிரசவத்தை தவிர்க்க


குறைப்பிரசவத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தையைப் பாதிக்கும் குறைப்பிரசவம்!

குறைப்பிரசவம் யாருக்கு ஏற்படுகிறது?
நோய்த்தொற்று
கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்ப்பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு, அந்தத் தொற்று  கர்பப்பையைப் பாதிக்கும்போது குறைப்பிரசவம்  ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். 

சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம்
கர்ப்ப காலத்தில் சிலருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படலாம். இதனால்,  நஞ்சுக்கொடி பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு. 
கர்ப்ப கால சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் ப்ரீ எக்லாம்ப்சியா (Pre Eclampsia) என்ற நிலை ஆகியவற்றின் காரணமாகப் குறைப்பிரசவம் ஏற்படுகிறது.
குழந்தைப்பேறின்மை மருந்துகள்
குழந்தையின்மை காரணமாக எடுக்கும் சிகிச்சையும் குறைப்பிரசவத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது.  இவர்கள் எடுத்துக்கொள்ளும் சிலவகை மருந்துகள் காரணமாகக் கருத்தரிக்கும்போது, இரண்டு, மூன்று என ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் உருவாகின்றன. இதன் காரணமாக குறைப்பிரசவம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
புகைபிடித்தல்
சிகரெட்டில்  இருக்கும் நச்சுக்கள், பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது நஞ்சுக்கொடியைப் பாதிப்பது ஆய்வுகளில்  உறுதிசெய்யப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாலும், கணவர் புகைபிடிப்பதால் ஏற்படும் பேஸிவ் ஸ்மோக்கிங்காலும் குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
போதை மருந்து, ஆல்கஹால்
போதை மருந்து எடுத்துக்கொள்வது, மது அருந்துதல் காரணமாகவும் நஞ்சுக்கொடி பாதிக்கும். போதைப் பழக்கம் அதிகம் உள்ள நாடுகளில் குறைப்பிரசவத்தின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
குறைப்பிரசவக் குழந்தைகளின் பாதிப்புகள்!
32 வாரங்களுக்குள் குறைப்பிரசவமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு, மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம்.
மூளையில் ரத்தம் கசியலாம்.
டிஸ்லெக்சியா, ஏ.டி.ஹெச்.டி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
நுரையீரல் வளர்ச்சிக் குறைவு காரணமாக, சுவாசப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும்.
இதனால், எளிதாக நோய்த் தொற்றுக்கள் ஏற்படக்கூடும்.
1. சுவாசம்
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது.

நுரையீரல் சுருங்கிப்போய்  இருப்பதால், குழந்தையால் மூச்சுவிட முடியாது. இதன் காரணமாகவே பல குழந்தைகள் இறக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு தீர்வு உண்டு. ஏழு, எட்டாவது மாதங்களில் ஒருவர் பிரசவ வலியால் மருத்துவமனைக்கு வரும்போது, அவருக்கு இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரத்துக்குள் பிரசவம் ஏற்படும் என்பதை டாக்டர் கணித்தால், தாய்க்கு கார்டிக்கோஸ்டீராய்டு என்ற மருந்தைக் கொடுப்பதன் மூலம், குழந்தையின் நுரையீரலை மேம்படுத்த முடியும். 
ஒருவேளை உடனடிப் பிரசவம் ஏற்பட்டால், அந்தக் குழந்தைக்கு சார்ஃபாக்டன்ட் மருந்தை நுரையீரலில் செலுத்தி, நுரையீரல் உடனடியாகச் சுருங்குவதைத் தடுத்து, எளிதாக உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த இரண்டு சிகிச்சைகள் மூலம் பெருமளவு குழந்தைகள் உயிர் பிழைக்கின்றன.
2. தோல் முதிர்ச்சி
கருத்தரித்ததில் இருந்து, இதயம், நுரையீல், மூளை என ஒவ்வோர் உறுப்பும் வளரத் தொடங்கி, முதிர்ச்சியடையும். இப்படி, ஒவ்வோர் உறுப்பும் வளர்ச்சியடைவதை `வளர்ச்சிக்கான மைல்ஸ்டோன்’ என்று சொல்வோம். இது சரியாக நடைபெற வேண்டும். இவை நடைபெறத் தகுந்த தட்பவெப்பநிலை இருக்க வேண்டும்.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு, உடலில் வெப்பத்தைத் தேக்கிவைத்துக்கொள்ளும் ஆற்றல் குறைவாக இருக்கும். மேலும், குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் எடைக் குறைவாகப் பிறப்பதற்கும் அதிக வாய்ப்பு உண்டு. எனவே, இன்குபேட்டர் அவசியம்.

இன்குபேட்டரில் குழந்தையை வைப்பதன் மூலம், குழந்தைக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும். எப்போது குழந்தைக்கு நன்றாகத் தோல் வளர்ச்சி அடைந்து வெப்பத்தைத் தேக்கி வைத்துக்கொள்ளும் திறன் முழுமையாகக் கிடைக்கிறதோ, அதுவரை இன்குபேட்டரில் வைத்துப் பாதுகாப்பதுதான் சிறந்தது.
‘கங்காரு மதர் கேர்’ என்பது மிகவும் முக்கியமான சிகிச்சை. கங்காரு, தன் குட்டியை வைத்துக்கொள்வதுபோல, தினமும் சில மணி நேரம், தாய் தனது குழந்தையை மார்போடு சேர்த்துக் கட்டிக்கொள்ள வேண்டும். குழந்தை, தாயின் அருகில் இருக்கும்போது, தாயிடம் இருந்து குழந்தைக்குத் தேவையான வெப்பம் கிடைத்துவிடும். அதேபோல குழந்தை, தாயின் உடலோடு ஒட்டி இருக்கும்போது, ஹார்மோன்கள் தூண்டப்பட்டு தாய்க்கு நன்றாகப் பால் சுரக்கும்.
3. பாலூட்டுதல் 
குறைப்பிரசவக் குழந்தைகளின் முக்கியப் பிரச்னை உணவு உட்கொள்ளுதல். 
32 வாரங்களுக்கு முன்பே பிறக்கும் குழந்தைகளுக்கு தாயிடம் இருந்து பால் குடிக்கத் தெரியாது.
32 வாரங்களுக்கு மேல்தான், மூளை வளர்ச்சி சீராகி, பால் குடிக்கும் உணர்வு குழந்தைக்குத் தூண்டப்படும். 
32 வாரங்களுக்கு முன் பிறந்த சில குழந்தைகளுக்குத் தாயிடம் பால் குடிக்கும் திறன் சிறிதளவு இருந்தாலும், அதனை விழுங்கும் திறன் இல்லாததால், தாய்ப்பால் மூச்சுக்குழாய் வழியாகப் பாய்ந்து, பிரச்னை ஏற்படலாம். 
எனவே, தாயிடம் இருந்து ஒரு பிரத்யேகக் கருவி மூலம் தாய்ப்பால் எடுத்து, குறிப்பிட்ட காலம் வரை குழந்தையின் வயிற்றில் செலுத்துவதன் மூலம் உணவுப் பிரச்னையைச் சமாளித்து விடலாம். 
இந்த முறையில் தாய்ப்பால் குழந்தைக்குக் கிடைப்பதால், குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.
4. ஆக்சிஜன் கவனம்
சில குழந்தைகளுக்கு செயற்கை ஆக்சிஜன் தேவைப்படும். 
குழந்தை முழு வளர்ச்சி அடையாத சமயங்களில், பார்வைத் திறனுக்கு மிகவும் அவசியமான ரெட்டினாவும் ( கண்ணின் பின்பகுதி அதாவது விழித்திரை) வளர்ச்சி அடைந்திருக்காது. 
மருத்துவ மனையில் மருத்துவர்கள் செயற்கை ஆக்சிஜன் கவனமின்றி அதிகமாகக் கொடுத்துவிட்டால், குழந்தைக்கு ரெட்டினா பாதிக்கப்படும். 
ரெட்டினாவில் ரத்தநாளங்கள் ஒழுங்கற்ற முறையில் வளர்ந்தால், பிற்காலத்தில் பார்வை பறிபோக நேரிடும்.
இந்த நிலைக்கு குறைப்பிரசவ ரெட்டினொபதி (Retinopathy of Premature) என்று பெயர். 
, குழந்தைக்குத் தேவையான அளவு, சீராகச் செயற்கை ஆக்சிஜன் கொடுக்கவேண்டியது அவசியம். 
அதேபோல, தற்போது ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் பிரச்னை அதிகமாக இருப்பதால், குழந்தைக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பதில் கவனம் தேவை.
5. ஹைஜீன் அவசியம்
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைக் கையாள்வதில் அதிகக் கவனம் தேவை. 
சுத்தமின்றி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினால், நோய்த்தொற்று ஏற்படலாம். 
கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். 
நன்றாகக் கைகளின் இடுக்குகளைக் கழுவி, சுத்தம் செய்த பிறகுதான் குழந்தையைத் தொட வேண்டும்.


வேண்டாமே மூடநம்பிக்கை!
மூடநம்பிக்கை காரணமாக சிலர் எட்டு, ஒன்பது மாதங்களிலேயே ஜோதிடம் பார்த்து, சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுகொள்கிறார்கள். 
37 வாரங்களுக்குப் பிறகு சிசேரியன் செய்துகொண்டால், குழந்தைக்குப் பெரிய பாதிப்புகள் இல்லை.
 உரிய மருத்துவக் காரணங்கள் இன்றி சொந்த விருப்பத்துக்காக, குறை மாதங்களில் சிசேரியன் செய்து, குழந்தையைப் பெற்றெடுப்பது அந்தக் குழந்தைக்கு நாம் செய்யும் தீங்கு. 
மூடநம்பிக்கையை காரணமாக வைத்து குழந்தையின் உயிரோடு விளையாடக் கூடாது.
குறைப்பிரசவம் தவிர்க்க எளிய வழிகள்
ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் அவசியம் தேவை. எப்போதும் மன அழுத்தத்தில் சுழலும் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி செய்து, பி.எம்.ஐ அளவை நார்மலில் வைத்திருக்க வேண்டும்.

சிகரெட், போதைப் பொருட்கள், மது தவிர்க்க வேண்டும்.
காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 
ஊட்டச்சத்துக் குறைவும், குறைப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

குழந்தையைத் தள்ளிப்போடாதீர்கள்

குழந்தைப்பேறைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்துவருகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அதற்காகக் குழந்தைபேற்றைத் தள்ளிப்போட வேண்டாம். வயது அதிகரிக்கும்போது பெண்களுக்கு, கருமுட்டையின் தரம் குறைவதால், கரு உருவாவதிலும் பிரச்னை ஏற்படலாம்
 

நன்றி : டாக்டர் விகடன் - 01.03.2016 

Saturday, February 20, 2016

அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டின் பரப்பளவை தெரிந்துகொள்ள


அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டின் பரப்பளவை தெரிந்துகொள்ள 
என்ன செய்ய வேண்டும்?


வீட்டுமனை வாங்கும்போது அதன் பரப்பளவு நமக்குத் தெளிவாகத் தெரியும். பத்திரப் பதிவுக்குப் பிறகு பட்டா பெறும்போது பரப்பளவு உறுதியாகவும் தெரியும். கட்டி முடிக்கப்பட்ட தனி வீடுகளை வாங்கினாலும் அப்படித்தான். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கும்போது வீட்டின் பரப்பளவை எப்படித் தெரிந்துகொள்வது?

அடுக்குமாடிக் குடியிருப்பு களுக்கான விளம்பரங்களில் தவறாமல் சதுர அடி கணக்கு இடம்பெற்றிருக்கும். அந்தச் சதுர அடி கணக்கு, சுவர்களுக்கு இடையே உள்ள பரப்பளவைக் குறிக்கிறதா? இல்லை சுவர்கள் அமைந்திருக்கும் இடத்தையும் சேர்த்துக் குறிக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம்.

கார்பெட் ஏரியா
நான்கு சுவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும் பரப்பளவுக்கு கார்பெட் ஏரியா என்று பெயர். 



நம் நாட்டில் எல்லா வீடுகளிலும் கார்பெட் பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் எல்லா அறைகளிலும் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் சுவர்களைத் தவிர்த்து பரப்பளவைக் கணக்கிடுவதால் கார்பெட் ஏரியா என்றே அழைக்கிறோம்.

பிளின்த் ஏரியா
வீட்டின் பரப்பளவைக் கணக்கிடும்போது சுவர்கள் இருக்கும் இடத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் அது பிளின்த் ஏரியா ஆகும். 



பிளின்த் ஏரியாவைக் காட்டிலும் கார்பெட் ஏரியாவின் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் கார்பெட் ஏரியாவைக் காட்டிலும் அதிகமாக வித்தியாசப்படும் இன்னொரு ஏரியாவும் இருக்கிறது. அதற்கு சூப்பர் பில்டப் ஏரியா என்று பெயர்.

சூப்பர் பில்டப் ஏரியா
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் மட்டுமா இருக்கின்றன? விளையாட்டுத் திடல், பூங்கா, நீச்சல் குளம், நடைபாதை, வாகனங்கள் நிறுத்துமிடம் என்று ஏகப்பட்ட இணைப்புகளையும் சேர்த்துப் பெறுகிறோம் இல்லையா? அவை இலவச இணைப்புகள் அல்ல. இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களின் அளவையெல்லாம் கூட்டி அங்கு இருக்கும் மொத்த வீடுகளின் எண்ணிக்கையால் வகுத்து அதை ஒவ்வொரு வீட்டின் அளவோடும் சேர்த்துக் கணக்கிடுவார்கள்.


இந்த சூப்பர் பில்டப் ஏரியாவானது, கார்பெட் ஏரியாவைக் காட்டிலும் அதிகமாகவே வித்தியாசப்படும். ஆனால் இந்தப் பரப்பு அவ்வாறு குறிப்பிட்ட காரணங்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். நடைபாதைக்கான இடம் என்று சொல்லிவிட்டு அங்குக் கடைகளைக் கட்டுகிறார்கள் என்றால் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

வீட்டை வாங்கும்போது கூடுதல் பரப்பளவு சொன்னார்கள், ஆனால் கொடுத்தபோது மிகவும் குறைவாக இருக்கிறது என்று பின்னால் வருத்தப்படக் கூடாது. வீட்டின் பரப்பளவு பற்றிய விவரத்தை முதலில் கேட்கும்போதே கார்பெட் ஏரியா, பிளின்த் ஏரியா, சூப்பர் பில்டப் ஏரியா என்று ஒவ்வொன்றின் அளவையும் தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதே மிகச் சிறந்தது.

நன்றிஇளவேனில்
தி இந்து தமிழ் நாளிதழ் - 20.02.2016

நுரையீரலை சுத்தம் செய்ய


நுரையீரலை சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?


சுத்தம் சுகம் தரும்! தினமும் இருமுறை குளிக்கிறோம். தேவைப்படும் போது எல்லாம் முகம், கை, கால் கழுவிக்கொள்கிறோம். சுத்தம் என்பது வெளிப்புறத்தில் மட்டுமில்லை. உள்ளேயும் கூடதான். உள் உறுப்புக்களை எப்படிச் சுத்தம்செய்வது? உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராதவகையில் இருந்தால், நோயின்றி உறுப்புகள் சீராகச் செயல்படும். மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். 
இந்தக் கழிவுகளை சுலபமாக எப்படி அகற்றுவது?
குருசிஃபெரஸ் காய்கறிகள் (Cruciferous vegetables)முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் காய்கறிகளின் இதழ்கள், சிலுவை போன்ற அமைப்பில், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக வளர்வதால் இந்தப் பெயர். 

உதாரணம் முட்டைகோஸ், புரோகோலி, காலிஃபிளவர். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளன. இது நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். குளுகொசினேட்ஸ் (Glucosinolates) என்ற சத்து, புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன் என்ற காரணியை அழித்து, செல்களுக்குப் பாதுகாப்பைத் தரும். பூச்சிகொல்லி தெளிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகளாக வாங்கிச் சாப்பிடுவது நல்லது.
கார்டீனாய்ட்ஸ் (Cartenoids)இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓர் சத்து. இதுவும் ஆன்டிஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இந்த சத்து ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். 
Image result for கார்டீனாய்ட்ஸ் (Carotenoids)
சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் ஆகியவற்றில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்து உள்ளது. பீட்டாகரோட்டினும், வைட்டமின் ஏ-வும் சேர்ந்து இருப்பதால், நுரையீரலின் நண்பன் கேரட்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்நுரையீரலுக்கு மட்டும் அல்ல. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மைகளைச் செய்யக்கூடிய சத்து இது. நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும். 
நுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். அனைத்துவகை மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.
பூண்டு
இது ஒரு மூலிகைப் பொக்கிஷம். உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். 
கெட்ட கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமாக வைக்கும். உணவில் அவ்வப்போது சிறிது பூண்டைச் சேர்த்துவர, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் (Allicin) சத்து, ஒரு நேச்சுரல் ஆன்டிபயாடிக். பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும்.
இஞ்சி
பூமிக்கு அடியில் விளையும் இந்தக் கிழங்கு, ஒர் பவுர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட். நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றும். நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும். 
நுரையீரலில் இருக்கும் மியூகஸ் எனும் திரவத்தைக் குறைக்கும் தன்மை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் சத்தில் உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் சுலபமாக சுவாசிக்க இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுவாசப் பாதையைச் சீராக்கும். டீ, ஜூஸ் போன்றவற்றில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் சி
உடலில் ஆக்சிஜனை முழுமையாகக் கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவும். நுரையீரலின் சீரான இயக்கத்துக்கு உதவும். ஆஸ்துமா, பிரான்சிடிஸ் போன்ற பிரச்னைகளின் தீவிரத்தைக் குறைக்கும். 
நெஞ்சக நோய் தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும். கொய்யா, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, சாத்துகுடி, மாதுளை, பைன் ஆப்பிள் போன்றவை நுரையீரலின் பாடிகாட்ஸ்.
நன்றி : ப்ரீத்தி (விகடன் செய்திகள் - 17.02.2016)

Friday, February 19, 2016

வங்கிக்கணக்கு முடக்கப்பட்டால்


வங்கிக்கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்று நினைக்கிற அனைவருக்குமே மிக முக்கியமானது வங்கி சேமிப்புக் கணக்கு. ஆனால், இன்றைய நிலையில் வேலை மாறுவது அடிக்கடி நடக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதனால் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அல்லது வேறு சில காரணங்களுக்காக புதிய வங்கிக் கணக்கு திறக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் எதுவும் நடக்காமல் 
இருக்கும்பட்சத்தில் நம் பணம் முடங்கிப் போவதற்கு வாய்ப்புள்ளது. நம் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் அதில் 
கோடி ரூபாய் பணம் இருந்தாலும், ஒரு பைசாகூட உடனடியாக எடுக்க முடியாது என்பது முக்கியமான விஷயம். 
முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை என்ன செய்ய வேண்டும், இப்படி வங்கிக் கணக்கு முடக்கப்படுவ தால் ஏதேனும் பிரச்னை  வருமா? பரிவர்த்தனை நடக்காதது மட்டும்தான் முடக்கப்படுவதற்கு காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என்கிற கேள்விகளை ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் கிளை மேலாளர் எம்.பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.
 இரண்டு வருடம் கெடு!
‘‘ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, ஒரு சேமிப்புக் கணக்கோ, நடப்புக் கணக்கோ இரண்டு வருடத்துக்கு எந்தப் பரிவர்த்தனையும் நிகழாமல் இருக்குமானால் செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முடக்கப்படும். ஆனால், குறைந்தபட்சமாக ஒரு வருடம் வரை எந்தவொரு பரிவர்த்தனையும் நடக்காவிட்டால் வங்கித் தரப்பிலிருந்து வாடிக்கை யாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும். 
வாடிக்கையாளர்கள் உடனடியாக செயல்பட்டு, தங்களுடைய வங்கிக் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ள தங்கள் கணக்கில் ஒரு தொகையைப் போடவோ அல்லது எடுக்கவோ செய்தால், செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால், இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் நடக்காவிட்டால், அந்தக் கணக்கு செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முடக்கப்படும். 

கேஒய்சி கட்டாயம்!
கேஒய்சி குறித்த தகவல்கள் தரப்படாமல் இருந்தாலும், வங்கிக் கணக்கு முடக்கப்படுவதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். வங்கிக் கணக்கைப் பயன்படுத்த தான் அளித்துள்ள விவரங்கள் முற்றிலும் உண்மையானவை என்று வாடிக்கையாளர் அளிக்கும் உறுதிமொழி படிவம் தான் இந்த  கேஒய்சி ஆகும்.
வாடிக்கையாளர்கள் இந்த கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்யாமல் இருந்தாலும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய கேஒய்சி என்ற படிவம் அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கித் தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் கேஒய்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். இந்தக் காலத்தில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி படிவத்தை தாக்கல் செய்து தங்களது வங்கிக் கணக்கை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
இந்த கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்ய ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குப் பிறகும் கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்யவில்லை எனில் அந்தக் கணக்குகளின் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்படும். 


குறைந்தபட்ச இருப்பு குறைந்தால்?
சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தத் தொகை வங்கிக்கு வங்கி மாறும். அது நிறுவனத்தில் தொடங்கப்பட்ட கணக்காக இருப்பின் பூஜ்ய இருப்பில் இருக்கலாம். இதுமாதிரியான ‘சேலரி அக்கவுன்ட்டுகள்’ தவிர வேறு வங்கி சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்பு குறைவதால், அந்த வங்கிக் கணக்கு முடக்கப்படாது. 

மேலும், வங்கி சேமிப்புக் கணக்கு நிர்வாகம் செய்வதற்காக அந்தக் கணக்கில் உள்ள தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கட்டணமாக பிடிப்பதுண்டு. மேலும், ஏடிஎம் கார்டு சேவை, எஸ்எம்எஸ் சேவை, செக் கிளியரன்ஸ் போன்ற வற்றுக்காகவும் கட்டணம் பிடிப்பதுண்டு. இதனால் இருப்பில் உள்ள தொகை குறைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து செயல்படும் கணக்காக இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஆனால், இரண்டு வருடங்கள் வரை ஒரு வங்கிக் கணக்கு செயல்படாமல் இருந்தால், அது முடக்கப்படும். குறைந்தபட்ச கட்டணத்தை வைக்கவில்லை எனில், சிபில் ஸ்கோரில்  பிரச்னை வர வாய்ப்பில்லை. ஆனால், பிற்பாடு உங்கள் கணக்கை  புதுப்பிக்கும்போது  உங்களுக்கான கட்டணமும், அபராதமும் பிடித்துக்கொள்ளப்படும்.

முடங்கிய கணக்கைப் புதுப்பிப்பது எப்படி?
வங்கிக் கணக்கு முடக்கப்பட் டால் அதனைப் புதுப்பிக்க ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதித் தரவேண்டும். அதனுடன் உங்களுடைய சரியான முகவரி, அடையாள அட்டை, பான் எண், ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
முடக்கப்பட்ட கணக்கு தொடங்கிய புதுப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை. ஒருவேளை கணக்கு தொடங்கிய உரிமையாளர் இறந்திருந்தால், அவர்  குறிப்பிட்டுள்ள நாமினியா னவர் மேற்சொன்ன ஆவணங்களுடன் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு முடங்காமல் இருக்க..!
வங்கிக் கணக்குகள் முடங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
1. அடிக்கடி பயன்படுத்துகிற குறைந்தபட்சம் இரண்டு வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது. 
இனி இந்த வங்கிக் கணக்குகளை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களிடம் இருக்கும் பிற வங்கிக் கணக்கு களை உடனடியாக முடித்து விடலாம். 
2. என்றாவது ஒருநாள் ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால், அந்தக் கணக்கில் தொடர்ந்து பணத்தைப் போடுவதும் எடுப்பதும் அவசியம். 
3. பயன்படுத்தும் கணக்கு களிலிருந்து அவ்வப்போது பயன்படுத்தாத கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
4. நிரந்த இருப்புக் கணக்கு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றின் மூலம் வரும் வருமானத்தைத் தொடர்ந்து பயன்படுத்தாத கணக்கில் சேமித்து வரலாம்.
இப்போது ஏடிஎம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி தங்களுடைய கணக்கை எப்போதும் செயல்பாட்டில் வைத்து முடங்காமல் பார்த்துக் கொள்ளலாமே!
நன்றி : நாணயம் விகடன் - 21.02.2016



    Friday, February 12, 2016

    ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெற


    ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெற என்ன செய்ய வேண்டும்?

    தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி என்பதை பற்றி தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல், எந்த அதிகாரியையும் பார்க்காமல் உட்கார்ந்த இடத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பெறும் எளிய வழி ஆன்லைன் மட்டுமே.

    இணையதளம்
    முதலில் தமிழ் நாடு தேர்தல் ஆணைய இணையதளம் செல்ல வேண்டும். இதற்கு www.elections.tn.gov.in ஐ க்ளிக் செய்தால் போதுமானது. அப்படி கிளிக் செய்தால் கீழ்கண்ட பக்கம் தோன்றும்.


    ஆன்லைன் 
    தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஆன்லைன் பதிவு செய்யும் வசதி ( Online Registration Facility ) என்பதை குறிப்பிடும் மஞ்சள் நிற லின்க் இனை க்ளிக் செய்ய வேண்டும்.


    பதிவு 
    முன்பு க்ளிக் செய்த மஞ்சள் நிற லின்க் தமிழக தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யும் வசதி கொண்ட புதிய பக்கத்தினை திறக்கும்.


    ஃபார்ம் 6 
    தமிழக தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யும் புதிய பக்கத்தில் ஃபார்ம் 6 என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இது மற்றும் ஒரு புதிய பக்கத்தினை திறக்கும். 


    தகவல்கள் 
    புதிய பக்கத்தில் உங்களது தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இங்கு விண்ணப்ப தாரரின் தகவல்கள், பிறந்த இடம் சார்ந்த தகவல்கள், இருப்பிடம் சார்ந்த தகவல்கள், குடும்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போரின் தகவல்கள் பதிவு செய்து, சான்றிதழ் பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.



    உறுதி 
    முன்பு பதிவு செய்த தகவல்களை உறுதி செய்து கீழ் பகுதியில் இருக்கும் சமிர்பிக்க ( Submit ) கோரும் பட்டனை அழுத்த வேண்டும்.
    சரிபார்ப்பு 
    சமர்பிக்க கோரும் பட்டனை க்ளிக் செய்த 2 அல்லது 3 நாட்களுக்குள் அரசு அலுவலர்கள் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு நேரடியாக வந்து நீங்கள் அளித்த தகவல்களை சரிபார்ப்பார்கள். சரிபார்த்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் உங்களது வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வந்து விடும்.

    நன்றி : திரு மேகநாதன் அவர்கள்
                சப் எடிட்டர், Oneindia - GIZBOT, 12.02.2016