disalbe Right click

Tuesday, August 16, 2016

கிரிமினல் கேஸ் - எக்ஸ்பார்ட்டி - தீர்ப்பு


கிரிமினல் கேஸ்-எக்ஸ்பார்ட்டி-என்ன செய்ய வேண்டும்?

மதுரை: 'கிரிமினல் வழக்கில் மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதற்காக ஒருதலைப்பட்சமாக (எக்ஸ்பார்ட்டி) தீர்ப்பளிக்க சட்டத்தில் இடமில்லை. ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் செல்வம். அருப்புக்கோட்டை கற்பகம். இவர்களுக்கு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். 

செல்வத்திற்கு எதிராக அவதுாறு வழக்கு மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரி அருப்புக்கோட்டை நீதித்துறை நடுவர் (ஜே.எம்.,) நீதிமன்றத்தில் கற்பகம் மனு செய்தார்.

செல்வத்திற்கு 2 மாதம் சிறை தண்டனை, 2000 ரூபாய் அபராதம் விதித்து, கற்பகத்திற்கு சில நிவாரணம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செல்வம் மேல்முறையீடு செய்தார். செல்வம் தரப்பில் தொடர்ந்து முறையாக யாரும் ஆஜராகாததால், நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக (எக்ஸ்பார்ட்டி) தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து செல்வம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் நாகேந்திரன் ஆஜரானார்.
நீதிபதி: கிரிமினல் வழக்கில், மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தொடர்ந்து முறையாக ஆஜராகவில்லை எனக்கூறி, கீழமை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தது சரியான நடை முறையல்ல. அவ்வாறு செய்ய சட்டத்தில் இடமில்லை.

இது திருமண விவகாரம் தொடர்பான வழக்கு. மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாவிட்டாலும், நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறேன். ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் மனுதாரர், எதிர்மனுதாரர் ஆக.,22 ல் ஆஜராக வேண்டும்.
அந்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 16.08.2016

Monday, August 15, 2016

மரங்களுக்கும் இன்சூரன்ஸ்


மரங்களுக்கும் இன்சூரன்ஸ் - என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி தமிழகத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இதை செயல்படுத்த முன்வந்துள்ளது. மனிதர்களின் எதிர்காலத்தை காப்பீடு முடிவுசெய்வதுபோல் பயிர்களுக்கும் காப்பீடு என்பது இன்றைய சூழலில் அவசியமானதாகிறது.அந்த வரிசையில் மரங்களுக்கான இன்சூரன்ஸ் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அடிப்படை நிபந்தனைகள்

* இன்சூரன்ஸ் என்றதும்,  'இருக்கிற செலவில் இதுவேறயா' என எரிச்சலாகாதீர்கள். உற்பத்திச் செலவில் வெறும் 1.25 சதவீத தொகையை பிரிமியமாக செலுத்தினால் போதுமானது.

* தமிழ்நாட்டில் ஏழு வகையான மரங்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அமலில் உள்ளது. தைலம், சவுக்கு, சூபாபுல், சிசு, மலைவேம்பு, தீக்குச்சி , குமிழ் போன்ற மரங்களை பயிர் செய்து வரும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

* இயற்கையாக ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள், வன விலங்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், புயலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், வெள்ளம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்ற அனைத்து விபத்துகளுக்கும் இந்த காப்பீட்டுத்திட்டம் பொருந்தும்.

* இவை மட்டுமல்லாது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கும் இந்த காப்பீட்டுத் திட்டமானது பொருந்தும். ஆனால் இதற்கான பிரிமியம் தொகை சற்று அதிகம்.

* 300 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை ஒரு ஏக்கருக்கு ஓர் ஆண்டிற்கான பிரிமியம் தொகையை நாம் இன்சூரன்ஸ்  நிறுவனத்திடம் செலுத்த வேண்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட இடர்ப்பாடுகள் நமக்கு நேரிடும்போது நாம் செய்துள்ள இன்சூரன்ஸ் நமது நஸ்டத்தை சமாளிக்க வல்லதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

* தமிழகத்தில் இந்தத் திட்டமானது தமிழ்நாடு காகிதக் கூழ் நிறுவனம் மூலம்வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்த முறை சாகுபடியை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி இது வரை சுமார் 5000 ஏக்கர் தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மரங்களின் பரப்பளவும் அதிகரித்ததோடு மரங்களின் பயன்பாடுகள் அதிகமுள்ள தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான மரத் தேவைகளை தாமே நிவர்த்தி செய்து கொள்கின்றன.

* இத்திட்டத்தில் பயன்பெற நாம் ஒப்பந்த முறை சாகுபடி திட்டத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.

இதில் உறுப்பினராக சேர விரும்புவோர், 

முதல்வர், 
வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
தமிழ் நாடு வேளாண் பல்கலைக் கழகம், 
மேட்டுப்பாளையம் – 641 301 

ஐ தொடர்பு கொள்ளலாம்.

- மு.முருகன்
(மாணவப் பத்திரிகையாளர்)

நன்றி : விகடன் செய்திகள் - 15.08.2016

குழந்தைகளை காணவில்லை - புகார்


குழந்தைகளை காணவில்லை - புகார் - என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் மாயமான 47 குழந்தைகளின் பெற்றோருக்கு 4 மாதத்துக்குள் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘சென்னையில் ரோட்டோரங்களில் வசிக்கும் குழந்தைகள் கடத்தப் படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் கடத்தல்காரர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் தெரு வோரம் வசித்து வந்த 8 மாத குழந்தை ரோசன், 9 மாத குழந்தை சரண்யா ஆகியோர் கடத்தப் பட்டுள்ளனர். அந்த பச்சிளம் குழந்தைகளைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. எனவே அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:

போலீஸார் தாக்கல் செய் துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் 47 குழந்தை கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப் பதாகவும், இந்த வழக்கில் தொடர் புடைய 2 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும் கூறி யுள்ளனர். குழந்தை கடத்தலை தடுக்க ரேஞ்ச் வாரியாக தனிப் பிரிவு தொடங்கவும், குழந்தை கடத்தலை சிபிசிஐடி ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை மாயமாகி 4 மாதங்களுக்குள் மீட்கப்பட வில்லை என்றால் அந்த வழக்கை சிபிசிஐடி ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவு இதுவரை கடை பிடிக்கப்படவில்லை. பெரும் பாலான குழந்தை கடத்தல் வழக்குகளில் இன்னும் எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். குழந்தை ஒருவேளை மீட்கப்பட்டாலும்கூட கடத்தல் கும்பலின் பின்னணியை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட அளவில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு போதிய போலீஸார் இல்லை என்பதால் குழந்தை கடத்தல் வழக்குகளை சரியாக விசாரிக்க முடியவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு மாவட்டத் திலும் பிரத்யேகமாக தனிப் பிரிவை ஏற்படுத்தி போதிய எண்ணிக்கையில் போலீஸாரை பணியமர்த்த வேண்டும்.

இழப்பீட்டை பொறுத்தவரை 47 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டியுள்ளது. ஏற் கெனவே 7 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகளுக்கு ரூ.3 லட்ச மும், 3 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகளுக்கு ரூ.2 லட்சமும், ஓராண்டுக்கு மேலான வழக்கு களுக்கு ரூ.1 லட்சமும் இடைக் கால நிவாரணமாக வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் உள்ள 47 குழந்தைகளின் குடும்பத்தா ருக்கும் இந்த தொகையை 4 மாதத்தில் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.08.2016

Saturday, August 13, 2016

செல்வமகள் சேமிப்புத்திட்டம்


செல்வமகள் சேமிப்புத்திட்டம் - என்ன செய்ய வேண்டும்?

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். 

இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மோடி அரசினால் பெண் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். 

இத்திட்டத்தின் கீழ் இது வரை 76 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுளதாகவும் 3,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது இந்தக் கணக்கின் பழைய விதி முறைகளில் இருந்து சில விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் இங்குச் செல்வ மகள் திட்டத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விதிமுறைகளை பார்ப்போம்.

கணக்கைத் திறத்தல் 

ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும்.

தகுதி 

இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்தப் பெண்குழந்தை பெண் குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றி இருத்தல் வேண்டும். ஒருவேலை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது மற்றும் கணக்கை அத்துடன் உரியக் காலத்திற்கு முன்னரே மூடப்படும்.

காலம் 

கணக்கைத் திறப்பதில் இருந்து 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய இயலும். இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதிகபட்ச முதலீடு 14 வருடங்களே இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டு முறை 

பணம் மற்றும் செக் வாயிலாக பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லாமல் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் மைய வங்கித் தீர்வு இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.

வட்டி விகிதம் 

சிறு சேமிப்பு திட்டம் போல செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும். 2015-2016 வரை 9.2 சதவீதம் இருந்த வட்டி விகிதம் ஜூன் 2016 முதல் 8.6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளை துவங்கு உள்ளவர்கள் எல்லா மதமும் 10-ம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வேலை தவறினால் வட்டி குறைந்துவிடும்

முதலீட்டு அளவுகள் 

குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும். ஏதேனும் அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் இல்லை. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம்.

கணக்கைத் தொடராத போது

குறைந்தபட்ச தொகையான 1,000 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும்.

இடை நிறுத்தப்பட்ட கணக்கை மீண்டும் துவங்குதல்:

கணக்கை இடை நிறுத்தப்பட்டு இருக்கும் போது ரூ.50 கடனமாக செலுத்தி மீண்டும் துவங்கலாம்.

வரி 

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த தொகைக்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம்.

முதிர்வு 

இந்தக் கணக்கு 21 வயது ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்துவிடும். அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது. ஆனால் முன்பு கணக்கை மூடும் வரை வட்டி அளிக்கப்படும் என்று இருந்தது.

கணக்கை இடமாற்றுதல்

கணக்கை வெறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

திரும்பப் பெறுதல் 

முன்பு ஒருவர் 50 சதவீதம் வரை திரட்டப்பட்ட தொகையில் இருந்து 18 வயது நிரம்பியதற்கான சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களை செலுத்தி செலவுக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்போது எவ்வளவு தொகை கட்டணமாகச் செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே பெற இயலும். மொத்தமாக எடுக்க வேண்டும் என்றால் ஐந்து தவணையாக எடுத்துக்கொல்லலாம்.

முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுதல் 

முன்பு எப்போது வேண்டும் என்றால் சாத்தியம். ஆனால் இப்போது குறைந்தது 5 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகே கணக்கை மூட இயலும். சில சமயங்களில் ஏதேனும் மருத்துவ உதவி, நோய், காப்பாளர் போன்ற சில காரணங்களின் போது முன்பாகவே பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளின் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

மூடல் நேரத்தில் தேவைப்படும் ஆவணங்கள் 

கணக்கை மூடும் நேரத்தில் அடையாள அட்டை, வீட்டு முகவைச் சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.

செல்வ மகள் திட்டம் எதனால் முக்கியம்?

முதலீடு செய்து சேமிப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் பொன்று நிறையப் பல திட்டங்கள் இருந்தாலும் செல்வ மகள் திட்டம் திட்டத்தில் எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லை என்பதே இதன் மிகப்பெரிய சாதகமாகும். மேலும் இதன் மூலம் எவ்வளவு சேமிக்க இயலும், லாபம் பெற இயலும் என்று எல்லா வற்றையும் எளிதாக கணக்கிட இயலும்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 14.08.2016

பெண்கள் மொபைலில் பதிவு


பெண்கள் மொபைலில் பதிவு - என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் தங்கள் மொபைலில் பதிந்திருக்க வேண்டிய 10 ஆப்ஸ்!

1. சேஃப்டி பின்:

இந்த ஆப் முழுவதும் பர்சனல் செக்யூரிட்டியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. இது அவசர எண் பதிவு, திசை வழிகாட்டல் என பல அம்சங்களை உள்ளடக்கியது. இதில் பாதுகாப்பான இடங்களைப்  பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த ஆப் ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பானிஷ் என மூன்று மொழிகளில் கிடைக்கிறது. நமக்கு ஏற்ற மொழிகளை இதில் பதிவிறக்கம் செய்யலாம்.

2. ரக்‌ஷா:


இதில் உங்களுக்கு நெருங்கியவரின் எண்ணை பதிந்து வைத்து விட வேண்டும். நீங்கள் ஆபத்தான தருணத்தில் இருந்தால், கொடுக்கப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், அவர்களுக்கு அலர்ட் மெசேஜ் செல்லும். அதாவது அந்த குறிப்பிட்ட நபருக்கு தகவல் சென்று சேர, வால்யூம் பட்டனை மூன்று நொடிகள் அழுத்தினால் போதும், அவருக்கு அலர்ட் சென்று சேரும்.

3. ஹிம்மாட்:

டெல்லி போலீஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஆப். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தவுடன் டெல்லி போலீஸ் வெப்சைட்டில் தேவைப்படும் தகவல்களைப் பதிய வேண்டும். பதிவு நிறைவு செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். இந்த எண்ணை டைப் செய்து உங்களுடைய பதிவை உறுதி செய்து கொள்ளலாம். 

எதிர்பாராத விதமாக பிரச்னைகள் ஏற்படும் போது SOS Alert இந்த ஆப் வழியாக, இருக்கும் இடத்தின் விபரத்தோடு, ஆடியோ மற்றும் வீடியோ பதிவானது டெல்லி போலீஸாருக்கு தெரிவிக்கப்படும்.

4.பெண்கள் பாதுகாப்பு:


நீங்கள் ஆபத்தான ஒரு இடத்திலோ அல்லது சூழ்நிலையிலோ மாட்டிக் கொண்டால், நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருக்கும் எண்ணுக்கு, நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியானது கூகுள் மேப் மூலம்  டைப் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுவிடும். மேலும், உங்களின் எதிரில் இருக்கும் இரண்டு படங்களையும் எடுத்து, சர்வருடன் தானாக இணைப்பட்டு குறிப்பிட்டுள்ள நபருக்கு அனுப்பிவிடும். இதில், மூன்று பட்டன்கள் இருக்கின்றன. சூழல்களைப் பொறுத்து அந்த பட்டன்களை அழுத்துவதன் வாயிலாகச் செய்தியானது உங்களின் நெருங்கியவருக்குச் சென்று விடும். அதைப் பொறுத்து உங்களைக்  காப்பாற்றும் முயற்சியினை அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

5. ஸ்மார்ட் 24X7


பல மாநிலங்களின் போலீஸாருடன் இணைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆப். முக்கியமாகப் பெண்கள் மற்றும் முதியோருக்கு இது பெருமளவில் உதவுகிறது. இந்த ஆப் வாயிலாக பேனிக் அலர்ட்டானது அவரச காலத்தில் அனுப்பப்படும். இந்த ஆப்பில் பேனிக் பட்டனுடன், வாய்ஸ் மற்றும் அந்த இடத்தின் படங்கள் என அனைத்து தகவல்களும், ஒரு சேர குறிப்பிட்டுள்ள நபருக்குச் சென்றுவிடும். எந்த மாதிரியான உதவிகள் வேண்டும் என்பதைப் பொறுத்து பட்டன்களை தட்டி, சப்மிட் கொடுத்து விட்டால் உங்களுக்கான உதவியானது உங்களைச் சார்ந்தவரிடமிருந்து வரும்.

6. ஷேக் 2 சேஃப்டி:


மிகவும் சுலபமாகப் பயன்படுத்தக் கூடிய ஆப் இது. அவசர காலத்தில் ஸ்மார்ட்போனை ஷேக் செய்தால் போதும் அல்லது பவர் பட்டனை நான்கு முறை அழுத்தினாலே நீங்கள் பதிவு செய்துள்ள நபருக்கு உங்களுடைய 'உதவி தேவை' என்ற செய்தியானது சென்று விடும். லாக் ஸ்கிரீனுடன் இதனை பதிவு செய்து கொள்ளலாம். உங்களைத் தவிர மற்றவரும் இந்த எண்ணைப் பார்த்துவிட்டு அவருக்குப் பதிலளிக்கலாம். இதற்கு இன்டர்நெட் கனெக்‌ஷன் தேவையில்லை. விபத்து, பாலியல் தொந்தரவு, கொள்ளை, இயற்கை சீரழிவு போன்ற காலங்களில் பெரும் உதவியாக இருக்கும்.

7. என் பில்:


குழந்தைப்பேறுக்காக காத்திருக்கிறீர்களா?... உங்களுக்கே உங்களுக்கான ஆப் தான் இது. மாதவிடாயின் போது எவ்வளவு உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. எப்பொழுது நீங்கள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது, நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். எந்தெந்த நாட்களில், என்னென்ன மாதிரியான சிம்டம்ஸ் இருக்கும் என அவ்வப்போது உங்களுக்கு தகவல் சொல்லிவிடும் இந்த ஆப்.

8. சிடோர் ஸ்குவாட்:


பெண்களுக்குப் பெரிய பிரச்னையே டாய்லெட் பிரச்னைதான். பயணம் செய்யும் இடங்கள் அல்லது புது இடங்களில் ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடும், இந்த ஆப். உங்களுக்கு அருகாமையில் உள்ள ரெஸ்ட் ரூம்களை பயன்படுத்தியவர்களின் கமெண்ட்ஸ் அனைத்தையும் காண்பித்து விடும் என்பதால் உங்களுக்கு சிரமம் கொடுக்காமல் நல்ல ரெஸ்ட்ரூம்களை உங்களுக்குக் கண்டுபிடித்து தந்து விடும். ஸோ, கூலாகப் பயணம் செய்யலாம்.  

9.ஒ.பி.ஐ:


எந்த கலர் நெயில் பாலிஷ் உங்களது உடல் நிறத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என்பதை உங்களுக்குக் காட்டிவிடும் இந்த ஆப். இந்த ஆப்பின் கேமரா வாயிலாக உங்கள் விரலை படம் எடுத்தால்,  எந்த கலர் உங்களுக்கு கச்சிதமாக இருக்கும் என்பதற்கான ஆப்ஷன்களை காட்டிவிடும். அதற்கு பிறகு என்ன...? உங்களுக்கு ஏற்ற நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாமே..?

10. மிண்ட்:


பட்ஜெட்டை எப்படி மெயின்டெயின் செய்வது என்று தெரியவில்லை. எழுதி வைக்கவோ, நினைவில் வைக்கவோ நேரம் இல்லை என்பவர்களுக்கு இந்த ஆப் ஒரு வரப் பிரசாதம். இதில் உங்களுடைய பேங்க் அக்கவுன்ட் மற்றும் கிரடிட் கார்ட் போன்ற தகவல்களைப் பதிவு செய்து, உங்களுடைய செலவுகளை டைப் செய்து பதிவு செய்து கொண்டே வந்தால், ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் செய்திருக்கும் செலவு கணக்கினை துல்லியமாக காண்பிக்கும். கடந்த மாதம் எவ்வளவு செலவாகியிருக்கிறது. இந்த மாதம் எவ்வளவு செலவு என்பதையும் உங்களுக்கு கம்பேர் செய்து காண்பித்து விடும்.

- வே. கிருஷ்ணவேணி

நன்றி : விகடன் செய்திகள் - 12.08.2016

டிராபிக் போலீஸ் அதிகாரங்கள்


டிராபிக் போலீஸ் அதிகாரங்கள் - என்ன செய்ய வேண்டும்?

சாலையில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்வதற்காக டிராஃபிக் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் சில வேளைகளில் பெரும் களேபரங்களை ஏற்படுத்துவதை தினசரி பார்க்க முடியும்.

 சிலவேளைகளில் போலீசாருக்கு பயந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவதும், தாறுமாறு வேகத்தில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

லஞ்சம், அலைகழிப்புக்கு பயந்துதான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், இதுபோன்று டிராஃபிக் போலீசார் நிறுத்தும்பட்சத்தில், வாகன ஓட்டிகளுக்கான உரிமைகளை தெரிந்து வைத்துக் கொண்டால், ஓரளவு இந்த அச்சத்திலிருந்து விடுபட முடியும். 

இது நிச்சயம் உங்கள் அச்சத்தை போக்கி தேவையில்லாத பதற்றத்தை தணிக்கும் என நம்புகிறோம்.

வாகன தணிக்கை

சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து துறை அதிகாரி எந்தவொரு வாகனத்தையும் ஆய்வு செய்ய உரிமை உண்டு. அவ்வாறு, உங்கள் வாகனத்தை ஆய்வுக்காக நிறுத்த சொல்லும்பட்சத்தில், வண்டியின் வேகத்தை குறைத்து, சாலையின் ஓரமாக நிறுத்துங்கள். தப்பித்துச் செல்ல முயற்சிப்பது விபத்துக்களுக்கு வழிகோலும்.

காவலருக்கான அதிகாரம்

சாதாரண போக்குவரத்து காவலர் உங்களது வாகனத்தின் ஆவணங்களை கேட்பதற்கோ, வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கோ அதிகாரம் இல்லை. ஏஎஸ்ஐ, எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மட்டுமே ஸ்பாட் ஃபைன் போட அதிகாரம் கொண்டவர்கள். 

ஏஎஸ்ஐ ரேங்கிற்கு கீழே உள்ள தலைமை காவலர் மற்றும் காவலர்கள் செல்லான் போட முடியாது. அதேநேரத்தில், விதிமீறல்கள் மற்றும் அதன் தன்மை குறித்து குறிப்பெடுக்கவும், அதுகுறித்து காவல்துறை புகார் பதிவு மையத்திற்கு தகவல் அளிக்க முடியும்.

கைது அதிகாரம்

சாதாரண போக்குவரத்து காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்யவோ அல்லது வாகன ஓட்டிகளை கைது செய்யவோ முடியாது. வாகன புகை பரிசோதனை சான்றையும் அவர்கள் கேட்க முடியாது. அது போக்குவரத்து அதிகாரிகளால் மட்டுமே கேட்க முடியும். மேலும், வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கும் அதிகாரம் இல்லை.

ஸ்பாட் ஃபைன்

சிக்னல் ஜம்ப், குடிபோதை டிரைவிங், மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஸ்பாட் ஃபைன் போடப்பட்டால், அதனை உடனே கட்ட இயலாத சூழல் இருந்தால் மட்டுமே, டிரைவிங் லைசென்ஸை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்றத்தில் அபாரதம் கட்டிய பிறகு திரும்ப பெற முடியும். 

அதேபோன்று, நிர்ணயித்ததைவிட அதிக அபராதம் விதித்தாலும், கோர்ட்டில் கட்டி விடுகிறேன் என்று கூறிவிட்டு செல்லானை பெற்றுக் கொண்டு வந்துவிடலாம்.

டிரைவிங் லைசென்ஸ்

சிக்னல் ஜம்ப், குடிபோதை டிரைவிங், அதிக பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய வழி உள்ளது. அதேநேரத்தில், அதற்குண்டான உரிய செல்லான் இல்லாமல் உங்களது டிரைவிங் லைசென்ஸை டிராஃபிக் போலீஸ் எடுத்து செல்ல இயலாது. எனவே, அதற்குண்டான உரிய ஆவணத்தை கேட்டு பெறுவது அவசியம்.

காரை எடுத்துச் சென்றால்...

காரில் யாரேனும் அமர்ந்திருக்கும்போது, காரை போலீசார் வேறு வாகனம் டோ செய்து எடுத்துச் செல்ல முடியாது. அதேநேரத்தில், போலீசாரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டு காரை விட்டு இறங்கிவிடுவது அவசியம்.

பெண்களுக்கு...

மாலை 6 மணிக்கு மேல் பெண் வாகன ஓட்டிகள் அல்லது பெண்களை ஏற்றி வரும் வாகனங்கள் போலீசாரால் நிறுத்தப்பட்டால், அவரை பெண் காவலர் மூலமாகவே ஆய்வு செய்ய முடியும் . மேலும், பெண் காவலர் இல்லாதபட்சத்தில், அவரை வரவழைத்து ஆய்வு செய்ய சொல்லவும் பெண்களுக்கு உரிமை உண்டு.

அபராதம் 

அபராதம் விதிக்கும் டிராஃபிக் போலீசாரிடம் அதற்குண்டான செல்லான் புத்தகம் அல்லது மின்னணு எந்திரம் கைவசம் இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர்கள் அபராதம் விதிக்க முடியாது.

இதுதான் விதி...

சாலை விதியை மீறிய நிலையில், உங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை போக்குவரத்து போலீசாரிடம் காட்டுவது அவசியம். மோட்டார் வாகனச் சட்டம் 130-ன் படி சீருடையுடன் பணியில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்களை காட்டுவது அவசியம், ஆனால், ஒப்படைக்கும் அவசியம் இல்லை.

இதுவும் செய்ய முடியாது...

இன்று பல போலீசார் வண்டியை நிறுத்தியவுடன் வாகனத்தில் உள்ள சாவியை முதலில் பிடுங்கிக் கொள்கின்றனர். இதுவும் தவறு. அதேபோன்று, காரின் கதவுகளை கட்டாயமாக திறந்து உங்களை வெளியேற்றுவதும் தவறு.

கைது செய்தால்...

விதி மீறலுக்காக கைது செய்யும்பட்சத்தில், நேராக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் உங்களை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். 

எனவே, விதிமுறைகளை மீறும்பட்சத்தில் இந்த விதிகளை மனதில் வைத்தால் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க முடியும்.

இதெல்லாம் விடுங்க...

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்பதுடன், போலீசாருக்கு பயந்து விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான். 

அதேநேரத்தில், 
வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில்தான் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்பதையும் மனதில் வைக்கவும்.

Written By: Saravana Rajan 
நன்றி : டிரைவ் ஸ்பார்க் - 12.08.2016

Tuesday, August 9, 2016

ஆன்லைன் மூலமாக காவல்துறையில் புகார்


ஆன்லைன் மூலமாக காவல்துறையில் கம்ப்ளைண்ட் செய்ய 
என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைன் மூலமாக காவல்துறையில் கம்ப்ளண்ட் செய்ய கீழே காணும் லின்க்கை கிளிக் செய்யுங்கள். 

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?5

அதில்,   உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.

4 MPஅளவிற்கு தங்களிடம் உள்ள (PDF,PNG,JPEG) புகார் சம்பந்தமான  ஆவணங்களை தங்கள் புகாருடன் இணைக்கலாம்.

உங்கள் புகாரின் (CSR/FIR) நிலையை அறிந்து கொள்ளலாம்.

உங்கள் புகார் குறித்து காவல்துறையினர் எடுத்த முடிவை தெரிந்து கொள்ளலாம்.

அதனை “பிரிண்ட்” எடுத்துக் கொள்ளலாம்.

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?5

மேற்கண்ட லின்க்கை கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் இடது பக்கத்தில் உங்கள் பெயர், பாலினம், பிறந்தநாள், முகவரி, செல் நம்பர் மற்றும் இமெயில் ஐடி ஆகிய விபரங்களை நிரப்ப வேண்டும்.

வலது பக்கத்தில்  முதலில் குற்றம் பற்றிய தன்மைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் தங்களது புகாருக்கு ஏற்ற ஒன்றை தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த நாளில் குற்றம் நடந்தது என்பதை அடுத்து குறிப்பிட வேண்டும்.

 எந்த இடத்தில் குற்றம் நடந்தது என்பதைப் பற்றி அடுத்து குறிப்பிட வேண்டும்.

உங்கள் புகாரைப் பற்றி அடுத்து உள்ள பாக்ஸில் சுருக்கமாக டைப் செய்ய வேண்டும்.

அதற்கு கீழே டாக்குமெண்ட் (ஆவண நகல்கள்) இணைக்கப்பட்டு உள்ளதா, இல்லையா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.

அதற்கும் கீழே இருக்கும் சிறிய பாக்ஸில் அங்கு தெரிகின்ற செக்யூரிட்டி எண்ணை டைப் செய்ய வேண்டும்.

இறுதியாக உங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யவுடன் உங்களுக்கு பதிவு எண் வழங்கப்படும். 

அந்த பதிவு எண் மூலம் தங்கள் புகாரின் நிலையை அறியலாம்.

Friday, August 5, 2016

ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்


ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க 
என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஆன் லைனில் புகார் அளிப்பதற்கு  இங்கு  http://onlinegdp.tn.nic.in/  கிளிக் செய்யுங்கள்.

 அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் பொதுமக்களின் குறை தீர்ப்பு என்பது  இரண்டற கலந்த ஒன்றாகும்.

 அனைத்து அரசுத் துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுவது மிக முக்கிய பணி. பொது மக்களின் கோரிக்கையை கையாளுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசு துறைகளுக்கும் இருக்கும் பணிகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் ஆவணங்களின் துணைகொண்டு கண்காணிப்பது என்பது காலதாமத மட்டுமின்றி நிர்வாகத்துக்குத் தேவையான குறை தீர்ப்பு புள்ளி விவரங்களை துல்லியமாக பெற முடியாது. 

இணைய வழி நடைமுறையானது மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவது மட்டுமின்றி கோரிக்கை தீர்வையும் எளிதாக்குகிறது .

ஆன்லைன் மூலமாக மாவட்ட நிர்வாகத்தின் வழியாகப் பெறப்படும் கோரிக்கை மனுக்கள், தொடர்புடைய துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதுடன், அது பற்றிய விபரங்கள் மனுதாரருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

மேற்படி துறையானது குறை தீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து அதனை  கண்காணிக்கிறது. 

கோரிக்கை பெற்றவுடன் மாவட்ட நிர்வாகமானது, கோரிக்கையை தரம் பிரித்து சட்ட சிக்கல் மற்றும் நுண்ணிய கோரிக்கைகளை நன்கு ஆய்வு செய்து குறை தீர்ப்புக்கான ஆலோசனையை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்குகிறது.


நன்றி : 
திரு நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் அவர்கள்

சான்றொப்பம் தேவையில்லை


சான்றொப்பம் தேவையில்லை-என்ன செய்ய வேண்டும்?

தமிழக அரசு அரசாணை  எண்:96 - நகல் இணைக்கப்பட்டுள்ளது

சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.







அதற்குப் பதிலாக, சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிடுவதை அனுமதிக்க வேண்டும் என அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர்- நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

குரூப் "ஏ', "பி' பிரிவு அரசு அதிகாரிகள் சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் வழங்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த நடைமுறை மக்களுக்குப் பயனளிக்காததோடு, அவர்களின் நேரத்தையும், அரசு அதிகாரிகளின் நேரத்தையும் வீணடிக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த நடைமுறையை மாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

மக்களின் சிரமத்தைக் குறைப்பது, விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிப்பதில் உள்ள பிரச்னைகள், அரசு அலுவலகங்களில் தேவையற்ற கோப்புகள் தேங்குவதைக் குறைத்தல், நடைமுறைகளை எளிமையாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறை மறுபரிசீலனை செய்யப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பின்போது சான்றொப்பம் இடப்பட்ட நகல்களோடு, அசல் சான்றிதழ்களும் தேவைப்படுகின்றன. எனவே, சான்றொப்பம் இடும் நடைமுறை உண்மையில் எவ்விதப் பயனையும் தரவில்லை. மறு ஆய்வுக்குப் பிறகு அனைத்து அரசுத் துறைகளிலும் சான்றொப்பமிடும் நடைமுறையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து அரசுத் துறைகளிலும் குரூப் "ஏ', "பி' பிரிவு அதிகாரிகள் சான்றொப்பம் அளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, சுய சான்றொப்பமிடுவதை அனுமதிக்க வேண்டும். நேர்காணல் அல்லது பணி நியமனத்தின்போது அசல் சான்றிதழ்களை காண்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி நாளிதழ் - 13.10.2014


Wednesday, August 3, 2016

ஜீவனாம்சம்


ஜீவனாம்சம் - என்ன செய்ய வேண்டும்?

உண்ண உணவு... உடுத்த உடை... வசிக்க இடம்... 

இந்த மூன்று தேவைகளும் இல்லாத மனித வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. வாழ்க்கையின்  அடிப்படை ஆதாரங்களான இந்த மூன்றும் எத்தனை மனிதர்களுக்குக் கிடைக்கின்றன? 

தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ளும் நிலையில்  இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மற்றவரை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள். தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயலாமலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவரும் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒரு இந்தியக்  குடிமகனுக்கு நம் நாட்டுச் சட்டம் என்ன வழி சொல்கிறது? 

அது கொடுக்கும் பாதுகாப்புதான் என்ன? 

இந்திய குற்றவியல் சட்டத்தின் (Cr P.C) பிரிவு 125, 126, 127 மற்றும் 128.

இந்திய நாட்டைப் பொறுத்தவரை சிவில் சட்டங்கள் என்று சொல்லக் கூடிய தனி மனித உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் திருமணச் சட்டங்கள்,  சொத்துரிமை சட்டங்கள், ஜீவனாம்சம் போன்றவை ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டுள்ளன. எனினும் மேற்கூறிய  இந்தச் சட்டப்பிரிவு இந்திய மக்கள் அனைவருக்கும் ஜீவனாம்சம் கோர ஒரு பொதுவான சட்டமாகவே உள்ளது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ்...

*   தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத மனைவி.

*  தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத சட்டம் அங்கீகரிக்கும் மற்றும் சட்டம் அங்கீகரிக்காத மைனர் குழந்தைகள். ஒருவேளை இவர்களுக்கு  திருமணம் நடைபெற்றிருந்தாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.

*      வயது வந்த சட்டப்பூர்வமான அல்லது சட்டம் அங்கீகரிக்காத ஒருவரின் மகன், மகள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும்  பட்சத்தில்.

*  ஒரு நபரின் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத தாய், தந்தையர்.

மேற்கூறிய இவர்கள் அனைவரும் தன்னுடைய கணவர், தகப்பன் மற்றும் பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோர இந்தப் பிரிவு வழிவகை செய்கிறது.   இந்தச் சட்டப் பிரிவில் மனைவி என்ற சொல் சட்டப்பூர்வமான மனைவியை மட்டுமே குறிக்கும். மேலும், கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்  மறுமணம் செய்யாத பட்சத்திலும், எந்தவிதமான நிரந்தர ஜீவனாம்சம் பெறாத பட்சத்திலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள எந்தவிதமான  வருமானமும் இல்லாத பட்சத்திலும் இந்தச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் கோர இயலும்.

இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய விரும்பும் நபர் தான் எங்கே வசிக்கிறாரோ, எதிர் தரப்பினருடன் கடைசியாக எங்கே வசித்தாரோ,  அந்த  இடத்திற்குட்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலோ (Magistrate Court) அல்லது குடும்பநல நீதிமன்றத்திலோ ஜீவனாம்ச வழக்கு தாக்கல்  செய்யலாம்.  மைனர் குழந்தைகளுக்கு தாயே காப்பாளராக இருந்து வழக்கு தாக்கல் செய்ய இயலும்,  இது சட்டம் ஏற்றுக் கொள்ளாத குழந்தைக்கும்  (Illegitimate child)  பொருந்தும்.  மேலும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைக்கால ஜீவனாம்சம் கோரவும் இந்தச் சட்டத்தில்  இடமுள்ளது.  

நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றம்  (rise in cost of living) எதிர்தரப்பினராக இருக்கும் கணவரின், தந்தையின், மகனின் வருவாயில்  ஏற்படும் ஏற்ற இறக்கத்தில் ஏற்படும் மாற்றம், ஜீவனாம்சம் கோரும் மற்றும் ஜீவனாம்சம் பெரும் நபரின் ஊதியம் ஈட்டக்கூடிய நிலையில் ஏற்படும்  மாற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னைப் பாதுகாத்து கொள்ளக் கூடிய  நிலையில் மாற்றம், விவாகரத்தான மனைவியின் மறுமணம் அல்லது   விவாகரத்து ஆகாத மனைவியின் தவறான நடத்தை, மைனரிலிருந்து மேஜராகும் பிள்ளைகள் போன்ற ஒரு சில காரணங்களால் நீதிமன்றம் நியமித்த  ஜீவனாம்ச தொகையை உயர்த்தவோ, குறைக்கவோ இந்தச் சட்டத்தின் பிரிவு 127ன் கீழ் வழிவகை உள்ளது.

நீதிமன்றம் கொடுத்த ஜீவனாம்சம் தொகையினை எதிர்தரப்பினர் தராமலும் எந்தவிதமான மேல்முறையீடும் செய்யாமலும் இருக்கும் பட்சத்தில் அந்தத்  தொகையை பெற ஒரு மனு தாக்கல் செய்து அந்தத் தொகையினை நீதிமன்றத்தில் செலுத்தவோ அல்லது ஜீவனாம்சம் கொடுக்காத பட்சத்தில்  எதிராளியை சிறையெடுக்கவோ முடியும்.  இந்த வழக்குகளில் எதிர் தரப்பினரிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் ஒரே நோக்கத்தில்தான் அவரை  சிறையெடுக்கும் ஒரு முடிவினை நீதிமன்றம் எடுக்கும்.  எதிர்தரப்பினர் ஜீவனாம்சம் செலுத்திவிடும் பட்சத்தில் சிறையெடுப்பு தவிர்க்கப்படும்.

Savitaben Somabhai Bhatia Vs State of Gujarat and others (2005)

இந்த வழக்கில் ஒரு ஆண் மகன் தன்னை தானே பராமரித்துக்கொள்ள இயலாத நிலையி லிருக்கும் தன்னுடைய மனைவி, மக்கள் மற்றும்  பெற்றோரை பராமரிப்பது இயற்கை அவன் மீது விதித்திருக்கும் தர்மப்படியான ஒரு கடமை. இவ்வாறு கடமையாற்றுவது ஒரு சமூக நீதியின்  வெளிப்பாடு என்று ஜீவனாம்சத்தைப் பற்றி தீர்ப்பு வழங்கப்பட்டது.

Chaturbhuj  Vs Sita Bao (2008)

இந்த வழக்கில் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 125 இயற்றப்பட்டதன் நோக்கம் தன்னால் பராமரிக்கப்பட வேண்டியவர்களை பராமரிக்க  தவறும் நபருக்கு அவருடைய தர்மப்படியான கடமையை புரியவைக்க முயற்சிப்போமேயன்றி தண்டிப்பது நோக்கமல்ல.  

Provision Of Muslim Women (Protection Of Rights On Divorce) Act 1986

1985ம் ஆண்டு நமது உச்ச நீதிமன்றத்தில் Mohammed  Ahmed Khan Vs ShahBanu Begum என்ற சரித்திரப் புகழ் மிக்க வழக்கில் ஒரு  இஸ்லாமியப் பெண்ணிற்கு தலாக்கிற்கு பிறகு இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ் கொடுத்த தீர்ப்பு இஸ்லாமிய சமூகத்தால்  ஏற்றுக்கொள்ள இயலாத காரணத்தினால் மேற்கூறிய இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது.  மேற்கூறிய இந்தச் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் இஸ்லாமிய  சமூகத்தாரால் தலாக்கிற்குப் பிறகு ஒரு பெண் கடைப்பிடிக்கும் இதாத் சமயத்திலேயே அந்தப் பெண்ணிற்கு தன் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான  ஜீவனாம்சத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. தலாக் செய்யப்பட்ட உடனே அவர்களுக்குப் பிறக்கும் சட்டப்படியான   குழந்தைக்கான  ஜீவனாம்சமும், மேலும் திருமணத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட மெஹர் தொகையும் செலுத்தப்பட வேண்டும்.  அந்தப் பெண்ணிற்கு திருமணத்திற்கு  முன்னரும் திருமணத்தின்போதும்  அவளது  உற்றார், உறவினர், நண்பர்கள், கணவர் மற்றும் அவரின் உறவினர்களால் கொடுக்கப்பட்ட பரிசுப்  பொருட்கள் அனைத்தும் திருப்பித் தரப்படவேண்டும்.  

ஒரு வேளை தலாக் செய்த கணவர் மேற்கூறியவற்றை சரிவர நடைமுறை படுத்தாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இந்திய குற்றவியல்  சட்டத்தின் பிரிவு 125ன் கீழ் வழக்கு தொடர இயலும்.  தலாக்கிற்கு பிறகு மறுமணம் செய்து கொண்ட இஸ்லாமிய பெண்ணிற்கு முழுமையான  ஜீவனாம்ச தொகை தராத பட்சத்தில் சட்டப்படி அதனை முன்னாள் கணவரிடமிருந்து கோர மறுமணம் ஒரு தடையல்ல.

The Hindu Marraige Act 1955 (இந்து திருமணச் சட்டம் 1955)

இந்தச் சட்டத்தின் பிரிவு 24ன் கீழ் பாதிக்கப்பட்ட கணவனோ அல்லது மனைவியோ எதிர்தரப்பினரிடமிருந்து ஜீவனாம்சம் கோர இயலும். இந்து  திருமணச் சட்டத்தின்கீழ் ஏதாவது ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் மேற்கூறிய இந்தச் சட்டப்பிரிவினை பயன்படுத்த இயலும்.

பிரிவு 25ன் கீழ் ஒரு வழக்கு விவாகரத்தில் முடியும் பட்சத்தில் வாழ்நாள் ஜீவனாம்சத்தை ஒரே தவணையில் பெற்றுக் கொள்ள இந்தப் பிரிவு  வழிவகை செய்துள்ளது.

Hindu Adoption and Maintenance Act 1956 
(இந்து தத்தெடுத்தல் மற்றும் ஜீவனாம்ச சட்டம் 1956)

இந்தச் சட்டத்தின் பிரிவு 18 ஒரு இந்து மனைவி அவர் வாழ்நாள் முழுவதும் தன் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோர வழிவகை செய்துள்ளது.   இந்தச் சட்டத்தின் கீழ் நியாயமான காரணத்திற்காக கணவரை விட்டுப் பிரிந்த மனைவியும் ஜீவனாம்சம் கோரலாம்.

1. எந்த ஒரு தகுந்த காரணமும் இல்லாமல் தன் மனைவியை கைவிட்டு பராமரிக்க தவறிய கணவன்.

2. கணவனால் மனதளவிலும், உடலளவிலும் வன்கொடுமை அனுபவித்த பெண்.

3. தொழுநோயால் பாதிக்கப்பட்ட கணவர்.

4. வேறு ஒரு மனைவியுடன் வாழ்பவர்.

5. வேறு ஒரு பெண்ணுடன் அதே வீட்டில் தொடர்ந்து அல்லது அவ்வப்போது வசிப்பது.

6. இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது.

7. வேறு ஏதாவது ஒரு நியாயமான காரணத்திற்காக பிரிந்து இருத்தல்.

தகாத உறவில் ஈடுபட்ட, ஈடுபட்டிருக்கும் ஒரு மனைவி இந்தச் சட்டத்தின் கீழ் தனி வசிப்பிடமோ, ஜீவனாம்சமோ கோர இயலாது.

*  இந்தச் சட்டத்தின் பிரிவு 19ன் கீழ் கணவனை இழந்த பெண் தன்னுடைய சுய சம்பாத்தியம் அல்லது சொத்தின் மூலம் வரும் வருமானத்தாலோ,  தன்னுடையோ கணவரோ அல்லது தாய், தந்தையரின் சொத்தின் மூலம் வரும் வருமானத்தினாலோ, மேலும் தன் மகன் மற்றும் மகளின்  பராமரிப்பின் மூலம் அல்லது அவர்களது சொத்தின் மூலம் வரும் வருமானத்தினாலோ தன்னைக் காத்துக்கொள்ள இயலாத பட்சத்தில் தன்னுடைய  கணவரின் தந்தையிடமிருந்து (மாமனார்) ஜீவனாம்சம் கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*  இச்சட்டத்தின் பிரிவு 20ன் கீழ் ஒரு இந்து குடிமகனின் சட்டப்பூர்வமான அல்லது சட்டம் ஏற்றுக் கொள்ளாத குழந்தை, தன்னை பாதுகாத்துக்  கொள்ள முடியாத வயதான பெற்றோர், தன்னைப் பராமரித்துக் கொள்ள இயலாத திருமணமாகாத மகள் ஆகியோர் ஜீவனாம்சம் கோர இயலும்.  நீதிமன்றம் ஜீவனாம்சம் வழக்கின் போது வழக்கு தொடுப்பவரின் நிலை, எதிராளியின் வருமானம், வாழ்க்கைத் தரம் அனைத்தையும் அலசி ஆராய்ந்து  ஒரு ஜீவனாம்சம் கோருபவரின் வாழ்வாதாரத்திற்கான போதிய தொகையை நிர்ணயிக்கும்.

Protection of Women from Domestic Violence Act 2005 
(குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005)

நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் குற்றங்களில் பெரும்பாலான குற்றங்கள் பெண்களின் மீது செலுத்தப்படும் குடும்ப  வன்முறையே ஆகும்.  அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையால்  பாதிக்கப்பட்டு தன் கணவராலோ, சகோதரனாலோ, மகனாலோ, உடன் வசிக்கும் ஆண் நண்பராலோ, தந்தையாலோ நிர்கதியாக விடப்படும் பெண்  தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆண்மகனிடமிருந்து ஜீவனாம்சமும் நஷ்டஈடும் கோர இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது. 

பொதுவாக இந்திய  சட்டங்களில் மனைவி என்ற அந்தஸ்துடைய பெண் மட்டுமே ஜீவனாம்சம் கோர சட்டம் வழிவகை செய்துள்ளது. எனினும் முதல் முறையாக  மனைவியல்லாத ஒரு ஆண்மகனுக்கு துணையாக மனைவி போல் வாழும் ஒரு பெண்ணும் ஜீவனாம்சம் கோர இந்தச் சட்டமே முன்னோடியாக  விளங்கியது.  இந்தச் சட்டத்தைப் பற்றி முழுமையாக பின்னர் தெரிந்து கொள்வோம்.

Narinder Pal Kaur  Vs M.S. Chawla (2008)

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கூறிய வழக்கில் மனைவியல்லாத ஒரு பெண்ணிற்கு ஜீவனாம்ச உரிமை கொடுத்து தீர்ப்பளித்தது. காலங்காலமாக ஒரு ஆண் பல மனைவிகள் வைத்துக்கொண்டது நம் இதிகாசங்களில், புராணங்களில் பார்த்துவந்த ஒன்று.  இந்தியாவில் திருமணச்  சட்டங்கள் இயற்றப்பட்டவுடன் ஒரு தாரம் முறை வலியுறுத்தப்பட்டது. 

அதன் அடிப்படையில் சட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் திருமண  உறவில் அல்லாத ஒரு பெண் ஜீவனாம்சம் கோர சட்டம் அனுமதிக்கவில்லை.  எனினும் மேற்கூறிய வழக்கில் ஒரு ஆண் தான் ஏற்கனவே  மணமாகியிருந்ததை மறைத்து 14 ஆண்டுகள் ஒரு பெண்ணுடன் மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்து இரண்டு குழந்தைகளையும் பெற்று  சமூகத்தில் அந்த குடும்பத்தின் தலைவன் என்று வெளிக்காட்டிக்கொண்டு இருந்த காரணத்தால் இந்த வழக்கின் தீர்ப்பில் இந்த இரண்டாவது  மனைவியையும் சட்டப்பூர்வமாக ஜீவனாம்சம் பெருவதற்கு அங்கீகரிக்கலாம் என்று கூறி நீதிமன்றம் ஜீவனாம்சமும் வழங்கியது.

Komalam Amma Vs Kumara Pillai  Raghavan Pillai and others (2008)

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பில் ஒரு பெண்ணிற்கு வசிக்கும்  இருப்பிடம் ஏற்படுத்திக் கொடுப்பதும் ஜீவனாம்சத்தின் ஒரு அங்கமே என்று  கூறியுள்ளது.  மேலும், அந்த இருப்பிடமும் அந்தப் பெண் பழக்கப்பட்ட அந்தஸ்திலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

Maintenance and Welfare of Parents and Senior Citizens Act 2007 
(பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம்  2007)

இந்திய நாடு கூட்டுக் குடும்ப முறைக்கு பெயர் போனது.  ஆனால், காலத்தின் கட்டாயத்தால் பொருளீட்டுவதற்காக இளைய தலைமுறையினர்  வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்த காரணத்தால் நம் நாட்டில் வயதான பெற்றோர்களும் மூத்த குடிமக்களும் பராமரிக்க ஆளில்லாமல், அன்பு  காட்ட ஆளில்லாமல் தனிமை படுத்தப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை. 

 இதனாலேயே இன்று புற்றீசல் போல் முதியோர் காப்பகங்கள்  திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.  இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 125ன் கீழ் பெற்றோர்கள் ஜீவனாம்சம் பெற வழிவகை  செய்யப்பட்டிருந்தாலும் 2007ம் ஆண்டு கூடுதலான இந்தச் சிறப்பு சட்டத்தினையும் இயற்றியுள்ளது.  

இந்தச் சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் தன்னை பராமரித்துக்கொள்ள இயலாத ஒரு மூத்த குடிமகன், ஆதரவற்று விடப்பட்ட பெற்றோர், தன்னிச்சையாகவோ  அல்லது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் (ழிநிளி) மூலமாக இதற்கென நியமிக்கப்பட்ட ஆணையத்தின் முன் வழக்கு தாக்கல் செய்யலாம்.   

மேலும், யாருமே பராமரிக்க இயலாத நிலையில் இருக்கும் முதியோர்களை அரசே முதியோர் இல்லங்களின் வாயிலாக பராமரிக்க சட்டம்  வலியுறுத்துகிறது.  மேலும், இந்த சட்டத்தின்கீழ் மனு தாக்கல் செய்யும் செய்பவரின்  குழந்தைகள் அல்லது வாரிசுகளுக்கு சம்மன் அனுப்பி ஆணையம்  ஆலோசனை வழங்கி சமரச முயற்சி மேற்கொள்கிறது.  சமரச முயற்சி தோல்வியடையும் பட்சத்தில் ஆணையம் ஜீவனாம்சம் வழங்கக் கோரி  தீர்ப்பினை வழங்குகிறது.

இந்திய நாட்டில் நீதிமன்றங்களால் ஜீவனாம்ச வழக்கு தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்றும் கிட்டதட்ட 46 சதவிகிதப் பெண்கள் அதனை கையில்  பெற முடியாமல் இருக்கிறார்கள். மேலும், 60 சதவிகிதப் பெண்கள் நீதிமன்றத்தின் மூலம் உரிய நேரத்தில் ஜீவனாம்சம் பெற முடியாமல்  தவிக்கிறார்கள். திருமணத்தின் போது சீதனமாக கொடுக்கப்படும் பொருட்களும் அல்லது கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ வரதட்சணையாக  கேட்டு வாங்கும் பொருட்களையோ திரும்பப் பெறுவது என்பது ஒரு பிரம்மப் பிரயத்தனமாகவே இருக்கிறது.  

30 சதவிகிதப் பெண்கள் மட்டுமே தங்கள்  நகைகளையோ, உடமைகளையோ ஓரளவிற்கு தங்கள் வசமாக்கிக் கொள்ள முடிகிறது. மேலும், கணவரிடமிருந்து பிரிந்து வாழும் 75 சதவிகிதப்  பெண்களுக்கு சுய சம்பாத்தியமோ, போதிய வருமானமோ இல்லா நிலையில் நீதிமன்றம் கொடுக்கக் கூடிய ஜீவனாம்சத்தையும் சரிவர பெற முடியாத  நிலையிலும் அல்லல் பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

காலங்காலமாக நம்முடைய  நாட்டில் ஒரு தனி நபர் தர்மப்படி தான் பராமரிக்க வேண்டியவர்களை பராமரிக்கத் தவறுவது ஒரு மனிதாபிமானமற்ற  குற்ற செயல் என்றே வேத உபநிடதங்கள் கூறுகின்றன. மேலும், அனைத்து மதங்களும் இதனையே பறைசாற்றுகிறன.  இன்றைய தலைமுறை  இதனை தவறியதால் தான் சட்டத்தின் மூலம் அதனை நிறைவேற்றவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.  எந்த ஒரு தனி நபரும் தர்மப்படிதான்  பராமரிக்க வேண்டிய நபரை பராமரிக்கத் தவறும் பட்சத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 14.11.2013

Tuesday, August 2, 2016

குற்றவியல் திருத்தச் சட்டம், 2013


குற்றவியல் திருத்தச் சட்டம், 2013 - என்ன செய்ய வேண்டும்? 

உலக நாடுகளின் முன் இந்தியாவை வெட்கி தலை குனிய வைத்த அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நடந்தேறிய நாள் 2012 டிசம்பர் 16.  இந்தியத் தலைநகரான புதுடெல்லி யில் மருத்துவ மாணவி ஒருவர் தன் ஆண் நண்பருடன் இரவு வேளையில் திரைப்படம் பார்த்துவிட்டு வருகின்ற போது கயவர்கள் சிலரால் வஞ்சகமாக ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு... அதன் பிறகு இருவருக்கும் நடந்த விஷயங்கள் உலகம் அறிந்த ஒரு செய்தி.  

பெண்ணை  போற்றுகிறோம் என்று பறைசாற்றும் இந்த தேசத்தில் பெண்ணினத்துக்கு ஏற்பட்ட மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி, அதனால் ஏற்பட்ட உயிர்பலி - ‘நிர்பயா’ என்று ஊடகங்களால் பெயரிடப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட சம்பவம் - குற்றவியல் சட்டங்களின் திருத்தத்துக்கு வழிவகை செய்தது.  

நிர்பயா வழக்குக்கு முன்னரும் பின்னரும் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கும் அமில வீச்சுக்கும் பலியாகி தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். இதோடு, உடலளவிலும் மனதளவிலும் காயப்பட்டவர்கள் பலர் உண்டு. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பாலியல் வன்முறைகளும் தொடர் சம்பவமாகிவிட்ட நிலையில் நீதியரசர் வர்மா கமிஷனின் பரிந்துரையின் பேரில் திருத்தம் செய்யப்பட்டு, 2013 பிப்ரவரி 3 முதல் அமலுக்கு வந்திருக்கும் குற்றவியல் சட்டத்திலிருக்கும் சில முக்கிய திருத்தங்கள் என்னவெனப் பார்ப்போம்.

அமில வீச்சும் அதற்கான தண்டனையும்

அமில வீச்சினால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு இந்த சட்ட திருத்தம் வரும்வரை ஒரு குற்றமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.  புதிய திருத்தம் பிரிவு 326A யின் படி எவர் ஒருவர் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ அமில வீச்சினாலோ, அமிலத்தை புகட்டியதினாலோ, உடலுக்கோ அல்லது உடலின் ஒரு சில பாகங்களுக்கோ ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தால் அவர்களுக்குத் தண்டனையாக 10 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவச் செலவுக்காகவும் அவரின் நலனுக்காகவும்  நஷ்டஈடாக  கொடுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.  

புதிய திருத்தம் 326 B யின் படி 

எவர் ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தும் எண்ணத்தில் அவர் மீது அமிலத்தை வீசவோ, அமிலத்தை புகட்டவோ முயற்சி செய்யும் பட்சத்தில் அவருக்கு 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.  அமிலம் என்பது ஒருவரின் உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோ, உடல் பாகத்தை அரித்தெடுப்பதோ, மாறாத வடுவை ஏற்படுத்தும் ஒரு திரவமே ஆகும். மத்திய, மாநில அரசாங்கங்கள் இந்த கொடிய அமிலத்தை எளிதாக விற்பனை செய்வதைத் தடை செய்யும் முயற்சியை வெறும் பெயரளவுக்கு இல்லாமல் செவ்வனே செய்ய வேண்டிய நேரம் இது.  

இந்திய தண்டனைச் சட்டம் 354வது பிரிவின்படி யார் ஒருவர் ஒரு பெண்ணின் பெண்மையை நிலைகுலைக்கும் எண்ணத்துடனோ, அவமானப்படுத்தும் தவறான எண்ணத்துடனோ, தங்களுடைய பலம் கொண்டு செயலாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்தப் பிரிவுடன் புதிய பிரிவுகளாக சேர்க்கப்பட்டுள்ளவை 

354 A  

பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதற்கான தண்டனை.

(i)     உடல் ரீதியான தொடுதல், உரசுதல் அல்லது தவறான எண்ணத்துடன் பாலியல் ரீதியாக ஒரு பெண்ணின்  உடலைக் கையாளுதல்.
(ii)     தவறான எண்ணத்துடன் உடல் 
இச்சையை பூர்த்தி செய்ய அழைப்பது அல்லது கட்டாயப்படுத்துவது.
(iii)    பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக 
ஆபாசமான பாலியல்களை காட்சிக்கு வைத்தல்.
(iv)    ஆபாசமான கொச்சை வார்த்தைகளால் பெண்ணை கேலி செய்வது.

இவற்றை பாலியல் வன்முறையாக இந்தப் பிரிவு குறிப்பிடுகிறது.  முதல் மூன்று உட்பிரிவுகளுக்கு 
3 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  நான்காவது உட்பிரிவுக்கு ஒரு ஆண்டு சிறைத்
தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். 

354 B 

 ஒரு பெண்ணின் மீது தவறான எண்ணத்துடன் பலம் கொண்டு அவருடைய உடையை களைந்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்குவது குற்றமாகக் கருதப்படுகிறது. அதற்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்  (வட இந்தியாவில் பெரும்பாலும் இவ்வாறான குற்றங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் மீது அவர்களை அவமானப்படுத்தவும், அவர்களை தன் சொற்படி நடக்கச் செய்யவும் நடத்தப்படுகிறது). 

354 C  

ஒரு ஆண், ஒரு பெண் அந்தரங்கமாக இருக்கும்போது தவறான எண்ணத்துடன் அவரைப் பார்ப்பது, அந்த அந்தரங்க நிலையை படம் பிடிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாக சட்டம் வரையறைத்துள்ளது  (ஒரு பெண் உடை மாற்றும் போதோ, கழிப்பறை, குளியலறையை பயன்படுத்தும்போதா நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடைகளுடன் இருக்கும் போது பார்ப்பதோ, படமெடுப்பதோ) முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு ஒன்றிலிருந்து 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

354 D 

 ஒரு ஆண், ஒரு பெண்ணை தொடர்புகொள்ள முயற்சித்து அவரை பின்தொடர்தல், இவரின் இந்த செய்கையை அந்தப் பெண் எதிர்த்தும் தொடர்வது, மேலும் மின்னஞ்சல் போன்ற விஞ்ஞான சாதனத்தின் மூலம் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய முயற்சி செய்தல் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுகின்றன.  முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும், தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் 5 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். இதற்கு விதிவிலக்காக எந்த ஒரு குற்றச்செயலை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அல்லது சட்டத்தின் உதவியுடன் ஒருவர் ஒரு பெண்ணை பின்தொடர்வது குற்றமாக கருதப்படமாட்டாது.  

370

370 இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வியாபார நோக்கில் ஆட்கடத்தல் செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. அதனை இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் சற்று விரிவுபடுத்தியுள்ளார்கள்.  எவர் ஒருவர் மற்றொரு நபரையோ அல்லது நபர்களையோ தவறாக பயன்படுத்துவதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ப்பது, யார் கண்ணிலும் தெரியாமல் மறைத்து வைப்பது, தவறான நோக்கில் வேறொருவரிடமிருந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, இவற்றை மிரட்டல் மூலமாகவோ, கட்டாயத்தின் மூலமாகவோ, ஆட்கடத்தலின் மூலமாகவோ, தன்னுடைய அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து தன்வசப்படுத்துவதோ, வியாபார நோக்கில் செய்யப்படும் ஆட்கடத்தல் குற்றமாக கருதப்படுகிறது. 

பெரும்பாலும் இந்த ஆட்கடத்தல் குற்றம் பாலியல் தொழிலுக்காகவோ, கடுமையான வேலை செய்ய கொத்தடிமைகளாக பயன்படுத்துவதற்காகவோ, உடல் உறுப்புகளை திருடுவதற்காகவோ நடைபெறுகிறது.  கடத்தப்படும் நபர் தன்னுடைய ஒப்புதலை கொடுத்தாரா என்பதை சட்டம் பார்க்காது.  

யாரொருவர் வியாபாரத்துக்காக ஆட்கடத்தல் குற்றம் செய்கிறாரோ, அவருக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். யாரொருவர், ஒருவருக்கு மேற்பட்ட நபர்களை வியாபார ரீதியான நோக்கத்தில் ஆட்கடத்தல் செய்யும் பட்சத்தில் அந்தக் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். 

யாரொருவர் வயது வராத சிறுவனையோ, சிறுமியையோ வியாபார ரீதியாக ஆட்கடத்தல் குற்றம் செய்ததற்கு 10 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.  யாரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்களை வியாபார ரீதியாக ஆட்கடத்தல் குற்றம் செய்யும் பட்சத்தில் அவருக்கு 14 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

யாரொருவர் ஒரு சிறுவனை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வியாபார ரீதியாக ஆட்கடத்தல் செய்கிறாரோ அவருக்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஒரு காவல் துறை அதிகாரியோ, பொது அலுவலரோ வியாபார ரீதியாக ஆட்கடத்தலில் ஈடுபடும்போது அவருக்கு தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கான தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

பிரிவு 370 A 

 யாரொருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்துவதற்காக சிறார்கள் மீது ஆட்கடத்தல் குற்றம் செய்கிறாரோ அவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். யாரொருவர் ஆட்கடத்தல் மூலம் தாங்கள் வசப்படுத்திய ஒரு நபரை பாலியல் ரீதியாக பயன்படுத்தினால் அதற்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் வன்புணர்ச்சி

பிரிவு 375 

-ஒரு ஆண் மகன் தவறான நோக்கில் ஒரு பெண்ணின்  மீது  பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு அவருடைய அந்தரங்க பாகங்களை தொடுவது, காயப்படுத்துவது அல்லது வேறு ஏதேனும் முறையில் அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுப்பது, அதுவும் அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக அவளின் அனுமதியின்றி, மேலும் அவளிடம் அனுமதி பெற்றாலும் அந்த அனுமதி அவள் பிரியப்பட்ட ஒரு நபரை பணயம் வைத்து அவளை பயமுறுத்தி பெற்ற அனுமதியாக இருப்பினும், மேலும் கணவரல்லாத ஒரு நபர் கணவர் என்ற போர்வையில் உறவு வைத்துக்கொள்வதும், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அல்லது நடக்கும் செய்கையை புரிந்துகொள்ள இயலாத நிலையிலிருக்கும் ஒரு பெண் அல்லது 18 வயதுக்குட்பட்ட ஒரு பெண் ஆகியோருடன் வைத்துக் கொண்டிருக்கும் பாலியல் உறவுகள் பாலியல் வன்புணர்ச்சி குற்றத்துக்குச் சமம். 

பிரிவு 376ன் கீழ் இதற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலான அபராதத்துடன் கூடிய கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு. 

ஒரு காவல் துறை அதிகாரி தான் பணிபுரியும் காவல் நிலையத்திலேயோ அல்லது அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண்ணிடமோ பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது... 

ஒரு பொது அலுவலர் தன்னுடைய பாதுகாப்பில் இருக்கும் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ராணுவத்தில் பணிபுரிபவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

சிறைக் காவலர் அல்லது சிறை அதிகாரி அல்லது பெண்களும் குழந்தைகளும் தங்கும் பாதுகாப்பு இல்லங்களின் பொறுப்பாளர் மற்றும் 
விடுதியிலிருப்பவர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

மருத்துவமனையின் பராமரிப்பில் இருப்பவர் அல்லது அதில் பணிபுரிபவர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒரு பெண்ணின் உறவினரோ, காப்பாளரோ, ஆசிரியரோ அவர் பாதுகாப்புக்கு நம்பிக்கையானவரோ பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஜாதிக் கலவரத்தின் போது ஏற்படுத்தும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது...

கர்ப்பிணி என்று தெரிந்தும் ஒரு பெண்ணின் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுவது...

16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒப்புதல் கொடுக்க இயலாத நிலையிலிருக்கும் ஒரு பெண்ணுடன் வல்லுறவு கொள்வது...

மனநலம் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளியின் மீது பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவது...

ஒரே பெண்ணின் மீது மீண்டும் மீண்டும் வல்லுறவு வைத்துக்கொள்வது...

ஒரு பெண்ணின் மீது பாலியல் உறவின் போது அவள் உடலைக் காயப்படுத்துவதோ, அவள் உயிருக்கு பங்கம் விளைவிப்பதோ... 

இவையனைத்துக்கும் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனையும், அதிக பட்சமாக 
வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிப்பதற்கான அபராதத்துடன் கூடிய தண்டனையும் விதிக்கப்படும்.  

பிரிவு 376 A  ’

யாரொருவரின்  பாலியல் வன்புணர்ச்சி செய்கையினால் ஒரு பெண்ணுக்கு மரணம் ஏற்படின் அல்லது மரக்கட்டை போன்ற ஒரு நிலை ஏற்படின்... குற்றம் இழைத்த அந்த நபருக்கு 20 ஆண்டுகள் வரை அல்லது சாகும் வரை வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 B 

யாரொருவர் நீதிமன்ற அனுமதியுடனோ, தன்னிச்சையாகவோ பிரிந்து வாழும் தன் மனைவியின் முன் அனுமதி இல்லாமல்  பாலியல் உறவில் ஈடுபடுகிறாரோ அவருக்கு குறைந்த பட்சம்  2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 C

யாரொருவர் தன் பதவி மற்றும் அதிகாரத்தின் மூலம் தனக்கு அடங்கி இருப்பவர் மீது  பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறாரோ  அந்த நபருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான  அபராதத்துடன் கூடிய  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 D 

 ஒரு பெண்ணின் மீது கூட்டு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு வருக்கும் 20 ஆண்டுகளிலிருந்து ஆயுட்காலம் வரை அபராதத்துடன் கூடிய  வாழ்நாள்  சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 376 E 

 யாரொருவர் ஏற்கனவே குற்றவாளியாக நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதே பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவாராயின் அவருக்கு, வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். இதுவரை இந்திய தண்டனைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சில சட்ட திருத்தங்களைப் பற்றி பார்த்தோம். 

இனி, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பற்றி பார்ப்போம்.

பிரிவு 54 A
  
இந்தப் புதிய திருத்தத்தின் கீழ் ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில், மன நலமோ, உடல் நலமோ பாதிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் பட்சத்தில் அவரை அடையாளம் காண்பது குற்றவியல் நீதிபதி முன்னர் நடைபெற வேண்டும். 

குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணும் நபர் மனநலமோ, உடல்நலமோ பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அந்த அடையாள அணிவகுப்பை படப்பதிவு செய்வது அவசியம். 

பிரிவு 154

 இந்தச் சட்ட திருத்தத்தின் கீழ் அமில வீச்சு, பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணை செய்ய ஒரு பெண் காவலரையே நியமிக்க வேண்டும்.

தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ, மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும் நபரை அவருடைய இல்லத்திலோ,  அவருக்கு சௌகர்யமான இடத்திலோ, அவருடைய செய்கை மொழியை மொழிமாற்றம் செய்யத் தெரிந்தவர் முன்னிலையிலேயோ அல்லது சிறப்புக் கல்வியாளர் முன்னிலையிலேயோ விசாரணை மேற்கொள்வது அவசியம்.  மேலும் அவ்விசாரணையை படப்பதிவு செய்வது நன்மை பயக்கும்.

பிரிவு 161 

 இந்தப் பிரிவின் கீழ் அமில வீச்சு, பாலியல் வன்முறை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து வாக்குமூலம் கோரும்போது அவ்வாறான வாக்குமூலத்தை ஒரு பெண் காவல் அதிகாரி பதிவு செய்வது அவசியம்.  

பிரிவு 357 B  

இந்தப் பிரிவின் கீழ் பெரும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் நஷ்ட ஈடு, இந்திய தண்டனைச் சட்டம் 

பிரிவு 326 அல்லது 376ன் கீழ் கொடுக்கப்படும் நஷ்டஈடுக்கு கூடுதலாக கொடுக்கப்படுவதேயாகும்.   

பிரிவு 357 C 
  
மத்திய, மாநில மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அமில வீச்சு, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச முதல் உதவியோ, மருத்துவ உதவியோ செய்யத் தவறும் பட்சத்தில் அதைப் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இந்திய சாட்சிய சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பற்றி பார்ப்போம்

பிரிவு 53 A 
  
பாலியல் வன்முறை அல்லது கற்பழிப்பு குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்ணின் நன்னடத்தை பற்றியோ, அதற்கு முன்னர் இருக்கும் பாலியல் அனுபவம் பற்றி கேட்பது சாட்சி விசாரணையின்போது அவசியமானதல்ல. 

பிரிவு 114 A 
  
கொடுமையான பாலியல் வன்முறை அல்லது பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண், தான் அந்த பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும். 

பிரிவு 119
  
ஒரு வழக்கின் சாட்சி பேச முடியாதவராயிருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் எழுத்து மூலமாகவோ, சைகை மூலமாகவோ  மற்றவருக்குப் புரியும் வண்ணம் கொடுக்கும் சாட்சியம் வாய்மொழி சாட்சியத்துக்கு ஒப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். 2013ம் ஆண்டு குற்றவியல் திருத்த சட்டத்தின் சில முக்கிய திருத்தங்களைப் பற்றி பார்த்தோம். 

மேலும் நிர்பயாவின் மரணம் பல பெண்களின் மானம் காக்க சட்ட திருத்தமாக உருப்பெற்றுவிட்டாலும், பெண்களுக்கு எதிரான இவ்வாறான கொடுமையான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், நம் சமுதாயம் ஒரு பெண்ணை ஆணுக்கு இணையாகவே பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கான சட்டங்களும் சட்ட திருத்தங்களும் மட்டுமே அவளுக்குப் பாதுகாப்பல்ல. எனினும், பெண்களை பாதுகாக்கும் இந்த சட்ட திருத்தம் பெண்ணினத்துக்கு ஒரு வரப் பிரசாதமே. குற்றமற்ற சமுதாயமே பெண்களுக்கு பாதுகாப்பு!

நன்றி குங்குமம் தோழி

சட்டம் உன் கையில்: 
வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி



-----------------------------------------------------------28.06.2014 தினகரன் நாளிதழில் இருந்து