ஆயுள் தண்டனை கைதிகள் - என்ன செய்ய வேண்டும்?
ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் 17 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருவதால் தன்னை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் அவரே வாதாடி வெற்றி பெற்றார்.
இதனால், தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 1999-ம் ஆண்டு 16 வயது பள்ளி மாணவி பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பொறியாளர் பி.வீரபாரதி(44) என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது.
மேல் முறையீட்டில் வீரபாரதிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது.
தற்போது அவர் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 17 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார்.
இது நிராகரிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வீரபாரதி தனக்காக வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் அவரே வாதாடினார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு:
தமிழ்நாடு சிறை விதி 341(3)-ல் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதி களை முன்கூட்டியே விடுவிக்க பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விதி பாலியல் பாலத்காரம், போர்ஜரி, கொள்ளை, பொருளாதாரக் குற்றங்கள், கடத்தல், உணவு கலப்படம், பயங்கர வாதம் மற்றும் மாநில நலனுக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு உடையவர்களுக்குப் பொருந்தாது.
ஆனால் விதி 341(2)-ல் ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அதே பிரிவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ஆயுள் கைதிகள் அனுப்பிய மனுவை விதி 341(3)-ஐ காரணம் காட்டி அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
வீரபாரதி அளித்த மனுவை நிராகரித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரின் மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உள்துறை செயலருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வீரபாரதிபோல் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்து, அறியாமையால் நீதிமன் றத்தில் வழக்கு தொடராமல் இருக்கும் பிற ஆயுள் கைதிகளின் மனுக்களை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை உள்துறை செயலர் மறு சீராய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கால் வீரபாரதி மட்டுமின்றி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்துள்ள 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பிற ஆயுள் கைதிகளும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.10.2016