disalbe Right click

Friday, November 18, 2016

இணையதளத்தில் எப்.ஐ.ஆர்


இணையதளத்தில் எஃப்.ஐ.ஆர் - என்ன செய்ய வேண்டும்?

கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தகவல்

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை 24 மணி நேரத்தில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காவல் குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தீவிரவாதம், இளம் சிறார் மற்றும் சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகள் நீங்கலாக அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) 24 மணி நேரத்திற்குள் காவல்துறை வலை தளத்தில் பதிவிறக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொலை தொடர்பு வசதிகளில் சிரமம் உள்ள காவல் நிலையங்களில் மட்டும் காவல் நிலைய வலை தளத்தில் பதிவேற்றம் செய்ய 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு காவல்துறை http://eservices.tnpolice.gov.in என்ற தமிழ்நாடு காவல்துறை வலை தளத்தில் முதல் தகவல் அறிக்கையினை பொது மக்கள் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கடந்த 14-ம் தேதிக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காவல்துறை வலை தளத்தினுள் பொது மக்கள் செல்ல தங்களது செல்போன் எண்ணினை பதிவு செய்த உடன் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வரும். 

ஒரு முறை கடவுச் சொல்லினை (ஓடிபி) உள்ளீடு செய்து பின்னரே முதல் தகவல் அறிக்கையை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 19.11.2016

இனிமேல் சட்டம் ஈஸிதான்


இனிமேல் சட்டம் ஈஸிதான் - என்ன செய்ய வேண்டும்?

இந்தியச் சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்கக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப் பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களைக்கூட எளிதாகத் தேடிக்கொள்ளலாம்.

ஆனால், நீதித்துறை குறித்து அவ்வளவாகத் தெளிவு இல்லாத சாமானியர்களுக்குச் சட்ட நுணுக்கங்கள் மட்டுமல்ல, சட்டப் பிரிவுகளின் வாசகங்களேகூடக் குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு இவற்றைப் புரிந்துகொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை.

எளிமையான ஆங்கிலத்தில் 

இந்த நிலையில்தான் ‘நியாயா.இன்’ எனும் புதிய வலைதளம் அறிமுகமாகியிருக்கிறது. இந்தியச் சட்டங்களுக்கான இணையக் களஞ்சியமாக விளங்க வேண்டும் எனும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. 

சட்ட ஷரத்துக்களை, சட்டம் படிக்காதவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் எளிமையான ஆங்கில விளக்கத்துடன் தந்திருப்பதுதான் இதன் சிறப்பம்சம்.

இதுவரை 773 மத்தியச் சட்டங்களுக்கான விளக்கம் குற்றவியல் சட்டங்களின் 10 பிரிவுகளுக்கான வழிகாட்டி விளக்கம் ஆகியவை இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. 

முகப்புப் பக்கத்திலேயே இதற்கான ஐகான்கள் இடம்பெற்றுள்ளன. சட்டப் பிரிவுகளுக்கான பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பிரிவை கிளிக் செய்தவுடன், அதற்கான விளக்கத்தைக் காணலாம். சட்டப் பிரிவுகள் எனில் இடப்பக்கத்தில் மூல ஷரத்துகளும், அருகே அவற்றுக்கான எளிய ஆங்கில விளக்கமும் இடம்பெறுகின்றன. முக்கியமான சொற்களுக்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டிப் பகுதியில், அனைவருக்கும் கல்வி உரிமை, குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை, ஊழலுக்கு எதிரான பிரிவு உள்ளிட்டவற்றுக்கான விரிவான விளக்கத்தைக் காணலாம். சட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களும் இடம்பெற்றுள்ளன.

பயனர் நோக்கில் உருவாக்கம்

இணைய உலகில் எல்லாமே பயனர் நோக்கிலேயே அமையும்போது சட்டத்திற்கான விளக்கத்தையும் பயனர் நோக்கில் அளிக்கிறது இந்தத் தளம். 

சட்டங்கள் பயனர்களை மனதில் கொண்டு எழுதப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கவே இந்த முயற்சி என்கிறார் இந்தத் தளத்தை உருவாக்கிய குழுவில் முக்கியப் பங்கு வகிக்கும் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஸ்ரீ ஜோனி சென். 

பெங்களூரு மற்றும் அமெரிக்காவில் சட்டம் பயின்ற சென், மெக்கின்ஸி நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.

இவர் கடந்த ஆண்டு டெல்லியில் சட்டம் தொடர்பான‌ ஆய்வு மையமான ‘விதி சென்டரில்’ பணியாற்றிக்கொண்டிருந்த போது, சட்டத்தை எளிமையாகப் புரியவைக்க உதவும் வலைதளத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக ‘ஸ்க்ரோல்.இன்’ இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

“நீர் தொடர்பான முக்கியத் தகவல்களை அளிக்கும் 'இந்தியா வாட்டர் போர்ட்டல்' தளத்தை நடத்திவரும் ரோகினி நிலேகனியுடன் இதுபற்றி விவாதித்தபோது, சட்டத் துறைக்கான இதே போன்ற இணையதளம் தேவை எனும் உணர்வு வலுப்பட்டது. 

அதன் பிறகு 3 வழக்கறிஞர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைந்து இதனை அமைத்திருக்கிறோம்” என்கிறார். நாடு முழுவதும் உள்ள சட்ட மாணவர்கள், சட்ட வல்லுந‌ர்கள் இதன் உருவாக்கத்தில் உதவியுள்ளதாக சென் குறிப்பிடுகிறார்.

இந்தியச் சட்டங்களுக்கான இணையக் களஞ்சியமாக இந்தத் தளம் உருவாக வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார் அவர்.

மாநில மொழிகளிலும்...

இந்தத் தளத்தில் இணையவாசிகளும் பங்கேற்கலாம். இதில் உள்ள விளக்கத்தை மேம்படுத்த அல்லது திருத்தும் முயற்சியில் பங்களிப்புச் செலுத்தலாம். இவை தளத்தின் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். இந்தத் தளத்தில் இன்னமும் முழுமையாக எல்லா சட்டங்களும் இடம்பெறவில்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆங்கிலத்தில் அமைந்திருந்தாலும் எதிர்காலத்தில் மாநில மொழிகளிலும் சேவை வழங்கும் திட்டம் இருக்கிறது என்கிறார் சென். அதே போல மாநிலச் சட்டங்கள் குறித்துத் தனிக் கவனம் செலுத்த இருப்பதாகவும், சட்டம் தொடர்பான அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள் போன்றவையும் இதில் இடம்பெறும் என்கிறார் சென்.

சட்டம் தொடர்பான அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்தத் தளம் உதவியாக இருக்கும். ஒரு குற்றத்தைப் புகார் செய்தவுடன் என்ன நடக்கிறது, கைது செய்யப்படும் போது ஒருவரின் உரிமைகள் என்ன என்பது போன்ற‌ கேள்விகளுக்கான பதில்களையும் அறியலாம். சட்ட வல்லுந‌ர்களுடன் ஆலோசனை செய்து பொதுவாக மக்கள் மனதில் எழக்கூடிய கேள்விகளைத் தேர்வு செய்துள்ளனர்.

ஆனால் இதில் உள்ள விளக்கங்கள் சட்ட ஆலோசனையும் அல்ல, அவற்றுக்கு மாற்றும் அல்ல, இவை தகவல் நோக்கிலானவை மட்டுமே என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: http://nyaaya.in/ 

சைபர் சிம்மன்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.11.2016


Thursday, November 17, 2016

ஃபேஸ்புக் - மோசடி விளம்பரம்


ஃபேஸ்புக் மூலம் மோசடி வலை - என்ன செய்ய வேண்டும்? 

கரன்சி டிரேடிங் உஷார்!
***********************************
இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கைத் திறந்தாலே ஒரு விளம்பரம் தவறாமல் கண்ணில்படுகிறது. ‘ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் ஒரே நாளில் 10,000 ரூபாய் சம்பாதித்தேன், 20 ஆயிரம் சம்பாதித்தேன்’ என்று பற்பல பெயர்களுடன் ஹாயாக சிரித்தபடி சொல்லும் ஸ்டேட்மென்ட்டுகளை பார்த்தால், அட, ஒரே நாளில் இவ்வளவு லாபமா என்று யாருக்குத் தான் வாய் பிளக்கத் தோணாது!

பங்குச் சந்தை டே டிரேடிங், கமாடிட்டி டிரேடிங்கில் ருசி கண்ட நம்மவர்கள், இப்போது ஃபாரெக்ஸ் (கரன்சி) டிரேடிங் கில் இறங்கி இருக்கிறார்கள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஃபேஸ்புக் பரவி இருப்பதால், இந்த விளம்பரத்தை பார்த்து ஃபாரெக்ஸ் டிரேடிங் பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமலேயே அதில் சிக்கி, சீரழிகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. 

அது என்ன ஃபாரெக்ஸ் டிரேடிங், இதில் இவ்வளவு லாபம் கிடைக்குமா?

ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் டிரேட் என்பதைத்தான் சுருக்கி ஃபாரெக்ஸ் டிரேட் என்று அழைக்கிறோம். அமெரிக்க டாலர், ஐரோப்பாவின் யூரோ, இங்கிலாந்தின் பவுண்ட், ஜப்பானின் யென் போன்ற நாணயங்களை (கரன்சி) வாங்கி விற்பது ஃபாரெக்ஸ் டிரேடிங். இதில் கரன்சியை வாங்கியும் விற்கலாம் (லாங்); விற்றும் வாங்கலாம் (ஷார்ட்).

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் இரண்டு வகை உண்டு. 

முதல் வகை நம் அரசாங்கத்தின் அனுமதியுடன் நடப்பது. இது எப்படி நடக்கிறது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

ஈக்விட்டி டிரேடிங், கமாடிட்டி டிரேடிங் பற்றி நன்கு தெரிந்தவர்கள், ஃபாரெக்ஸ் டிரேடிங்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துதான் அதை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

ஒரு பங்கின் விலை ஏறினால் லாபத்தில் விற்கலாம். விலை குறைந்தால் நஷ்டத்தில் விற்கலாம். ஆனால், அமெரிக்க டாலரின் விலை ஏறுமா அல்லது இறங்குமா என்பதை தனியாக அளவிட முடியாது. அதை இன்னொரு நாணயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உதாரணமாக, அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்க்கு நிகராக ஏறுகிறதா, இந்திய ரூபாய் யூரோவுக்கு நிகராக குறைகிறதா என்று பார்க்க வேண்டும்.

ஒரு அமெரிக்க டாலர் = ரூ.65 என்று வைத்துக்கொள்ளலாம். 1000 டாலர் வாங்குகிறோம். 65 ரூபாய் 66 ரூபாயாக உயர்கிறது எனில், நமக்கு 1000 ரூபாய் லாபம். 10,000 டாலரை ரூபாய் 65 என்கிற மதிப்பில் வாங்கி அது 66 ரூபாயாக உயர்ந்தால், நமக்கு 10,000 லாபம். அட! என்று சொல்லத் தோன்றுகிறதில்லையா?

ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 65 ரூபாய் எனில், 1000 டாலர் வாங்க 65,000 ரூபாய் தரவேண்டுமே! அவ்வளவு பணம் நம்மிடம் இல்லையே என்று நினைக்காதீர்கள். 

முழுப் பணத்தையும் நீங்கள் தரவேண்டிய தில்லை. ஆயிரம் டாலரின் (ஒரு லாட்) மதிப்பு ரூ.65,000 எனில், அதன் மதிப்பில் வெறும் 3 சதவிகித பணத்தை மட்டும் கட்டி மொத்த மதிப்புக்கும் சொந்தம் கொண்டாடலாம். இதைத்தான் லீவரேஜ் என்கிறார்கள்.

ஆனால், மிகக் குறைந்த அளவு பணத்தையே முன்பணமாக கட்டுவதால், டாலர் மதிப்பு உயர்வதற்கு பதிலாக குறையும்பட்சத்தில் நாம் முன்பணமாக கட்டிய பணம் காணாமலே போக வாய்ப்புண்டு. லீவரேஜ்-ல் இருக்கும் மிகப் பெரிய அபாயம் இது.

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங்கை டாலர் – ரூபாய் மட்டுமல்ல, இன்னும் மூன்று விதமான கரன்ஸியிலும் செய்யலாம். அவை EUR – INR, GBP – INR, YEN - INR. இதில் முதலில் வருவது பேஸ் கரன்சி (Base Currency). யூரோ என்பது ஐரோப்பிய பணம். ஜிபிபி என்பது கிரேட் பிரிட்டன் பவுண்ட். யென் என்பது ஜப்பான் நாட்டு நாணயம். இந்த நான்கு கரன்சிகளையும் ரூபாய்க்கு நிகராக உயரும் என்று நினைத்தால் வாங்கி விற்கலாம். குறையும் என்று நினைத்தால், விற்று வாங்கலாம்.

ஒரு லாட் என்பது 1000 அமெரிக்க டாலர் அல்லது யூரோ அல்லது பவுண்ட் ஆகும். ஜப்பான் யென் மட்டும் ஒரு லாட் என்பது ஒரு லட்சம் எண்ணிக்கையில் இருக்கும். இதன் மதிப்பில் வெறும் 3%, அதாவது ரூ.1,950 மட்டும் கட்டி வாங்கிவிடலாம். இவ்வளவு குறைவாக முன்பணம் வாங்கக் காரணம், ஒரு நாளைக்கு இந்த நாணயங்களின் மதிப்பு 3 சதவிகிதத்துக்கு மேல் மாறியதில்லை என்பதால்தான்.

இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங் இந்திய பங்குச் சந்தைகளான என்.எஸ்.இ., பி.எஸ்.இ., எம்சிஎக்ஸ் எக்ஸ்சேஞ்சுகளில் நடக்கிறது. இந்த எக்ஸ்சேஞ்சுகள் செபியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த வர்த்தகத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை.

ஆனால், இப்போது ஃபேஸ்புக்கில் பெரிதாக விளம்பரப்படுத்தப்படும் ஃபாரெக்ஸ் டிரேடிங் இதுவரை நாம் பார்த்த மாதிரியானதல்ல. இன்டர்நேஷனல் அளவில் நடக்கும் இந்த ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்பவர்கள் நம் நாட்டில் அங்கீகரிக்கப்படாத கரன்சியில் வர்த்தகத்தை எல்லாம் செய்வார்கள். இங்கே ரூபாய் என்பதே இருக்காது. EUR – USD, USD – JPY, EUR – JPY, GBP - USD, GBP – JPY என்று உலக அளவிலான நாணயங்களின் மதிப்புகள் வர்த்தகமாகும். ஃபேஸ்புக்கில் அடிக்கடி வரும் இந்த விளம்பரங்களை பார்த்து, இதில் பணத்தை போடலாமா?

நிச்சயம் போடக்கூடாது. 
காரணம், இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் இதற்கு இல்லை. 1973-ல் கொண்டு வரப்பட்ட ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் ரெகுலேஷன் ஆக்ட் (FERA), 1998-ல் கொண்டு வரப்பட்ட FERA ஆகிய சட்டங்களின் அடிப்படையில் ஓடிசி மார்க்கெட்டும், செபியின் கண்காணிப்பில் கரன்சி வர்த்தகமும் இயங்குவது போல, எந்த சட்டவிதிமுறையும் இதற்கு இல்லை. 

இந்த வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட நினைத்தால், இன்டர்நேஷனல் புரோக்கர்கள் உங்களை டாலரில் பணம் கட்டச் சொல்வார்கள் (கிரெடிட் கார்டிலோ அல்லது டெபிட் கார்டிலோ). இதுவே சட்ட விரோதமான காரியத்தில் ஈடுபடும் ஒரு செயலாகக்கூட இருக்கலாம். 

இந்த வியாபாரத்தில் சிறு வியாபாரிகளை குறிவைப்பதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதாவது, $100 போடுங்கள், $200 போடுங்கள் என்று குறைந்த தொகையில் ஆரம்பிக்க சொல்வார்கள். அதிக லீவரெஜ் தருவதாக ஆசை காட்டுவார்கள். லாபம் சம்பாதித்தால், அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவோம் என்பார்கள். 

ஆனால், பலரையும் விசாரித்ததில், பணம் வங்கிக் கணக்குக்கு வரவில்லை என்றே சொல்கிறார்கள். இன்னும் சிலர், லாபம் வந்தால்தானே பணம் வர்றதுக்கு! பெரும்பாலும் நஷ்டத்தில்தானே வியாபாரம் முடிகிறது. பிறகு எங்கே பணம் வரும் என்று கேட்கிறார்கள்.

சரி, ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் ஏதாவது முறைகேடு நடந்தால், சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் நீங்கள் முறையிடலாம். ஆனால், இந்த இன்டர்நேஷனல் புரோக்கர்களிடம் ஃபாரெக்ஸ் டிரேட் செய்து, பிரச்னையில் மாட்டினால் யாரிடம் முறையிடுவது?

இந்த ஃபாரெக்ஸ் டிரேட் செய்த புரோக்கர் இங்கிலாந்தில் இருந்தால், அங்கே இருக்கிற மத்திய வங்கியிடம்தான் நீங்கள் முறையிட வேண்டும். அமெரிக்கா எனில், ஃபெட் ரிசர்வ் வைத்துள்ள அமைப்பிடம் முறையிடலாம். 

அதுபோல, நீங்கள் வியாபாரம் செய்யும் புரோக்கர் நிறுவனம் தன் தலைமை அலுவலகத்தை எந்த நாட்டில் வைத்திருக்கிறாரோ, அங்கேதான் போய் முறையிட வேண்டும். 

லோக்கலில் நம்மை ஏமாற்றியவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க முடியாமல் நாம் திணறும்போது, அமெரிக்கா, இங்கிலாந்து என எல்லா வெளிநாடுகளுக்கும் போய் நடவடிக்கை எடுக்க வைப்பதெல்லாம் சாத்தியமே இல்லை. 

50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டால், அதை திரும்பப் பெற அமெரிக்கா போய்வர அதற்கு மேல் செலவாகும்தானே? எனவே, அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு, பல லட்சம் ரூபாயை இழந்தவர்கள், வெளியே சொல்ல முடியாமல், அப்படியே மென்று முழுங்கிவிடுகிறார்கள்.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்று ஒரு பழமொழி உண்டு. 

முதலில் உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட டிரேடிங்கில் நம் திறமையைக் காட்டுவோம். அங்கீகாரம் இல்லாத வேறு எந்த டிரேடிங்கிலும் தலைகாட்டா மல் இருப்பதே நல்லது.

நன்றி : நாணயம் விகடன் - 15.11.2015

Tuesday, November 15, 2016

சிசேரியன் பிரசவம்


சிசேரியன் பிரசவம் - என்ன செய்ய வேண்டும்?

சிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்!
மருத்துவத் துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம் முன்தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களை சாத்தியமாக்க முடியவில்லை என்பது விசித்திரம்.

சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.

“பொதுவாக இவர்களின் மனநிலை, ‘சிசேரியன் பிரசவம்னா எந்த ரிஸ்க்கும் இல்லை’ என்பதாக இருக்கிறது. அது அறியாமைதான்’’ என்கிற மகப்பேறு மருத்துவர் டாக்டர் நித்யா தேவி, சிசேரியன் சூழல்கள் பற்றியும் கூறுகிறார்.

எப்போது சிசேரியன் அவசியம்?

“பொதுவாக கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே ஆரோக்கியம். சிலருக்கு 37 – 40 வாரங்களில் பிரசவமாகலாம். 

இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, விரைவாக குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் செய்வோம்.

 பின்வரும் சூழல்கள் அதற்கு உதாரணங்கள்…

* முந்தைய பிரசவம் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில்…

* தாய்க்கு இதய நோய், நுரையீரல் பிரச்னை, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால்…

* கர்ப்பப்பை சுவரோடு நஞ்சு ஒட்டியிருப்பது, கர்ப்பப்பை வாயில் நஞ்சு இருக்கும்போது…

* பிரசவ நேரத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருந்தால்…

* கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் பொசிஷன் மாறுபட்டு இருந்தால்…

* குழந்தையின் எடை நான்கு கிலோவுக்கு அதிகமாக இருந்தால்…

* கர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால்…

* தாய்க்கு HIV பாதிப்பு இருந்தால்…

* கர்ப்பப்பையில் ஏதாவது பெரிய கட்டி இருந்து அகற்றப்பட்டிருந்தால்…

* இரட்டைக் குழந்தைகள் எனில்…

 * வலி வந்து கர்ப்ப வாய் திறக்காதபோது…

* கர்ப்பப்பையில் நீர்ச்சத்துக் குறையும்போது…

* 30 வயது தாண்டி முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்போது…

தாயின் வேண்டுகோளுக்கு இணங்க செய்யப்படும் சிசேரியன் (CDMR – Cesarean Delivery on Maternal Request)

ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதியில் குழந்தையை வெளியே எடுக்க விரும்புவது, பிறந்தநாள், திருமணநாள், பண்டிகை நாட்கள், ஃபேன்ஸி தினங்களில் குழந்தை பிறக்க விரும்புவது, ஆடி, சித்திரை மாதங்களில் குழந்தை பிறந்தால் ஆகாது என்ற மூடநம்பிக்கை, இவற்றுடன் பிரசவ வலிக்குப் பயந்து கர்ப்பிணியும் அவருடைய குடும்பத்தினரும் சிசேரியன் செய்ய மருத்துவர்களிடம் கோருவது… இந்தக் காரணங்களுக்காகக் கூட, சுகப்பிரசவத்துக்கான வாய்ப் பிருக்கும் சூழலிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

1970 – 2010 வரை 5% ஆக இருந்த சிசேரியன் பிரசவங்கள், 2010-க்குப் பிறகு 15% ஆக அதிகரித்தன. இப்போது அவை 30% ஆக அதிகரித்துவிட்டதாக உலக அளவிலான ஓர் ஆய்வு கூறுகிறது.

சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள்!
* சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக  உதிரப்போக்கு ஏற்படலாம்.

* தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி (placenta), தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும். ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.

* சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.

  * சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது (Necrotising enterocolitis), தொற்றுநோய்கள் என பிறந்த முதல் மூன்று நாட்களில் பல பிரச்னைகள் ஏற்படலாம்.

* நிறைமாதமான 37 – 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
சுகப்பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வெளிவரும் குழந்தைகள்  எதிர்காலத்தில் உடல்  மற்றும் மனதளவில் தைரியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. 

இதற்காகவும் சிசேரியன் பிரசவங்கள் தவிர்ப்போம், சுகப்பிரசவத்துக்கு தயாராவோம்” என்கிறார்  டாக்டர் நித்யா தேவி.
_________________________________________________________________________________

சிசேரியன் பிரசவம் தவிர்க்கலாம்!
* இடுப்பு எலும்புப் பகுதிக்கு பயிற்சி கொடுப்பது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். குழந்தையின் தலை மற்றும் உடல் வெளியேறும் வகையில் பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து கொடுக்க, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகளும் உறுப்புகளும் நன்றாக ஒத்துழைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மருத்துவர் ஆலோசனையுடன் யோகா, கால்களை மடக்கி நீட்டுவது போன்ற எளிய உடற்பயிற்சிகள்  இதற்கு கைகொடுக்கும்.

* கர்ப்பகாலத்தில் உறங்குவது, அமர்வது என ஒரே நிலையில் நிலைகொள்ளும் ஓய்வு தேவையில்லை. அன்றாட வேலைகளை, குனிந்து, நிமிர்ந்து செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யலாம்.

* துரித உணவு மற்றும் அதிக உப்பு, இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளை உட்கொண்டு மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி : அவள்விகடன் - 29.11.2016

தங்கம் வாங்குபவர்கள் கவனிக்க


இந்த சூழ்நிலையில் தங்கம் வாங்குபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
500,1000  ரூபாய்  நோட்டுகள்  செல்லாது என்று அறிவித்த இரவு மக்கள்  முதலில் தேடி  ஓடிய  இடம் தங்க நகை கடைகள் தான். இதுபோன்ற அவசர காலத்தில் தங்கம் வாங்கும் போது மிகவும்  கவனமாக இருக்க  வேண்டும். அன்று இரவு 12 மணி வரை நகை கடைகளில் கூட்டம்  அலைமோதியது. வழக்கமாக தங்கத்தை பலமுறை  சோதிப்பவர்கள் கூட எதுவும் பார்க்காமல் நகைகளை வாங்கி வந்துள்ளனர். கிராம் ஒன்று 4000 ரூபாய் வரை விற்கபட்டிருக்கிறது.

உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 880 டன் தங்கம்  இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் என்பது இங்கு வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்க படுவது இல்லை. சேமிப்பாகவும் இருக்கிறது. அதனால் எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் நகை வாங்குவது இந்தியர்களின்  வாடிக்கை. தற்போது உள்ள நிலைமையில் நகைக்களை வாங்குவது எப்படி ?

ஹால்மார்க்
தென்இந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். மக்கள் நகைக்கடைகளால் அதிகம் ஏமாற்றப்படுவதும் இங்குதான். ‘ஹால்மார்க்’ முத்திரை என்பது தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்தும் முத்திரை. இந்த முத்திரையுள்ள தங்கத்தை வாங்கும்போதும்கூட பல கடைகளில ஏமாற்று வேலை நடப்பதுதான் வேதனை! 

ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்கம் அல்லது வெள்ளி நகைகள் தரமானவை என்று கூறப்படுகிறது.  வாடிக்கையாளர்கள், தரமற்றவற்றை வாங்காமல் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட முத்திரை (BIS) என்பதால், ஹால்மார்க் முத்திரை நம்பகமாகக் கருதப்படுகிறது. 

ஆனால், இந்த முத்திரையானது நாம் வாங்கும் ஒவ்வொரு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணத்துக்கும்  சரிவர வாங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது அத்தனை சுலபமான காரியமல்ல. 

இந்தியாவில் ஹால்மார்க் முத்திரை வழங்கக்கூடிய சென்டர்கள் 324 இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு சென்டரில் 500 ஆபரணங்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஆக, 324 சென்டர்களிலும் ஒரு நாளில் 1,62,000 ஆபரணங்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். 

ஒரு நகையின் எடை சராசரியாக 10 கிராம் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு 1.62 டன் நகைகள் வரை மட்டுமே ஹால்மார்க் முத்திரை கொடுக்கமுடியும். ஓர் ஆண்டுக்கு 591 டன் அளவு நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும். 

ஆனால், இந்தியாவின் தங்க நகை இறக்குமதி அளவு ஆண்டுக்கு, 880 டன். இந்நிலையில், ஹால் மார்க் முத்திரை என்பது நூறு சதவிகிதம் எப்படி சாத்தியம் ?

ஹால்மார்க் நகைகளை எப்படிக் கண்டுபிடிப்பது?
நகைகளில் BIS என்ற குறியீடு முக்கோண வடிவில் இருக்க வேண்டும். எவ்வளவு சுத்தமான தங்கம் என்ற அளவு இருக்க வேண்டும். 
உதாரணமாக.. 958 என்று இருந்தால் அது 23 காரட் தங்கம் என அர்த்தம். 
916 - 22 காரட் தங்கம், 
875 - 21 காரட் தங்கம், 
750 - 18 காரட் தங்கம், 
708 - 17 காரட் தங்கம், 
585 - 14  காரட் தங்கம், 
375 - 9 காரட் தங்கம்.

தங்கத்தின் மதிப்பீடும், ஹால்மார்க் சென்டரின் அடையாள குறியீடும் இருக்க வேண்டும். எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிட்டிருக்க வேண்டும். 
உதாரணமாக.. ‘A’ என இருந்தால், அந்த தங்கம் 2000-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என அர்த்தம்.
 ‘B’ - 2001,
 ‘C’ - 2002, 
‘D’ - 2003, 
‘E’ - 2004,
‘F’ - 2005, 
‘G’  - 2006,
‘H’ - 2007, 
‘J’ - 2008. 
இது போல் தொடர்ந்து கணக்கிட்டுக்கொள்ளவும்.
‘Q’ - 2015,
'R'-2016 

தங்கத்தில் தொடரும் கலப்படம்!
22 காரட் (916) தங்கமாக இருந்தாலும், 8 கிராம் (8,000 மில்லி கிராம்) ஆபரணத்தில், 7,328 மில்லி கிராம்தான் தூய்மையான தங்கம் இருக்கிறது. மீதம் 672 மில்லி கிராம் செப்பு அல்லது வேறு உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இது தங்கத்தை ஆபரணங்களாக மாற்றுவதற்காக செய்யப்படுவது. ஹால்மார்க் முத்திரை பெறாத மற்றும் மக்களை ஏமாற்றுவதற்கென்றே இருக்கும் கடைகளில் விற்கப்படும் நகைகளில் இந்தக் கலப்படத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். இத்தகைய கலப்பட தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களும், `916 தங்கம்’ எனப்படும் தங்கத்துக்கு தரும் பணத்தையே கொடுக்கிறார்கள். ஆண்டுதோறும் இப்படி சுமார் 480 டன் தங்கம் வரை இங்கே ஏமாற்றி விற்கப் படுகிறது.

 தங்க நகை சேதாரம்
இந்தியாவில் தங்கத்தை, ஆபரணங்களாக மாற்றும்போது நகைக்கடைக்காரர், தரகர், இடைத்தரகர் என ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் சுரண்டப்படுகிறது. தங்க நகை சேதாரம் மூலமாகவும் பெரும் கொள்ளை நடக்கிறது. இறக்குமதியாகும் 880 டன் தங்கம், ஆபரணங்களாக மாற்றப்படும்போது மொத்தம் 2.6 டன் வரை சேதாரம் இருக்கலாம். ஆனால், மக்களிடம் விற்கும்போது, ஒவ்வொரு நகைக்கும் அதிகமான தங்கம் சேதாரமாகக் கணக்கிடப்படுகிறது. 

இதுதவிர, நகைகள் வாங்கும்போது 6.78 கிராம் எடை இருந்தால், ரவுண்டாக 7 கிராம் என்று சொல்வார்கள். நகை எடை பார்க்கும் மெஷினில் ஸ்பெஷல் கீ எனப்படும் சாம்பிள் பட்டனை அழுத்தியவுடன் எடையை ரவுண்டாக மாற்றிவிடும். இப்படி பெரும்பாலான கடைகளில் மில்லி கிராம் தங்க அளவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட, சிறுதுளி பெருவெள்ளமாக கடையின் முதலாளிகளுக்கு தங்க மழை பொழிகிறது! 

தங்கத்தில் என்னவெல்லாம் கலக்கப்படுகிறது?
ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளில் 31 பர்சன்ட் அளவுக்கு அலாய் எனப்படும் வொயிட் மெட்டல் கலக்கப்பட்டிருக்கும். நீங்கள் 8 கிராம் நகை வாங்குகிறீர்கள் என்றால், அதில் கிட்டத்தட்ட 2.5 கிராம் அளவுக்கு இந்த வொயிட் மெட்டல் கலந்திருக்கும். மீதி 5.5 கிராம் மட்டுமே தங்கம். 

உதாரணத்துக்கு, நீங்கள் 8 கிராம் நகையை 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள். ஆனால், இதிலிருக்கும் 5.5 கிராம் தங்கத்தின் உண்மையான மதிப்பு 13,750 ரூபாய். மீதி 6,250 ரூபாய் உங்களிடம் சுரண்டப்பட்டு, அதற்குப் பதிலாக, 2.5 கிராமுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள வொயிட் மெட்டல் கலக்கப்படுகிறது. கடைக்காரர்கள் பெறும் லாபத்தையும், உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'

கல் நகை... உஷார்!
மிக முக்கியமாக.. நகைக்கு பில் போடும்போது ஆபரணத்தில் எவ்வளவு தங்கம் இருக்கிறது, பிற உலோகங்கள் எவ்வளவு சேர்க்கப்பட்டுள்ளன போன்றவற்றை பதிவிடவேண்டும். கல் ஒட்டுவது போன்றவற்றுக்கு தனியாகவும், தங்கத்துக்கு தனியாகவும் கட்டணம் வாங்க வேண்டும். 

பெரும்பாலும் இன்றைக்கு அப்படி செய்வது கிடையாது. மாறாக, கல்லுடன் சேர்த்து 20 கிராம் எடை என்றால், 20 கிராம் தங்கம் என்று சொல்லி மொத்தமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். உண்மையில் அதில் 15 கிராம்தான் தங்கம் இருக்கும். மீதமுள்ள 5 கிராம் கல் (வெகு சொற்ப மதிப்புள்ளது) இருக்கும்.

இது குறித்து பேசிய நகை கடை உரிமையாளர் சங்க பொது செயலாளர் சாந்தகுமார்  கேட்டோம்

இது போன்ற நேரங்களில்  மக்கள் விழிப்புணர்வுடன் நகைகளை வாங்கவேண்டும். எங்களுக்கு இது குறித்து எந்த புகாரும் இது வரை வரவில்லை.பொதுவாக நகை வாங்குபவர்கள் முதலீடு, தேவை இரண்டு காரணங்களுக்காக வாங்குகின்றனர். முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்க ட்டிகளாகவும்,நாணயங்களாகவும் வாங்குவார்கள் .தேவைக்கு வாங்குபவர்கள் நகைகளாக வாங்குகின்றனர்.

இப்போது  உள்ள சூழலில் பான் கார்டு கொடுத்து  நகைகளை  வாங்குவது தான்' சிறந்தது.அதுவே  100 சதவிகித  பலனை தரும் நீங்கள் பான் கார்டு  மூலம் வாங்குவதால் அரசு நிர்ணயித்த விலையில் நகைகளை வாங்கலாம். இல்லை என்றால் முதலில்  நகைக்கடைக்கு சென்று தேர்வு  செய்துவிட்டு பின்னர் காசோலைகள்  மூலம் நகைகளை வாங்குவதே  சிறந்தது. 

சிலர் செல்லாத பணத்தை வாங்கி கொண்டு நகையின் விலையை இரட்டிப்பு ஆக்கி விற்பதாக கூறுகின்றனர்.அது போன்றவர்களிடம் ஏமாற வேண்டாம்.அதில்  நீங்கள் எந்த கேள்வியும் அவர்களிடம் கேட்க  முடியாமல் அவர்கள் கொடுக்கும்  நகையை வாங்கி வரவேண்டி  இருக்கும் 

எங்கு புகார் செய்வது?
தங்க நகை வாங்கும்போதோ, வாங்கிய பின்னரோ தரத்திலோ, எடையிலோ, வேறு எந்தக் குறைபாடோ வாடிக்கையாளருக்கு ஏற்பட்டால், 

இந்தியத் தர நிர்ணய ஆணையம், 
சி.ஐ.டி வளாகம், 4-வது குறுக்குத் தெரு, 
தரமணி, சென்னை-113 
என்ற முகவரி அல்லது 

044-22541988, 
044-22541216, 
9380082849 என்ற தொலைபேசி எண் 
மற்றும் 
meenu@bis.org.inஎன்ற இ-மெயில் முகவரியில் புகார் செய்யலாம். 

நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், அருகில் உள்ள நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.

தங்கத்தின் தன்மையை ஆராய பல்வேறு வழிமுறைகள் பின்பற்றுகின்றனர். 

அதில் ஒன்று எக்ஸ்ஆர்எஃப் (XRF: x-ray-fluorescence). இதன் மூலமாக ஆபரணத்தில் எவ்வளவு சதவிகிதம் தங்கம், காப்பர், சில்வர் உள்ளது என்பது போன்ற அனைத்து தகவல்களும் துல்லியமாகக் கிடைக்கும். 

இதற்கான கருவியின் விலை 10 முதல் 29 லட்ச ரூபாய். பெரிய கடைகளில் இந்த மெஷின் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மக்களுக்குத் தெரிவதில்லை, சொல்லப்படுவதுமில்லை.

நன்றி : விகடன் செய்திகள் – 16.11.2016


சொத்து பத்திரங்கள் தொலைந்துவிட்டால்

சொத்து பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்துவிடுவார்கள்.
அதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காணவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும்.
தொலைந்த சொத்து பத்திரங்களை யாராவது கண்டெடுத்து, வழக்கறிஞரிடம் தந்தால், நாம் அந்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு கிடைக்கவில்லை எனில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட பத்திரங்களின் நகலை (Certified Copies of the Documents) காணாமல் போன அசல் (Original) ஆவணங்களுக்கு பதிலாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இப்படி அசல் பத்திரம் காணாமல் போன சொத்துக்களை வாங்குபவர் கவனிக்க வேண்டியவை என்ன என்பதைப் பார்ப்போம்.
காவல் நிலையத்தில் புகார் செய்தபின், அசல் சொத்துப் பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல் நிலையம் தரும் சான்றிதழ், பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்கள் போன்ற ஆவணங்களை, தங்களின் வழக்கறிஞரிடம் காண்பித்து அவர் ஒப்புதல் தரும்பட்சத்தில் அந்தச் சொத்தை வாங்கிக்கொள்ளலாம்.
புதிதாக பதிவு செய்யும் சொத்து ஆவணத்தில் அடுத்து வரும் வாசகம் கட்டாயம் இடம்பெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். “இந்தச் சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று விற்பவராகிய நான் உறுதி அளிக்கிறேன். பிற்காலத்தில் இந்த சொத்தில் எந்த வில்லங்கம் ஏற்பட்டாலும், விற்பவராகிய நான் முன்னின்று என் செலவில் வில்லங்கத்தை சரிசெய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்”.
அசல் ஆவணம் இல்லாத சொத்தின் மேல், வங்கியில் கடன் வாங்கும்போது சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது. முன்னர் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் சில வங்கிகள் கடன் வழங்க தயக்கம் காட்டக்கூடும். ஏனெனில், முன்பெல்லாம் சொத்தின் ஆவணங்களை கொலாட்ரல் செக்யூரிட்டியாக (Collateral Security) கொடுத்து, வங்கியில் கடன் பெறுவார்கள். ஆனால், பத்திரப் பதிவு அலுவலகத்தில் அவ்வாறு கடனுக்காக கொலாட்ரல் செக்யூரிட்டி கொடுப்பதைப் பதிவு செய்யமாட்டார்கள். அதனால் கடன் பெறுவது வில்லங்கச் சான்றிதழில் தெரியாது.
ஒரு சிலர் பல்வேறு காரணங்களால் தாங்கள் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடனைக் கொடுக்காமல், மேற்கூறியவாறு சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டது என்று காவல் நிலையத்திலும், பின்பு பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்து வழக்கறிஞரிடம் சான்று பெற்று சொத்தினை விற்றுவிடுவார்கள். பிற்காலத்தில் சொத்தை வாங்கியவரும், கடன் கொடுத்த வங்கியும் நீதிமன்றங்களை நாட வேண்டியது வரும். பொதுவாக, கடன் கொடுத்த வங்கிதான் வெற்றி பெறும். ஆனாலும் நீண்ட கால தொல்லைகள் உண்டாகும். வாங்கியவருக்கும் நஷ்டம் ஏற்படும்.
இதுமாதிரியான தவறுகள் நடக்காதிருக்க, தற்போது வங்கியில் ஆவணங்களை வைத்துக் கடன் பெற்றால், Memorandum of Deposit of Title Deeds (MOD) என்ற ஆவணம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது. இது வில்லங்க சான்றிதழில் தெரியவரும். இந்தமுறை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
பொதுவாக, சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அந்த சொத்தின் மதிப்பு, சந்தை (Market) மதிப்பைவிட சற்று குறைவாகவே இருக்கும். மேலும், ஆவணங்களை தொலைத்தவர் கீழ்க்கண்ட முறையை பின்பற்றினால், வாங்குபவருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.
ஆவணங்களை தொலைத்தவர், அவருடைய மனைவி அல்லது மகன் எவருக்காவது அந்த சொத்தினை தான செட்டில்மென்ட் (Settlement Deed) மூலம் எழுதிக் கொடுக்கலாம். இதற்கான செலவு என்பது சொத்தின் மதிப்பு 25,00,000 ரூபாய்க்கு மேல் இருப்பின் ரூ.33,000 வரை செலவாகும். அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில், அந்த சொத்தினை வாங்கிய விவரம், சொத்தின் ஆவணங்கள் விவரம், அவை காணாமல் போன விவரம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவரம், வழக்கறிஞர் மூலம் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்த விவரம் ஆகியவற்றை முறையாக எழுதிப் பதிவு செய்யலாம்.
இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை கொண்டு, வீடாக இருந்தால் பட்டா, வீட்டு வரி ரசீது, மின் வாரிய ரசீது ஆகியவற்றை சொத்து செட்டில்மென்ட் செய்தவர் மேல்மாற்றம் செய்துவிடலாம்.
இதனால் அந்த செட்டில்மென்ட் ஆவணத்தில் உங்கள் புகைப்படத்துடன், தற்போதைய விலாசம், அதற்குறிய சான்றுகள் ஆகியவை மூலம் நீங்கள்தான் அந்த சொத்தின் உரிமையாளர் எனவும், நீங்கள் அதை மனைவிக்கோ, மகனுக்கோ செட்டில்மென்ட் செய்துவிட்டீர்கள் எனவும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரியவரும். பின்பு உங்கள் மனைவியோ அல்லது மகனோ இந்த சொத்தினை மேற்கூறிய ஆவணங்களைக் காட்டி சுலபமாக விற்கலாம்.
த.பார்த்தசாரதி, சொத்து மதிப்பீட்டு நிபுணர்.
*********************************நன்றி : நாணயம் விகடன் - 15.11.2015 

முன்பதிவு ரத்து


முன்பதிவு ரத்து செய்வோர் - என்ன செய்ய வேண்டும்?

ரயில் டிக்கெட் ரத்துக்கு ஆதார், பான் கார்டு கட்டாயம்
சென்னை: முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் வங்கி கணக்கு எண் கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்படும் டிக்கெட்டின் தொகை பயணியின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

கறுப்பை வெள்ளையாக்க திட்டம்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை ரயில் டிக்கெட் மூலம் வெள்ளையாக மாற்ற பலரும் முயற்சித்து வருகின்றனர்.

ரயில் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை பயன்படுத்தி, முதல் வகுப்பு ஏ.சி., போன்ற அதிக கட்டணங்கள் கொண்ட டிக்கெட்களை பழைய நோட்டுகளை கொண்டு பலரும் அதிகளவு முன்பதிவு செய்வது தெரியவந்துள்ளது.

அவர்கள் சில நாட்களுக்கு பின்னர், முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்து புதிய கரன்சிகளை பெறலாம் என திட்டமிட்டனர். இதன் மூலம், வருமான வரித் துறையின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கலாம் என எண்ணினர்.

சமூக வலைதளங்களின் வழியாக பரவிய இந்த யோசனையை பார்த்த பலரும் முன்பதிவு செய்வதற்கு ரயில்நிலையங்களில் குவிந்தனர்.

ஆதார், பான் கார்டு கட்டாயம்
இதை கண்டறிந்த ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்களை ரத்து செய்யும் போது ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். 

ரத்தாகும் டிக்கெட்டின் தொகை ரொக்கமாக வழங்குவதற்கு பதிலாக அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம், கறுப்பை வெள்ளையாக்க நினைத்தவர்களுக்கு கிடுக்குபிடி போடப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 15.11.2016

வீடு, நிலம் வாங்குவோர் - மோசடி - தப்பிக்க


வீடு, நிலம் வாங்குவோர் மோசடியில் இருந்து தப்பிக்க 
என்ன செய்ய வேண்டும்?

ஒரு காலத்தில் வீடு, நிலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருந்தது. பாண்டு, பத்திரமில்லாம் வாய்மொழியாகவே பல விவகாரங்கள் நடந்த காலமும் உண்டு. ஆனால் தற்போது ஒருவர் பெயரில் உள்ள அசையா சொத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் மோசடி அதிகரித்துள்ளது. ஒருவர் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து, கைக்கு எட்டிய விலையில் வீட்டுமனை வாங்கி பதிவு செய்வார். பொருளாதார சூழ்நிலையால் சில காலம் கட்டிடம் கட்டாமல் இருப்பார். 

காலியாக இருக்கும் நிலத்தை நோட்டமிடும் வசதி படைத்தவர்கள், அரசியல்வாதி, மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பில் போலி ஆவணங்கள் தயாரித்து தங்கள் பெயரில் எழுதிக்கொள்ளும் சமூக கொடுமைகள் நடந்த வண்ணமுள்ளது. 

இந்த மோசடிகளை தவிர்க்க நிலம் பதிவு தொடர்பாக பல நவீன வசதிகள் அரசாங்கத்தால் உருவாக்கி இருந்தாலும், இடைதரகர்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவோர் முன் எதுவும் நடப்பதில்லை. இத்தகைய மோசடி கும்பல்களிடம் இருந்து தப்பிக்க கர்நாடக இலவச சட்ட சேவை ஆணையம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் சில வழிகாட்டுதல்கள் கூறியுள்ளது. அதன் விவரம் பின் வறுமாறு:

நிலம் வாங்குவோர் செய்ய வேண்டியது:
01. ஒவ்வொருவரும் தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் பிள்ளைகளின் படிப்புக்கு வசதியாக பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அல்லது நர்சிங்ஹோம், போலீஸ் நிலையம் உள்பட முக்கிய வசதிகள் உள்ள பகுதியில், குறிப்பாக சுத்தமான குடீநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய், சாலை,. தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ள இடத்தில் வீட்டுமனை, வீடு, அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும்.

02. வெறும் கையில் முழம்போடும் இடைதரகர்களை நம்பி செல்ல வேண்டாம்.

03. நீங்கள் வீட்டுமனை வாங்க தீர்மானித்துள்ள லே அவுட் மாநகர பகுதியாக இருக்கும் பட்சத்தில் பெருநகர் வளர்ச்சி குழுமம், நகரசபைகளாக இருக்கும் பட்சத்தில் நகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் முறைப்படி பதிவு செய்து, அனுமதி வழங்கப்பட்டுள்ள லே அவுட்டா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

04. குறிப்பாக வீடு அல்லது மனை வாங்கும் இடம், ஏற்கனவே அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட அல்லது கையகப்படுத்துவதற்கான ஏற்பாட்டில் உள்ள நிலமாக இருந்தால், வாங்கக்கூடாது.

05. நீங்கள் வாங்க தீர்மானித்துள்ள வீடு அல்லது வீட்டுமனை தொடர்பாக ஏதவாது வழக்கு போலீஸ் அல்லது நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளதா? என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

06. வாங்கும் நிலம் எவ்வளவு பரபரப்பளவில் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

07. தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள லே அவுட்டாக இருக்கும் பட்சத்தில், அதை ஏற்படுத்தியுள்ளவர் முறைப்படி நகர வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி பெற்றுள்ளாரா? முறைப்படி பெற்றுள்ள ஆவணங்கள் அனைத்தும் சரியாகவுள்ளதா? நிலம் பதிவு செய்ததற்காக அரசாங்கத்திற்கு முறைப்படி செலுத்த வேண்டிய வரி, கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

08. நீங்கள் வாங்கும் அசையா சொத்துக்கு உண்மையான உரிமையாளர் யார்? அல்லது நிலத்திற்கான உரிமையை சட்டப்படி பெற்றுள்ள நபர் யார் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

ஆவணங்கள் சரி பார்க்க வேண்டும்:
01. சொத்து மூல பத்திரம் (Parent Deed):- ஒவ்வொரு சொத்துக்கும் மூல பத்திரம் மிகவும் அவசியமாகும். நீங்கள் வாங்கும் சொத்து பெரியளவில் இருந்தால், தற்போதைய உரிமையாளருக்கு அது எப்படி கிடைத்தது. அந்த விற்பனை செய்தவர் அல்லது தானமாக வழங்கியவர், உயில் மூலம் எழுதி கொடுத்தவர் யார்? அவருக்கு அந்த அதிகாரம் வழங்கியது யார்? அவருக்கும், நிலத்தின் மூல உரிமையாளருக்கும் உள்ள ரத்த சம்மந்தமான உறவு முறை என்ன? அவர் தாய்வழி உறவினரா? அல்லது தந்தை வழி உறவினரா? என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு சொந்தமான நிலம் வேறு சாதியினருக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டம் உள்ளது. அப்படி அந்த வகுப்பினருக்கு சொந்தமான நிலம் வாங்கி லே அவுட் போடப்பட்டுள்ளதா? என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.

02. நிலத்தின் உரிமையாளருக்கு நிலத்தின் உரிமை எப்படி வந்தது என்பதை உறுதி செய்யும் ஆவணங்கள் பார்க்க வேண்டும் (கிரயம் எழுதி கொடுத்த பத்திரம், பரிசாக வழங்கி இருந்தால், அதற்கான ஆவணம், உயில் எழுதி கொடுக்கப்பட்டிருந்தால் அன் அசல் பத்திரம் ஆகியவை சரியாகவுள்ளதா? என்பதை பார்க்க வேண்டும்.

03. காத்தா பத்திரம் (உரிமை பட்டா):- நிலம் யாருக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்து மாநகராட்சி, நகரசபை, பேரூராட்சி ஆகியவை வழங்கியுள்ள உரிமை பத்திரம் (அசல்) உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

04. நில என்காம்ப்ரன்ஸ் சர்ட்டிபிகேட்:- நிலத்திற்கான உரிமை பத்திரத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பெற்றாலும், அதன் பத்திர பதிவு முழுவதும் வருவாய்துறை அமைச்சகத்திடம் உள்ளது. நிலம் தொடர்பாக முழு விவரங்களை வருவாய்துறை அல்லது அதன் கீழ் இயங்கிவரும் பதிவாளர் அலுவலகத்தில் பரிசீலனை செய்து, நிலம் உண்மையான உரிமையாளரின் பெயரில் உள்ளதா? என்பதை தீர்மானிக்க வேண்டும். பதிவாளர் அலுவலகத்தில் 12 முதல் 30 ஆண்டுகள் வரையிலான ஆவணங்கள் பெற முடியும். அதை முழுமையாக கேட்டு பெற்று பரிசீலித்து தீர்மானிக்க வேண்டும்.

05. சில இடங்களில் விவசாய நிலங்கள் வாங்கி லே அவுட் அமைத்திருப்பார்கள். அப்படி அமைக்கப்பட்ட நிலத்தை கிரீன் பெல்ட் நிலத்தில் இருந்து குடியிருப்பு நிலமாக மாற்றியமைக்க முறைப்படி அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான சான்றிதழ் வழங்கியுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். சில ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் விவசாய நிலத்தை பறிமாற்றம் செய்யாமல் லே அவுட் போட்டு விற்பனை செய்வார்கள். அது பிற்காலத்தில் பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன், வாங்கிய சொத்தை இழக்கும் நிலைக்கு கொண்டு போய்விடும். 

06. நிலத்திற்கு உண்டான வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கான வரி கட்டண பில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

07. லே அவுட் அமைப்பதற்கு வாங்கியுள்ள நிலத்தின் அளவு, அது தொடர்பாக நகர உள்ளாட்சி அமைப்பு கொடுத்துள்ள அனுமதி பத்திரம், வீடுகள் கட்ட கொடுத்துள்ள தடையில்லா சான்றிதழ், குத்தகை உத்தரவாத பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்.

08. சிலர் தங்களுக்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்து கொடுக்கும் அதிகாரத்தை தனி நபருக்கு வழங்குவார்கள். அப்படி வழங்க பவர் ஆப் அட்டார்னி எழுதி கொடுப்பார்கள். அதை வைத்து கொண்டு லே அவுட் அமைப்பது அல்லது தனி நிலம் விற்பனை செய்வார்கள். அப்படி பவர் ஆப் அட்டார்னி பெற்றுள்ள நபர், உண்மையில் நில உரிமையாளரிடம் பிஓஏ எழுதி வாங்கியுள்ளாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

09. கட்டிய வீட்டை வாங்கும் பட்சத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் உறுதியாக உள்ளதா? எந்த ஆண்டு கட்டப்பட்டது, கட்டிடம் அமைக்க உள்ளூர் நகர உள்ளாட்சி அலுவலகம் வரைப்படத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதா?, அனுமதி பெற்றுள்ள வரைபடத்திற்கு ஏற்ற வகையில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதா? வீடு கட்ட நகர வளர்ச்சி குழுமத்திடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளதா? அதற்கான முறையான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

10. குறிப்பாக வீடு தொடர்பாக ஏதாவது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறதா? என்பதை அலசி ஆராய வேண்டும்.

11. வாங்கும் வீட்டின் மீது தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதாவது கடன் வாங்கப்பட்டுள்ளதா? அல்லது வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார்களா? யாருக்காவது குத்தகை எழுதி கொடுத்துள்ளார்களா? தனி நபருக்கு சொந்தமான கட்டிடமா? அல்லது கூட்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பங்குள்ள சொத்தா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

12. அப்பார்ட்மெண்ட் வாங்கும்போது அதன் நில உரிமையாளர் யார்? கட்டிடம் அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளதா? மாநகராட்சி, நகரசபை, நகர வளர்ச்சி குழுமங்கள் கட்டுமான பணிக்கு கட்டணம் பெற்று அனுமதி வழங்கியுள்ளதா? கட்டிடத்திற்கான பட்டா,  வரி கட்டண பில், உள்ளாட்சி அமைப்பில் பதிவு செய்துள்ளது, ஒருவரை உரிமையாளராக கொண்டதா? அல்லது கூட்டு சேர்ந்து கட்டியுள்ளதா? அறகட்டளை, சொசையிட்டி, சங்கம் போன்றவை பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை துள்ளிய்மாக அலசி, ஆராய்ந்து சரி பார்த்தபின் வாங்க வேண்டும்.

பத்திர பதிவு:
இதற்கு முன் பத்திர பதிவு கம்ப்யூட்டரில் செய்யாமல் எழுதி கொடுக்கும் வழக்கம் இருந்தது. அப்போது ஒருவருடைய சொத்து இன்னொருவர் பெயரில் எழுதி கொடுக்கும் மோசடி நடந்தது. கடந்த 1994ம் ஆண்டு நாட்டில் முதல் முறையாக கர்நாடக மாநில வருவாய்துறை அமைச்சகம் நில ஆவணங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தியது. இதற்காக தனியாக குழு அமைத்து பழைய ஆவணங்கள் அனைத்தும் திருத்தம் செய்து பதிவு செய்யப்பட்டது. அதன்பின் ஆன்லைன் பதிவு வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ஓரளவுக்கு நில மோசடி தடுக்கப்பட்டது. தற்போது நிலம் விற்பனை செய்வோர், நிலம் வாங்குவோர் அனைவரும் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள் வெப் கேமரா மூலம் படம் பிடிப்பதுடன், கம்ப்யூட்டர் உதவியுடன் கை நாட்டு வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர நிலம் அல்லது வீடு விற்பனை செய்வோர் குடும்ப தலைவர் முதல் சொத்தின் வாரிசுதாரர்கள் அனைவரும் விற்பனை பத்திரத்தில் கையெழுத்திடும் சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நில மோசடி குறைந்து வருகிறது. நிலம் வாங்குவோர் புகைப்படத்துடன் கம்பியூட்டரில் பதிவு செய்ய வேண்டும், நில உரிமையாளர் உள்பட அதன் வாரிசுகள் அனைவரும் கையெழுத்திட்ட பின் தான் தங்கள் பெயரில் பதிவு செய்ய வேண்டும். இந்த வழிமுறைகள் பின்பற்றினால், நில மோசடியில் இருந்து தப்பிக்க முடியும்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 15.11.2016

சட்டம் ஒரு எட்டும் கனி

Sunday, November 13, 2016

சீர்வரிசை பட்டியல் விதிமுறைகள் சட்டம்


சீர்வரிசைப் பட்டியல் விதிமுறைகள் சட்டம் - என்ன செய்ய வேண்டும்?

தீபிகாவுக்கு மனம் வெறுத்துவிட்டது. அழுது தீர்த்த பிறகும் ஆற்றாமையும் வேதனையும் ஒரு சேர அழுத்தின. 

அப்பாவும் அம்மாவும் அவளும் பார்த்துப் பார்த்து வாங்கிய பொருட்கள், திருமணம் முடித்த கையோடு தீபிகாவின் புகுந்த வீட்டுக்குச் சென்றன.

அவள் கணவன் சுயமாகச் சிந்திக்க முடியாதவன் என்பதாலும், ஒரே மகன் மனைவியின் பக்கமே சாய்ந்துவிடுவானோ என்ற அச்சம் காரணமாகவும் தீபிகாவின் மாமியார் அவளுடன் நல்லுறவைப் பேணவில்லை. 

தினம் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார். குழந்தை உண்டாகவில்லை என்று சண்டை. மருத்துவர்கள் கணவன், மனைவி இருவரையும் ஒன்றாகச் சிகிச்சைக்கு வரும்படி கூறினார்கள். மருமகனும் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று தீபிகா வின் அம்மா கூறிய தருணத்திலேயே பெரும் சண்டை போட ஆரம்பித்துவிட்டார் மாமியார்.

நியாயமற்ற தீர்வு

ஆகாத மருமகள் கால் பட்டால் குற்றம், கை பட்டால் குற்றம் என்று பிரச்சினைகள் பெருகியதே தவிர, ஓயவில்லை. நியாயமற்ற தீர்வுகள் முன்வைக்கப்பட்டன. 

தீபிகா கணவனுடன் வாழ வேண்டும் என்றால், தீபிகாவும் அவள் பெற்றோரும் மகனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் மாமியார். தொலைபேசியில் பேசக் கூடாது, அவள் பெற்றோர் வரக் கூடாது போன்ற குடும்ப வன்முறைகள் நிபந்தனைகளாயின.

அவள் கணவனோ தீபிகாவுடன் வாழத் தனக்கு விருப்பம் என்று ஒருமுறைகூட சொல்லவில்லை. ஒரு வருடமாக நடந்து முடிந்த பல சுற்றுப் பஞ்சாயத்தில் அவளுடைய சீர்வரிசைப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு, மனமொத்த விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தாகிவிட்டது. சீர்வரிசைப் பொருட்களைத் திரும்பப் பெறும்போதுதான் மனமுடைந்து அழுதாள் தீபிகா.

சீர்வரிசை பஞ்சாயத்து

நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதுமாகக் கிடைக்கவில்லை. பஞ்சாயத்தில் பேசிய தீபிகாவின் கணவனும் மாமியாரும், “அவள் என்ன கொண்டு வந்தாள் என்றே தெரியாது. இங்கு இருப்பது இவ்வளவுதான். அவர்கள் கொடுத்த பொருட்களை அப்படியே பீரோவில் வைத்திருந்தோம்” என்று சொன்னார்கள். 

வாழ்க்கையும் தொலைந்து, உழைத்துச் சேகரித்த சீர்வரிசைப் பொருட்களும் தொலைந்து போயின. காவல் நிலையத்தில் புகார் செய்து, பொருட்களைப் பெற முடிவெடுத்தனர். பொருட்கள் கிடைக்காவிட்டாலும் எப்.ஜ.ஆர். போடுவது என்று முடிவானது.

காவல் நிலையத்தில் அவள் கணவரும் மாமியாரும் சத்தியம் செய்து, அவ்வளவு நகைகள்தான் போடப்பட்டதாகக் கூறினார்கள். தீபிகாவுக்கும் அவள் குடும்பத்துக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. உயர் அதிகாரி விஷயத்தைப் புரிந்துகொண்டார். பொய் சொன்னால் வழக்கு போட்டுவிடுவேன் என்று சொன்னார். தீபிகாவின் மாமனாரையும் அழைத்து விசாரித்தார். அம்மாவும் மகனும் உண்மையை மறைப்பதைத் தெரிந்துகொண்டார். ஆனால், என்னென்ன பொருட்கள் தரப்பட்டன என்பதற்கு எந்தச் சாட்சியமும் இல்லை.

நகைக்கு சாட்சி உண்டா?

திருமணத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படங் களில் இருந்த நகைகளைக் காட்டினாள் தீபிகா. ஆனால் அவை தங்கமா, கவரிங் நகைகளா? அவற்றில் எது தீபிகாவுக்குச் சொந்தமானது? 

அவை அனைத்தும் அவள் கணவன் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனவா என்ற விவரங்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று சட்டபூர்வமான விளக்கத்தைக் கொடுத்தார் அதிகாரி.

தீபிகாவின் பெற்றோர் சீர்வரிசைப் பட்டியல் தயாரித்துக் கொடுத்தார்களா என்றும் விசாரித்தார். எதுவும் செய்யவில்லை என்றும் தங்கள் மகளுக்காக நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொடுத்து அனுப்பியதாகச் சொன்னார்கள். பட்டியல் போட்டு சீர்வரிசை கொடுத்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா என்ற அச்சம் பெண் வீட்டில் இருக்கும். ஆனால் பட்டியல் இல்லாமல் இருந்தால் வழக்கை எப்படி நடத்துவது? எதை வைத்து நிரூபிப்பது என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை அதிகாரி கேட்டார்.

சிக்கல் தீர்க்கும் பட்டியல்

தீபிகாவின் அம்மா, “வாழப்போகும் வீட்டுக்கு யாராவது சீர்வரிசைப் பட்டியல் எழுதிக் கொடுப்பார்களா? அதை நகல் எடுத்து வைப்பார்களா?” என்று கேட்டார். 

அப்போதுதான் அவர்களுக்குத் தெரிந்தது, ‘சீர்வரிசைப் பட்டியல் விதிமுறைகள்’ என்று தமிழ்நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது என்று. 

அதன்படி, சீர்வரிசைப் பொருட்களைக் கொடுத்து, ஒரு பட்டியல் தயாரித்து, மணமகன், மணமகள் தவிர இரு தரப்பிலும் சாட்சிகள் கையெழுத்துப் பெற்று, பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஆளுக்கொரு நகலை வைத்திருக்க வேண்டும்.

95% குடும்பங்களில் இந்தப் பிரச்சினை இல்லை. பிரச்சினை என்று வரும்போது யாருக்கும் நஷ்டமின்றி, நியாயமான முறையில் சீர்வரிசையைத் திருப்பித் தருவதற்கு மணமகன் வீட்டாருக்கும், தம் பொருட்களை நல்ல முறையில் திரும்பப் பெறுவதற்குப் பெண் வீட்டாருக்கும் இது வசதியாக இருக்கும். சிலநேரம் மனைவி வீட்டார் பொய்யாகப் புகார் கூறி, கணவன் வீட்டார் பாதிக்கப்பட்டாலும் இந்தப் பட்டியல் உறுதுணையாக இருக்கும்.

இப்படியெல்லாம் பட்டியல் போடுவது அநாகரிகம் என்று சிலர் கருதலாம். அப்படியானால் பெண் வீட்டிலிருந்து தங்கமும் வெள்ளியும் பொருட்களும் வாங்குவதும் அநாகரிகம்தானே?

தமிழகத்தில் பல சமூகங்களில் இந்தப் பழக்கம் காலம் காலமாக இருந்தே வந்திருக்கிறது. எனவே, சீர்வரிசைப் பட்டியல் விதிமுறைகளைத் தெரிந்துகொள்வதும், நடைமுறைபடுத்துவதும் காலத்தின் தேவை.
இன்றைக்குத் திருமணச் சந்தையில் இரு மணங்கள் கலக்கும் திருமணங்களாக இல்லாமல், இரு பணங்கள் கலக்கும் திருமணங்களாக மாறிவிட்ட நிலையில் சீர்வரிசைப் பட்டியல் விதிமுறைகளை எல்லோரும் நடைமுறைப்படுத்துவது தேவையில்லாத சிக்கல்களைத் தீர்க்கும்.

கட்டுரையாளர், 
பி.எஸ்.அஜிதா
வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 13.11.2016

சர்க்கரை நோய்


உலக சர்க்கரை நோய் தினம் - என்ன செய்ய வேண்டும்?

இன்சுலின் கண்டுபிடித்த சார்லஸ் பென்டின் பிறந்த நாளான இன்று, உலகம் முழுவதும் சர்க்கரை நோய் தினமாக கொண்டாடப்படுகிறது. 

அவர் ௧௮௯௧ல் பிறந்தார். அவரது நுாற்றாண்டு தினத்தை முன்னிட்டு 1991-லிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று உலக அளவில், 415 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2040ல் 642 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.நடுத்தர வயதினர், முதியோர்களில் பாதி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. 

இரண்டு பேரில் ஒருவர் தனக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது தெரியாமலேயே வாழ்கிறார். உலக அளவில் மருத்துவத்திற்கு ஆகும் செலவில் 12 சதவீதம் சர்க்கரை நோய்க்கு செலவிடப்படுகிறது.

2016ல் சர்க்கரை நோய் தினத்தின் நோக்கம், உலக அளவில் சர்க்கரை நோயை கண்காணித்து அதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்க முயற்சி எடுப்பதே ஆகும். முக்கியமாக மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, கால்புண், கால் இழப்பு, கண்பார்வை இழப்பு, போன்ற விளைவுகளை தடுப்பதுதான்.ஆரம்ப நிலையிலேயே நோயின் பக்க விளைவுகளை கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.

பாதிப்பு தெரிந்தும்... 

''முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்'', ''தும்பை விட்டு வாலை பிடிக்கக் கூடாது'', போன்ற பழமொழிகள் சர்க்கரை நோய் பாதிப்புக்கு பொருத்தமானதாகும். 

பெரும்பாலான நோயாளிகள் சர்க்கரை நோய் குறித்த விளைவுகள் தெரிந்தும், அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர்.

இதனால், அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுவதுடன், உயிரிழப்பும் ஏற்படுகிறது. மிக குறைந்த அளவிலான மக்களே மருத்துவரிடம் கலந்தாலோசித்து அவர்கள் தரும் மாத்திரைகளை உண்டு, உணவு முறைகளை கடைபிடிப்பதோடு, சர்க்கரை நோய் குறித்த அளவீடுகளை ஆவணங்களில் பதிவு செய்து பாராமரிக்கின்றனர். இந்த ஆவணப் பதிவு மிக அவசியம். கவனக் குறைவான நோயாளிகள் பல்வேறு தவறுகளை செய்கின்றனர்.

உணவு பழக்க வழக்கம் 

சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம் நமது கட்டுப்பாடற்ற உணவு பழக்கம்தான். ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிட பழக வேண்டும். ருசியற்ற உணவுகளும் ஆரோக்கியமான உணவுகளே. அளவான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டு பழகி கொள்ள வேண்டும்.

பொதுவாக உணவு என்று எடுத்துக் கொண்டால், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேளைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். என்ன சாப்பிட்டோம் என நாம் நினைவில் வைத்துக் கொள்வதும் அவைகளைத்தான். 

ஆனால், அதற்கு இடைப்பட்ட காலத்தில் எடுத்துக்கொள்ளும் வடை, சமோசா போன்ற உணவுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
கணக்கில் வராத பணம் என்றால் கறுப்பு பணம் என்பது போல், கணக்கில் வராத உணவினை 'கறுப்பு உணவு' எனக் கூறலாம். இந்த கறுப்பு உணவுதான், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டின்றி செல்வதற்கும், பெரும்பாலான மாரடைப்புக்கும் காரணமாகும்.

நம்மில் பலர் உண்ணும் உணவினை கணக்கிடுவதை கவுரவ குறைச்சலாக கருதுகின்றோம். ஆனால், அதனை அப்படி கருதுவது தவறு. கறுப்பு பணத்தால் நாட்டுக்கு கேடு. கறுப்பு உணவால் உடலுக்கு கேடு.வீட்டில் பெரியவர்கள் அறிவுரை கூறும்போது கண்டதையும் சாப்பிடாதே எனக் கூறுவதுண்டு. இந்த கண்டதையும் என்பதற்கு பொருள் கறுப்பு உணவே.

ஒரு உளுந்தவடை அல்லது மசால் வடையில் இரண்டு அல்லது மூன்று இட்லியில் உள்ள கலோரிகள் உள்ளது. எண்ணெய் கலந்த கொழுப்பு உணவுகளை உண்ணும்போது, உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகமாகிறது; உடல் பருமனாகிறது. இது சர்க்கரை நோய் மட்டுமின்றி மாரடைப்புக்கும் வழிவகுக்கிறது.

உடற்பயிற்சி 

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 5 கி.மீ., துாரம் நடந்தால் சர்க்கரை நோயை வராமல் பார்த்துக் கொள்ளலாம். நடப்பது என்பது மிதமான அல்லது சற்று அதிகமான வேகத்துடன் இருக்க வேண்டும். இருதயத்தின் வேலைத்திறனை பொருத்து நடக்கலாம். நடை பயிற்சியால் பல நன்மைகள் உள்ளன. நமது கணையம் சுரக்கும் இன்சுலினின் வேலைத்திறனை கூட்டுகிறது. உடல் எடையை குறைக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. உடல் தசை நார்களை பலப்படுத்துகிறது.

மழை காலத்தில் வீட்டிற்குள் நடக்கலாம். கணவனும் மனைவியும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு தோள்பட்டை வலி வருவதற்கு காரணம் அவர்கள் தங்கள் தலைக்கு மேல் கைகளை துாக்கும் பயிற்சிகளை செய்யாததுதான். இதனால், தோள்பட்டை தசை இறுகி கடினமாகிறது. பின்னர் தீராத வலியை ஏற்படுத்துகிறது. எனவே, தசைகளை பலப்படுத்தும் 'ஸ்டிரெச்' வகை உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

கால்புண் அபாயம் 

சர்க்கரை நோய் ஏற்படுத்தும் நரம்பு பாதிப்பால் சர்க்கரை நோயாளிகள் கால்களில் தொடு, அதிர்வு உணர்ச்சி குறைந்து காணப்படுகின்றனர். அதனால், அவர்களுக்கு கால்புண் வரும் வாய்ப்பு அதிகம். 

வலியில்லாமல் மாரடைப்பு வருவது போல், வலியில்லாமல் கால்புண் நோய் வருகிறது. இதனால், கால்புண்ணை பெரும்பாலானோர் கவனிப்பதில்லை.புண்ணுடன் காலணி இல்லாமல் நடந்து, அதனை குணப்படுத்த முடியாத அளவிற்கு பெரிதாக்கி கால்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

கால்களில் முள் குத்தியோ, கொதிக்கும் தரையில் காலணியின்றி நடத்தல் போன்ற காரணங்களால் கால்புண் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க ஒரே வழி, கால்களை முகத்தை பராமரிப்பதை போல பராமரிப்பதுதான். இயக்கம்தான் வாழ்வு. இயக்கமற்ற வாழ்வு செடி, கொடிகளின் நிலையை விட மோசமானது. 

டாக்டர். ஜெ. சங்குமணி
சர்க்கரை நோய் நிபுணர், 
மதுரை sangudr@yahoo.co.in

நன்றி : தினமலர் நாளிதழ் - 14.11.2016