தலைமைச் செயலாளருக்கான அதிகாரம்
தலைமைச் செயலாளருக்கான அதிகாரம் என்ன?
அதிகாரங்கள், பொறுப்புகள்... ஓர் அலசல்!
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை. ஒரு சம்பவத்தைப் பற்றி முழுமையாக அறியும் முன்பே அடுத்த அதிரடி சம்பவம் நடந்து விடுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது, நள்ளிரவில் புதிய முதல்வர் பதவியேற்றது, ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்டது, 'சின்ன அம்மா'-வைத் தலைமையேற்க அழைப்புவிடுவது எனத் தொடங்கி, அ.தி.மு.க பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு, தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை என்பதுவரை இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் 'பி.ஜே.பி தமிழகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடத்தும் நாடகம்தான் இவையெல்லாம்' என்கின்றனர்.
எது எப்படியோ ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின், அவருக்குப் பதிலாக, தற்போது புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பல ஆண்டுகள் அனுபவம்மிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார்கள். மாநிலத்தில் முதல்வருக்கு அடுத்த அதிகாரம் கொண்டவராக இவரே இருப்பார். அப்படிப்பட்ட தலைமைச் செயலாளருக்கு இருக்கும் பொறுப்புகள் கடமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?
1. மாநில முதல்வருக்கு முதன்மை ஆலோசகராக இருப்பவர். அரசின் நிர்வாக விஷயங்களைச் செயல்படுத்துபவர். மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் திட்டங்களையும் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் தலைமைச் செயலாளரின் முக்கியப் பணி.
2. அமைச்சரவைக் குழுவின் செயலாளரும் இவர்தான். அமைச்சரவைக் குழு கூட்டங்களைத் திட்டமிடுவதும், அந்தக் கூட்டத்தின் இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களைத் திட்டமிடுவதும் தலைமைச் செயலாளரின் பொறுப்பு. அரசு விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை நிர்வகிக்கும் அதிகாரமும் இந்தப் பதவிக்கு உண்டு.
3. அரசின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளின் செயலாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. அதேபோல் அனைத்துத் துறைகளின் பணியாளர்களும் இவரது கட்டுப்பாட்டுக்கு உள்ளானவர்கள்.
4. குடிமையியல் பணி தொடர்பான விவகாரங்களும் இந்தப் பொறுப்பின் கீழ்தான் வரும். முக்கிய அரசு உயர் அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் ஆகியவற்றையும் தலைமைச்செயலாளரே பார்ப்பார். அரசுத் துறைகளுக்கு வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளும், உத்தரவுகளும் தலைமைச் செயலாளர் பெயரில் வெளியிடப்படும்.
5. மண்டல அளவிலான மாநில அரசுகள் ஆணையத்திலும் மாநிலத்தின் சார்பாக அதன் தலைமைச்செயலாளரே பிரதிநிதியாக செயல்படுவார்.
6. தலைமைச் செயலகத்தின் நிர்வாகப் பணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், யார் யாருக்கு எந்த அறை? என்று ஒதுக்கீடு செய்வதற்கும் தலைமைச்செயலாளருக்கே அதிகாரம் உண்டு.
7. மைய ஆவணக் காப்பகம், தலைமைச் செயலக நூலகம் ஆகியவற்றையும் நிர்வகிப்பார். தலைமைச் செயலகத்தில் உள்ள காவலாளிகளும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பர்.
8. முக்கியமாக எமர்ஜென்சி அமல்படுத்தப்படும் சமயங்களில், மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் அவரின் கீழ்தான் இருக்கும்.
9. எந்தவொரு நெருக்கடி, அசாதாரண சூழ்நிலையிலும் அரசின் பக்கம் நின்று, அவசியமாக எடுக்க வேண்டிய முடிவுகளுக்கான ஆலோசனை தர வேண்டியது தலைமைச் செயலாளருடைய பொறுப்பு.
10. அரசு தொடர்பான டெண்டர்கள், கான்ட்ராக்ட்டுகள், நிலம் கையகப்படுத்துதல் என அனைத்தும் தலைமைச் செயலாளரின் கீழ்தான் செயல்படும்.
இவ்வளவு அதிகாரங்கள் தலைமைச் செயலாளருக்கு இருக்கின்றன. இவை அனைத்தையும் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார் ராமமோகன ராவ்.
தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதனுக்கு, கூடுதலாக ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் நேர்மையாகச் செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் வேண்டுகோள்.
நன்றி : விகடன் செய்திகள் – 23.12.2016