செயல்படாத மக்கள் பிரதிநிதிகள், திரும்பப் பெறும் சட்டம்
பொது விவாதம் தேவை, ராமதாஸ்
செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் குறித்து பொது விவாதத்தை தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் நிலவும் இன்றைய அரசியல் சூழலைப் பார்க்கும் போது, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய நிலைமை ஏற்படாமல் தடுக்க தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. தேவைகள் தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு தூண்டுகோல்களாக இருக்கின்றன என்பதை உணர்ந்து, இன்றைய சூழலைத் தேவையாகக் கருதி, ஆரோக்கிய அரசியலுக்கான தீர்வுகளை ஆராய வேண்டும்.
தமிழகத்தின் புதிய முதல்வராக சசிகலாவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்ததைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பும், அதை பிரதிபலிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்து சென்றதும் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட, அவருக்கு பதில் எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராக பதவியேற்றிருக்கிறார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அவர்கள் நடத்திய ஜனநாயகப் படுகொலைகள் கண்டிக்கத்தக்கவை.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறி விடுவார்களோ என்ற அச்சத்தில், அவர்கள் 11 நாட்கள் கூவத்தூரில் தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து அவர்கள் அமைச்சர்களின் காரில் அடைத்து சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டு வாக்களிக்கச் செய்யப்பட்டனர். பொதுமக்களின் மனநிலை மற்றும் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்து கொண்டதால் அவர்களால் தொகுதிகளுக்குள் நுழைய முடியாத நிலை நிலவுகிறது.
பல இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. தங்களின் உணர்வுகளை மதிக்காத சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவையில்லை என்றும், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மற்றொருபுறம், மக்களின் பிரச்சினைகளுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவையில் நடந்து கொண்ட விதம் முகம் சுளிக்க வைக்கிறது. இப்போது கூட தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அவற்றுக்காக போராடாமல், பேரவை செயல்பாடுகளால் தங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயரைப் போக்கும் நோக்குடன் நடத்தும் போராட்டங்களை தமிழக மக்கள் ஏற்கவில்லை.
சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களின் போது, ஏற்கெனவே இருந்தவர்களை பிடிக்காததாலும், வேறு காரணங்களாலும் மோசமானவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுக்கும் மக்கள், அடுத்த சில மாதங்களில் அவர்களின் உண்மை உருவம் தெரியவரும் போது ஏமாற்றமடைகின்றனர்; வருந்துகின்றனர்.
ஆனாலும், வாக்களித்து தேர்ந்தெடுத்தவர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்பதால், பிடிக்காவிட்டாலும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகளை மாற்றும் வசதி இருக்கக்கூடாதா? என அவர்கள் ஏங்குகின்றனர். இத்தகைய தருணங்களில் தான் செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கும் உரிமை முக்கியத்துவம் பெறுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்ப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் சரியாக செயல்படாத போது, அவர்களுக்கு வாக்களித்த மக்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்கள் மனு செய்தால், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறுவது குறித்து தேர்தல் ஆணையம் வாக்கெடுப்பு நடத்தும். அதில் அதிக எண்ணிக்கையிலானோர் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வாக்களித்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
பிலிப்பைன்ஸ், வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகளிலும், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சில மாநிலங்களிலும் இந்த முறை செயல்பாட்டில் உள்ளது. இதைப் பயன்படுத்தி தவறு செய்த மக்கள் பிரதிநிதிகள் திரும்ப அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதை மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுவதும், பின்னர் அடங்குவதும் கடந்த காலங்களில் நடந்திருந்திருக்கின்றன.
மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்ட போதெல்லாம், அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல என்று கூறி மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. பொதுவாழ்க்கையில் நேர்மை குறைந்ததற்கு இதுவும் காரணமாகும்.
மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நடைமுறைக்கு வந்தால், தவறு செய்யும் பிரதிநிதிகள் பதவி நீக்கம் செய்யப்படுவர் என்பது ஒருபுறமிருக்க, இப்படி ஒரு சட்டம் இருந்தால் தவறு செய்யவே மக்கள் பிரதிநிதிகள் அஞ்சுவார்கள் என்பது தான் இதன் சிறப்பு ஆகும். இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வருவதிலும், செயல்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன என்பதையும், தேர்தல் ஆணையத்திற்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால், தேர்தல் நடைமுறையில் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்த இந்திய தேர்தல் ஆணையத்தால் இது சாத்தியம் தான். அதுமட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்காக சிரமங்களை பொருட்படுத்தாமல் சில நடவடிக்கைகளை எடுத்து தான் தீர வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் சட்டத்தை உடனடியாக வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்ற போதிலும், குறைந்தபட்சம் அதுகுறித்த பொது விவாதத்தையாவது தொடங்க வேண்டும். அப்போது தான் அடுத்த சில ஆண்டுகளிலாவது இந்த அற்புத யோசனை சட்டம் ஆகும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 23.02.2017