போலி என்.ஓ.சி. - போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
தூத்துக்குடியில் போலி தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குறிப்பிட்ட டிரைவிங் ஸ்கூல் மூலம் சிலர் கனரக வாகனங்கள் ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் உள்ளிட்டவைகளைப் பெற விண்ணப்பங்கள் அளித்திருந்தனர். இதனை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்த போது, விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டிருந்த, காவல்துறையினர் வழங்கும் தடையில்லாச் சான்றிதழ்கள் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அந்தச் சான்றிதழ்கள் சிப்காட் இன்ஸ்பெக்டர் வழங்கியது போல இருந்தது.
இதனை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் காட்டியபோது, அந்த சான்றிதழ்களில் உள்ள கையெழுத்து தன்னுடையது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல சான்றிதழ்களில் இன்ஸ்பெக்டருடைய ரப்பர்ஸ்டாம்ப் குத்தப்பட்டு அவருக்காக என்று கையெழுத்து போடப்பட்டி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி ஆனந்த் அவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
காவல்துறை நடத்திய விசாரனையில் போக்குவரத்து அலுவலக புரோக்கரான, முனியசாமிபுரத்தைச் சேர்ந்த டேவிட்(52) என்பவர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், தட்டப்பாறை சிறப்பு இன்ஸ்பெக்டர் சங்கர் (50) என்பவருடன் சேர்ந்து போலிச் சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, புரோக்கர் டேவிட், சிறப்பு எஸ்.ஐ. சங்கர் ஆகிய இருவர் மீதும், போலியாக ஆவணங்கள் தயாரித்தல், அதனை உண்மைச் சான்றிதழ்கள் போல பயன்படுத்துதல், போலி முத்திரை தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புரோக்கர் டேவிட் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு எஸ்.ஐ. சங்கரை சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டுள்ளார்.
04.04.2017 - www.tutyonline.net -ல் இருந்து