13: சம்பாதிப்பதைச் சேமிக்கிறோமா?
உயிர் வாழ மூச்சு காத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணம். தொழில் தொடங்க, தொடர்ந்து நடத்த, தொழிலை முடிவுக்குக் கொண்டுவர என எல்லா நிலைகளிலும் பணம் தேவை. அதனால் நிதி பற்றிய அறிவும் முக்கியமாகிறது.
நுகர்வோர் சந்தையின் நிஜம்!
நம்மில் பலர் நீட்டிய பக்கத்திலெல்லாம் கையெழுத்து போடும் மனோபாவம் கொண்டவர்கள்தான். ஒரு கடனுக்கு விண்ணப்பித்தால்கூடக் கத்தை கத்தையாய்த் தாள்கள் கொடுத்துக் கையெழுத்து வாங்குவார்கள். சுழித்த இடங்களில் கையொப்பம் இடுவதற்கு முன்னால் அதைப் படித்துப் பார்க்கும் மனோபாவம் வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும். புரியாதது நம் தவறில்லை. முட்டாளாகத் தெரியக்கூடாது என்று கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள். கேள்வி கேட்பது முட்டாள்தனம் அல்ல. தவறாக முடிவு செய்வதும், தகவல் இல்லாமல் முடிவு செய்வதும்தான் முட்டாள்தனம்.
இன்னொரு மனோபாவம் ஆபத்தானது. பணம் கிடைத்தால் வாரியிறைத்துச் செலவு செய்யலாம் என்பதுதான் அது. இன்றைய இளைஞர்கள் சேமிப்பதைவிட சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அமெரிக்க வாழ்வியல் பாதிப்பு இன்று நம்மைக் கடன் கலாசாரத்துக்குத் தள்ளிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்னால் வசதியல்லாதவர்கள் மளிகை கடைகளில் நோட்டு போட்டுக் கடன் சொல்லிப் பொருள் வாங்குவார்கள். இன்று வசதி படைத்தோர், இல்லாதோர் அனைவரும் கிரெடிட் கார்டில் (கடன் அட்டையில்) பொருள் வாங்கிப் பிறகு கடன் கட்டும் வழக்கத்துக்கு வந்துவிட்டோம். அதனால் பணம் இல்லாமல் (பல நேரங்களில் தேவைகூட இல்லாமல்) பொருள் வாங்குவது இன்றைய நுகர்வோர் சந்தையின் நிஜம்.
ரெண்டு யானை கொடுங்க!
ஒருவர் யானை விற்க வந்தாராம், வாடிக்கையாளர் சாதா சம்பளக்காரர். “எனக்கு எதற்கப்பா யானை? தவிர இதற்குத் தீனி போட்டு வளர்க்க, பணம், இடம், நேரம் எதுவுமே இல்லை. அதனால் வேண்டாம்!” என்றாராம். விற்பனை சிப்பந்தியோ யானையின் பெருமைகளை எடுத்துரைத்தார். “இந்த யானைக்கு மீதமுள்ள சோறு போட்டால் போதும். தெருவிலேயே விட்டுவிடலாம். எல்லோரும் யானையைப் பார்த்துக் காசு போடுவார்கள். யானைச் சாணத்தை விற்கலாம்…” என்றெல்லாம் சொன்னபோது மசியாதவர் கடைசியில் இதைக் கேட்டதில் விழுந்துவிட்டாராம். “சார், இப்போ பணம் எதுவும் கட்ட வேண்டாம். சுலபத் தவணை (ஈ.எம்.ஐ.) உண்டு. எப்ப முடியலைன்னாலும் ‘பே பேக்’ பாலிசியில் பாதி விலைக்கு எடுத்துக்குறோம்!”
“அப்ப ரெண்டு யானை கொடுங்க சார்!”
இந்தக் கடன் வாங்கிச் செலவு செய்யும் மனோபாவம் தொழிலுக்குக் உதவாது. தொழிலுக்கு கடன் வாங்கினால், கடன் கட்டும் தொகைக்கு மேல் பன்மடங்கு வருமானம் வரும் என்றால்தான் கடன் வாங்க வேண்டும். அதற்கு நுட்பமான நிதி அறிவு வேண்டும். எல்லாப் பெரிய நிறுவனங்களும் தொழிலுக்குக் கடன்வாங்குவதற்கு முன் அதன் நிதி மேலாளர்களைக் கொண்டு தீவிர ஆய்வு மேற்கொள்கின்றன. கடன், வட்டி, வருமானம், சந்தைப்போக்கு என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் தான் கடன் பெறுகின்றன.
சிறிதாகத் தொழில் ஆரம்பிப்பவர்களும் இதைச் செய்ய வேண்டும் என்பதுதான் எனது அறிவுரை. ரூபாய் ஐம்பது லட்சம் மூலதனம் போட்டு மேலும் தேவைக்குத் தொழில் கடனில் வியாபாரத்தை ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். எப்போதிலிருந்து லாபம் சம்பாதிக்க ஆரம்பிப்பீர்கள், எப்போது கடன் முடியும், எதிர்பாராத சூழல் வந்தால் அதற்கு மாற்றுத்திட்டங்கள் என்பதை முதலிலேயே யோசிக்க வேண்டும்.
தவறினால் இங்குப் பலருக்கு இருக்கும் ‘ரொட்டேஷன்’ வியாதி வந்துவிடும். இதை வாங்கி அதில் போட்டு, அதை வாங்கி இதில் போட்டு, சொந்தப் பணம், தொழில் பணம் எல்லாம் கரைந்து கடைசியில் கடனாளியாக்கும். தொழிலை ஒரு சூதாட்டமாக்கும். வெளியிலிருந்து பணம் கிடைத்தால் கரையேறலாம் என்ற தவறான மனப்போக்கைக் கொண்டுவரும். கடன் வாங்குவது பெரிதல்ல. கடனைத் தொழிலில் சரியாகச் செலுத்தி விரைவில் லாபம் பார்ப்பதுதான் திறமை.
உங்கள் தொழில் ஆரோக்கியத்தின் டாக்டர்
ஒரு நல்ல ஆடிட்டர் அனைவருக்கும் அவசியம். நாம் சொன்னதைச்செய்யும், வரியைக் குறைக்கும், கடன் வாங்க ஆலோசனை சொல்லும் ஆடிட்டர் போதும் என்பது தவறான அணுகுமுறை. உங்கள் தொழிலுக்குப் பணம் மூச்சு காற்று என்றால் அதைச் சீராக இயக்குகிறீர்களா என்று ஆய்வு மேற்கொள்ளும் அளவுக்கு உங்கள் ஆடிட்டர் செயலாற்ற வேண்டும். உங்கள் தொழில் ஆரோக்கியத்தின் டாக்டர் உங்கள் ஆடிட்டர்.
தொழிலின் ஆதாரம் நிதி என்றால் அந்த நிதியை நிர்வாகம் செய்யத் தெரிந்துகொள்வது ஒவ்வொரு தொழில் முனைவோரின் அத்தியாவசியத் தேவை. நிதியறிவு இல்லாமல் யாரும் ஜெயித்ததில்லை. அப்படியே ஜெயித்தாலும் நிலைத்ததில்லை!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 02.05.2017