disalbe Right click

Sunday, August 27, 2017

மண்ணுளி முதல் ஈமு வரை மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -6

Image may contain: one or more people and text
மண்ணுளி முதல் ஈமு வரை மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -6
குறி வைக்கப்படும் விவசாயிகள்ஈமு கோழி வளர்ப்பு மோசடி நடந்து முடிந்த நேரம்... அதே இடம்... அதே விவசாயிகள்... அதே போன்றதொரு மோசடி... ஒரே ஒரு வித்தியாசம்தான். ஈமு கோழிக்கு பதில் நாட்டுக்கோழி. ஈமு பண்ணைகளுக்கு பதில் நாட்டுக்கோழிப் பண்ணைகள். வெளிநாட்டு பறவையான ஈமு கோழியை வைத்து மட்டுமல்ல, நாட்டுக்கோழியை காட்டியும் ஏமாற்ற முடியும் என மோசடியாளர்கள் சவால் விடாத குறையாக அரங்கேற்றியதுதான் இந்த நாட்டுக்கோழி வளர்ப்பு மோசடி. 
"பணத்தை முதலீடு செய்யுங்கள் நாட்டுக்கோழி பண்ணை வைத்துத் தருகிறோம்... தீவனம் தருகிறோம்... மாதந்தோறும் போனஸ் தருகிறோம் என்று கூறி பணத்தை வசூல் செய்து, ஈமுவை மாதிரி இல்லாமல், துவங்கிய ஓரிரு மாதங்களிலேயே ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஏமாற்றி, இழுத்து மூடி விட்டு தலைமறைவாகினர் மோசடியாளர்கள்.
மோசடி நடந்தது எப்படி?ஈமுவுக்கான அதே மோசடி ஃபார்முலாதான் நாட்டுக்கோழி மோசடிக்கும். என்ன.. கோழிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகம். அதாவது ஒரு லட்சம் முதல் எத்தனை லட்சம் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். முதலீடு செய்த உடன், முதலீட்டாளர்கள் இடத்தில் ஷெட் அமைத்து கொடுத்து, அங்கு சில நூறு நாட்டுக்கோழி குஞ்சுகள் விடப்படும். அதற்கான தீவனத்தை கொடுத்து விடுவார்கள். 
அவற்றை பராமரித்து வளர்த்தால், ஒரு லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் 10 ஆயிரம். ஒன்றரை லட்சம் என்றால், 15 ஆயிரம் ரூபாய். அதுவே 2 லட்சம் என்றால் 20 ஆயிரம் வழங்கப்படும். ஒரு ஆண்டுகள் கோழியை வளர்த்து ஒப்படைத்தால், இறுதியில் முதலீடு பணம் திரும்ப வழங்கப்படும் என ஈமு ஃபார்முலாவில் கவர்ச்சிகரமாக அமலாக்கப்பட்டது நாட்டுக்கோழி மோசடி. மோசடி அறிவிப்பு துவங்கிய உடன், விவசாயிகள் ஏராளமானோர் முதலீடு செய்ய, ஓரிரு மாதங்களில் முதலீடு பணத்தை ஆட்டையப்போட்டு தலைமறைவானது மோசடி கும்பல். 
ஈமு அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரிரு மாதங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பிலும் பல கோடியை இழந்தனர் விவசாயிகள்.
'அது ஈமு சார்... இது நாட்டுக்கோழி...'நாட்டுக்கோழி வளர்ப்பு மோசடி நடந்த காலகட்டம் என்பது கொங்கு மண்டலத்தில் பரபரப்பாக இருந்த காலகட்டம். வெளிநாட்டு பறவையான ஈமுவை காட்டி கோடிக்கணக்கில் சுருட்டியது பெரும் சர்ச்சையாகி, பணத்தை முதலீடு செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டிருந்த நேரம். இந்த நேரத்தில் ஈமு பாணியில் நாட்டுக்கோழியை வைத்து எப்படி ஒரு பெரிய மோசடி நடந்தது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான். இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா என்பது தானே கொங்கு மண்டல ஸ்பெஷல். 
அதேதான் இங்கேயும். நாட்டுக்கோழியை மார்க்கெட் செய்ததே ஈமுவை வைத்துதான். "இது ஈமு மாதிரி இல்லை சார். இது நம்ம நாட்டுக்கோழி. நாட்டுக்கோழிக்கு இருக்குற டிமாண்ட் உங்களுக்கே தெரியும். ஈமு மாதிரி வெளிநாட்டு கோழியை கொண்டு வந்து உங்களை ஏமாத்தலை. 500 குஞ்சை நீங்க வளர்த்து கொடுத்தா, அதை மார்க்கெட்ல விக்கும் போது நல்ல வருமானம் வருது. அதுல ஒரு பங்குதான் உங்களுக்கு.
இந்த பிசினஸில் நீங்களும் ஒரு பார்ட்னர். அதனாலதான் உங்க கிட்ட இருந்து ஒரு முதலீடு பணம் வாங்குறோம். நீங்களே பாருங்க. கோழி வளர வளர உங்களுக்கு பணம் கொட்டப்போகுது. ஈமுல ஏமாந்திருக்கலாம்.. அது ஈமு சார். இது நம்ம நாட்டுக்கோழி. ஏமாத்தாது. உங்களுக்கு வித்தியாசம் புரியுதா இல்லையா?" என நாட்டுக்கோழி வளர்ப்பில் புரட்சி (?) செய்தார்கள் மோசடியாளர்கள்.
ஓரிரு மாதங்களில் தலைமறைவு'அட.. இது தெரியாம ஈமுவுல பணத்தை போட்டு ஏமாந்துட்டேனே...!' என ஈமுவில் பணத்தை இழந்தவர்களும், மீண்டும் கடனை உடனை வாங்கி, நாட்டுக்கோழியில் இன்வெஸ்ட் செய்தார்கள். ஈமுவுல விட்டதை நாட்டுக்கோழியில புடிச்சிரணும் என இருந்த விவசாயிகளுக்கு, இதிலும் அதிர்ச்சிதான். நாட்டுக்கோழி வளர்ப்புக்காக துவங்கப்பட்ட அலுவலகம் அடுத்தடுத்து மூடப்பட்டது. முதலீடு பணத்துடன் எஸ்கேப் ஆனது மோசடி கும்பல்.
அப்புறம் என்ன, நாட்டுக்கோழியிலும் விவசாயிகளுக்கு நாமம்தான். ஈமு மோசடியோடு, நாட்டுக்கோழி மோசடி தொடர்பான புகார்களையும் பெற்றது காவல்துறை. சில லட்சங்களை கொடுத்து சில நூறு கோழிக்குஞ்சுகளை வைத்து, கோழிக்குஞ்சாவது மிச்சம் என ஒரு சிலரும், எங்களுக்கு கோழிக்குஞ்சுகளை கூட கொடுக்கலையே என பலரும் காவல்நிலையத்துக்கும், வீட்டுக்கும் நடையாய் நடந்த கதை அரங்கேறியது. குறுகிய கால மோசடி என்றாலும், வெகு வேகமாய் ஆயிரக்கணக்கான விவசாயிகள், சில கோடிகளை இழந்தனர்.
நாட்டுக்கோழியோடு முடியவில்லை... ஈமு, நாட்டுக்கோழினு ரெண்டு தடவை ஏமாந்துட்டாங்களா? ரெண்டு தடவை அடிபட்டாதான் தெரியும் என்கிறீர்களா? ஆனால் அதோடு நின்று விடவில்லை என்பதுதான் அதிர்ச்சி. இதே பாணியில் ஆடு வளர்ப்பை அறிமுகப்படுத்தி காசு பார்த்தது மோசடி கும்பல். கோழி காலை வாரலாம். ஆடு காலை வாராது' எனும் கதையாக ஆசையை தூண்டி வலையில் சிக்க வைத்து ஏமாற்றத் துவங்கினர். பெரிய அளவில் ஆடு வளர்ப்பு மோசடி கை கொடுக்கவில்லை என்றாலும், சில கோடிகள் இதிலும் விவசாயிகள் ஏமாந்தனர்.
அட ஆட்டோடு முடியவில்லை. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்ற கதையாய், ஆடு, கோழிக்கு பதில் தேங்காயை வைத்து மோசடி செய்யப்பட்டதுதான் உச்சம். ஒரு லட்சம் முதலீடு செஞ்சா, தேங்காய்களை கொடுப்போம். அதை நீங்க கொப்பரையா மாத்தி தரணும். சிம்பிளான வேலை மாசம் உங்களுக்கு பணம் வரும், போனஸ் வரும்" எனச்சொல்ல இதிலும் சில ஆயிரம் விவசாயிகள், முதலீடை கொட்டினர். அதோடு சரி.. அந்த கும்பலும் எஸ்கேப். 
கோழி, ஆட்டோடு, கொப்பரை மோசடியும் சேர்ந்து கொண்டது. இப்படி விவசாயிகளை மையப்படுத்தி நடந்த மோசடிகள் நீண்டது. இதை மற்ற மோசடிகளோடு ஒப்பிடமுடியாது.
அரசின் அலட்சியமும் காரணம்விவசாயிகளை மையப்படுத்திய இந்த மோசடி குறித்து பொருளாதார நிபுணர் ஒருவரிடம் பேசினோம். 
"இவையெல்லாம் மிகப்பெரிய மோசடிகள். இது பணத்தை போட்டு, உழைக்காமல் வட்டியை எதிர்நோக்கும் சிட்பண்ட் மோசடியோ, நிதி நிறுவன மோசடியோ, ஆன்லைன் மோசடியோ இல்லை. ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க மாட்டோமா என நினைத்தவர்கள்தான் இதில் முதலீடு செய்தார்கள். கோழி வளர்த்து சம்பாதிக்கலாம் என்றுதான் விவசாயிகள் நினைத்தார்களே தவிர, ஒன்றுமே செய்யாமல் பணம் கிடைக்க வேண்டும் என நினைக்கவில்லை. எனவே இதை மற்ற மோசடிகளுடன் ஒப்பிட முடியாது.
விவசாயம் அழிந்து வரும் நிலையில், வேறு வழியில்லாமல்தான் விவசாயிகள் இதை நோக்கிச் சென்றனர். விவசாயிகள் செய்த தவறு, ஒரு பக்கம் பணத்தை இழந்த பின்னரும், மீண்டும் அதேபோன்ற மோசடியில் சிக்கியதுதான். இதில் விவசாயிகள் விழிப்புணர்வோடு இருக்கவில்லை என்பதை விட, அரசு இதில் கவனம் செலுத்தவில்லை என்பதும் முக்கிய காரணம்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க வேண்டிய அரசு, இப்படி பகிரங்கமாய் விளம்பரம் செய்து ஏமாற்றும் நிறுவனங்களை கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டக்கூட முயற்சிக்கவில்லை. அதனால்தான் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, இந்த வாரம் மோசடி வாரம் என தினம் ஒரு மோசடி அரங்கேறியது. இந்த மோசடிகளுக்கு விவசாய அழிவும் ஒரு காரணம். 
விவசாயத்தில் லாபம் கிடைக்காது என்றால், வேறு எதில் கிடைக்கும் என எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக சுற்றிக்கொண்டிருந்த விவசாயிகள்தான் இந்த மோசடியில் சிக்கினர். தவிர, இந்த மோசடிகள் ரகசியமாக நடக்கவில்லை. மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயமும், அரசின் அலட்சியமும்தான் இது போன்ற மோசடிகள் பெருக காரணமாக அமைந்தது," என்றனர்.
'மலைமுழுங்கி மகாதேவன்கள்'இதேபோல் கொங்கு மண்டலத்தில் பல மோசடிகள் அடுத்தடுத்து விவசாயிகளை மையப்படுத்தி நடந்தது. ஈமு பாணியில் தேக்கு மரம் வளர்ப்பு, கான்ட்ராக்ட் பார்மிங் என பல மோசடிகள் விவசாயம் சார்ந்த தொழிலை மையம்படுத்தி மோசடியாளர்களால் அரங்கேற்றப்பட்டன. இவை இல்லாமலும் சில மோசடிகள் அரங்கேறின. அவற்றில் பிரதானமானவை நில மோசடிகள். நிலமே இல்லாமல், ப்ளாட் போட்டு விற்பது, கிரானைட் இருப்பதாக சொல்லி ஒன்றுக்கும் பயனளிக்காத இடத்தை பல கோடிக்கு விற்பது, தங்கப்புதையல் இருப்பதாக சொல்லி ஏமாற்றுவது என விவசாயிகள் ஏமாந்த கதை சொல்லி மாளாது.
வெறுங்கையால் முழம் போடும் இந்த நில மோசடிகளையும், அதில் ஈடுபடும் மலை முழுங்கி மகாதேவன்களின் ஏமாற்று வித்தை பற்றியும் அடுத்த வாரம் பார்க்கலாம்...
- ச.ஜெ.ரவி (விகடன் செய்திகள் -28.08.2015

பொதுமக்களுக்கு கஷ்டந்தான்!

பொதுமக்களுக்கு கஷ்டந்தான்!
மோட்டார் வாகன சட்டப்படி, அசல் ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. ஒரிஜினல் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? என்று நாம் அனைத்து ஆவணங்களின் நகலைத்தான் இதுவரை உடன் வைத்திருந்தோம். இனிமேல் போக்குவரத்து காவல்துறையினர்  இதை  அனுமதிக்க மாட்டார்கள். இது நல்லதுக்குத்தான் என்றாலும், நடைமுறை சிக்கல்களை பொதுமக்களாகிய நாம்தான் அனுபவிக்கப் போகிறோம். 
தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?
ஒரு வாகன ஓட்டுனர், தனது ஒரிஜினல் ஓட்டுநர் லைசென்சை தொலைத்து விட்டால், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்க வேண்டுமாம். ஒரு வாரம் கழித்து மீண்டும் அவர்களை போய் பார்த்து, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என, சான்றிதழ் ஒன்று அவர்களிடமிருந்து வாங்கி வர வேண்டுமாம்.  அந்த சான்றிதழை, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த, வட்டார போக்குவரத்து அலுவலர் (Regional Transport Officerஅவர்களிடம் கொடுக்க வேண்டுமாம். அவர் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும், அந்த நபரின் டிரைவிங் லைசென்ஸ் எண்ணை அனுப்பி, 'இவரது லைசென்சை, யாராவது ஏதாவது குற்றத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்து உள்ளீர்களா?' என கேட்டு, கடிதம் எழுதுவாராம்.
அதற்கு, பதில் வராத பட்சத்தில், எல்.எல்.டி., படிவம் மற்றும் 20 ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தில், 'தற்போது, நான் வாங்கும் லைசென்சை தவறாக பயன்படுத்த மாட்டேன். இதில், நடக்கும் தவறுக்கு நானே பொறுப்பு'  என்று நாம் எழுதி கொடுக்க வேண்டுமாம். பின்,10 நாட்களில், புதிய டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குமாம். (எப்படியும் ரெண்டு மாசம் ஆயிடும்)
******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

எங்கும் எதிலும் கலப்படம்! கண்டுபிடிக்க எளிய வழிகள்

No automatic alt text available.
எங்கும் எதிலும் கலப்படம்! கண்டுபிடிக்க எளிய வழிகள்
நான் சூப்பர் மார்க்கெட்டில்தான் பொருட்களை வாங்குகிறேன். கலப்படம் என்ற பேச்சுக்கே இடம் இல்லைஎன்று சிலர் கூலாகச் சொல்வார்கள். அதிக விலைகொடுத்து வாங்கினால் கலப்படம் இருக்காது என்பதும் பலரின் நம்பிக்கை. உண்மையில் பாலில் தொடங்கி பனீர் வரை எங்கும் எதிலும் எப்போதும் கலப்படம்தான். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பிராண்டுகளில் சர்வசாதாரணமாகக் கலப்படங்களைச் செய்கிறார்கள் கலப்பட மன்னர்கள். தரம் குறைந்த பொருட்களை வாங்கிவந்து, செயற்கை நிறம் கலந்தும் பாலீஷ் செய்தும் தரமான பொருட்களைப் போல விற்கிறார்கள்.
குறைவான விலை என்பதாலும், நம்மை எல்லாம் ஒன்றும் செய்யாது எனும் அசட்டு நம்பிக்கை காரணமாகவும் கலப்படப் பொருட்கள் விற்பனை எந்தத் தடையும் இன்றி நடந்துகொண்டே இருக்கிறது.
கலப்படம் என்பது, ஆரோக்கியத்தை அசைத்துப்பார்த்து, உயிருக்கே உலைவைத்துவிடும் மரண வியாபாரம். அது ஒரு சமூக அநீதி எனும் புரிதலும் விழிப்புஉணர்வும் விற்பவர்களுக்கும் தேவை. நுகர்வோருக்கும் தேவை.
கலப்படத்தைக் கண்டறிய...
டீ
கடைகளில் பயன்படுத்திய டீ தூள் கசடை (Tea dust) குறைவான விலைக்கு வாங்கி, அதை வெயிலில் உலர்த்தி, சிவப்பு நிறம் சேர்த்து விற்கின்றனர். குறைவான விலையில் கிடைக்கும் டீ தூள்களில், இந்த சிவப்பு நிறம் கலக்கப்படுகிறது. சாதாரண ஃபில்டர் பேப்பரில் டீ தூளைக் கொட்டி, நான்கு துளிகள் நீர் விட்டால், சிவப்பு நிறம் தனியே பிரிவது தெரியும். குறிப்பாக, ஊர்களை மையப்படுத்தி விற்கும் ஸ்பெஷல் டீ தூள்கள் பெரும்பாலும் கலப்படங்களே.
கடுகு
தரமான கடுகை, கைகளில் வைத்து அழுத்திப்பார்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருக்கும். கசகசா வகையைச் சார்ந்த அர்ஜிமோன் விதைகள் கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுங்கும்போது, அதன் உட்புறம் வெள்ளையாக இருக்கும்.
மஞ்சள் தூள்
மஞ்சள் தூளில், ஸ்டார்ச் பவுடர் மற்றும் மெட்டானில் எல்லோ எனும் ரசாயனம் கலக்கப்படுகின்றன. அரை ஸ்பூன் மஞ்சள்தூளை, 20 மி.லி இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் மெட்டானில் எல்லோ கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.
பச்சைமிளகாய், பச்சைப் பட்டாணி
பச்சைமிளகாய், குடமிளகாய் போன்றவை அதிகப் பச்சையாகத் தெரிவதற்காக, மாலசைட் கிரீன் (Malachite green) எனும் ரசாயனத்தில் முக்கி விற்கப்படுகின்றன.
இதேபோல, உலர் பட்டாணி ஊறவைக்கப்பட்டு, மாலசைட் கிரீன் கலந்து ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோல் விற்கப்படுகிறது. இவற்றை வெந்நீரில் போட்டதும் பச்சை நிறம் வெளியேறினால், அதில் மாலசைட் கிரீன் கலந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
பட்டை
பட்டையில், கேசியா (Casia), சுருள் பட்டை (Cinnamon) எனும் இரு வகைகள் உள்ளன. இதில், சுருள் பட்டையில்தான் சத்துக்கள் உள்ளன. கேசியா பட்டையில் சாதாரண மரப்பட்டைகள் நிறம் சேர்த்துக் கலக்கப் படுகின்றன. ஓரிரண்டு பட்டையைக் கசக்கிப் பார்த்தால், கைகளில் எந்த நிறமும் ஒட்டக் கூடாது.
மிளகு
பப்பாளி விதைகளைக் காயவைத்தால், மிளகு போலத் தெரியும். அதை, மிளகில் சேர்த்து விற்கின்றனர். அதேபோல, பழைய மிளகில் மினரல் ஆயில் எனப்படும் பெட்ரோலியப் பொருள் கலக்கப்பட்டு, மெருகேற்றப்படுகிறது.  மிளகு பார்ப்பதற்குப் பளபளப்புடன் மின்னக் கூடாது. முகர்ந்துபார்த்தால் கெரசின் வாடை அடிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளரில் 50 மி.லி தண்ணீரை ஊற்றி, அதில் மிளகைப் போட வேண்டும். மூழ்கினால் அது உண்மையான மிளகு, மிதந்தால் அது பப்பாளி விதை.
சீரகம்
சீரகத்தில், குதிரைச் சாணம் சேர்க்கப்படுகிறது. தவிர, அடுப்புக் கரியும் சேர்க்கின்றனர். சீரகத்தைத் தண்ணீரில் போட்டால், சாணம் கரைந்துவிடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கறுப்பாக மாறினால், அதில் அடுப்புக் கரி சேர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சீரகம் போன்ற தோற்றம்கொண்ட சதகுப்பஎனும் பொருளையும் சேர்த்து விற்பனை செய்கின்றனர். இதைப் பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே கண்டறிய முடியும்.
டீலக்ஸ் தனியா
தனியா அடர்பழுப்பாக இருக்கும். ஆனால், டீலக்ஸ் தனியா என்பதை வெள்ளையாக மாற்ற, சல்பர் டை ஆக்சைட் சேர்க்கப்படுகிறது. வெள்ளையாக்கப்பட்ட தனியாவைத் தவிர்த்துவிடலாம். அதுபோல, ஒரு ஸ்பூன் தனியா தூளில் தண்ணீர் விடும்போது, மேலாக தூசு போல படிந்தால் அதில் மரத் தூள் கலந்திருக்கலாம்.
ஜவ்வரிசி
மஞ்சள் நிறமாக இருக்கும் ஜவ்வரிசி டினோபால் போன்ற, பளீர் வெள்ளை நிறத்தைத் தரும் ரசாயனங்களால் தீட்டப்படுகிறது. சிறிது மஞ்சளாக இருக்கும் ஜவ்வரிசியைப் பயன்படுத்துங்கள்.
பால்
அதிகாலை கறக்கும் பால் சில்லிங் சென்டருக்கு போகும் வரையில் கெட்டுப்போகாமல் இருக்க, யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. பாலையும் தண்ணீரையும் 10 மி.லி அளவில் சமமாகக் கலக்கும்போது, நுரை வந்தால் அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கலாம். மேலும், அருகில் விற்கும் பால்காரரிடம் பால் வாங்குவதே கலப்படங்களிலிருந்து தப்பிக்க எளிய வழி.
மிளகாய்த் தூள்
இதில், புற்றுநோயை உண்டாக்கும் சூடான் டை கலக்கப்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூளைக் கலக்குங்கள். அதில் பளீர் சிவப்பு வண்ணம் வெளிவந்தால், அதில் சிவப்பு வண்ணம் கலந்திருக்கலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயைக் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வையுங்கள். தடிமனான திக்கான படிமம் எண்ணெயின் மேல் படிந்தால், அது சுத்தமான தேங்காய் எண்ணெய். நீர்த்த நிலையில் அப்படியே இருந்தால், அதில் மலிவான எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கின்றன.
தேன்
பஞ்சைத் தேனில் நனைத்து, நெருப்பில் காட்டும்போது, பஞ்சு எரிந்தால் நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். தேனைத் தண்ணீரில் விட்டால், கரையாமல் அடி வரை சென்று தங்கும். கரைந்தால், அது வெல்லப்பாகு.
காபி பொடி
ஒரு கிளாஸ் தண்ணீரில் காபி பொடியைப் போட்டதும், காபி பொடி மேலே மிதக்கும். சிக்கரி கலந்திருந்தால், நீரில் மூழ்கும்.
எண்ணெய்
எண்ணெயை ரீஃபைண்ட் செய்ய, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்.
செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தலாம். எண்ணெயில், 20 சதவிகிதம் அளவுக்கு வேறு ஒரு எண்ணெயைக் கலக்கலாம். அரசின் இந்த அனுமதி, பல கலப்படங்களுக்குக் காரணமாக இருக்கிறது.
தோசை மாவு
மாவு புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுகிறது. இதில் சுகாதாரமற்ற தண்ணீர் சேர்ப்பதால் இ-கோலை பாக்டீரியா (மலக்கழிவில் இருக்கும் கிருமி) இருக்கும். பல நோய்களை உருவாக்கும் கிருமி இது. எனவே, வீட்டில் மாவு அரைத்துச் சாப்பிடுவதே நல்லது.
பனீர்
ஒரு கப் தண்ணீரில் ஒரு பனீர் துண்டைப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். ஆறியதும், சில துளிகள் அயோடின் சொல்யூஷன் கலக்கவும். பனீர் நீல நிறமாக மாறினால், அது கலப்படம். பனீர் தயாரிக்கப்பட்ட பாலில் கஞ்சி, மாவுப் பொருட்கள் (Starch) கலந்திருக்கலாம்.
நெய்
வனஸ்பதி அல்லது வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு கலந்திருக்கும். இதைப் பரிசோதனை மையங்களில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெண்ணெயை வாங்கிக் காய்ச்சுவது நல்லது.
யாரிடம் புகார் செய்யலாம்?
தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளன. வாங்கும் பொருட்களால், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்த ஊரில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். எந்தப் பொருளால் உடல்நலக் கேடு ஏற்பட்டதோ, அந்த இடத்துக்குச் சென்று, அந்த உணவின் சாம்பிளைப் பரிசோதனை செய்வர். ரிப்போர்ட்டில் கலப்படம் எனத் தெரிந்தால், விற்றவர் மற்றும் தயாரித்தவர் மேல் வழக்குப் போடப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமும் பரிசோதனைக்குச் செலவான பணமும் திரும்ப வழங்கப்படும். நுகர்வோருக்கு உண்டான அலைச்சல், மன உளைச்சலுக்குத் தகுந்த தொகை தரப்படும்.
பாதிப்புகள்
உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் அனுமதிக்கப்படாத வண்ணங்கள் புற்றுநோய்க்குக் காரணமாகலாம். அர்ஜிமோன் விதைகள், பெட்ரோலிய பொருளான மினரல் ஆயில் போன்றவையும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதே. ஆப்பிள் மேல் பூசப்படும் மெழுகில் லெட்இருக்கிறது. இது வாந்தி, வயிற்றுப்போக்கில் தொடங்கி நரம்பு மண்டலத்தையே பாதிக்கலாம். உணவால் ஏற்படும் கழிவுகளைச் சிறுநீரகமும் கல்லீரலும் சுத்தம் செய்கின்றன. வீரியமுள்ள ரசாயனங்களால் இந்த இரண்டு உறுப்புகளும் பாதித்து, செயலிழந்து போக நேரிடும். எப்போதோ ஓரிரு முறை கலப்பட உணவுகளைச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. மாதங்கள், ஆண்டுகள் எனத் தொடர்ந்து சாப்பிடும்போது, உடல்நலம் கெடுவது உறுதி. உடலை உருக்குலைக்கும் நோய்களுக்கான வாசலும் இதுவே.
நன்றி : டாக்டர் விகடன் -09.01.2015

வாகன ,ஓட்டுனர்கள், 'ஒரிஜினல் ,லைசென்ஸ்' வைத்திருப்பது,கட்டாயம்

வாகன ,ஓட்டுனர்கள், 'ஒரிஜினல் ,லைசென்ஸ்வைத்திருப்பது,கட்டாயம்
வாகனம் ஓட்டுவோர், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும்' என்ற அரசின்உத்த ரவு, செப்டம்பர், 1-ம் தேதி முதல் கட்டாயமாகிறது. மீறுவோர் மீது, சட்ட நடவடிக்கை பாயும் என, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாகன ,ஓட்டுனர்கள், 'ஒரிஜினல் ,லைசென்ஸ்' வைத்திருப்பது,கட்டாயம்
தமிழகத்தில், டூ - வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு என, தனித்தனி லைசென்ஸ் வழங்கப்படுகிறது. அவை, ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. லைசென்ஸ் பெறுவதற்கு முன், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், எல்.எல்.ஆர்., என்ற, பழகுனர் உரிமம் பெற வேண்டும்.
பின், ஒரு மாதம் கழித்து, லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம். அப்போது, விண்ணப்பதாரர் வாகனம் இயக்குவதை, மோட்டார் வாகன ஆய்வாளர் பரிசோதித்து, லைசென்ஸ் வழங்க, ஆர்.டி.ஓ.,க்கு பரிந்துரைப்பார். இவ்வாறு, லைசென்ஸ் பெற, பல படிகள் உள்ளன.
இதனால், வாகன ஓட்டுனர்கள், ஒரிஜினல் லைசென்சை, பாதுகாப்பாக வீட்டில் வைத்து விட்டு, அதன் நகலை மட்டும் வைத்திருப்பர்.
போலீசார், வாகன சோதனையில் ஈடுபடும் போது, நகல் லைசென்சை காட்டி செல்வர். மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ அல்லது விதிகளை மீறி ஓட்டினாலோ, வண்டியின் சாவியை, போலீசார் எடுத்துக் கொள்வர்; ஒரிஜினல் லைசென்ஸ் எடுத்து வரும்படி கூறுவர். ஒரிஜினல் லைசென்ஸ் வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
ஆட்டோ, வேன், பஸ் போன்ற வர்த்தக வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்களை நியமித்து, அவற்றை வாடகைக்கு விடுகின்றனர். வாகனங்களை, சொந்த வண்டி போல் பராமரிக்கவும், வாடகையை ஒழுங்காக தரவும், டிரைவர்களின், ஒரிஜினல் லைசென்சை வாங்கி வைத்துக் கொள்வர்.
இந்நிலையில், வாகன விபத்துக்களால், உயிர் இழப்பு அதிகரிப்பதை அடுத்து, வாகனம் ஓட்டுவோர், ஒரிஜினல் லைசென்சை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஆணைப்படி, 'செப்., 1 முதல்வாகன ஓட்டுனர்கள்ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, காவல் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:
வாகனத்தை ஒழுங்காக ஓட்ட தெரிந்தாலும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்,அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, லஞ்சம் தந்தால் மட்டுமே லைசென்ஸ் கிடைக்கிறது. வாகனத்தை ஒழுங்காக ஓட்டினாலும், பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போலீசார், வண்டி சாவியை பறித்து, அலைய வைப்பர்.
தற்போது, கட்டாயம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் தவறே செய்யவில்லை என்றாலும், அதை வைத்து, பணம் வசூலில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொலைந்து போனால் பெரிய தொல்லை!
ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கை குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாகன  சட்டப்படி, அசல் ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயம். இந்திய மனபான்மை படி, அனைத்திலும் நகல் வைத்திருப்பது, வாடிக்கையாகி விட்டது. இதற்கு, இதுவரை அனுமதி அளித்தோம்; இனிமேலும் முடியாது.
வாகன ஓட்டுனர், ஒரிஜினல் லைசென்சை தொலைந்து விட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என, சான்றிதழ் வாங்கி வர வேண்டும். அந்த சான்றிதழை, அவரது பகுதியை சேர்ந்த, ஆர்.டி.ஓ.,விடம் கொடுத்தால், அவர் அனைத்து, ஆர்.டி.ஓ.,க்களுக்கும், அந்த நபரின் லைசென்ஸ் எண்ணை அனுப்பி, 'இவரது லைசென்சை, யாராவது பறிமுதல் செய்து உள்ளீர்களா?'  என கேட்டு,  கடிதம் எழுதுவர்.
அதற்கு, பதில் வராத பட்சத்தில், எல்.எல்.டி., படிவம் மற்றும் 20 ரூபாய் பத்திரத்தில், 'தற்போது, நான் வாங்கும் லைசென்சை தவறாக பயன்படுத்த மாட்டேன். இதில், நடக்கும் தவறுக்கு நானே பொறுப்பு' என்று எழுதி கொடுக்க வேண்டும். பின், 10 நாட்களில், புதிய டிரைவிங் லைசென்ஸ் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர், சடகோபன் கூறுகையில், ''ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், தொலைந்து விடும் பட்சத்தில், இணைய தளத்தில் எளிதாக பெற, அரசு வழிவகை செய்ய வேண்டும். இல்லை யென்றால், வாகன ஓட்டிகள் அனைவரும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், பல நாட்கள் காத்திருக்கும் நிலையும், அவர்கள், 'கேட்பதை' கொடுக்க வேண்டிய நிலையும் வரும்,'' என்றார்.
போக்குவரத்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து போலீசார், ஒரிஜினல் லைசென்சை பறிமுதல் செய்து, அதிகளவில் பணம் கேட்பர் என, பொது மக்கள் அச்சப்பட வேண்டாம். அதுபோன்ற செயல் களில் ஈடுபடும் போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்' என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் -26.08.2017
அசல் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்! அல்லது ரூ500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. 
நன்றி : தினமலர் நாளிதழ் -29.08.2017

Saturday, August 26, 2017

விதிமீறல், ஆக்கிரமிப்புகள் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை

விதிமீறல், ஆக்கிரமிப்புகள் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை
சென்னை, : விதிமீறல், ஆக்கிரமிப்புகள் குறித்த புகார்கள் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, அரசு அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ராமச்சந்திரன் என்பவர், மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
ஆவணங்களை பரிசீலிக்கும்போது, சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிகிறது. விதிமீறல், ஆக்கிரமிப்புகள் இருந்தால், சட்ட வழிமுறைகளை பின்பற்றி, அதை இடிக்க, அரசுக்கு உரிமை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 
சென்னை நகருக்குள் இருந்தால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புறநகராக இருந்தால், சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி மற்றும் நகரமைப்பு அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்கு முன், சம்பந்தப் பட்ட வர்களுக்கு, 'நோட்டீஸ்' கொடுக்க வேண்டும். 
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, விண்ணப்பங்கள் மற்றும் புகார்கள் வந்தால், அரசு தரப்பில் உடனடியாக முடிவு எடுப்பதில்லை என, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. 
குறிப்பிட்ட அவகாசத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத கட்டுமானம், ஆக்கிரமிப்புகள், விதிமீறல்கள் தொடர்பான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் முன், தேவைக்கேற்ப, வேறு யாரிடமும் விசாரிக்கலாம். அனுமதிக்கப்பட்ட திட்டப்படி கட்டப்பட்டதா என்பது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்தை கேட்டு முடிவெடுக்கலாம். 
எனவே, அரசின் அனைத்து செயலர்களுக்கும், நீதிமன்றம் தெரிவித்த கருத்தை, தலைமை செயலர் தெரியப்படுத்த வேண்டும். இதனை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய, உத்தரவின் நகலை, தமிழக அரசின் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், புதுச்சேரி அரசு மற்றும் பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.08.2017

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்!

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்!
சென்னை, இஸ்லாமிய நாடுகளில் உள்ளது போல, பிறருடைய சொத்துக்களை அபகரிக்கும் நபர்களின் கைகள், விரல்களை வெட்டுவதற்கு இந்தியாவில் சட்டம் இல்லையே என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் வருத்தம் தெரிவித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பத்திரப்பதிவு
சென்னை கோட்டூரை சேர்ந்தவர் பி.எம்.இளவரசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
சாலிகிராமத்தில் உள்ள 3,830 சதுர அடி நிலத்தை எஸ்.என்.பத்மநாபன், ஆர்.தினேஷ்பாபு ஆகியோரிடம் இருந்து ரூ.1.25 கோடிக்கு கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் 17–ந் தேதி வாங்கினேன். இந்த நிலத்துக்குரிய பத்திரப்பதிவு அதேநாளில், விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. பத்திரப்பதிவின்போது, அதற்குரிய முத்திரைத்தாள் கட்டணம் முழுவதையும் செலுத்தி விட்டேன். இதன்பிறகு, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை வழங்க விருகம்பாக்கம் சார்பதிவாளர் மறுத்துவிட்டார்.
போலி ஆவணம்
எனக்கு நிலத்தை விற்பனை செய்த எஸ்.என்.பத்மநாபன் நிலத்தின் மீதான பத்திரத்தை போலியாக தயாரித்துள்ளதாகவும், இது சம்பந்தமாக பத்திரப்பதிவு ஐ.ஜி. விசாரணை நடத்தி, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், எனவே பத்திரத்தை வழங்க முடியாது என்றும் கடந்த 2013–ம் ஆண்டு மே 22–ந் தேதி விருகம்பாக்கம் சார் பதிவாளர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க சார்பதிவாளருக்கு அதிகாரம் இல்லை. எனவே, நிலம் தொடர்பான பத்திரத்தை எனக்கு வழங்கும்படி சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
பார்க்கவில்லை
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரப்பதிவு துறை ஐ.ஜி., விருகம்பாக்கம் சார் பதிவாளர் ஆகியோர் பதில் மனுவை தாக்கல் செய்தனர். அதேபோல, தி.நகரை சேர்ந்த வி.வி.வி.நாச்சியப்பன்(வயது 81) என்ற முதியவர் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொண்டு, பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
தெற்கு ரெயில்வேயில் மண்டல மூத்த என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். சாலிகிராமத்தில் 4 ஆயிரம் சதுர அடி நிலத்தை என் மனைவி சரஸ்வதி பெயரில் 1961–ம் ஆண்டு வாங்கினேன். என் மனைவி 2001–ம் ஆண்டு இறந்து விட்டார். முதுமையின் காரணமாக, இந்த நிலத்தை பார்வையிட செல்லவில்லை.
வழக்குப்பதிவு
கடந்த 2012–ம் ஆண்டு நிலத்தை பார்க்க சென்றபோது, அதில் சிலர் குடிசை போட்டு ஆக்கிரமித்து இருந்தனர். இதையடுத்து விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று வில்லங்கம் சான்றிதழ் பெற்று பார்த்தபோது, கடந்த 2011–ம் ஆண்டு தனலட்சுமி, பத்மநாபன் உட்பட பலர் கூட்டாக சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் என் நிலத்தை அபகரித்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து நான் செய்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ஐகோர்ட்டிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் மனுதாரர் இளவரசன் மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
மேலும், இந்த நிலத்தை அபகரித்து 2–வது முறையாக போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவை செய்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அபகரிக்க முயற்சி
இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் விஜயநாராயணன், எதிர்மனுதாரர் நாச்சியப்பன் சார்பில் வக்கீல் எஸ்.தங்கசிவம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறயிருப்பதாவது:–
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடைபெறும்போது, அந்த பத்திரத்தை வழங்க முடியாது என்று மறுப்பதற்கு சார் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது.
இந்த வழக்கின் ஆவணங்கள், வக்கீல்கள் வாதங்கள் அனைத்தையும் ஆராயும்போது, மனுதாரர் இளவரசன், நாச்சியப்பனின் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சித்துள்ளது தெளிவாகிறது.
வெட்டவேண்டும்
இதுபோல மோசடிகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இருந்திருந்தால், இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட யாருக்கும் தைரியம் வராது.
இந்த வழக்கில், அப்பாவி ஒருவரின் நிலத்தை அபகரிக்க மோசடிக்காரர்களுக்கு உடந்தையாக விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் சிலரும் இருந்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளில், சிறு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு கூட, கைகள், விரல்கள் வெட்டப்படுகிறது.
அதுபோல மோசடியில் ஈடுபட்ட இந்த மனுதாரருக்கும், விரல்களை வெட்டும் கடுமையான தண்டனையைத்தான் வழங்க வேண்டும் என்பது இந்த கோர்ட்டின் எண்ணமாக உள்ளது. ஆனால், அப்படி தண்டனை வழங்க நம் நாட்டின் சட்டத்தில் இடமில்லையே?
ஒரு லட்சம் ரூபாய்
எனவே, போலி ஆவணங்கள் மூலம் பிறருடைய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த மனுதாரர் இளவரசனுக்கு, வழக்கு செலவாக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.
மனுதாரரிடம் இந்த தொகையை ஐகோர்ட்டு பதிவுத்துறை வசூலிக்க வேண்டும். பின்னர், புற்றுநோய் சிகிச்சை மையம், பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளி, கோட்டூபுரத்தில் உள்ள வித்யா சாகர் தன்னார்வ அமைப்பு, சென்னையில் உள்ள எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாக ஒய்.ஆர்.ஜி. மையம் ஆகியவைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ஐகோர்ட்டு பதிவுத்துறை பிரித்து கொடுக்க வேண்டும்.
அதிகபட்ச தண்டனை
இந்த நிலத்தை அபகரித்ததாக நாச்சியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மனுதாரர் இளவரசன் உட்பட பலர் மீது பதிவான வழக்கை விசாரிக்கும் கீழ் கோர்ட்டு, இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
நன்றி : தினத்தந்தி நாளிதழ் - 11.07.2014