disalbe Right click

Friday, September 29, 2017

பட்டாசுக்கடை - தடையின்மைச் சான்று பெற ....

பட்டாசுக்கடை - தடையின்மைச் சான்று பெற ....
தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பட்டாசு விற்பனைக்காக கடைகளும் அதிகமாக ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பட்டாசுக் கடைகள் வைப்பவர்கள் தீயணைப்புத் துறையினரிடமிருந்து ”தடையின்மைச் சான்று” பெற வேண்டும். இந்தச் சான்று பெறாமல் பட்டாசுக் கடை வைப்பது சட்டப்படி தண்டணைக்குரிய குற்றமாகும்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், விபத்துக்கள் நேராமல் இருப்பதற்காகவும் தீயணைப்புத் துறையினர் பல விதிமுறைகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர். அதனை பட்டாசுக்கடை வைப்பவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 
விதிமுறைகள்:
 வெடிபொருள் சட்டப்படி, பட்டாசு கடை வைக்கும் கட்டிடமானது, கல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டு இருக்க வேண்டும்.
 பட்டாசு கடைகளுக்கான உரிமத்தை, வருடந்தோறும் கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும்
 பட்டாசுக் கடையின் இரு புறங்களிலும், கட்டாயம், வழிகள் அமைத்திருக்க வேண்டும்
➽ கடை வைக்கப்பட்ட கட்டடத்தில், மின் விளக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எண்ணை விளக்குகள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
 பட்டாசு கடைக்கும், மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம், 15 மீ.,  (சுமார் 50 அடி)   இடைவெளி இருக்க வேண்டும்
➽ உதிரியாக பட்டாசுகளை விற்கக் கூடாது.
' புகை பிடிக்கக் கூடாது' என, பெரியதாக எச்சரிக்கை பலகை பல இடங்களில் வைக்க வேண்டும். வாடிக்கையாளரின் பார்வைக்கு தென்படும் வகையில் அதனை வைக்க வேண்டும்
➽ தீயணைப்பு வாகனம் வருவதற்கேற்பபட்டாசு கடை அருகே வழி ஏற்படுத்தி இருக்க வேண்டும்
 பட்டாசு வைப்பதற்கென்று உரிமம் பெற்ற இடத்தை தவிர, வேறு இடங்களில் பட்டாசு இருப்பு கண்டிப்பாக வைக்கக் கூடாது.
➽  குறிப்பிட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு கண்டிப்பாக வைக்கக் கூடாது.
  மேற்கண்ட விதிமுறைகளை மீறுகின்ற கடை உரிமையாளர் மீதும், கடையில் பணியாற்றும்   விற்பனையாளர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்
➽ தீயணைப்புத் துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறையினர்கள் ஆகியோர்    ஆய்வு செய்து சான்றுகள் தந்த பின்னரே, தடையின்மை சான்றிதழ்  வழங்கப்படும்.
➽   மேற்கண்ட விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்தால், தடையின்மை சான்று வழங்கப்பட மாட்டாது.  துறைரீதியாக நடத்துகின்ற திடீர் சோதனையில், விதிமுறைகள்  மீறப்பட்டு இருப்பது தெரிய வந்தால், பட்டாசுக்கடையின்  உரிமம் ரத்து செய்யப்படும்
 பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கும் போது, வரி செலுத்தியதற்கான ரசீது மற்றும்    பட்டாசுக்கடை கட்டடத்தின் வரைபடத்தின் ஆறு நகல்களை இணைக்க வேண்டும்.
 பட்டாசு கடை வைக்கும் இடமானது, வாடகை கட்டடமாக இருந்தால், 'நோட்டரி பப்ளிக்' வழக்கறிஞர் கையெழுத்துடன் கூடிய, வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமம் கட்டணம், 500 ரூபாய் செலுத்தி, அதற்கான அசல் சான்றுடன், 'பாஸ்போர்ட் சைஸ்' போட்டோ   மூன்றுடன், மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
➽  வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு கடையிலோ அல்லது கடையின் அருகிலோ   பட்டாசுகளை வெடித்து காட்டக் கூடாது. பட்டாசுக் கடையில், கூட்டம் அதிகம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
பட்டாசுக் கடையில், இரு தீயணைப்பு கருவிகள், இரு வாளிகளில் தண்ணீர் மற்றும்    மணல் ஆகியவற்றை, தயாராக வைத்திருக்க வேண்டும்.
➽ கடையின் வெளிச் சுவரில் தெளிவாக தெரியும்படி,  கடையின் பெயர், உரிமம் எண்; உரிமம் பெற்றவர் பெயர்; அனுமதிக்கப்பட்ட பட்டாசு இருப்பு விபரம் மற்றும் அதன் வகைகள் குறித்து, பெயிண்டால் எழுதி வைக்க வேண்டும்.
 பட்டாசு இருப்பு, தணிக்கை பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.
 பட்டாசு கடை வைக்க அனுமதி பெற்றவர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் மட்டுமே, பட்டாசுக்கடையில் பட்டாசு விற்க வேண்டும்.
➽ பட்டாசு கடைகள், 270 சதுரடியில் மட்டுமே இருக்க வேண்டும். குறைந்தபட்சம், 9 சதுர மீட்டர்,  அதிகபட்சம், 25 சதுர மீட்டராகவும் இருக்க வேண்டும்.
 பள்ளி, மருத்துவமனை, பெட்ரோல் பங்க், வழிபாட்டு தலங்கள் மற்றும் மின் வினியோக பெட்டிகள் அருகே, பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி கிடையாது.
பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், விதிமீறல் கடைகள் குறித்து,  கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அல்லது வட்டாட்சியர், போலீசார் ஆகியோரிடம் புகார் அளிக்கலாம்.
தற்காலிகமாக பட்டாசுக்கடை அமைக்க.....
பண்டிகைகளை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக்கடைகள் அமைக்க விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாநகரங்களின் போலீஸ் எல்லைக்குள் கடை அமைக்க, மாநகர போலீஸ் கமிஷனரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
பண்டிகைக்கு மட்டும் விற்பனை செய்யும் வகையில், தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க, கட்டட உரிமையாளருடனான வாடகை ஒப்பந்தம் மற்றும் சொத்து வரி ரசீதுடன் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில், தடையின்மை சான்று பெற்று, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தால், அவர்களுக்கு தற்காலிக 'லைசென்ஸ்' வழங்கப்படும்.
பண்டிகை ஆரம்பிப்பதற்கு ஒரு இரண்டு நாட்கள் முன்பிருந்து, பண்டிகை முடிந்த ஒரு நாள் வரையிலும் பட்டாசுக் கடை நடத்த அனுமதி வழங்கப்படும்.
*******************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Thursday, September 28, 2017

தவறான சிகிச்சை - ரூ.1,55,000/- இழப்பீடு

தவறான சிகிச்சை - ரூ.1,55,000/- இழப்பீடு
தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை ரூ.1.55 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை: தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை, 1.55 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது
சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஸ்ரீதேவி தாக்கல் செய்த மனு
என் மகள் நித்யஸ்ரீ, நேரு விளையாட்டரங்கில் விளையாடியபோது, சறுக்கி விழுந்ததால், இடது கை எலும்பு முறிந்தது. சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய், மருத்துவ செலவு ஆனது.
'உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; சில நாட்களில் சரியாகிவிடும்' என, மருத்துவர்கள் தெரிவித்து, நித்யஸ்ரீயை, 'டிஸ்சார்ஜ்' செய்தனர்.
ஆனால், தவறான சிகிச்சையால், வீக்கம், வலி குறையவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளானோம். மருத்துவ செலவுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
வழக்கு விசாரணையில், 'பாதிப்பிற்கு, சிகிச்சை பெற்றவரின் கவனக்குறைவே காரணம். சிகிச்சைக்கு பின், கையை கவனமாக வைத்துக் கொள்ளவில்லை. எங்கள் சேவையில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மருத்துவமனை நிர்வாகம் வாதிட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மருத்துவமனை சேவையில் குறைபாடு உள்ளது. பாதிப்படைந்த மனுதாரருக்கு, மருத்துவ செலவு தொகை, ஒரு லட்சம் ரூபாயுடன், சேவை குறைபாட்டிற்கு, 25 ஆயிரம் ரூபாயும், இழப்பீடு, 25 ஆயிரம் ரூபாயும், வழக்கு, செலவு, 5,000 ரூபாய் என, மொத்தம், 1.55 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தர விடப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 29.09.2017