disalbe Right click

Tuesday, June 26, 2018

பாஸ்போர்ட் சேவா' செயலி

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் பெயர் 'பாஸ்போர்ட் சேவா' ஆகும். 
இந்த சேவையை https://portal2.passportindia.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்
வெளிநாடு செல்ல விரும்புவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதில் நடைமுறை சிக்கல்கள்  அதிகமாக உள்ளது
மாநிலங்களில் ஒரு சில மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளதால், நீண்ட தூரம் பயணம் செய்துதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதுள்ளது.
நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட்டுக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி செய்யும் 'பாஸ்போர்ட் சேவா' எனப்படும்  மொபைல் ஆப் மூலமாக நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடும் முகவரியில் போலீஸ் துறையின் வழக்கமான சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் உங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய நடைமுறையின் மூலம் பாஸ்போர்ட் பெறுவது மிக துரிதமாகவும், சுலபமாகவும் முடியும்.
திருமணம் ஆன பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் திருமணம் ஆன பெண்கள் இனி திருமண சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை என்ற ஒரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.06.2018 

Monday, June 25, 2018

பத்திரப்பதிவு - அசல் ஆவணம் தேவையில்லை - எப்போது?

பத்திரப்பதிவு - அசல் ஆவணம் தேவையில்லை - எப்போது?
பத்திரப் பதிவில் செய்யப்படுகின்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக பதிவுத்துறைத் தலைவர் அவர்கள் கடந்த 07.06.2018 அன்று பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அதில் பத்திரப்பதிவு செய்யும் போது அந்த சொத்துக்குரிய முன்பதிவு அசல் ஆவணங்களை பதிவு அலுவலரிடம் கண்டிப்பாக சொத்தின் உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்றும், அதனை பதிவாளர்கள் ஸ்கேன் செய்து பரிசீலிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருந்தார். 
இது 11.06.2018ல் இருந்து அமுல்படுத்தப்பட்டது.
பொது மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் அறிவிப்பினால் பொதுமக்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க மீண்டும் ஒரு கடிதத்தை பத்திர பதிவு அலுவலகங்களுக்கு கடந்த 13.06.2018 அன்று  பதிவுத்துறைத் தலைவர் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். பொதுமக்களுக்கு இருந்த சிக்கல்கள் இதனால் தீர்க்கப்பட்டுள்ளது.
அந்தக் கடித நகல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.06.2018 

Saturday, June 16, 2018

SELVAMPALANISAMY

சட்டம், மருத்துவம், கல்வி மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றிய பயனுள்ள பல பதிவுகள்!
வருகை தாருங்கள், அன்புடன் அழைக்கிறேன்!
www.selvampalanisamy.com

காவல்துறையினரின் புலன் விசாரணையைப் பற்றி

காவல்துறையினரின் புலன் விசாரணையைப் பற்றி....
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
நம் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது  மற்றும் குற்றம் செய்தவர்களை உரிய நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் ஒப்படைத்து, அவர்களுக்கு தண்டணை வாங்கித் தருவது போன்றவை  காவல்துறையினரின் பணிகள் ஆகும். 
நீதிமன்றத்திற்கு நேரடியாக வருகின்ற வழக்குகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கும் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.
புலன் விசாரணை
ஒரு வழக்கில் சாட்சிகளையும், சாட்சியங்களையும் திரட்டுவதற்காக ஒரு காவல் அதிகாரியோ அல்லது இது சம்பந்தமாக நீதித்துறை நடுவர் ஒருவர் மூலம் அதிகாரம் பெற்றுள்ளவரோ நடத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் புலன் விசாரணை எனப்படும். இதனைப்பற்றி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 2 (ஏ)ல் கூறப்பட்டுள்ளது. 
புலன் விசாரணை செய்பவருக்குரிய தகுதி என்ன?
புலன் விசாரணை செய்பவர் காவல்துறை ஆய்வாளராகவோ, காவல்துறை உதவி ஆர்வாளராகவோ அல்லது தலைமைக் காவலராகவோ இருக்க வேண்டும்.
நடுவர் ஒருவரது உத்தரவு இல்லாமல், ஒரு வழக்கில் புலன் விசாரணை செய்யலாமா?
கைது செய்வதற்குரிய எந்த ஒரு  வழக்கிலும் நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவு இல்லாமலேயே காவல்துறை ஆய்வாளர், காவல்துறை உதவி ஆய்வாளர்  அல்லது  தலைமைக் காவலர் புலன் விசாரணை  செய்யலாம்.
புலன் விசாரணை - நடைமுறை என்ன? 
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 157ன்படி,  பொதுமக்களில் யாராவது ஒருவர் கொடுத்த தகவல் மூலமாகவோ அல்லது நீதிமன்ற நடுவர் அளித்த உத்தரவு மூலமாகவோ, காவல் அதிகாரி புலன் விசாரணை செய்யலாம்.
குற்றம் நடைபெற்றுள்ளதாக முடிவு செய்தால்...?
குற்றம் எதுவும் நடைபெற்றுள்ளது தமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்தால், புலன் விசாரணை அதிகாரியானவர், சம்பவ இடத்திற்குச் சென்று, வரைபடம் தயார் செய்து, சம்பவங்களுக்கு தொடர்புள்ள சாட்சியங்களை விசாரித்து, அவர்களிடம் இருந்து எழுத்து மூலமான வாக்குமூலங்களைப் பெற்று, குற்றத்தை மெய்ப்பிக்கும் வகையில் சம்பவ இடத்தில் கிடைக்கும் பொருட்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றம் நடைபெறவில்லை என்று தெரிய வந்தால்...?
குற்றம் எதுவும் நடைபெறவில்லை என்றும், தமக்கு கிடைத்த தகவல் தவறானது என்றும் அல்லது புலன் விசாரணை செய்யுமளவிற்கு, நடைபெற்ற குற்றம் கடுமையானதாக இல்லாமல் இருக்கும் போதும் புலன் விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. 
ஆனால், அவ்வாறு புலன் விசாரணை செய்யாமல் இருப்பதற்கு உரிய காரணத்தை தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 157 (2)ன்படியும், காவல் நிலை ஆணைகள் 660ன் படியும், காவலர் படிவம் 90ன் படியும் அந்த குற்றம் சம்பந்தமாக தகவல் கொடுத்தவருக்கு புலன் விசாரணை செய்வதாக இல்லை என்ற விபரத்தை மாநில அரசு ஏற்படுத்தியுள்ள முறையில் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
சாட்சிகளை அழைக்கும் அதிகாரம்
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 160ன்படி, குற்றம் சம்பந்தமான புலன் விசாரணையில் சாட்சிகள் எவரையும் அழைத்து எழுத்து மூலமாக வாக்குமூலம் கொடுக்க அவர்களுக்கு சம்மன் அனுப்பலாம். அவ்வாறு சம்மன் வந்தால், சமபந்தப்பட்ட சாட்சிகள் புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி சாட்சியம் அளிப்பது அவசியம். இல்லையென்றால், அது குற்றமாகும்.
அதே நேரத்தில் சாட்சி அளிப்பதற்கு பதினைந்து வயதுக்கு உட்பட்ட ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தால் அவர்கள் குடியிருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களை விசாரணை செய்ய வேண்டும்.
புலன் விசாரனை செய்யும் போது அதிகாரியானவர் சாட்சிகளை தூண்டியோ, பயமுறுத்தியோ அல்லது வாக்குறுதி கொடுத்தோ அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறக்கூடாது.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 155
(1) கைது செய்ய முடியாத குற்றம் பற்றிய தகவல் ஒன்று காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு யாராவது ஒருவரின் மூலம் கிடைக்குமானால், அந்தத்தகவலின் சாராம்சத்தை அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் தாம் வைத்து வரவேண்டிய ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்து, அந்த தகவல் தந்தவரை நடுவரிடம்  சாட்டிவிட வேண்டும்.
(2) கைது செய்ய முடியாத குற்றம் பற்றிய வழக்கு ஒன்றை விசாரணை செய்யவோ, அவ்வழக்கை மேல்விசாரணைக்கு அனுப்பி வைக்கவோ, அதிகாரம் உடைய நடுவர் ஒருவரின் உத்தரவு இல்லாமல் காவல் அலுவலர் எவரும் அந்த வழக்கை புலனாய்வு செய்யக்கூடாது.
(3) அத்தகைய உத்தரவை நடுவரிடம் இருந்து பெறுகின்ற காவல் அலுவலர் கைது செய்வதைத்தவிர மற்ற அதிகாரத்தை கொண்டவராக இருப்பார்.
(4) ஒரு வழக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குற்றங்களைப் பற்றியதாக இருந்து, அவற்றில் குறைந்தது ஏதாவது ஒன்று கைது செய்யப்பட்ட குற்றமாக இருந்தால், அந்த வழக்கை கைது செய்யப்படக்கூடிய கூடிய வழக்காக புலன் விசாரனை அதிகாரியானவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காவல்நிலைய எல்லையை தாண்டிய பகுதியில் விசாரனை செய்தால்....?
மற்றொரு காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிக்குள் வசிக்கும் மக்களிடம் விசாரனை அல்லது சோதணை செய்வதாக இருந்தால், அந்த காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு அந்த விசாரணை அல்லது சோதனை பற்றிய அறிவிப்பை உடனடியாக அனுப்ப வேண்டும்.
அழைப்பாணை வழக்குகளில் புலன் விசாரணையின் காலம்
அழைப்பாணை வழக்குகளில் எதிரியானவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் புலன் விசாரணையை முடித்துவிட வேண்டும். அந்த காலத்தை நீடிக்க நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. நடுவருக்கு திருப்தி இல்லையென்றால், புலன்விசாரணையை தடுத்து நிறுத்திட உத்தரவிடலாம். அவ்வாறு நிறுத்தியதை அமர்வு நீதிமன்ற நீதிபதி தொடர கட்டளை பிறப்பிக்க அதிகாரம் கொண்டவராவார்.
புலன் விசாரணை பற்றிய நாட்குறிப்பு
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு -172ன்படி, புலன் விசாரனை செய்கின்ற அதிகாரி அந்த புலன் விசாரணை சம்பந்தமாக தான் செய்கின்ற செயல்களை, எடுக்கின்ற நடவடிக்கைகளை மற்றும் அது சம்பந்தமான நேரத்தை நாட்குறிப்பில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். இவற்றில் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது. வழக்குகளில் இந்த நாட்குறிப்பு தேவை என்றால், நீதிமன்றமானது வரவழைத்து அதனை ஆய்வு செய்யலாம்.
ஆனால் எதிரியோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ நாட்குறிப்பை பார்க்கவோ, வரவழைக்கவோ முடியாது.
புலனாய்வை முடித்தவுடன் காவல் அலுவலர் விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173-ன்படி  நடுவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். 
புலன் விசாரணை செய்த அதிகாரியானவர் தான் எடுத்த நடவடிக்கை பற்றி, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173 (2) (ii) ன்படி   குற்றம் சம்பந்தமாக தகவல் கொடுத்தவருக்கு மாநில அரசால் விதிக்கப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டும்.
மறு புலன் விசாரணை
விசாரணை அறிக்கையை நடுவருக்கு அனுப்பிய பின்னர்  குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173(8)ன்படி விசாரணை அதிகாரியானவர் தான் புலன்விசாரணை செய்து முடித்த வழக்கு ஒன்றில் தேவைப்பட்டால் மறு புலன் விசாரணையை மேற்கொள்ளலாம்.
*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 16.06.2018

Friday, June 15, 2018

தனியார் கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கைவிட்டால்....!

தனியார் கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கைவிட்டால்....!
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களைத் தேர்ந்தெடுக்கும் மாணவ, மாணவியர், பின்னர் அதை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்  தொடங்கியுள்ளது. 01.07.2018- முதல் 05.07.2018-வரை அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கான முதல் கட்ட கலந்தாய்வு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று அதனை ஏதோ ஒரு காரணத்தால் கைவிடுவோர் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., தகவல்குறிப்பேட்டில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள விதிகளில் கீழ்க்கண்ட விதியும் இணைக்கப்படுகிறது.  அதன்படி, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் மாணவர்கள் 02.08.2018-ஆம் தேதி முதல் 19.08.2018 ஆம் தேதிக்குள் இடங்களைக் கைவிட்டால் ஒப்பந்தத்தைத் மீறியதற்காக ரூ. ஒரு லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். 19.08.2018 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு இடங்களைக் கைவிட்டால் ரூ.பத்து லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 16.06.2018  

Thursday, June 14, 2018

இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 197 & பிரிவு 219

இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 197 & பிரிவு 219
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
  • இந்திய தண்டணைச் சட்டத்தில் பிரிவு 197ம், பிரிவு 219ம் நீதிமன்ற நடவடிக்கைகளில் பொய்யான சாட்சியங்கள் புனைபவருக்கு அல்லது பொய்யான ஆவணங்கள் புனைபவருக்கு விதிக்கப்படுகின்ற தண்டணையைப் பற்றிக் கூறுகிறது.
  • இரண்டிற்கும் தண்டணை என்னமோ, ஒன்றுதான்! ஆனால், இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
  • சிறு வித்தியாசம்தான்.
  • முதலில் சொல்லப்பட்ட இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 197 - சாதாரண பொதுமக்களுக்கு உரியது.
  • இரண்டாவதாக சொல்லப்பட்ட இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 219 ஆனது பொது (அரசு) ஊழியர்களுக்கு உரியது.
இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 197
  • ஒரு நீதிமன்ற நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலாவது, உட்கருத்தோடு, பொய்சாட்சியம் தருகின்ற அல்லது ஒரு நீதிமன்ற நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலாவது, உபயோகிக்கப்படும் பொருட்டு, பொய்சாட்சியம் புனைகிற எவரொருவரும், ஏழு ஆண்டுகள் வரையில் நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத் தண்டணை வகைகள் இரண்டில் ஒன்று விதித்து தண்டிக்கப் படுதல் வேண்டும். மற்றும் அவரை அவராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.
இந்தியதண்டணைச்சட்டம் பிரிவு 219
  • பொது ஊழியராக இருந்து கொண்டு ஒரு நீதிமன்ற நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலும் சட்டத்திற்கு முரணானது, என்று அவர் அறிந்திருக்கின்ற அறிக்கை, கட்டளை, தீர்ப்பு அல்லது எதனையும் நெறிகேடான முறையில் அல்லது குரோதத்துடன் செய்கின்ற அல்லது பகிர்கின்ற எவராயினும், ஏழு ஆண்டுகள் வரையில் நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்குச் சிறைத் தண்டணை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
  • இதன்படி நீதிபதிக்கும் தண்டணை எற்றுத் தரலாம்.
************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 14.06.2018

காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க....?

காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க....?
நான் சார்ந்திருக்கும் சங்க நிர்வாகிகள் 2014-’15 மகாசபைக்கூட்டத்தில் அதிக உறுப்பினர்கள் கலந்து கொண்டது போல, போலி ஆவணம் தயாரித்து அதனை உண்மையான ஆவணம் போல் பயன்படுத்திக் கொண்டிருப்பதினால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை, பார்ட்டி இன் பெர்சன் ஆக தாக்கல் செய்திருந்தேன்.
காவல் ஆய்வாளருக்கு உத்தரவு
எனது வேண்டுகோளை ஏற்ற நீதித்துறை நடுவர் அவர்கள் எனது கேஸ்கட்டை திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அனுப்பி வைத்து, இருதரப்பினரிடமும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 
நடைபெற்ற விசாரணையில்....
நடைபெற்ற விசாரணையில் நான் எனது தரப்பு விளக்கத்தை எடுத்துரைத்தேன். போலி ஆவணத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் என்று சுமார் 40 பெயர்கள் என்னால் ஏற்கனவே வழக்கில் அடையாளம் காட்டப்பட்டிருந்தது. அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதாக காவல் ஆய்வாளர் என்னிடம் உறுதியளித்தார். 
கிடைத்தது மற்றோரு மோசடி ஆவணம்!
இதற்கிடையில் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தே இல்லாமல் கோர்வை செய்யப்பட்ட எங்கள் சங்கத்தின் 2014-’15 நிதியாண்டு வரவு செலவு அறிக்கை எனது கைகளுக்குக் கிடைத்தது.  
பொதுவாக, சங்கத்தின் கணக்குகளை நிர்வாகிகள் எழுதி, அதில் அவர்களின் கையொப்பமிட்டு, அதனை தகுதியுள்ள ஆடிட்டர் ஒருவரிடம் கொடுத்து சரிபார்க்கச் சொல்லி, சரியாக இருக்கிறது என்று அவரிடம் ஒரு சான்றிதழ் பெற வேண்டும். 
வரவு செலவு அறிக்கையின் வழிமுறை என்ன?
எங்களது சங்க பைலா விதிகளின்படி, ஆடிட்டரிடம் சான்றிதழ் பெற்ற பிறகு அந்த வரவு செலவு அறிக்கையை  நிர்வாகக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து விவாதம் நடத்தி ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு மகாசபைக் கூட்டத்தில் சமர்ப்பித்து, அங்கு வருகை தந்துள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும்  அதன் நகல் வழங்கி, விவாதம் நடத்தி ஏகமனதாக அவர்கள் ஏற்றுக் கொண்டதாக தீர்மானம் இயற்றி உறுப்பினர்களின் கையொப்பம் பெற வேண்டும்.
நிர்வாகிகள் கையெழுத்து இல்லாமலேயே பதிவு செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை
ஆனால், எங்கள் சங்கத்தின் 2014-’15 நிதியாண்டு வரவு செலவு அறிக்கை (சுமார் 9 கோடி ரூபாய்)  சங்க நிர்வாகிகளின் கையெழுத்தே இல்லாமல், (1)ஆடிட்டர் சான்றிதழ் பெற்று, (2) நிர்வாகக்குழு ஒப்புதல் பெற்று, (3) மகாசபையின் ஒப்புதல் பெற்று, (4) மாவட்டப் பதிவாளர் அவர்களின் ஒப்புதல் பெற்று கோர்வையும் செய்யப்பட்டுள்ளது.
வாங்க மறுத்த ஆய்வாளர்
அந்த வரவு செலவு அறிக்கையும் மோசடியானது என்று எடுத்துக்கூறி அதனையும் வழக்கில் இணைத்துக் கொள்ளுமாறு காவல் ஆய்வாளரிடம் வேண்டினேன். அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார்.  அதனால், அதனை அவருக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு ஏனோ அவர் என்னை விசாரணைக்கு அழைக்கவே இல்லை.
மறு புலன் விசாரணை செய்யலாம்
விசாரணை அறிக்கையை நடுவருக்கு அனுப்பிய பின்னர்  குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173(8)ன்படி விசாரணை அதிகாரியானவர் தான் புலன்விசாரணை செய்து முடித்த வழக்கு ஒன்றில் தேவைப்பட்டால் மறு புலன் விசாரணையை மேற்கொள்ளலாம் என்பதை அவர் மறைத்துவிட்டாரா? அல்லது மறந்துவிட்டாரா? என்று தெரியவில்லை. 
அதிர்ச்சி அளித்த விசாரணை அறிக்கை
விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக அறிந்து, அதன் நகலை நீதிமன்றத்தில் இருந்து பெற்றேன். அதில் நான் குறிப்பிட்ட 40 நபர்களிடமும் விசாரணை நடத்தாமல் மூன்று நபர்களிடம் மட்டுமே காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி இருந்தார். அவர்கள் மூவருமே இரண்டு இடங்களில் கையெழுத்து போட்டதை ஒப்புக் கொண்டிருந்தனர். தாங்கள் எதேச்சையாக இரண்டு இடங்களில் கையெழுத்து போட்டதாகவும், யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று இரண்டு இடங்களில் கையெழுத்து போடவில்லை என்றும் காவல் ஆய்வாளரிடம் எழுதியும் கொடுத்திருந்தனர்.  
முன்னுக்குப்பின் முரணான முடிவு
என்னால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகும், அந்த அறிக்கையின் இறுதியில் “மனுதாரர் உண்மைக்குப் புறம்பான சங்கதிகளைத் தெரிவித்துள்ளார்!” என்று என்மீதே குற்றம் சுமத்தி, காவல் ஆய்வாளர் தனது அறிக்கை நிறைவு செய்திருந்தார். அந்த அறிக்கையின் எந்த இடத்திலும் நான் அவருக்கு பதிவுத்தபாலில் அனுப்பிய வரவு செலவு அறிக்கையைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.  எனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 
வழக்கின் போக்கை மாற்றிய காவல் ஆய்வாளரை என்ன செய்யலாம்?
எனது வழக்கானது ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது. குற்றம் செய்தவர்கள் தப்பிக்க வாய்ப்பே இல்லை. உள்நோக்கத்தோடு அவர்களுக்கு காவல் ஆய்வாளர் உதவியுள்ளது அவர் சமர்ப்பித்த ஆவணங்களின் மூலமாகவே அப்பட்டமாகத் தெரிகிறது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல் ஆய்வாளரே குற்றம் செய்துள்ளதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்!
வரவு செலவு அறிக்கையை ஏன் விசாரணை அறிக்கையில் இணைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டதற்கு, நீங்கள் 17.07.2017ல் அதை அனுப்பி இருந்தீர்கள், நான் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை 15.07.2017ல் தாக்கல் செய்துவிட்டேன், அதனால் அதனை விசாரணை அறிக்கையில் இணைக்கவில்லை என்று பதில் கொடுத்திருந்தார். ஆனால், நான் பெற்ற விசாரணை அறிக்கை நகலில் அதனை 24.08.2017 அன்று பெற்றதாக நடுவர் அவர்களின் கையெழுத்துடன் அலுவலக முத்திரையும் குத்தப்பட்டு இருந்தது. எனவே அந்த விசயத்திலும் காவல் ஆய்வாளர் பொய் சொல்லியது தெரிந்துவிட்டது.
கை கொடுத்த காவல்துறை இணையதளம் 
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று உறுதி கொண்டேன். அவருக்கு 05.04.2018 அன்று சட்ட அறிவிப்பு அனுப்பினேன். இன்றுவரை பதில் ஏதுமில்லை. காவல் துறை இணையதளத்தில் www.tnpolice.gov.in ஆதாரம் எதுவும் இணைக்காமல்இரண்டு வரியில் 08.06.2018 அன்று புகார் அளித்தேன். 
என்ன ஒரு ஆச்சர்யம்?. 
12.06.2018 அன்று விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து செல்போனில் (919498184721) அழைத்து 13.06.2018 அன்று விசாரணையில் கலந்து கொள்ளச் சொன்னார்கள். கலந்து கொண்டேன். காவல் ஆய்வாளரும் விசாரணைக்கு வந்திருந்தார். நேர்முக விசாரணை முடிந்த பிறகு என்னிடம் ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். ஏற்கனவே  தயாரித்து வைத்திருந்த ஆதாரங்களுடன் கூடிய எனது ஸ்டேட்மெண்டை சமர்ப்பித்தேன். விசாரணையின் முடிவை ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் என்றார்கள். இவர்களது விசாரணை நியாயமாக இருக்கும் என்று நம்புகிறேன். பார்ப்போம்.
காவல் ஆய்வாளர் மீது வழக்கு தொடுக்க......? 
காவல் ஆய்வாளர் மீது வழக்குத் தொடுக்க என்ன வழிமுறை? என்று கேட்டேன். ஐ.பி.எஸ். ரேங்க் உள்ள அதிகாரி மீது வழக்கு போட வேண்டும் என்றால்தான் நீங்கள் மேலதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். காவல் ஆய்வாளர் மீது நீங்கள் நேரடியாகவே நீதிமன்றத்தில் பிரைவேட் கம்ப்ளெண்ட் செய்யலாம் என்றார்கள்.  
(தொடரும்)
கீழ்க்காண்பவை  03.07.2018 ல் பதிவு செய்யப்பட்டது
முடிவைத் தெரிவிக்கவில்லை!
ஒரு வாரம் ஆகியும் முடிவு தெரியாததால், மீண்டும் அதே இணையதளத்தில் மீண்டும் ஒரு புகார் பதிவு செய்திருந்தேன். அதில் நடந்த விசாரணை பற்றி குறிப்பிட்டு, சீக்கிரம் முடிவைத் தெரிவியுங்கள் என்று கூறிவிட்டு “கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கும்!” என்பதை தெரிவித்திருந்தேன்.  விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திரு மதி அவர்கள் அலுவலக லேண்ட் லைன் மூலமாக என்னுடன் தொடர்பு கொண்டார்.   “கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கும்!” என்ற எனது வாக்கியத்திற்கு கடும் ஆட்சேபணையைத் தெரிவித்தார். யாரையும் குறிப்பிட்டு நான் கூறவில்லை என்பதையும் அது பொதுவான ஒரு வாக்கியம் என்பதையும் அவருக்கு விளக்கினேன். இருந்தபோதிலும் அவரது கோபம் குறைந்ததாக தெரியவில்லை.தொடர்பு துண்டிக்கப்பட்டது.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முடிவு மறுநாளே தெரிந்தது!
கோப்புகளை தான்  ஆய்வு செய்ததாகவும், காவல் ஆய்வாளர் பொய் ஆவணம் புனையவில்லை என்றும், தள்ளுபடி செய்யப்பட்ட எனது வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும் விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திரு மதி அவர்கள் முழுமையில்லாத தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆக மொத்தத்தில் அவரும் போலி ஆவணம் தயார் செய்திருந்தார்.
அதன் நகல்களை கீழே காணலாம்.


எனது வழக்கை நான் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், செய்யப்பட்டு உள்ளதாக விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திரு மதி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காவல் ஆய்வாளரை காப்பாற்ற தவறான தகவலை அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.  எனவே  இதுவும் பொய்யாவணம்தான். இவர் மீதும் இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 219-ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது பற்றி தகவல் கேட்டுள்ளேன். மேலும், காவல்துறை இணையதளத்தில் விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திரு மதி அவர்கள்  பொய்யாவணம் புனைந்துள்ளது பற்றி கடந்த 24.06.2018 அன்று புகார் ஒன்று  பதிவு செய்துள்ளேன். இன்றுவரை அதன் மீது ஏதும் நடவடிக்கை இல்லை. Pending என்றே Statusல் காணப்படுகிறது. 
போகும் பாதை சரியாக இருந்தால் மெதுவாக சென்றாலும் வெற்றிதான்! நான் சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறேன்.
(தொடரும்)
************************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 14.06.2018