அரசு அதிகாரி மீது வழக்குத் தொடர முன் அனுமதி அவசியம்!
அலுவலகத்தில் தனது
கடமையை சரியாக செய்யாத ஓர் அரசு ஊழியர் மீது நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்ட நபர் நடவடிக்கை
எடுக்க முடியுமா?
K. முருகன் என்பவர் ஒரு வழக்கறிஞர். அவர் 26.12.2012 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கீரைத்துறை காவல் நிலையத்திற்கு அவரது கட்சிக்காரரான பால்பாண்டி சார்பாக சென்றார். அப்போது செந்தில்குமார் என்னும் காவல் அதிகாரி பணியில் இருந்துள்ளார்.
வழக்கு சம்பந்தமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல் அதிகாரி செந்தில்குமார் வழக்கறிஞர் முருகனை தகாத வார்த்தைகளால்
திட்டியதோடு மட்டுமில்லாமல்
அவரை காவல் நிலையத்திற்குள் நுழையக் கூடாது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை ராஜகுரு, விஜயன் என்ற இரு வழக்கறிஞர்களும்,
ராமர் என்ற ஒரு நபரும் பார்த்துள்ளனர்.
வழக்கறிஞர் முருகன் செய்த காரியம்
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட
வழக்கறிஞர் முருகன் மதுரை நகர காவல்துறை ஆணையரிடம் இது குறித்து ஒரு புகாரை நேரிடையாக அளிக்கிறார். ஆனால் அந்த புகாரை ஆணையர் வாங்க மறுத்து விடுகிறார். அதனால் முருகன் பதிவுத் தபாலில் புகாரை ஆணையருக்கு அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து உடனே செந்தில்குமார் மீது மதுரை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் புகாரை தாக்கல் செய்கிறார். அந்தப் புகாரை நடுவர் கோப்புக்கு எடுத்துக் கொண்டு செந்தில்குமாருக்கு சம்மன் அனுப்புகிறார்.
செந்தில்குமார் செய்த காரியம்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரி செந்தில்குமார் மதுரை உயர்நீதிமன்றக்
கிளையில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்கிறார்.
செந்தில்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்
செந்தில்குமார்
தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கறிஞர் முருகன் என்ன விஷயத்திற்காக காவல் நிலையத்திற்கு வந்தார் என்று புகாரில் தெளிவாக எதையும் கூறவில்லை. வழக்கறிஞர் முருகன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் காவல் நிலையத்தில் வைத்து நடந்துள்ளது. அப்போது செந்தில்குமார்
பணியில் இருந்துள்ளார்.
பணி நேரத்தில் அலுவலக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது, அலுவலகத்தில்
கூட்டமாக கூடியுள்ளவர்களை
கலைப்பதற்கான உரிமை செந்தில்குமாருக்கு உள்ளது. சார்பு ஆய்வாளர் பதவிக்கு குறைவில்லாத பதவியில் உள்ள ஒரு நபர் சட்டத்திற்கு
புறம்பாக கூடியுள்ள கூட்டத்தை கலைப்பதற்கான அதிகாரம் இந்திய தண்டனைச் சட்டம் சட்டம் பிரிவு 179 ன் கீழ் செந்தில்குமாருக்கு உள்ளது. மேலும் அரசு அதிகாரியான செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், எவர் ஒருவரும், அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். ஆனால் வழக்கறிஞர் முருகன் அவ்வாறு அனுமதி எதையும் பெறவில்லை.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 131 & 132
குற்றவியல் நடுவரும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 131 & 132 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி இந்த வழக்கை கோப்புக்கு ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு அரசு ஊழியர் அவரது அலுவலக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது குற்றம் செய்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் முன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என கல்கத்தா உயர்நீதிமன்றம் " நாராயணன் சந்திர பிரம்நாயக் Vs ஆனந்த மண்டல் மற்றுமொருவர் (1984-CRLJ-1334)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பையும்,
அலகாபாத் உயர்நீதிமன்றம்
"ராம் ஆதார் யாதவ் Vs ராம சந்திர மிஸ்ரா மற்றுமொருவர் (1992-CRLJ-2216)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டி குற்றவியல் நடுவரின் உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
முருகன் தரப்பு வழக்கறிஞரின் வாதம்
வழக்கறிஞர் முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில்குமார்
சட்ட நடவடிக்கைகளை
தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், காவல் நிலையத்திற்குள்
ஒரு வழக்கறிஞர் செல்வதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றும். முருகனை வழக்கறிஞர் என்றுகூட பார்க்காமல் செந்தில்குமார் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளது குற்றம் என்றும் கூறினார்.
நீதிபதியின் உத்தரவு
செந்தில்குமார்
காவல்துறை அதிகாரி என்பதை வழக்கறிஞர் முருகன் மறுக்கவில்லை. செந்தில்குமார் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டும் போது அவர் தனது அலுவலகத்தில் பணிசெய்து கொண்டு இருந்துள்ளார். ஆகையால் செந்தில்குமார்
மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் அரசிடமிருந்து
முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே வழக்கறிஞர் முருகனின் வழக்கை குற்றவியல் நடுவர் கோப்புக்கு எடுத்துக் கொண்டது தவறானது. எனவே செந்தில்குமாரின் சீராய்வு மனுவை அனுமதித்து, குற்றவியல் நடுவரின் உத்தரவை ரத்து செய்கிறேன் என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.
CRL. RC. No - 193/2018 Dt -
16.7.2018
செந்தில்குமார் Vs K. முருகன் 2018-2-TNLR-659
நன்றி : எனது முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan அவர்களுக்கு