disalbe Right click

Thursday, April 18, 2019

தேர்தல் விதிகள் – தெரிந்து கொள்வோம்!

தேர்தல் விதிகள் – தெரிந்து கொள்வோம்!
விதி எண்: 49 - M
வாக்கு அளிக்கின்ற அனைத்து வாக்காளரும் 'நான் வாக்களிக்கும் ரகசியத்தை கண்டிப்பாக பின்பற்றுவேன்' என '17 ' படிவத்தில் கையொப்பமிட வேண்டும். இவ்வாறு கையெழுத்திட்டபின் மற்ற நடைமுறையை பின்பற்ற மறுத்தால் அவர் ஓட்டு போட பிரிவு '49 M' கீழ் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறான இனங்களில் '17 ' பதிவேட்டில் குறிப்பு பகுதியில் வாக்கு அளிக்க அனுமதிக்கப்படவில்லை; ஓட்டுப்பதிவு நடைமுறை மீறப்பட்டது என குறிப்பிட வேண்டும். அந்தப் பதிவின் கீழ் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் தனது முழு கையொப்பமிட வேண்டும்.
விதி எண்: 49 – N  உதவியாளருடன் செல்லலாம்!
பார்வையற்றோர் மற்றும் உடல் நலிவடைந்தோர் விதி எண்  '49 - N' ன்படி உதவியாளர் ஒருவர் உதவியுடன் வருகை தந்து வாக்கு அளிக்கலாம்.  ஆனால், அந்த உதவியாளர் 18 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும். அவரிடம் அவர் அழைத்து வந்த வாக்காளர் சார்பில் பதிவு செய்த ஓட்டின் ரகசியத்தை நான் காப்பாற்றுவேன்! என்றும், அந்த நாளில் வேறு ஓட்டுச் சாவடிகளில் வேறு யாருக்கும் உதவியாளராக நான் செயல்படவில்லை என்றும் உறுதிமொழி பெற வேண்டும்.
விதி எண் : '49 -O'  ஓட்டளிக்காவிட்டால் ?
ஒவ்வொரு வாக்காளர்களும் அடையாளம் சரிபார்க்கப்பட்டு 17 ஏ பதிவேட்டில் கையெழுத்திட அழைக்கப்படுவார்கள். கையெழுத்திட்ட பின்னர் அந்த வாக்காளர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். அடையாளம் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒரு வாக்காளர் '17 ' பதிவேட்டில் கையொப்பமிட்ட பின் வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்தால் வாக்குப்பதிவு செய்யும்படி அவரை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக 17பதிவேட்டில் அவரது வரிசை எண்ணுக்கு எதிரே குறிப்புரையில் வாக்களிக்க மறுத்தார்; வாக்களிக்காமல் சென்றார் என பதிவு செய்து அதில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அவரது முழு கையெழுத்திட வேண்டும்.

Image result for வாக்குச்சாவடி
'டெண்டர்டு' ஓட்டு என்றால் என்ன?
ஓட்டுச்சாவடியில் ஒருவர் வாக்கை மற்றொருவர் தவறுதலாக போட்டுவிட்டு சென்றிருந்தால் வாக்களிக்க வந்த வாக்காளரின் அடையாளச் சான்றுகளை சரி பார்த்த பின் ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு வழியே அவரை வாக்களிக்க அனுமதிக்கவேண்டும். ஆனால், அவரை ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. அந்த வாக்காளர் ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டை பெற்று ரப்பர் முத்திரையை பயன்படுத்தி வாக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குச்சீட்டை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் வாக்கு ஆய்வுக்குரிய வாக்கு அல்லது 'டெண்டர்டு ஓட்டு' எனப்படுகிறது.
'சேலஞ்ச்' ஓட் என்றால் என்ன?
வாக்குச்சாவடியில் இருக்கின்ற வேட்பாளர்களின் முகவர்கள் யாராவது வாக்களிக்க வரும் வாக்காளர்களின் அடையாளம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தால், எதிர்ப்பு தெரிவித்த முகவர் தேர்தல் அலுவலரிடம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த முகவரின் எதிர்ப்பு குறித்து வாக்குச்சாவரி அதிகாரியால் முழு விசாரணை நடத்த வேண்டும். எதிர்ப்பு நிரூபிக்கப்படவில்லை என்றால் அந்த வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஆள் மாறாட்டம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அந்த மோசடி நபரை காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
'டெஸ்ட் ஓட்டு' என்றால் என்ன?
வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் வாக்களித்த சின்னம் தெரியாமல் வேறு ஒரு சின்னமும் பெயரும் தெரிவதாக ஒரு வாக்காளர் கூறினால் அவரிடம் தேர்தல் நடத்தை விதி '49 M - ' துணை விதியின் கீழ் உரிய படிவத்தில் உறுதிமொழியை பெற்றுக் கொள்ள வேண்டும்.அதன்பின் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குச்சாவடி அலுவலர்களுடன்  வாக்களிப்பு பகுதிக்கு சென்று அந்த வாக்காளரை மீண்டும் முகவர்கள் முன் ஒரு வாக்கை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

Image result for வாக்குச்சாவடி

அந்த வாக்காளர் எந்த வேட்பாளருக்கு, எந்த சின்னத்தில் வாக்களித்தார் என்பதை '17 - ' மற்றும் '17 - சி' பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். ஒரு வேளை அவர் பதிவு செய்த ஓட்டு சரியாக பதிவாகி இருந்தால், வாக்காளர் வேண்டுமென்றே தவறான புகார் கொடுத்ததாக இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 182ன்படி அவர் தண்டனைக்குரியவராவார். அந்த வாக்காளரை உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.
வாக்காளர்  புகார் அளித்தது போல் ஓட்டளித்த சின்னம் மற்றும் நபர் விபரங்கள் ஒளிராமல் வேறு சின்னங்களும் வேட்பாளரும் இயந்திரத்தில் ஒளிர்ந்தால் வாக்குச்சாவடி அலுவலர் ஓட்டுப்பதிவை உடனே நிறுத்த வேண்டும். உடனடியாக மண்டல தேர்தல் அலுவலருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்.
 *********************************************** செல்வம் பழனிச்சாமி, 18.04.2019 

Wednesday, April 17, 2019

இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 182 & 211 இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?


இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 182 & 211 இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
  • இந்திய தண்டணைச் சட்டம்-1860ல் 182-வது பிரிவும், 211வது பிரிவும் பொது ஊழியருக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப்படியான அதிகாரத்தை பயன்படுத்தி வேறு ஒருவருக்கு கேடு விளைவிக்க பொய்யான தகவலை தருவதைப் பற்றியும், அதற்கான தண்டணையைப் பற்றியும் நமக்குத் தெரிவிக்கின்ற பிரிவுகள் ஆகும்.
  • இந்த இரண்டு பிரிவுகளும் ஒன்றுபோல இருந்தாலும், இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
இந்திய தண்டணைச் சட்டம், 182-வது பிரிவு
  • அது ஒரு பொய்யான தகவல் என்பதையும், அந்த தகவலினால், வேறு ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு நேரிடும் என்பதையும் தாம் நன்கு அறிந்திருந்தும் பொது ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வேறு ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடன் அந்த பொது ஊழியரிடம் பொய்யான தகவலைத்தருவது ஆகும்.
  • உதாரணமாக ஒரு பொது ஊழியரிடம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வேட்பாளர் ஒருவர் குடோனில் மூட்டை, மூட்டையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒருவர் (அது பொய்யான தகவல் என்பதையும், அதனால், அந்த வேட்பாளருக்கு தொல்லைகள் நேரிடும் என்பதையும் நன்கு அறிந்தே) தகவல் அளிக்கிறார்! என்றால் அவருக்கு இந்தப் பிரிவின் கீழ் ஆறு மாத சிறைத்தண்டணை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
இந்திய தண்டணைச் சட்டம், 211-வது பிரிவு
  • ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடன், அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதும் இல்லை என்று தான் நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் மீது அல்லது பலரின் மீது காவல்நிலையத்தில் பொய்புகார் அளிக்கின்ற அல்லது நீதிமன்றத்தில் வழக்கு எதனையும் தொடுக்கின்ற எவர் ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகள் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
  • இதில் மரணம், ஆயுள் சிறை அல்லது ஏழு ஆண்டுகள் தண்டணை விதிக்கக்கூடிய ஒரு குற்றம் பற்றி, அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதும் இல்லை என்று நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் அல்லது பலரின் மீது பொய்யான புகார் அளிப்பவரை அல்லது பொய்யான வழக்கு தொடுப்பவர் எவர் ஒருவருக்கும் ஏழு ஆண்டுகள் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
சுருக்கமாகச் சொன்னால்,
  • இந்திய தண்டணைச் சட்டம், 182-வது பிரிவு என்பது அது பொய்யான தகவல் என்பதையும், அதனால், ஒருவருக்கு அல்லது பலருக்கு தொல்லைகள் நேரிடும் என்பதையும் நன்கு அறிந்த ஒருவர், பொது ஊழியரிடம் பொய்யான தகவல் அளிப்பது (மட்டும்) ஆகும்.
  • இந்திய தண்டணைச் சட்டம், 211-வது பிரிவு என்பது அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதுமில்லை என்று நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் அல்லது பலரின் மீது பொது ஊழியரிடம் பொய்யான புகார் அளிக்கும் அல்லது நீதிமன்றத்தில் பொய்யான வழக்கு தொடுக்கும் குற்றம் சம்பந்தப்பட்டது ஆகும்
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.04.2019

Monday, April 15, 2019

UAN என்றால் என்ன?

UAN என்றால் என்ன? உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி?
மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் என அழைக்கப் படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது.
பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் பங்களிப்பாக செலுத்தப்படும். இந்த பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகையின் பேலன்ஸ் என்ன என அறிந்துக்கொள்ள UAN (Universal Account Number) என் முக்கியமான ஒன்றாக உள்ளது.
பொதுவாக UAN மாத சம்பளத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்படியில்லை என்றால் பிஎஃப் எண், ஆதார் அல்லது பான் எண்ணை பயன்படுத்தி UAN எண்ணை கண்டறிவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
1. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் உறுப்பினர்கள் சேவை வழங்கும் https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. மேலே குறிப்பிட்டுள்ள இணைய பக்கத்திற்கு சென்று வலது பக்கம் உள்ள Know Your UAN Status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. Know Your UAN என்ற பக்கத்திற்கு சென்ற உடன் பிஎஃப் எண், ஆதார் எண் அல்லது பான் எண் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், captcha போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
4. பின்னர் Get Authorization Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. அடுத்த பக்கத்தில் I Agree என்பதை தேர்வு செய்து மொபைல் எண்ணிற்கு OTP அனுப்புக என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
6. OTP எண்ணை பதிவிட்டுசரிபார்க்கவும் (Validate)’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் UAN மற்றும் அதற்கான கடவுச்சொல்லும் எஸ்எம்எஸ் மூலம் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதைப் பயன்படுத்தி பிஎஃப் கணக்கு குறித்த விவரங்கள் மற்றும் பேலன்ஸ் என்ன என்பது குறித்த விவரங்களை சரிபார்க்க முடியும்.
நன்றி : Tamil News Online - News18 Tamil - 15.04.2019