disalbe Right click

Thursday, July 4, 2019

அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்

அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
தமிழக அரசு மருத்துவ பணியில் பணிபுரியும் மருத்துவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் பணிபுரியும் இயக்குநரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையிடம் அனுமதி (No Objection Certificate) பெற்றுதான் வெளிநாடு செல்ல வேண்டும்.
அவ்வாறு NOC பெறுவதற்கான படிவங்களின் தொகுப்பு இந்த லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது.
.படிவங்கள் அனைத்தும் zip பைலாக உள்ளதால், லேப்டாப் உதவியுடன் Google Drive-ல் இருந்து download செய்து கொள்ளவும்.
குறிப்பு : இந்த படிவங்களை தேவைக்கேற்ப சற்று மாற்றியமைத்து, மற்ற துறையில் பணிபுரியும் பணியாளர்களும் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

நன்றி : முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Leenus LeoEdwards 

Tuesday, July 2, 2019

போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள்

போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள்
நமது நாட்டில் நடப்பதற்கே சிரமமான தெருக்களில் கூட பல கோவில்கள் திடீரென உருவாக்கப் பட்டிருக்கும். கோவில்தானே என்று யாரும் அதனை கண்டு கொள்வதில்லை. முதலில் சின்னதாக ஒரு சிலை வைப்பார்கள். பின்பு மேடை கட்டுவார்கள். அதன் பிறகு சுற்றுப் பிரகாரம், கோபுரம் என்று வெகு வேகமாக அந்த இடம் ஆக்கிரமிக்கப்படும். ஏதோ ஒரு காரணத்தினால் ஈர்க்கப்பட்டு மக்களும் வழிபாட்டிற்காக அங்கு செல்வார்கள். இதற்கென்று விழாக் கமிட்டியார், தர்மகர்த்தா தேர்ந்தெடுக்கப்பட்டு தலைக்கட்டு வரி, நன்கொடை வசூல் என்று அந்தப் பகுதியே அமர்க்களப்படும். 
அதிகாரிகள் தலையிடுவதில்லை
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று புகார் அளித்தாலும், பக்தி காரணமாக அதிகாரிகள் அதனை அகற்ற பயந்து, புகார் மனுக்களை கண்டு கொள்வதில்லை. இதனை நாம் பல இடங்களில் பார்த்துவிட்டு என்ன செய்வது? என்றே தெரியாமல் அதனை கடந்து தினசரி சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், இதனை அகற்ற ஒரு வழியை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது தெரியுமா?
உச்சநீதிமன்ற தீர்ப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் இப்படி ஒரு வழிபாட்டு ஸ்தலத்தை அகற்ற சிக்கல் வந்தது. உள்ளூரில் ஆரம்பித்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த சிக்கலான பிரச்சனைக்குரிய வழக்கு மதிப்பிற்குரிய நீதிபதிகள் சுதிர் அகர்வால் மற்றும் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அழுத்தமான தீர்ப்பு ஒன்றை அவர்கள் வழங்கினர். அதன்படி 
⧭  போக்குவரத்துக்கு தடையாக உள்ள எந்த ஒரு வழிபாட்டு ஸ்தலமும் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு கட்டப்பட்டிருந்தால்,  அவை அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
⧭  அரசாங்கத்துக்குச் சொந்தமான காலி இடங்கள், சிறிய தெருக்கள்,  நெடுஞ்சாலைகள்,   பாதைகள்,  போன்ற எந்த ஒரு இடத்திலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள எந்த ஒரு கோவிலையும் கட்ட சட்டம் அனுமதிக்கக்கூடாது.
⧭  அவ்வாறு கட்டப்பட்டிருந்தால், அதனை ஆறுமாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
⧭  இது பற்றிய விபரங்களை மாவட்ட ஆணையர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள், மாநில தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.
⧭  இந்த தீர்ப்பு வந்த (10.06.2016) நாள் முதல் ஏதாவது கோவில் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நடந்தால், அதற்கு அந்த மாவட்டத்தை சேர்ந்த துணை ஆட்சியர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுமே முழுப்பொறுப்பு ஆவார்கள்.
⧭  கோவில் கட்டியவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து, கிரிமினல் குற்றம் செய்ததற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வழக்கு எண்: Supreme Court of India, Lavkush vs State of UP, 2016, Decided on 10.06.2016
****************************************** நன்றி : லாயர்ஸ் லைன், செப், 2016 

Thursday, June 27, 2019

உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற....


உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற....
உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முதலில் துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல் நடவடிக்கையாக, அதற்கு உரிய அரசு அலுவலகத்தில் எழுத்து மூலமாக புகார் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அகற்றிவிட வேண்டும். சகித்துக் கொள்ளக்கூடாது. அதிகமாக ஆக்கிரமிப்பு செய்ய அனுமதித்தால் அதனை அகற்ற அதிக சக்தியை செலவழிக்க நேரிடும்.

புகார் அளிப்பதற்கு முன்னர் என்ன செய்ய வேண்டும்?
புகார் அளிப்பதற்கு முன்பாக தங்களுடைய தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியின் வரைபடத்தை வைத்து அந்த தெருவின் அகலம் ஏற்கனவே எவ்வளவு இருந்தது என்பதை அறிந்து கொண்டால் புகாரை தெளிவாக எழுத முடியும். கிராமப்புறமாக இருந்தால் இதற்கான பகுதி வரைபடத்தை (FMB SKETCH) கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதைக்கொண்டு தங்களுடைய தெருவின் உண்மையான அகலம் எவ்வளவு என்பதை அறிந்து அதற்கேற்ப உங்களது புகார் மனுவைத் நீங்கள் தயாரிக்கலாம்.

யாரிடத்தில் புகார் அளிக்க வேண்டும்?
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்டதாக இருந்தால் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பேரூராட்சி அல்லது நகராட்சியாக இருந்தால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி அலுவலகத்திலுள்ள நகரமைப்புப் பிரிவிலும் எழுத்து மூலமாக உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வேண்டும். நேரில் சென்று கொடுப்பதைவிட பதிவுத்தபால் மூலமாக புகாரை அனுப்புவது நல்லது. அதன் மூலம் புகார் அளித்ததற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கும்.
மாநகராட்சிப் பகுதியாக இருந்தால்..?
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் அந்தப் பகுதியைச் சேர்ந்த வார்டு எந்த மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து, அந்த மண்டல அலுவலகத்திலுள்ள உதவி ஆணையர் அல்லது உதவி நகரமைப்பு அலுவலர் அவர்களிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கலாம். அதில் ஏதும் நடவடிக்கை இல்லாதபட்சத்தில் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் புகார் தெரிவிக்கலாம். எங்குமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கலாம். அங்கு புகார் பெறப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்குவார்கள்.
நீதிமன்றத்திற்கு எப்போது செல்ல வேண்டும்?
அரசு அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையுமே இல்லையென்றால் மட்டுமே நீதிமன்றம் செல்ல வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நீதிமன்றம் செல்லக்கூடாது. அரசு அதிகாரிகளிடம்  புகார் அளித்ததற்கான அனைத்து ஆதாரங்களுடன் உயர்நீதி மன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யலாம்.
Image result for poclain machine job doing
பொதுநல வழக்குகளை தனிநபர் தாக்கல் செய்யலாமா?
செலவு, பாதுகாப்பு மற்றும் வழக்கை வலுப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக. ஆக்கிரமிப்பு சார்ந்த பொதுநல மனுக்களை நீதிமன்றத்தில்  தனிநபராகத் தாக்கல் செய்வதைவிட, ஏதேனும் ஓர் அமைப்பு சார்ந்தோ, குடியிருப்போர் சங்கங்கள் சார்ந்தோ தாக்கல் செய்வது நல்லது.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 27.06.2019 

Monday, June 24, 2019

பொதுத்தொல்லைகள் - என்ன செய்ய வேண்டும்?

பொதுத்தொல்லைகள் - என்ன செய்ய வேண்டும்?
இன்றைய சூழ்நிலையில் நாம் ரோட்டில் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ பலவித தொல்லைகளை அனுபவித்துக் கொண்டேதான் செல்ல வேண்டியதிருக்கிறது.  ஆனால், இதைப் பற்றி புலம்பிக் கொண்டே செல்கிறோமே தவிர இதற்கு யார் பொறுப்பு? இதற்கு பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் புகார் அளிக்க வேண்டும்? என்பது குறித்து பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு இல்லை. அதனை தீர்க்கவே இதனை எழுதுகின்றேன்.
நாள்தோறும் என்னென்ன பொதுத் தொல்லைகளை அனுபவிக்கிறோம்?
⧭ சாலையின் நடுவே தோண்டப்பட்டு சரியாக மூடாமல் இருக்கும் குழிகள்
⧭ ரோட்டில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக்கழிவுகள்
⧭ ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கட்டிட பொருட்கள்
⧭ திருவிழாக் காலங்களில் ஒலிபெருக்கிகளை சத்தமாக வைப்பது
⧭ வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் ரோட்டில் செல்வோருக்கு இடைஞ்சல் தருவது
⧭ சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவது
⧭ தங்கள் வாகனங்களை ரோட்டில் ஓரத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைப்பது.
⧭ சாலை ஓரங்களிலேயே மல, ஜலம் கழிப்பது
⧭ சாலைகளில் சாக்கடைத் தண்ணீர் தேங்கி கிடப்பது 
⧭ சாலை ஓரங்களிலேயே குப்பைகளை கொட்டுவது
⧭ பொது இடங்களில் புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது
⧭ சாலை ஓரங்களில் கழிவுகளை எரிப்பது
⧭ சாலைகளில் கால்நடைகளை விட்டு வைப்பது 
அருகிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வரும் கழிவுகள், சப்தங்கள் 
யார் யார் புகார் அளிக்கலாம்?
மேற்கண்ட தொல்லைகளை  ஆங்கிலத்தில் Public Nuisance என்று குறிப்பிடுகிறார்கள். இவற்றை தடுக்க சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91ன் கீழும், இந்திய தண்டணைச் சட்டம்  268 முதல்  294 வரையில் உள்ள பிரிவுகள் கீழும், குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 133ன் கீழும் யார் வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம்.
சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91
சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91ன்படி மேற்கண்ட குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், மேலும் சிலரை நம்முடன் சேர்த்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதனை நடத்தி நாம் சந்திக்கின்ற தொல்லைகளை தடுக்க தடை உத்தரவு வாங்கலாம். இது கொஞ்சம் சிரமமானது மட்டுமல்ல, காஸ்ட்லியானதும் கூட. இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?
குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 133
மேற்கண்ட குற்றங்களை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குற்ற விசாரணை முறைச் சட்டத்தினை (பிரிவு 133) பயன்படுத்தினால் நமக்கு அலைச்சலில்லை, செலவு அதிகமில்லை. மிக எளிதானது. 
என்ன செய்ய வேண்டும்?
நாம் பொது இடங்களில் சந்திக்கின்ற இடையூறுகளைப் பற்றி ஒரு புகாராக எழுதி, நாம் குடியிருக்கும் பகுதிக்குரிய  வருவாய் கோட்ட அலுவலர்  (Revenue Divisional Officer) அவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும். அல்லது சப் கலெக்டர் எனப்படும் கோட்டாட்சியர் அவர்களுக்கும் அந்தப் புகாரை அனுப்பலாம். புகாரின் தலைப்பிலேயே, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 133ன் கீழ் புகார்மனு என்று எழுதிவிட்டு அதற்குப் பிறகு அனுப்புனர் என்பதை எழுதுங்கள். 
புகார் அனுப்பியதும் என்ன நடக்கும்?
உங்கள் புகார் கிடைக்கப் பெற்றதும் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, புகாரில் உண்மை இருந்தால்  அந்த தொந்தரவுகளை அகற்ற உடனே உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். இந்த உத்தரவுகளில் சிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது விசேஷச் செய்தி ஆகும். இந்த உத்தரவின் கீழ் அந்த தொந்தரவு தருபவர்கள் அதனை அகற்ற அல்லது நிறுத்த மறுத்தால் இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 188ன் கீழ் தண்டணைக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
என்ன தண்டணை கிடைக்கும்?
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 133ன் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட்டு பிறப்பிக்கப் படுகின்ற உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரிசெய்ய மறுத்தால், அந்த குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒரு மாதம் சிறைத் தண்டணை மற்றும் ரூபாய் 200/- அபராதமும் அல்லது ஆறு மாதம் சிறைத் தண்டணை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதிக்கப்படும் 
காவல் துறையில் புகார் அளிக்கலாமா?
பொதுத் தொல்லைகளால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்கள் இந்திய தண்டணைச் சட்டம்  268  முதல் 294 வரையில் உள்ள பிரிவுகள் கீழ் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 25.06.2019 

திருமணப் பதிவு - சட்டம் என்ன சொல்கிறது

இந்து மதத்தை சார்ந்த ஆணும், கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுடைய திருமணத்தை எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்?
இந்து திருமணச் சட்டம்
இரண்டு இந்துக்களுக்கிடையே நடைபெறும் திருமணத்திற்கு மட்டும்தான் இந்து திருமணச் சட்டம் பொருந்தும். இரண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்களுக்கிடையே நடைபெறும் திருமணங்களுக்கு இந்த திருமணச் சட்டம் பொருந்தாது என்று இந்து திருமணச் சட்டம் பிரிவு 2 ல் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து திருமணச் சட்டம் பிரிவு 2(1)(a) ஆனது, இந்து மதத்தை சார்ந்துள்ள ஒரு நபருக்கு தான் பொருந்தும். அந்த இந்து மதம் எந்த முறையில் வளர்ச்சியில் இருந்தாலும் அந்த பிரிவு பொருந்தும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் அல்லது ஜீ மதத்தை சார்ந்தவர்கள் இந்து என்பதிலிருந்து விலக்கப்பட்டு உள்ளார்கள் என்று உட்பிரிவு C ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு இரண்டு இந்துக்களிடையே ஒரு திருமணம் நடைபெற்றிருக்க வேண்டுமென இந்து திருமணச் சட்டம் பிரிவு 5 ல் கூறப்பட்டுள்ளது. எனவே இந்து திருமணச் சட்டமானது இரண்டு இந்துக்களுக்கிடையே நடைபெற்றுள்ள திருமணத்திற்கு தான் பொருந்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம்
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் பிரிவு 4 ல் "திருமணம் நடைபெறும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே கிறிஸ்தவராக இருந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றிருந்தால் மட்டுமே அந்த திருமணம் செல்லும் என்றும், அப்படி இல்லையென்றால் அந்த திருமணம் செல்லாது என்று" கூறப்பட்டுள்ளது.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் பிரிவு 4 மற்றும் இந்து திருமணச் சட்டம் பிரிவு 5 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது, குல வழக்கப்படி இரண்டு இந்துக்களிடையே நடைபெற்றுள்ள திருமணத்தை மட்டுமே இந்து திருமணச் சட்டம் செல்லத்தக்கது என்று ஏற்றுக்கொள்கிறது.
இரண்டு சட்டங்களில் எது பொருந்தும்?
திருமணம் செய்து கொள்கிற இரண்டு நபர்களில் ஒருவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவராக இருந்து, மற்றொரு நபர் இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், இந்து திருமணச் சட்டம் அந்த திருமணத்திற்கு பொருந்தாது. அத்தகைய திருமணத்திற்கு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டமே பொருந்தும்.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு, ஒரு திருமணம் நடைபெறவில்லை என்றால், அந்த திருமணம் இல்லாநிலை திருமணமாக (Void) கருதப்படும். சிறப்பு திருமணச் சட்டத்தை விடவும், மேலோங்கு செயல் திறன் (Over riding Effect) இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்திற்கு அளிக்கப்படவில்லை.
சிறப்பு திருமணச் சட்டம்
சிறப்பு திருமணச் சட்டத்திற்கு அந்த மேலோங்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு திருமணச் சட்டம் பிரிவு 4 ல் சிறப்பு திருமண செய்வதற்கான நடைமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இதன்படி திருமணம் ஒன்று நிகழ்வதற்கு திருமண தம்பதிகள் இருவரும் அட்டவணை 2 ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் அவர்கள் இருவரும் அல்லது ஒருவர் திருமணத்திற்கு முன் 30 நாட்களுக்கு குறைவில்லாமல் வாழ்ந்த பகுதியைச் சேர்ந்த திருமண பதிவு அலுவலரிடம் திருமணம் பற்றிய அறிவிப்பை எழுத்து மூலம் கொடுக்க வேண்டும்.
திருமண பதிவு அலுவலர் என்ன செய்ய வேண்டும்?
பிரிவு 5 ன் கீழ் கொடுக்கப்படும் அறிவிப்புகள் அனைத்தும் திருமண அலுவலர் பதிவேட்டுடன் இணைத்து வைக்க வேண்டும். அதோடு அவர் உடனடியாக அந்த அறிவிப்புகள் ஒன்றின் உண்மை நகலை அதற்கென உள்ள திருமண பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். நபர் எவரும் அந்த பதிவேட்டை பார்வையிடுவதற்கு விரும்பும் பொழுது, அதை எல்லா காலங்களிலும் பார்வையிட வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் திருமண பதிவு அலுவலர் அந்த அறிவிப்பு நகல் ஒன்றை அவரது அலுவலகத்தில் வெளிப்படையாக தெரியுமாறு ஒட்டி விளம்பரம் செய்ய வேண்டும்.
திருமணம் செய்து கொள்ள இருக்கும் தரப்பினர்கள் பிரிவு 5 ன் கீழ் அறிவிப்பு கொடுத்த திருமண அலுவலரின் வட்டார எல்லைக்குள் நிலையான குடியிருப்பை கொண்டிராத போது, திருமண அலுவலர், அவ்விருவரும் நிலையான குடியிருப்பை கொண்டிருக்கும் திருமண அலுவலருக்கு அந்த அறிவிப்பினை அனுப்பி வெளிப்படையாக தெரியும் இடத்தில் அதை ஒட்டி விளம்பரப்படுத்த வேண்டும்.
ஆட்சேபனை யாராவது தெரிவித்தால்?
ஆட்சேபனைகள் ஏதாவது தெரிவிக்கப்பட்டால், அந்த ஆட்சேபனைகளை குறித்து திருமண அலுவலர் முடிவெடுக்க வேண்டும். அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு பிறகு, ஆட்சேபனைகள் ஏதும் இல்லை என்றால் அந்த தம்பதிகளின் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் ஒருவேளை ஆட்சேபனை இருந்தால் அது குறித்து திருமண அலுவலர் முடிவு எடுக்கலாம். அந்த முடிவின் மீது தம்பதிகள் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம்.
இதுவே சட்டப்படியான செயலாகும் என்று கீழ்க்கண்ட வழக்கு ஒன்றில் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தீர்ப்பை வழங்கியவர்கள் நீதியரசர்கள் திரு. P. R. சிவக்குமார் மற்றும் S. வைத்தியநாதன் ஆகியோர்கள் ஆவார்கள்.
H. C. P. NO - 1722/2015, DT - 18.12.2015
Natarajan Vs Supertendent of police, Pudhukkotai District and Others
(2016-2-MLJ-CRL-27)
நன்றி : வழக்கறிஞர்_D_தங்கத்துரை @ ஹரி அவர்கள், 9894888436.