disalbe Right click

Tuesday, March 17, 2020

அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்புகின்ற கடிதம்

அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்புகின்ற கடிதம்
விருதுநகர் மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள், எனது 30.06.2018 புகார்மனு ஒன்றின் மீது விசாரணை நடத்தி 01.11.2018 அன்று எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பாமலேயே,  அனுப்பியதாக ஒரு பொய்யான ஆதாரத்தை ஏற்படுத்தி, என்னிடம் இருந்து பதில் ஏதும் வராத காரணத்தினால்  எங்களது சங்க நிர்வாகிகளுக்கு சாதகமாக உள்நோக்கத்தோடு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வழங்கி எனது மனுவை முடித்து வைத்துள்ளார். எனக்கு இது கடந்த மாதம் வரை தெரியாது.
அந்த கடிதத்தில் இருந்த சங்கதி என்ன?
மேற்கண்ட 01.11.2018 கடிதத்தில் சங்கநிர்வாகிகளின் மீது நான் தொடுத்த வழக்கு, அவர்கள் அளித்த வாக்குமூலம், நடுவர் அளித்த தீர்ப்பு மற்றும் நான் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு ஆகியவற்றின் நகல்களை தன்னிடம் அளித்தால் அது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனக்கு மாவட்ட பதிவாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம் எனக்கு அப்போதே கிடைத்திருந்தால், விசாரணையின் முடிவானது சங்க நிர்வாகிகளுக்கு எதிராக மாவட்டப்பதிவாளர் அவர்களால் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.
எனக்கு இந்த வருடம் கிடைத்த அந்த கடித நகல்
கடந்த 2019ம் வருடத்தில் பதிவுத்துறை தலைவர் அவர்களிடம் அளித்த புகார் மனு குறித்து விசாரணை செய்ய மதுரை -  பதிவுத்துறை துணைத் தலைவர் அவர்கள் பணிக்கப்பட்டிருந்தார். அவரிடம் நான் கேட்ட ஆவணங்களோடு அவரையும் அறியாமல் மேற்கண்ட 01.11.2018  கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்
அந்தக் கடிதத்தை பார்த்து நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். 2018ம் ஆண்டிலேயே இந்த கடிதம் கிடைத்திருந்தால் என்னிடம் உள்ள வழக்கு ஆவண நகல்களை நான் அளித்திருப்பேன். போலி ஆவணம் தயாரிக்கப்பட்ட குற்றத்தை மாவட்ட பதிவாளரிடம் சங்கநிர்வாகிகள் ஒத்துக் கொண்டு போயிருப்பார்கள். அந்த பிரச்சனையில் ஒரு முடிவு அப்போதே வந்திருக்கும். நமக்கு தெரியாமலேயே கடிதம் வந்துவிட்டு திரும்பி இருக்குமோ? அல்லது நமது பெயரில் வேறு யாருக்காவது அஞ்சல் செய்திருப்பார்களோ? என்று எனது எண்ணம் அலைபாய்ந்தது.
கை கொடுத்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்
மதுரை -  பதிவுத்துறை துணைத் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி தகவல்களை பெற்றுத்தர வேண்டினேன். அவரும் துறைமாற்றம் செய்தார். பதிவாளர் சாதாரண தபாலில் அனுப்பியதாக தகவல் தந்ததோடு மட்டுமல்லாமல் அந்த கடிதத்தின் நகல் ஒன்றையும் சேர்த்து மாவட்டப் பதிவாளர் அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதம் தங்கள் பார்வைக்காக கீழே உள்ளது.


குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது
மாவட்டப் பதிவாளர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனது கைகளுக்கு அந்த கடிதம் கிடைக்கக்கூடாது என்பதற்காக அந்த கடிதம் சாதாரண தபாலில் அனுப்பப்பட்டதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அவர் செய்தது எந்த சட்டத்தின் கீழ் அது குற்றம்? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  பொதுவாக அவர் செய்தது குற்றம்! என்று சொல்வதைவிட,  அவர் செய்தது இந்த சட்டத்தின் கீழ் இன்ன பிரிவின் கீழ் குற்றம் என்று சொல்வதை விரும்புபவன் நான். அதனால், எனது தேடலை ஆரம்பித்தேன். 
கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்: தேடுங்கள் கிடைக்கும்!
நண்பர்கள் சிலரிடம் விபரம் கேட்டேன். அவர்களும் அதை குற்றம் என்ற்ய் சொன்னார்களே தவிர,. எந்த சட்டத்தின்படி அது குற்றம் என்பது அவர்களுக்கும் குறிப்பாகத் தெரியவில்லை. இணையத்தில் இரண்டு மணி நேரம் தேடினேன். ஒரு வழியாக விபரம் எனக்கு கிடைத்தது. பெரியவர்கள் சொல்லி வைத்த வாசகங்கள் பொய்யில்லை.
அரசு அலுவலக நடைமுறை நூல்
அரசு அலுவலக நடைமுறை நூலில் இதற்கான விடை எனக்கு கிடைத்தது. அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படுகின்ற முக்கியமான கடிதங்கள், ”பத்தி 159ன்படி”  பதிவு அஞ்சலில்தான் அனுப்பப்பட வேண்டும்! என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கை
மாவட்ட பதிவாளரது மேற்கண்டதிட்டமிட்ட மோசடி செயல் குறித்து எனது அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க ஆயுத்தமானேன்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 17.03.2020  

Saturday, March 14, 2020

ப்ளாட் போட்டு நிலத்தை விற்க வேண்டுமா?

ப்ளாட் போட்டு நிலத்தை விற்க வேண்டுமா?
உங்களுக்கென்று சொந்தமாக ஊரில் நிலம் இருக்கலாம். அதனை மொத்தமாக ஒரே நபருக்கு விற்பதற்கு பதிலாக பிளாட் போட்டு பல பேர்களுக்கு விற்றால் அதிக லாபம் சம்பாதிக்கலாமே என்று நீங்கள் நிலைக்கலாம். முன்பு மாதிரி நீங்கள் நினைத்தவுடன் உங்களது நிலத்தை பிளாட் போட முடியாது. அப்படியே உங்களது விருப்பப்படி பிளாட்டுகளை போட்டாலும் அதனை விற்கமுடியாது. அதற்கான அரசாங்க அப்ரூவல் இருந்தால்தான் அவற்றை விற்க முடியும். பத்திர அலுவலகத்திலும் அதனை பதிவு செய்ய முடியும். அதனை வாங்குபவர்கள் அந்த இடத்தில்  வீடோ, தொழிற்சாலையோ கட்ட முடியும். 
வீட்டுமனை திட்டங்களுக்கு அங்கீகாரம்
தமிழ்நாட்டில் நகர் ஊரமைப்பு துறைக்கு  (Directorate of Town and Country Planning)  உட்பட்ட பகுதிகளில் வீட்டு மனைப்பிரிவுகளுக்கு (layout) அங்கீகாரம் அளிப்பதற்கு பின்பற்றப்படுகின்ற வழிமுறைகள் என்ன?
  1. எந்த இடத்தில் வீட்டு மனைத்திட்டம் அமைய உள்ளதோ அந்த இடத்திற்கு   சம்பந்தப்பட்ட நிலப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், நில சீர்திருத்த சட்டம் மற்றும் நகர்ப்புற நில உச்ச வரம்பு சட்டம் ஆகியவையின் கீழ் கையகப்படுத்தும் நடவடிக்கைகளோ, மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கான நிலைகளோ இல்லை என்ற சான்றிதழை, அந்தப்பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர்  அலுவலகத்தில்   இருந்து,  Land developer பெற வேண்டும்.
  2. ஆனால், சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே இந்த சான்று அவர்களால் அளிக்கப்படும்.
  3. அதன் பிறகு Land developer ஊராட்சி, பேரூராட்சி போன்றவை மூலம் நகர் ஊரமைப்பு துறைக்கு முதலில் விண்ணப்பிக்க வேண்டும்
  4. அதற்கு அந்த நிலத்தின் கிரையப் பத்திரம், மூலப்பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்கச் சான்று, வட்டாட்சியர் அலுவலக சான்றிதழ், உள்ளிட்ட அவசியமான ஆவணங்களுடன் உள்ளாட்சி அமைப்பின் வினா விடைப்படிவம் ஒன்றையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்
  5. அந்த விண்ணப்பமானது உள்ளாட்சி அமைப்பின் மூலம் நகர் ஊரமைப்புத்துறை மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்ட குழும அலுவலகத்துக்கு அனுப்பப்படும்
  6. பின்னர், மனை அமைந்துள்ள இடம் அந்த அலுவலக அதிகாரி மூலம் நேரில் ஆய்வு செய்யப்படும்.
  7. மனைப்பிரிவு செய்யப்படுகின்ற இடத்துக்கு அருகில் நீர்நிலைகள், இடுகாடு, ரயில் தண்டவாளம் போன்றவை இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளின்படி மனுவுடன் இணைத்துள்ள அனைத்து ஆவணங்களும் பரிசீலனை செய்யப்படும். ஆவணங்களை சரிபார்த்த பின்னர், வீட்டு மனை திட்டத்திற்கான ஒரு வரைபடத்தை அளித்து, Technical approval மற்றும் Authorization Number அவர்களால் தரப்படும்.

அந்த வரைபடத்தில் என்னென்ன அமைந்திருக்கும்
  1. விதிகளுக்கு உட்பட்டு நூலகம்பூங்கா போன்ற பொது இட உபயோகம்சாலைகள், கடைகள், மொத்த மனைகளின் எண்ணிக்கை, அவற்றின் ஒவ்வொன்றின் அளவுகள் அமைந்திருக்கும். நூலகம், பூங்கா போன்ற பொது இடங்கள், சாலைகள், கடைகள் ஆகியவற்றின் அளவுகள் சதுர அடிகளில் அதில் குறிக்கப்பட்டு இருக்கும்.
உங்களது நிலமானது ஐந்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால்....

மனைப்பிரிவு அமைய உள்ள இடமானது ஐந்து ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்ட குழுமத்தில் Technical approval வழங்கப்பட்டுஅவர்களால் உள்ளாட்சி அமைப்பிற்கு இறுதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.


உங்களது நிலமானது ஐந்து ஏக்கருக்கு அதிகமாக இருந்தால்....
மனைப்பிரிவு அமைய உள்ள இடமானது ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக இருப்பின், அதை நேரில் ஆய்வு செய்து மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்டக் குழுமம் மூலமாக, சென்னை நகர் ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்துக்கு அந்த அறிக்கை அனுப்பப்படும்.
அங்கு, Technical approval வழங்கப்பட்டு, அது உள்ளாட்சி அமைப்பின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Technical approval அளிக்கப்பட்ட வீட்டு மனைத்திட்டம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் இறுதி ஒப்புதலுக்கு, சில நிபந்தனைகளுடன் அனுப்பப்படும்.
உள்ளாட்சி அமைப்பானது அந்த நிபந்தனைகளை மனுதாரருக்கு தெரிவிக்கும்,
அவை நிறைவேற்றப்பட்ட நிலையில் இறுதி ஒப்புதல் வழங்கப்படும்.
மனைத் திட்ட வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள சாலைகள் மற்றும் நூலகம்பூங்கா போன்ற  பகுதிகளை ஒரு தானப்பத்திரத்தின் (Gift Deed) மூலமாக மனுதாரர் உள்ளாட்சி அமைப்பிடம் முதலிலேயே ஒப்படைக்க வேண்டும்.
Technical approval அளிக்கப்பட்ட இடம், அன்றைய நாள் வரை அரசாங்கத்தால் நில ஆர்ஜித நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்று உள்ளாட்சி அமைப்பு உறுதி செய்து கொள்ளும்.
தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின் உள்ளாட்சி அமைப்பு ஒரு தீர்மானம் நிறைவேற்றி வீட்டுமனை திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளிக்கும். அதன் பின்னரே, வீட்டு மனைத்திட்டத்தில் உள்ள பிளாட்டுகளை அதன் உரிமையாளர் விற்பனை செய்ய இயலும்
************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 14.03.2020