disalbe Right click

Friday, April 17, 2020

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்' பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில் இல்லை. எனவே அந்த சட்டம் பற்றி நான் படித்து தெரிந்துகொண்ட சங்கதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மூத்த குடிமக்கள் கவனத்திற்கு.....
இந்த சட்டத்தின்படி வழக்கறிஞரை அணுக வேண்டியதிருக்குமோ?, நீதிமன்றம் செல்ல வேண்டியதிருக்குமோ?, செலவு எவ்வளவு ஆகுமோ? நமக்கு ஒன்றுமே தெரியாதே!. என்று மூத்த குடிமக்கள் கலங்க வேண்டியதில்லை. நன்றாக மனு எழுத தெரிந்திருந்தால் போதுமானது.
நீதி வழங்கும் அதிகாரம்
நீங்கள் வசித்து வருகின்ற பகுதியின் மாவட்ட ஆட்சியரே இதற்கு நீதிபதி ஆவார்.; அந்த மாவட்டத்தின் வருவாய் கோட்ட அலுவலர் அல்லது சமூக நல அதிகாரி, வட்டாட்சியர், ஆகியோர்கள் இந்த சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவதற்கான முக்கிய அதிகாரிகள் ஆவார்கள்.
இந்த சட்டத்தின் கீழ் புகார்களை அளிக்க விரும்புபவர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக குறைகளைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு யாரும் பரிந்துரை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதே போல யாருடைய சான்றொப்பமும் தேவையில்லை.
மனுதாரர்கள் தங்களுக்கு பராமரிப்புக்குண்டான தொகை தேவை என்று விண்ணப்பித்தால் போதும். அந்தப் புகாரின் மேல் விசாரணைக்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரியே தெரிவிப்பார்.
நன்கு மனு எழுதத் தெரிந்தவர்கள் மூலம் விண்ணப்பிப்பது நல்லது.
பொதுவாக மூத்த குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் இந்த சட்டப்படி தங்களுடைய வாழ்க்கைக்கான பராமரிப்புக்கான தொகையைத்தான் கோருகின்றனர். அதிகப்படியான தேவைகளை அவர்கள் யாருமே வேண்டுவதில்லை.
யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?.
குறை தீர்க்கும் நாளில், மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனுவை அளித்தால் போதுமானது. அவர் அதனை மாவட்ட சமூக நல அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். மாவட்ட சமூக நல அதிகாரி  அதனை பரிசீலணை செய்து சப் கலெக்டர் எனப்படுகின்ற வருவாய் கோட்ட அதிகாரிக்கு அனுப்புவார். அவர் முதலில் மூத்த குடிமக்களை அழைத்து விசாரிப்பார். பிறகு பிரதிவாதிகளை அழைத்து விசாரிப்பார். அவரே நீதியும் வழங்கலாம்; சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. சில நேரங்களில் அதனை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவார். "பிரதிவாதியை விசாரணைக்கு அழைத்தும் வராவிட்டால் "எக்ஸ்பார்ட்டி' தீர்ப்பு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. .
சட்டம் என்ன சொல்கிறது?
தனது கணவரின் இறப்புக்குப் பிறகு கணவரின் சொத்தில் பங்கு உண்டு என்று கோரும் ஒரு மருமகள் தனது மாமியாரையும் வைத்து பராமரிக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் மருமகளால் மாமியார் பராமரிக்கப்படாவிட்டால் இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்..
பெற்றோர்களுக்கு ஓய்வூதியம் இல்லாவிட்டாலும், மாதச் சம்பளம் வாங்குகின்ற மகன் அல்லது மகன்கள் அவர்களை . வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டாலும் இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்..
நிலம், வீடு மற்றும் தோட்டம் போன்ற அசையாச்சொத்துகள் இருந்தாலும் ஓய்வூதியம் வாங்கினாலும் அவற்றையெல்லாம் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பெற்றோரை அல்லது மூத்த வயதினரான குடும்ப உறவினரை பட்டினிபோட்டு தவிக்கவிடுகின்ற "வாரிசுகள்' யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்...
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று பட்டினி போட்டு வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து மனதளவிலும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்தாலும் அவர்கள் மீதும் இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்...
தமிழக அரசு மேற்கண்ட விதிகளை உருவாக்கியுள்ளது. பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டப்படி இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.04.2020 

Sunday, April 12, 2020

தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளை பயன்படுத்தாத தகவல் ஆணையம்

தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளை பயன்படுத்தாத 
தகவல் ஆணையம்
தகவல் ஆணையத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் கதை
  • கடந்த மாதம் தமிழ்நாடு தகவல் ஆணையம் வழங்கிய ஒரு தீர்ப்பை காண நேர்ந்தது.  
  • அதில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், சேத்துபட் ஊராட்சியைச் சேர்ந்த திரு ரிஸ்வான் அகமத்துல்லா என்ற மனுதாரர்  தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 6(1)ன் கீழ் ஆறு தகவல்களை செய்யாறு நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் அவர்களிடம் முறைப்படி கேட்கிறார்.
  • தகவல்கள் வழங்கப்படுகிறது. 
  • மனுதாரருக்கு பொதுத் தகவல் அலுவலர்  அவர்கள் வழங்கிய தகவல்கள் திருப்தி அளிக்காத காரணத்தால் முதல் மேல்முறையீடு செய்கிறார்.
  • மீண்டும் தகவல்கள் வழங்கப்படுகிறது. 
  • ஆனால், ஐந்து தகவல்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 
  • இதனால் மனுதாரர் இரண்டாம் மேல்முறையீட்டை தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கிறார். 
  • ஆணையர் அவர்கள் விசாரணை நடத்தி பதினைந்து நாட்களுக்குள் தகவல் வழங்க உத்தரவிடுகிறார். 
  • தகவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டும் அந்த ஒரு தகவலை பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் அந்த குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் வழங்காமல், மிகவும் காலதாமதமாக ஐம்பது நாட்கள் கழித்து வழங்குகிறார். 
  • ஆகையால், பொதுத்தகவல்  அலுவலர்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் மீண்டும் தகவல் ஆணையத்திடம் முறையீடுகிறார். 
  • விசாரனை மீண்டும் நடக்கிறது. 
  • ஆனால், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் தகவல் ஆணையம் எடுக்கவில்லை வழக்கை முடித்து வைக்கிறார்கள்

  • இந்த வழக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரைமுறைகள் கனம் தகவல் ஆணையர் அவர்களால் பின்பற்றப்படவே இல்லை. 
  • மனுதாரருக்கு 15 நாட்களுக்குள் தகவலை வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது. 
  • அதுவும் ஒரே ஒரு தகவல்தான். அதையும் கூட பொது தகவல் அலுவலர் அவர்கள் ஐம்பது நாட்களுக்குப் பிறகே வழங்குகிறார். 
  • மனுதாரர் புகார் அளித்தும், தகவல் ஆணையத்தின் ஆணையை மதிக்காத பொது தகவல் அலுவலருக்கு தண்டணை ஏதும் வழங்கப்படவில்லை. 
  • இந்த விசாரணைக்கு மனுதாரர் நேரில் சென்னைக்கு அவரது சொந்த செலவில் வரவழைக்கப்பட்டிருக்கிறார். 
  • ஒப்புக்கு ஒரு விசாரணை நடத்தி வழக்கை முடித்து வைக்கிறார்கள். 
  • இன்னும் சொல்லப்போனால், தனது ஆணையை பொது தகவல் அலுவலர் அவர்கள் மதிக்காதது  பற்றி தகவல் ஆணையர் கனம் தமிழ்குமார் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. 
  • இப்படி ஒரு சட்டம்! இதற்கு ஒரு ஆணையம்! 
  • இவர்களுக்கு மாதம் இரண்டேகால் லட்ச ரூபாய் சம்பளம்!
  • மக்களது வரிப்பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கும் இந்த நாடு எப்படி உருப்படும்?
தீர்ப்புகளின் நகல்களை டவுண்லோடு செய்ய கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
,
************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 13.04.2020 

Friday, April 10, 2020

முத்திரைத்தாள் விற்பனையாளரின் தகுதிகள்

முத்திரைத்தாள் விற்பனையாளரின் தகுதிகள்
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
இன்று முகநூலில் ஒரு நண்பர் முத்திரைத்தாள் விற்பனையாளராக என்ன செய்ய வேண்டும்? என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். எனக்கு அதுபற்றி தெரியவில்லை. அதனால் கூகுள் இணையதளத்தில் அதுபற்றிய தகவல்களை திரட்டி இந்த பதிவை நான் உங்களுக்கு தந்துள்ளேன்.
பதிவுத்துறை
முத்திரைத்தாள் விற்பனையாளர்களை பதிவுத்துறையே தேர்ந்தெடுக்கின்றது. இவர்களுக்கான தேவைகள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தின் விளம்பரப்பலகையில் பதிவுத்துறையினர் விளம்பரம் செய்வார்கள். அதனைப் பார்த்து நீங்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 
முத்திரை சட்ட விதி 25 (1) (சி)
முத்திரை சட்ட விதி 25 (1) (சி)ன்படி முத்திரைத்தாள் விற்பனையாளருக்கான தகுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.
  1. எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்ச வயது 18 ஆகியிருக்க வேண்டும்.
  3. முத்திரைத்தாள் விற்பனையில் முன் அனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழ்
  4. தாசில்தார் வழங்கிய இருப்பிடச்சான்று.
  5. மருத்துவர் வழங்கிய உடல்தகுதி, கண்பார்வை சான்றிதழ்கள்
  6. தாசில்தாரிடம் பெற்ற சொத்து மீதான செல்வநிலைச் (Solvency) சான்றிதழ் 
  7. பிணையமாக காட்டப்படுகின்ற சொத்து மீதான வில்லங்க சான்றிதழ்
முன்னாள் ராணுவத்தினர், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர், விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால், அந்த முன்னுரிமையைப் பெற, அதற்குரிய சான்றிதழை தாசில்தாரிடம் இருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைத்திருக்க வேண்டும்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 11.04.2020 

கொரோனா நோயை ஒருவரால் மற்றவருக்கு பரப்ப முடியுமா?

கொரோனா நோயை ஒருவரால் மற்றவருக்கு பரப்ப முடியுமா?
கொரோனா வைரஸ் 
கொரோனா நோய் என்பது முதலில் தொற்று நோய் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு நோயுமே ஆர் நாட் (R0) ஆர் நாட் எனப்படும் ஓர் அளவுகோலை வைத்துத்தான் அதன் பரவும் தன்மை கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், கோவிட் - 19 கொரோனா வைரஸின் ஆர்.நாட் அளவு 1.5 முதல் 4 வரை இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. அதாவது R0 மதிப்பென்பது 2.5 என எடுத்துக்கொண்டால், கொரோனா தொற்று கொண்ட ஒரு நபர் 30 நாள்களில் 406 நபர்களுக்கு அந்தத் தொற்றைப் பரப்புவார்.
அந்த R0 மதிப்பென்பது கூடுதல் ஆகும்போது அவர் இன்னும் அதிகமாக நபர்களுக்கு நோயை பரப்புகின்ற தன்மையை பெறுவார்.
தனக்கு நோய் இருக்கிறது என்பதே தெரியாமல் பரப்புகிறவர்
தனக்கு கொரோனா நோய் இருக்கிறது என்பதே தெரியாமல் பரப்புபவர் தானும் அவதிப்பட்டு, மற்றவர்களையும் அவதிக்குள்ளாக்குவார். இதனால்தான் நமது மத்திய, மாநில அரசாங்கங்கள், வீட்டில் இருங்கள்!, விலகி இருங்கள்! என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில் வெளியில் செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மக்கள் இதனை கடைபிடிப்பது இல்லை. ஆகையால் பாதிப்பு இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், ஊரடங்கு உத்தரவை நீடிக்கும் நிலைக்கு அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியை பொதுமக்களே உருவாக்கி இருக்கிறார்கள்.
தனக்கு நோய் இருக்கிறது என்பதே தெரிந்தே பரப்புகிறவர்
தனக்கு கொரோனா நோய் இருக்கிறது என்பதே தெரிந்தே பரப்புபவர்களும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு டெல்லியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுச்சேரிக்கு நேர்முகத் தேர்வுக்காக வந்திருக்கிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரால் டெல்லி செல்ல முடியவில்லை. விழுப்புரத்தில் செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த முகாமில் தங்கி இருந்திருக்கிறார். அந்த முகாமில் இருந்தவர்களுக்கு 07.04.2020 அன்று பரிசோதணை செய்த போது, அவருக்கு நோய் தொற்று இருக்கிறது என்று ஆய்வில் கண்டுபிடித்து அவர் தங்கியிருந்த முகாமிற்கு சென்று பார்த்த போது அவர் அங்கிருந்து எங்கோ சென்றுவிட்டார். ஏழு தனிப்படைகள் அவரை தற்போது தேடிக் கொண்டிருக்கிறது. அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.
குறிப்பு: இவர் 14.04.2020 அன்று செங்கல்பட்டில் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது
அவர் இப்போது அந்த நோயை எத்தனை பேருக்கு பரப்பி இருக்கிறாரோ தெரியவில்லை. அவருக்கு நோய் இருக்கிறது என்பது தெரியாமல் எத்தனை பேர்கள் அவருடன் பழகிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. அவருக்கு நோய் இருக்கிறது என்பது அவருக்கு தெரிந்திருக்கலாம். அதனால், அதன் தாக்கம் அதிகமாகும்போது அவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கே திரும்பி வரலாம். அவர் பிழைத்துவிடலாம். ஆனால், அவரால் நோய் தொற்றுக்கு ஆளாகி நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்களின் கதி என்னாகும்?.
சமூக விலகலினால் என்ன பயன்?
பொதுமக்கள் கட்டுப்பாடுடன் சமூகவிலகலை கடைபிடித்தால், அதாவது முக கவசம் அணிந்து கொண்டு, மற்ற மனிதருடன் இருக்கும்போது இருவருக்கும் உள்ள இடைவெளியை 3 அடி தூரமாக வைத்துக் கொண்டால், ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா வைரஸ் பரவாது.
ஊரடங்கு உத்தரவு
ஆகவே மக்களே, அரசு உத்தரவின்படி ஊரடங்கு உத்தரவை மதியுங்கள். ஒத்துழைப்பு தாருங்கள். சமூக விலகலை கடை பிடியுங்கள். வீட்டிலேயே இருங்கள். விலகியே இருங்கள். வாழ்வதற்கு முதலில் உயிர் முக்கியமானது. அதற்குப் பிறகுதான் உணவு.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 10.04.2020

Saturday, April 4, 2020

ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க ....?

                 ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க ....?   
                 
பொதுமக்கள் வாழ்க்கையில் அதிகமாக அங்கம் வகிப்பது காவல்துறை என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு, பொதுமக்கள் சந்திக்கும் அதிகப்படியான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் அரசுத் துறையில், காவல்துறை பெரும்பங்கு வகித்து வருகிறது.
ஆனால், இந்தத்துறையில் சாதாரண மக்கள் புகார் அளிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. நமது நாட்டில் உள்ள நீதிமன்றங்களில், ஒரு வழக்கை பதிவு செய்வதைவிட, காவல் நிலையங்களில் ஒரு புகாரை பதிவு செய்வது மிக கடினமாக இருக்கிறது.
நடைமுறை என்ன?
புகார்தாரர் ஒருவர் காவல்துறையில் தருகின்ற புகாரை பெற்றுக் கொண்டு, அதற்கு ஒப்புதலாக CSR என்று சுருக்கமாக சொல்லக்கூடியபுகார் மனு ஏற்புச் சான்றிதழ்(Community Service Register) என்ற ஒன்றை உடனடியாக அவரிடம் காவல்துறையினர் வழங்கவேண்டும். அதன்பிறகு, அவர்கள் அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளவற்றை படித்துப் பார்த்து குற்றம் நடந்துள்ளதா? என்பதை அறிந்துகொள்ள, இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்க வேண்டும். அவர்கள் இருதரப்பினரும் தருகின்ற ஆவணங்களை, சாட்சியங்களை ஆய்வு செய்ய வேண்டும். குற்றம் நடந்தது விசாரனையில் தெரிந்தவுடன், ”முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட வேண்டும். குற்றம் நடக்கவில்லை என்றால், புகார் மனு ஏற்புச் சான்றிதழ் ரத்து செய்யப்படவேண்டும். அளிக்கப்பட்டது பொய்ப்புகார் ஆக இருந்தால், அதனை அளித்தவர் காவல்துறையால் முதல் தடவை மட்டும் எச்சரிக்கப்படுவார்.
காவல் நிலையங்களில் நடப்பது என்ன?
ஆனால், பெரும்பாலும் புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொள்வதே இல்லை. படித்துப் பார்த்துவிட்டு நமது கையிலேயே கொடுத்து விடுகிறார்கள். அதிகாரி இல்லை, பிறகு வாருங்கள் என்பார்கள். அல்லது என்ன நடந்தது என்பதை நம்மிடம் வாய்மொழியாக கேட்டுவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்து பேசுகிறார்கள். நமது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதே இல்லை. எனக்கு இதில் அனுபவம் நிறைய இருக்கிறது.
ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்
இப்போது இந்த பிரச்சனையை ஒழிக்க, அரசு ஆன்லைன் மூலமாக, காவல்துறையில் புகார் அளிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதனால நமக்கு அலைச்சல் கிடையாது. செலவு கிடையாது. வீட்டில் இருந்தபடியே, நாம் இருக்கும் இடத்தில் இருந்தே புகார் அளிக்க முடியும். புகார் செய்ததற்கு ஆதாரமும் நமக்கு உடனே கிடைத்துவிடுகிறது.
எப்படி புகார் அளிப்பது?
இதற்கு முதலில் https://eservices.tnpolice.gov.in/ என்ற இணையதளத்திற்குச் நீங்கள் செல்லவேண்டும். அதில் இடமிருந்து வலமாக 3வதாக தெரிகின்ற Citizen Services (Free) என்ற வார்த்தையின் மீது கிளிக் செய்ய வேண்டும். அதனுள் இருகின்ற 10 சேவைகளைப் பற்றிய தலைப்புகள் தெரிகின்ற இன்பாக்ஸ் ஒன்று உருவாகும்.
அதில் முதலாவது இருக்கின்ற Register Online Complaint என்ற வார்த்தையை கிளிக் செய்தால் கீழ்காணும் ஒரு பெரிய பாக்ஸ் உருவாகும்.

அதில் முதல் பாதியில் கேட்கப்பட்ட எந்த மாவட்டம், உங்களது பெயர், இனம், பிறந்த நாள், வயது, முழு முகவரி, செல்போன் எண் மற்றும் -மெயில் முகவரி ஆகிய விபரங்களை ஆங்கிலத்தில் நிரப்ப வேண்டும்.  அதற்கு அடுத்த பாதியில் முதலில் உள்ள Box-ல் குற்றம் பற்றிய விபரங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் பொருத்தமான குற்றத்தை மட்டும்டிக்செய்யவேண்டும். அதன் பிறகு உள்ள பாக்ஸில் எந்த நாளில் குற்றம் நடந்தது என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு உள்ள பாக்ஸில் எந்த இடத்தில் குற்றம் நடந்தது என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு உள்ள பெரிய பாக்ஸில் குற்றத்தை பற்றி சுருக்கமாக (2000 எழுத்துகள்) டைப் செய்ய வேண்டும்.
ஆவணங்கள் இணைத்தல்
அதற்கு கீழே  நடைபெற்ற குற்றம் சம்பந்தமான ஆவணங்கள் இருந்தால், அவற்றை பதிவேற்றலாம். அதற்கு YES என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும். ஆவணங்கள் ஏதும் இல்லை என்றால் NO என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும். உள்ளே செலுத்துகின்ற அந்த ஆவணங்கள் பி.டி.எப், பி.என்.ஜி அல்லது ஜேப்பக் பைலாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் அவற்றை பதிவு செய்ய முடியும். 500 KB வரை பதிவேற்றலாம். ஒவ்வொரு ஆவணத்தையும்  உங்களது கைபேசி அல்லது கம்ப்யூட்டரில் இருந்து அதனுள் செலுத்தியவுடன் UPLOAD என்ற வார்த்தையை கிளிக் செய்துவிட்டு அடுத்த ஆவணத்தை அதனுள் செலுத்த வேண்டும்.                 
அவ்வளவுதான். வேலை முடிந்தது. இறுதியாக கீழே தெரிகின்ற செக்யூரிட்டி கோடு எண்ணை பதிவிட்டு    REGISTER  என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும். 
உங்களது புகார் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என்ற அர்த்தத்தை கொண்ட ஆங்கில வார்த்தைகள் தோன்றும். அதற்கு கீழே உங்களது புகாரைப் பற்றிய சிறு குறிப்புடன் ஒரு ஒப்புதல் சீட்டு திரையில் தோன்றும் அதனை டவுண்லோடு செய்து பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். Citizen Services (Free)  என்று முதலில் பார்த்த பாக்ஸை கிளிக் செய்தால் தோன்றுகின்ற இன்பாக்ஸில்  2வதாக தெரிகின்ற Online Complaint Status என்ற வார்த்தையை கிளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும்.  உங்களது புகாருக்கு கொடுக்கப்பட்ட எண்ணை (புகார் அளிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து)  அந்த பக்கத்தில் உங்களது புகார் எண்ணை பதிவிட்டால், உங்களது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியும். இதனை நீங்கள் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள். அடுத்து சில நாட்களில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு உங்களது புகார் அனுப்பப்படும். அவர்கள் உங்களை அழைத்து, புகார் விளக்கமாக பெற்றுக் கொண்டு, அதனை கையாண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதற்குப் பிறகும் உங்களது புகாரின் நிலையை மேற்கூறியவாறு தொடர்ந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களது புகார் தள்ளுபடி செய்யப்பட்டால் Disposed என்று அதில் தெரியும்.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.04.2020