disalbe Right click

Friday, May 29, 2020

ஒரு ஆணைக்கு எதிரான மற்றொரு ஆணை

ஆணை பிறப்பித்து 15 மாதங்களுக்கு மேலாகிவிட்டது! 
அந்த ஆணைக்கு எதிராக மற்றொரு ஆணை இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரியின் மீது வழக்குத்தொடர வேண்டும் என்றால், இந்திய தண்டணைச்சட்டம் பிரிவு 197-ன் கீழ் அந்த அரசு அதிகாரியின், உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. திருத்தங்கல் காவல் ஆய்வாளர் திரு சௌ.இராஜா அவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பதிவுத்தபால் மூலமாக கடந்த 08.05.2018 அன்று ஆதாரங்களை சமர்ப்பித்து அனுமதி கேட்டிருந்தேன். பதில் ஏதும் வழங்கப்படவில்லை. அதனால் குறைதீர்க்கும் நாளில் 11.06.2018   மீண்டும் அதனை நினைவூட்டி விண்ணப்பித்திருந்தேன். அந்த விண்ணப்பமானது, அங்கிருந்த மாவட்ட காவல்துறை அலுவலர் அவர்களிடம் அப்போதே நேரடியாக வழங்கப்பட்டது. அதற்கும் பதில் ஏதும் வழங்கப்படவில்லை. அதனால், (1) எனது விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுத்து திருத்தங்கல் காவல் ஆய்வாளர் மீது வழக்குத் தொடர எப்போது அனுமதி வழங்குவீர்கள் என்ற தகவலையும், (2) ஒரு அரசு பணியாளர்கள் மீது ஒருவர் வழக்கு தொடர்வதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன? என்ற தகவலையும் 
  1. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களிடம் கடந்த 06.07.2018 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தேன். 
  2. அந்தக் கடிதமானது விருதுநகர் மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்களுக்கு 11.07.2018 அன்று துறை மாற்றம் செய்யப்பட்டது.
  3. அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட காவல்துறை பொது தகவல் அலுவலர் அவர்கள், முப்பது நாட்களுக்கு மேலாகியும் எனக்கு எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை.
  4. அதனால் 18.08.2018 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு எனது முதல் மேல்முறையீட்டை பதிவுத்தபால் மூலமாக அனுப்பினேன்.
  5. அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நாற்பத்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் எனக்கு எந்தவித தகவலையும் வழங்கவில்லை.
  6. அதனால் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு எனது இரண்டாவது மேல்முறையீட்டை கடந்த 03.10.2018 அன்று அனுப்பினேன்.
  7. எனது வழக்கு தகவல் ஆணையத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு SA7331/2018 என்று எண் வழங்கப்பட்டது.
  8. அந்த வழக்கின் மீது 21.01.2019 அன்று, கனம் தகவல் ஆணையர் திரு தட்சணாமூர்த்தி அவர்களால், மனுதாரருக்கு  முப்பது நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று ஒரு ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. 
  9. அந்த ஆணையில், உத்தரவை செயல்படுத்த தவறும்பட்சத்தில் பிரிவுகள் 20(1), 20(2) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைக்கு உட்பட நேரிடும்! என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
  10. அந்த ஆணையின் நகலை இணைத்து எனக்கு தகவல்களை வழங்குமாறு மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்களுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை 01.02.2019 அன்று அனுப்பினேன். 
  11. இந்த கடிதத்திற்கு பதில் அளிக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத்தகவல் அலுவலர்தான்! என்று எனது வழக்கு சம்பந்தமான கடிதங்கள் அனைத்தையும் அங்கு அனுப்பிவிட்டு அதனை மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்கள்  25.02.2019 (34 நாட்கள் கழித்து) எனக்கும் தெரிவித்திருந்தார்.
  12. அந்த கோப்பை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியரக பொதுத்தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரது 08.05.2018 & 11.06.2018 ஆகிய இரு விண்ணப்பங்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 09.05.2018 & 30.05.2018 கடிதம் மூலமாக உரிய நடவடிக்கைக்காக, மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது; ஆகவே தாங்கள் தான் அதற்கான தகவல்களை அளிக்க வேண்டும் என்று 20.03.2019 அன்று அந்த கோப்பை மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்களுக்கே திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்.
  13. நான் கோரிய தகவல்கள் எனக்கு வழங்கப்படாத காரணத்தால், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த   29.03.2019 அன்று தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினேன். 
  14. அதன்பிறகு அந்த வழக்கின் மீது மீண்டும் ஒரு ஆணையை 18.05.2020 அன்று தகவல் ஆணையர் கனம் தட்சணாமூர்த்தி அவர்கள் பிறப்பித்துள்ளார். 
  15. அதில் நான் கோரிய தகவல்கள் கிடைக்கப் பெறாதவை என்றும், அதனால் எனது மனு முடிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனை கீழே காணலாம்.

Tuesday, May 26, 2020

திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா?

திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா? 
இந்தப்பதிவை உங்களுக்கு வழங்கக் காரணம்:
எனது மகனுக்கு திருமணம் முடிப்பதற்காக மணமகளை தேடிக் கொண்டிருக்கிறேன். எனது மகனின் ஜாதகத்தில் லக்கனத்தில் இருந்து ஏழாம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது. அதனுடன் குரு எனப்படுகின்ற வியாழன் இருப்பதால், இது செவ்வாய் தோஷ ஜாதகம் கிடையாது என்று சில ஜோஸ்யர்களும், யார் பார்த்தால் என்ன? எங்கு இருந்தால் என்ன? தோஷம் தோஷம்தான் என்று சில ஜோஸ்யர்களும் சொல்லுகிறார்கள். இதனால் எனக்குள் குழப்பம் வந்தது. நல்ல, நல்ல வரன்களையெல்லாம் ஒதுக்க வேண்டிய நிலை வந்தது எனக்கு. மணமகளை மற்றும் மணமகனை தேடிக் கொண்டிருக்கும் மற்ற பெற்றோர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும். அதற்கு விடை காண இணையத்தில் தேடியபோது கிடைத்த சங்கதியை ஒரு பதிவாக கீழே கொடுத்துள்ளேன். படித்து தெளிவு பெறுங்கள். பதிவின் இடையில் உள்ள படங்கள் படிப்பவர்களின் தெளிவிற்காக நான் இணைத்தது.
திருமணத் தடைக்கு 'செவ்வாய் தோஷம்' காரணமா? 
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக கவனிக்கப்படும் ஒரு விஷயம் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதுதான். பலரையும் இந்த செவ்வாய் தோஷம் பாடாய்ப் படுத்தி பரிதவிக்க வைக்கிறது. செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இந்த தோஷத்துக்கு உரிய பரிகாரங்கள் பற்றி பார்ப்பதற்கு முன்பு, ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி நிர்ணயிப்பது என்பது பற்றி விவரிக்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.
லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கு இருந்தாலும் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷ ஜாதகம் ஆகும்



பொதுவாக இந்த இடங்களில் பாவ கிரகங்கள் இருப்பதும் தோஷம்தான். அதே நேரத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு   2, 4, 7, 8, 12 ஆகிய இடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகம், உச்ச வீடான மகரம் என்று இருந்து அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால், தோஷம் இல்லை

மேலும் அந்த இடங்களில் செவ்வாய் இருந்து, சூரியன், குரு, சனி ஆகியோர் சேர்ந்து இருந்தாலும் தோஷம் இல்லை. அல்லது அந்த இடங்களில் இருக்கும் செவ்வாய்க்கு மேற்கண்ட சூரியன், குரு, சனி ஆகியவர்களின் பார்வை பட்டிருந்தாலும் தோஷம் இல்லை. ஒருவருக்கு தோஷம் இருந்து மற்றவர்க்கு தோஷம் இல்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.
இது தவிர, சில ஜோதிஷ சாஸ்திரங்களில் இந்த தோஷத்துக்கு சில விலக்குகளும் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இப்படியான அமைப்புகள்கூட இல்லாத நிலையில் அந்த ஜாதகத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை என்று சொல்லலாம்.


 

செவ்வாய் இருக்கக்கூடிய 2- இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் தோஷம் இல்லை.
  




                                                   
செவ்வாய் 4-ல் இருந்து அந்த இடம் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளாக இருந்தால் தோஷம் இல்லை.
அதேபோல் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானம் கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் தோஷம் இல்லை.
செவ்வாய் இருக்கும் 8-வது இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12-வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் இந்த தோஷம் இல்லை.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருப்பது குருமங்கள யோகம் ஆகும். மிகவும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியது.
சந்திரனுடன் சேர்ந்து மேலே சொன்ன எந்த இடத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
மேலே சொன்ன இடங்களில் செவ்வாய் இருந்து புதன் அல்லது சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களால் பார்க்கப்பட்டாலோ இந்த தோஷம் இல்லை.
செவ்வாய் இருக்கக்கூடிய ராசியானது லக்னம், சந்திரன்,சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய ராசியாக இருந்து, அந்த ராசிகளின் அதிபதியான கிரகம் லக்னத்தில் இருந்தாலும், 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் தோஷம் இல்லை. உதாரணமாக செவ்வாய் இருக்கும் ராசி ரிஷபம் என்று வைத்துக்கொண்டால், ரிஷபத்துக்கு அதிபதியான சுக்கிரன் லக்னத்திலோ அல்லது 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தாலும் தோஷம் இல்லை.
மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அந்த இடம் இந்த தோஷத்தைக் குறிப்பிடும் 8-ம் இடமாகவோ அல்லது 12-வது இடமாகவோ இருந்தாலும் தோஷம் இல்லை.
சனி, ராகு, கேது ஆகியோருடன் சேர்ந்திருந்தாலும் அவர்களால் பார்க்கப்பட்டிருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய்க்கு நட்பு கிரகங்களான சூரியனின் ஆட்சி வீடான சிம்மம், சந்திரனின் ஆட்சி வீடான கடகம், குருவின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து, அந்த இடம் லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7,8, 12 ஆகிய இடங்களாக இருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி தக்க ஜோதிடர்களை ஆலோசித்து, முறைப்படி பரிகாரங்கள் செய்வதுதான் சரி.

நன்றி : விகடன் செய்திகள் - 27.01.2017