கடந்த 2010ம் ஆண்டில் நடந்த சம்பவம் இது.
மதுரை அண்ணா நகரில் வசித்து வந்த மேலூர் அரசு சித்த மருத்துவர் திரு அசோக் குமார் என்பவர் ஏராளமாக லஞ்சம் வாங்கி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் திரு பெருமாள் பாண்டியன் என்பவர் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
விசாரணைக்கு மருத்துவர் அசோக் குமாரை அழைத்த ஆய்வாளர் பெருமாள் பாண்டியன், அசோக் குமாருக்கு சாதகமாக அறிக்கை தயாரிக்க ரூ 12 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்றும், அப்படி பணம் தனக்கு கொடுக்காவிட்டால் அவருக்கு எதிரான ஒரு அறிக்கையைத் தயார் செய்து அனுப்பி லஞ்ச வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பி விடுவதாகவும் அவரை மிரட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கிலிருந்து தப்புவிக்க இருவரும் பேரம் பேசி இறுதியில் ஏழு லட்ச ரூபாய் என்று முடிவு செய்துள்ளனர். அதற்கு அச்சாரமாக ரூ 1,20,000 ஐ தன்னுடைய நம்பிக்கைக்குரிய புரோக்கர் நமச்சிவாயம் என்பவரிடம் கொடுத்து விடுமாறு ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மருத்துவர் அசோக் குமாரிடம் கூறியுள்ளார்.
விதியின் விளையாட்டு ஆரம்பம்!
மருத்துவர் அசோக்குமாருக்கு லஞ்சம் கொடுக்க பிடிக்கவில்லை. அதனால், அவர் உடனடியாக அப்போதைய மதுரை லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளரான திரு மாரிராஜன் அவர்களிடம் புகார் செய்தார்.
அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். முதலில் அது உண்மையான புகார்தானா? என்பதை சில ஆய்வுகள் மூலம் அறிந்து கொண்டார்.
என் வழி தனி வழி!
தனது துறையைச்சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது புகார் வந்த போதிலும், புறவழியை நாடாமல், சட்டத்தின் வழியில் நடந்தார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை உயரதிகாரிகளுக்கு மாரிராஜன் தகவல் தெரிவித்துள்ளார். மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மதுரைக்கு ரகசியமாக வந்து சேர்ந்தனர்.
அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மருத்துவர் அசோக் குமார் போனில் தொடர்பு கொண்டு பணம் தருவதற்கு தான் தயாராக பணத்துடன் இருப்பதை ஆய்வாளர் பெருமாள் பாண்டியனிடம் தெரிவித்துள்ளார்.
வலையில் சிக்கிய ஆய்வாளர்
தன்னைச் சுற்றி வலை பின்னப்பட்டுக் கொண்டிருப்பதை கொஞ்சம்கூட அறியாமல் கூலாக, பெருமாள் பாண்டியனும் அந்தப் பணத்தைப் புரோக்கர் நமச்சிவாயத்திடம் கொடுத்து விடும்படி கூறியுள்ளார்.
அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினரால் ரசாயனப் பவுடர் தடவிய பணக் கட்டுகள் தயார் செய்யப்பட்டது. அந்தப் பணக்கட்டுகளை புரோக்கர் நமச்சிவாயத்திடம் டாக்டர் அசோக் குமார் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த நிகழ்ச்சிகள் எதுவும் ஆய்வாளர் பெருமாள் பாண்டியனுக்கு தெரியாது. சினிமாவில் வருவது போல, பின் புரோக்கர் நமச்சிவாயத்தைப் அவரிடம் பேச வைத்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், பெருமாள் பாண்டியனுக்காக புரோக்கர் நமச்சிவாயம் பணக்கட்டுகளை பெற்றதை பதிவு செய்து, அதனை உறுதி செய்து கொண்டனர்.
அதன் பிறகு ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் வீட்டுக்குச் சென்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரிடம் ஆதாரங்களுடன் விசாரணை நடத்தியதில் தான் லஞ்சம் கேட்டது உண்மைதான் என்பதை பெருமாள் பாண்டியன் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார். பெருமாள் பாண்டியன் கைது செய்யப் பட்டார். ஆய்வாளர் பெருமாள் பாண்டியன், புரோக்கர் நமச்சிவாயம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு இருவரது வீட்டிலும் சோதனை நடத்தியபோது கணக்கில் வராத பல்வேறு சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு இது. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரே லஞ்சம் வாங்கி சிக்கிக் கொண்டாராமே! என்று நாடே அதிர்ச்சி அடைந்தது.
இதெல்லாம் நிக்காது; சும்மா ஒரு பரபரப்புக்காக! என்றும்,
அவுங்க ஆள அவுங்களே காட்டிக் கொடுப்பாங்களா? என்றும்,
ஆதாரம் இல்லன்னு கொஞ்ச நாளில் அவரை விட்டு விடுவார்கள்! என்றும்,
பலவிதமான விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்தது.
பத்து ஆண்டுகளாக நடந்த வழக்கில், அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பெருமாள் பாண்டியன்?
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், எஸ்.ஐ-யாகப் பணியில் சேர்ந்து, தேனி மாவட்ட காவல்துறையில் பணியாற்றிவந்தார். அப்போது எழுந்த சில புகார்களால் இவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஆய்வாளராக பதவி உயர்வும் பெற்று, 2010-ம் ஆண்டில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றினர்.
இவரது மனைவியின் பெயர் உமா மீனாட்சி. இவர் மதுரை கார்ப்பரேஷன் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு சுந்தர் சுகிர்தன் மற்றும் பிரனவ் கவுதம் என்று இரண்டு மகன்கள். இவர்கள் அனைவரும் மதுரை தத்த நேரியில் வசித்து வருகிறார்கள்.
மேற்கண்ட வழக்கில் உடனடியாக சஸ்பெண்ட் ஆன அவர், கடந்த 10 ஆண்டுகள் பணியில்லாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இது சம்பந்தமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள், சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 14.12.2020 அன்று, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில் தண்டணை பெறுவது இதுதான் முதல் முறை! என்று தீயாக பரவிய செய்தி அவரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில் 17.12.2020 அன்று, மகன்கள் இருவரும் வெளியில் சென்றிருந்த நேரத்தில், அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை சுத்தியலால் அடித்து கொன்றுவிட்டு தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தவறான வழிகளில் செல்வபர்களுக்கு தவறான முடிவு காத்திருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.
--------------------- அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 20.12.2020